ஆசிரியர்கள் போராட்டம் ஏன்?

சில வருடங்களுக்கு முன்னால் நான்கு சக்கர வாகனம் அறிமுகம் ஆன காலம் அது. ஒரு புகழ்பெற்ற கார் நிறுவனம் அமெரிக்க அரசியல்வாதிகளுடன் ஒரு மறைமுக ஒப்பத்தம் போட்டுக்கொண்டது. அதன் சாராம்சம் பொது போக்குவரத்தை குறையுங்கள் என்பது. பொது மக்கள் பொது போக்குவரத்து இல்லாமல் அவதிப்பட்ட பொழுது ஆங்காங்கே விளம்பர பலகைகள் தென்பட்டது. குறைந்த முன் பணத்தில் சொந்த வாகனம், குறைந்த மாத தவணை என்று. அமெரிக்காவில் இன்றும் பொது போக்குவரத்து உண்டு(ஸ்பீட் படம் பாருங்க)  ஆனால் மக்கள் தொகை உயர்வுக்கு ஏற்ப அவர்கள் போக்குவரத்தை உயர்த்தவில்லை, தரத்தை மட்டும் நன்றாக பார்த்துக்கொள்கிறார்கள்

மேல் உள்ள பத்தி ஒரு உதாரணம், இப்பொழுது ஆதாரம், உங்கள் வீட்டில் இருந்து ஒரு கிலோமீட்டர் தொலைவுக்குள் எங்கேயேனும் 1001 ரூபாய் முன் பணத்தில் சொந்த வாகனத்தை ஓட்டிச்சொல்லுங்கள் என்ற விளம்பர பாதகை உள்ளதா? ஓய்வு பெறும் பணியார்களுக்கேற்ப புது பணியாளர்கள் சேர்க்கபடுகிறாரா? மக்கள் தொகை உயர்வுக்கு ஏற்ப பேருந்துகள் அதிகமாக்கப்பட்டுள்ளனவா? அரசு தன் பொறுப்பில் இருந்து நழுவுவதும், நம்மை தனியார் பக்கம் தள்ளுவதும் உங்களால் உணர முடிகிறதா? சரி இதற்கும் ஆசிரியர்கள் போராட்டத்திற்கும் என்ன சம்பந்தம்?

இந்த போராட்டத்தை வெறும் ஊதிய உயர்வுக்காக என அரசு பொது மக்களிடம் பரப்பி விட்டு அரசின் பக்கம் நல்ல பெயர் எடுக்க பார்க்கிறது, ஆனால் அரசு செய்வது மக்கள் விரோத நடவடிக்கை என்பதை மறைக்கிறது. பள்ளிகளை இணைக்கிறோம் என்ற பெயரில் பள்ளிகளை மூடுவது தான் அந்த செயல். இதனால் மக்களுக்கு என்ன கெடுதல் என்பதை உணராமல் மக்கள் ஊதியத்தை மட்டுமே பேசிக்கொண்டு வருகின்றனர்

நான் மதுரை கிழக்கு ஊராட்சி ஒன்றிய ஆரம்ப பள்ளியில் ஐந்தாம் வகுப்பு படித்தேன், அங்கே ஒன்றிலிருந்து ஐந்து வரை தான். 1-2 வகுப்புகள் ஒரு டீச்சர், 3-4 தலைமை ஆசிரியர், 5 ஆம் வகுப்புக்கு ஒரு ஆசிரியர். இதுவாவது 30 வருசம் முன்னால். இப்போதும் ஒரு ஆசிரியர் பள்ளி உள்ளது. ஐந்து வகுப்பிற்கும் அவர் ஒருவரே ஆசிரியர்.  எழுத்தறிவித்தவன் இறைவன் ஆவான்னு சொலவடை  கூடஉண்டு. சிறப்பு கவனம் எடுத்துக்கொள்வது. பெற்றோர்களை அழைத்து அறிவுரை வழங்குவது என குழந்தைகள் பெற்றோர்கள் அருகில் இருப்பதை விட ஆசிரியர்கள் தான் அதிகம் இருக்கிறார்கள். கல்லாக இருக்கும் ஒரு மாணவனை சிலையாக செதுக்குகிறார்கள். ஆசிரியர் பணி மட்டுமே லஞ்சம் வாங்காத ஒரே அரசு பணி

சரி பள்ளிகளை மூடுவதால் என்னாக போகுது என கேட்கும் மேல்தட்டு வர்க்க சிந்தனையுள்ள சக நண்பர்களுக்கு. காலை 7 மணிக்கு உங்கள் ஊரில் உள்ள அரசு மருத்துவமனைக்கு சென்று பாருங்கள். அங்கே உள்ள மக்கள் கூட்டம் எல்லாம் ஏன் அங்கே வந்துள்ளார்கள்? அவர்களுக்கு வசதியில்லை. அவர்களுக்கு என்ன வியாதி என்பதே அவர்கள் உணர்ந்து கொள்ளும் கல்வி அறிவு இல்லை. அந்த கல்வியை அவர்கள் ஆக்ஃபோர்டில் போய் எடுக்க முடியுமா? யார் கொடுக்கவேண்டும் மக்களின் அடிப்படை உரிமைகளான கல்வி, சுகாதாரம், பட்டினியில்லாத உணவு?இந்த போராட்டத்தில் மொத்தம் 53 துறைகள் போராடிக்கொண்டிருக்கிறது, ஆனால் அரசு ஆசிரியர்களை மட்டுமே குறி வைத்து வதந்தியை பரப்பி வருகிறது. பொது மக்களிடையே அரசு பள்ளி ஆசிரியர்கள் மேல் அவபெயர் ஏற்படுத்தி தனியார் பக்கம் குழந்தைகளை அனுப்ப வேண்டும் என்பதே இந்த கார்ப்ரேட் சதியின் நோக்கம், ஏன் காவிரி மேலான்மை  வாரியம் அமைத்தார்கள் தெரியுமா? அப்ப தான் காவிரியில் தண்ணி வராது., டெல்டா பகுதி விவசாயிகள் இனி விவசாயம் வேண்டாம் என வடநாட்டு பக்கம் பிழைக்க செல்வார்கள், இந்த கார்ப்ரேட் சார்பு அரசிடம் அனுமதி பெற்ற ரிலையன்ஸ் நிறுவனம் இந்த பூமியில் ஹைட்ரோ கார்பன் எடுத்து அரசிடம் விற்கும்!?.

அரசு பள்ளிகள் என்பது தான் அடித்தளம், கல்வி முக்கியம் என்பதால் தான் காமராஜர் மதிய உணவு திட்டத்தை கொண்டு வந்தார். அப்படி 60 வருடங்களாக பாமர மக்களுக்கும் கல்வி கொடுத்து, அரசு பள்ளியில் படித்த அப்துல்கலாமை ஜனாதிபதி ஆக்கி அழகு பார்த்த தமிழகத்தில் தற்சமயம் 5000 அரசு பள்ளிகளை மூட போகிறார்கள். அடிதளத்தை இடிக்க பார்க்கிறார்கள்., நாம் கட்டிவைத்த சமூகநீதி, சமூக முன்னேற்றம் என்ற அனைத்தையும் அடித்தளத்தை இடிப்பதன் மூலம் மீண்டும் சர்வாதிகார போக்குக்கு கொண்டு செல்கிறார்கள்

அடிதட்டு மக்களை பற்றிய கவலை அரசுக்கு துளியும் இல்லை. சமகாலத்தில் நம்மால் சமாளிக்க முடியலாம், நம் அவசரத்துக்கு நண்பர்கள் உதவி செய்யலாம், ஆனால் நம் வருமானத்தையும் மீறி செலவு செய்ய வேண்டிய நெருக்கடி இருப்பின் குடும்ப சூழலுக்காக அதை தவிர்க்க முடியாத நிலையில் நீங்கள் கடன்காரன் தான் ஆவீர்கள். பள்ளிகள் மூடபடுவதால், பேருந்துகள் குறைக்கப்படுவதால் நாளை மக்கள் தொகைகேற்ப அரசு பணி இருக்காது, நம் குழந்தைகள், பேர குழந்தைகள் தனியாரை மட்டுமே நம்பி இருக்க வேண்டும்,எல்லாமே தனியார் மயம் என்றால் பின் எதற்கு அரசு என்ற இயந்திரம்?

மத்திய அரசின் சரி, மாநில அரசின் சரி, அடிதட்டு, நடுதட்டு மக்களின் மேல் துளியும் அக்கறை இல்லை. சம்பளம் கொடுக்க பணம் இல்லைன்னு சொல்லும் மாநில அரசு ஒவ்வொரு ரேசன் கார்டுக்கும் 1000 ரூபாய் பணம் கொடுக்கிறது பொங்கலுக்கு. போலியோ சொட்டுமருந்து வாங்க பணம் இல்லை என சொல்லும் மத்திய அரசை யாராவது பார்த்ததுண்டா? இரண்டு அரசுக்குமே பொருளாதாரத்தில் அரிச்சுவடி கூட தெரியவில்லை, எது அவசியம், எது அத்தியாவிசயம் என்ற பொது மக்களின் பார்வையில் பார்ப்பதில்லை

ஆசிரியர்களின் போராட்டம் மக்களுக்கான போராட்டம். அதை கொச்சை படுத்துவது நம் விரலால் நம் கண்ணை நாமே குத்திக்கொள்வது. அவர்களின் தனிபட்ட ஊதிய கோரிக்கை, ஓய்வூதிய கோரிக்கை. பற்றி பேசுவதற்கு முன்னால் அரசு பள்ளிகளை மூடாதீர்கள் என்று ஒவ்வொரு பொது மக்களும் போராட வேண்டும். இது ஆசிரியர்களுக்கு மட்டும் உண்டான உரிமை அல்ல, ஒவ்வொரு குடிமகனுக்கும் கல்வி பிறப்புரிமை, இரண்டு அரசுகளும் தமிழர்கள் அறிவு சார்ந்த சமூகமாக இருப்பது பிடிப்பதில்லை, நீங்கள் அதில் ஒருவர் என்றால் அரசு பள்ளிகளை மூடாதே என்ற கோஷத்தை வையுங்கள். அரசு விரும்புவது போல் கேள்வி கூட கேட்க தெரியாத பிற்போக்கு சமூகத்தின் அங்கத்தினர் ஆக விருப்பமென்றால், ஆசிரியர்களுக்கு எதுக்கு இவ்ளோ சம்பளம்னு கேட்டுகிட்டே இருங்க

#வால்பையன்
#ஜாக்டோஜியோ


0 வாங்கிகட்டி கொண்டது:

!

Blog Widget by LinkWithin