உண்மையிலேயே மாபெரும் சந்திப்பு தான்!

நண்பர் லவ்டேல் மேடியின் திருமணம் வெகு விமரிசையாக நடந்து முடிந்தது!, பல பணிகளுக்கு மத்தியிலும் நண்பர்கள் வெகு தூரத்தில் இருந்து வந்து விழாவை சிறப்பித்தனர், முதல் நாள் இரவிலிருந்தே நண்பர்கள் வரத்துவங்க நானும், பாஸ் கார்த்திக்கும் அவர்களை வரவேற்று அறையில் தங்க வைக்க ஏற்பாடு செய்து கொண்டிருந்தோம்.

முதலில் ஈரோடு வந்து சேர்ந்தது எழுத்தாளார் வாமு.கோமுவும், தோழர் பெரியசாமியும்(அவரே தான்), தோழர்கள் இருவரும் எங்களுக்காக பாரதி பதிப்பகத்தில் காத்து கொண்டிருந்தனர், லாதானந்த் சாரும் ரயிலில் வந்து கொண்டிருந்ததால் மொத்தமாக அழைத்து வர கார்த்திக், காரில் சென்று விட்டார், நான் நேராக அறைக்கு செல்ல அனைவரும் அங்கு வந்து விட்டனர்!, பின் ஒவ்வோருவராக வந்த வண்ணம் இரவு கழிந்தது!

சுவையான உரையாடலுடன் முதல் ஆட்டம் தொடங்கியது, திருப்பூர் நண்பர்கள் நேரடியாக மண்டபத்துக்கு வந்துவிட்டதாகவும், அங்கிருந்து அப்படியே செல்ல இருப்பதாகவும் போன் வந்தது, ஆட்டத்தை பாதியில் நிறுத்தி ஐந்து பேர் கொண்ட குழு முதலில் மண்டபம் கிளம்பியது, அந்த குழுவில் தான் லதானந்த் இருந்தார், சென்றவர்கள் வெகு நேரமாக திரும்பாததாலும், திருப்பூர் நண்பர்களிடமிருந்து போன் வந்து கொண்டேயிருந்ததாலும் இருந்த மூன்று இருசக்கர வாகனத்தில் மீதமிருந்த ஆறு பேர் கிளம்பினோன்!

நாங்கள் செல்லும் வழியிலேயே, ஐந்து பேர் கொண்ட குழு திரும்பி வந்து கொண்டிருப்பதாக போன் வந்துவிட்டது, வழியிலேயே சந்தித்தோம், சில,பல விசயங்கள் நடந்தது எங்களுக்கு அப்போது தெரியாது, லதானந்த் அவர்களின் பதிவை படித்தே நான் தெரிந்து கொண்டேன்!,

இவ்விடத்தில் இதை நான் சொல்லியே ஆகவேண்டும், பெரும்பாலான நண்பர்கள் ”பூஸ்ட்” குடிக்க உட்கார்ந்துட்டா வயசு வித்தியாசம் பார்க்காமல் எப்படி வேண்டுமானாலும் பேசலாம்னு நினைச்சிகிட்டு இருக்காங்க, அது தப்புன்னு நான் நினைக்கிறேன்!, நான் டோண்டு சார், தருமி சார் கூட அமர்ந்து கூட பூஸ்ட் சாப்பிட்டிருக்கேன், யாரும் இதுவரை முகம் சுழித்து சென்றதில்லை, நாம் ப்ளாக்கர் என்ற ஒரே விசயத்தில் மட்டும் ஒன்றுபடுகிறோமே தவிர ஒவ்வோருவருக்கும் ஒரு தொழில், வித்தியாசமான குணாதிசியங்கள் உண்டு! அதற்குறிய மரியாதையை தர வேண்டியது நம் கடமை, மீறும் பட்சத்தில் நீங்கள் நிகழ்ச்சிகளில் ஒதுக்கப்படலாம்.(சில பேர், என்னை ஒதுக்குவது போல)


இரவு விடிய விடிய நானும் மாநக்கல் சிபியும் ரம்மி விளையாடிக்கொண்டிருந்தோம், விடியற்காலை சித்தர் சுரேஷிடம் நடந்த வாழ்க்கையும், சீட்டு விளையாட்டு என்ற கட்டுரையும். ஆவியும், ஆசைகளும் என்ற கட்டுரையும் தனியே!, இரவு அறையில் தங்கியிருந்தவர்கள் அப்படியே மண்டபத்துக்கு செல்ல, பகலில் வரத்துவங்கியிருந்த நண்பர்கள் ஒவ்வொருவராக மண்டபம் வரத்தொடங்கியிருந்தனர், வர முடியாத நண்பர்கள் அலைபேசியில் அழைத்து மேடிக்கு வாழ்த்து சொல்லி கொண்டிருந்தனர், குசும்பன் மட்டும் என் போனுக்கு அழைத்து வாழ்த்து சொன்னார்!

இரண்டு மணி நேர அரட்டைக்கு பின் ஒவ்வொருவராக கிளம்பினோம்! மிக இனிதாக அமைந்த அந்த நிகழ்ச்சியை மீண்டும் நடத்த அடுத்த நண்பரின் திருமணத்திற்காக வெயிட்டிங்! கார்த்திகை பாண்டியன், ஸ்ரீதர் பெயர் அடிபடுகிறது, சிவகாசி அன்பு கூட வெகு தீவிரமாக கண்ணில் படும் பெண்களை லவ்வி கொண்டிருக்கிறாராம், குஜராத்தில் இருக்கும் டக்ளஸ் நமிதாவின் உறவுமுறை பெண் எதாவது கிடைக்குமா என்று தேடி கொண்டிருக்கிறார், எப்படியும் நமக்கு விரைவில் திருமண சாப்பாடு உண்டு!

வந்திருந்தவர்கள்!

லதானந்த்
வாமு.கோமு. - தோழர் பெரியசாமி
நாமக்கல் சிபி
கும்க்கி
தியாகு
இளையகவி
வழக்கறிஞர் ராஜசேகரன்
கதிர்-ஈரோடு
பாலாஜி
கோவை சுரேஷ்
சிவாஜி
பெர்ணாண்டஸ் - அவரது சகோதரர்
கார்த்திகைப்பாண்டியன்
ஸ்ரீதர்
அகல்விளக்கு ஜெய்சிங்
ரம்யா - கலை அக்கா - சித்தர் சுரேஷ் - மணி
எ(ஏ)ழுத்தோசை தமிழரசி
ரங்கா
செல்வேந்திரன்
ராஜன் ராதாமணாளன்
கனவுகளின் முகவரி ரீனா
ஊர்சுற்றி ஜோன்சன்
பட்டிகாட்டான் அவரது நண்பர் வசந்த்
திருப்பூர் நண்பர்கள்:
பரிசல்காரன்
வெயிலான்
ஈரவெங்காயம்

யார் பெயராவது விட்டு போயிருந்தால் பின்னூட்டத்தில் தெரிவிக்கவும்!

******

ஊர்சுற்றி அவர்கள் தொடுத்துள்ள புகைப்பட ஆல்பம்!

******

வேறு யாராவது இச்சந்திப்பை பற்றி பதிவெழுதியிருந்தால் பின்னூட்டத்தில் லிங்க் கொடுக்கவும்!

குவியல்!..(24.11.09)

வரும் வெள்ளிக்கிழமை(27.11.09)நண்பரும் பதிவருமான லவ்டேல் மேடியின் திருமணம் ஈரோட்டில் நடக்க இருப்பது யாவரும் அறிந்ததே!, நண்பரும் தனக்கு தெரிந்த வரை அனைவருக்கும் இ-மெயிலிலும், அலைபேசியிலிலும் அழைப்பு விடுத்திருந்தார், அழைப்பு கிடைக்காத நண்பர்களும் கலந்து கொள்ளலாம், தயவுசெய்து நண்பர்களுக்குள் சங்கோஜம் இல்லாமல் கலந்து கொள்ளவும், மேடி, வரும் நண்பர்களை தங்க வைக்க அனைத்து ஏற்பாடுகளையும் செய்து கொண்டிருக்கிறார், வரும் நண்பர்கள் உங்களது வருகையை உறுதி செய்தால் எவ்வித தடங்கலும் இல்லாமல் சிறப்பான கவனிப்பிற்கு வழிவகுக்கும்!

எனது மின்னஞ்சலுக்கோ, அலைபேசிக்கோ அழைத்து வருகையை உறுதி செய்து கொள்ளவும், ப்ளீஸ்!

****

கடைசியாக அல்லது ஒரு வழியாக நானும் ட்வீட்டரில் இணைத்து விட்டேன், ஆர்வ கோளாரில் அதை எனது அலைபேசிக்கு லிங்க் கொடுக்க இரவெல்லாம் ”டொய்ங்” ”டொய்ங்” என்று அடித்து இல்லாளின் கோபத்தை சமாளிக்க வேண்டியிருந்தது, எனது அலைபேசியில் GPRS அருமையாக வேலை செய்கிறது, எனது வலைப்பூவை அதன் மூலமே பார்க்க முடிகிறது, அதிலிருந்தே ஒரு பின்னூட்டம் கூட போட்டேன்! இனி அடுத்து மூன்றாம் தலைமுறை அலைவரிசையில் என்னவெல்லாம் நடக்கும் என ஆர்வம் பொங்க உங்களை போலவே காத்திருக்கிறேன்!

****

pulp fiction

இதனை தனி பதிவாக இடும் எண்ணத்தில் இருந்தேன்! பல்பு வாங்க வைத்த ”பல்ப் பிக்‌ஷன்” என்ற பெயரில் பதிவெழுதி ஒரு எண்ணிக்கையை கூட்டும் எண்ணம் ஹாலிவுட் பாலா போன்ற ஜாம்பாவான்களை பார்க்கும் போது என்னை விட்டு அகன்று விட்டது! இந்த படத்தின் இயக்குனர் திரைக்கதையில் பல புதுமைகளை புகுத்தியவர் என அனைவரும் அறிந்ததே! ஆனால் நான் பார்த்த இவரது முதல் படம் kill bill, ஆக்‌ஷன் படம் என்பதால் திரைக்கதையில் அவர் செய்த மேஜிக் வேலைகள் எனக்கு தெரியவில்லை, சண்டை காட்சிகளில் அதீத வன்முறைக்கு பதில் அனிமேஷன் காட்சிகளை புகுத்தியது பின்னாளில் ஆளவந்தானில் பயன்படுத்தப்பட்டது!

இந்த படத்தை பொறுத்தவரை இது ஒரு non liner படம் என்று பின்நவீன பார்ட்டிகள் சொல்கிறார்கள், பத்து பக்க கதையை கலைத்து போட்டு வரிசையாக இல்லாமல் இஷ்டத்துக்கு படிப்பது திரைக்கதையில் ஒரு புதுமை, ஆனாலும் சேப்டர்(அத்தியாயம்) வாரியாக கதை தொடர்போடு இருப்பதால் அதிகம் மண்டை காயவில்லை, புருஸ் வில்லிசின் சேப்டரில் ஜான் ட்ரோவோல்டா சாக, மீண்டும் அடுத்த சேப்டரில் வருவது, புதிதாக இம்மாதிரியான படம் பார்ப்பவர்களுக்கு குழப்பலாம்!, கடைசி சேப்டரில் சாமுவேல் ஜான்ஷனுக்கு ஃப்ரெண்டாக வருபவர் தான் இந்த படத்தின் இயக்குனர், பெரும்பாலும் இவரது படங்களில் ஒரு காட்சியிலாவது நடித்து விடுவது இவரது வழக்கம்.படத்தின் ஆரம்பம் யாரும் எதிர்பார்க்காத வகையில் மெதுவாக தான் இருந்தது!, போக போக சீட்டின் நுனிக்கு வருவது உங்கள் சீட்டின் அளவைப் பொறுத்தது, சரி இது தான் கதை போல என்று நிமிர்ந்து அமர்ந்தால் அடுத்த சேப்டரில் புருஷ் வில்லீஸ், இவ்விடத்தில் சொல்ல வேண்டிய முக்கிய காட்சி, வில்லீஸின் கனவில் வரும் சிறுவயது காட்சி, ஒரே ஒரு காட்சிக்கு வந்தாலும் கிரிஸ்டோபர் வால்கின்னின் நீண்ட பேச்சு ஒரே ஷாட்டில் எடுக்கப்பட்டிருப்பது ஹாலிவுட் நடிகர்களின் திறமைக்கு ஒரு அத்தாட்சி, இப்படத்தில் பல காட்சிகள் ஒரே டேக்கில் எடுக்கப்பட்டவை தான்!,

இந்த சேப்டரில் ட்ரவோல்டா இறந்தவுடன் அது முடிந்தவிடும் என்று நினைத்தால் அதன் பிறகு தான் விசயமே ஆரம்பம், புருஷும் அவரது முன்னாள் ஓனரும் இரண்டு சைக்கோக்களிடம் மாட்டும் போது, ஆச்சர்யம் மற்றும் அதிர்ச்சியின் உச்சிக்கே போவோம், எனக்கு பிடித்த சேப்டராக கடைசி சேப்படரை தான் சொல்வேன், இயக்குனருக்கு நடிகர்களை தேர்தெடுப்பதில் மிக சிறந்த சுவை, கடைசி சேப்டரில் சாமுவேல் ஜாக்‌ஷனின் வசனமும், அதை சொல்லும் அழகும், holy smoke புகழ் ”ஹார்வி கீத்தலின்” அசால்டான நடிப்பும் மிக அருமை, ஒருவேளை நான் தியேட்டரில் பார்த்திருந்தால், ட்ரவோல்டாவின் கடைசி காட்சிக்கு மட்டும் எழுந்து நின்று கை தட்டியிருப்பேன், அந்த ரெஸ்டாரண்டில் இருந்து வெளியே போகும் காட்சிக்காக மறுபடி ஒருமுறை பார்க்கலாம்!

****

புதிர்!

venom, poison இரண்டிற்கும் உள்ள வித்தியாசம் என்ன!?

கோள்களும் மோதல்களும்!

நாம் மில்கிவே என்னும் கேலக்ஸியில் ஓரத்தில் சிறு புள்ளியாக தெரியும் சூரிய குடும்பத்தில் உள்ள மூன்றாம் கோளான பூமியில் வசிக்கிறோம், இந்த பிரபஞ்சம் உருவாகி பல கோடி கோடி ஆண்டுகள் ஆனாலும் பூமியில் உயிர்கள் உருவாக காரணமாக இருந்த சம்பவம் நடந்து 450 திலிருந்து 500 கோடி வருடங்கள் ஆகியிருக்கலாம் என கணிக்கப்பட்டுள்ளது, அது எவ்வாறு நடந்திருக்கலாம் என தமிழில் ஆராயலாம்!
கோள்களில் விண்கற்கள் அல்லது வால் நட்சத்திரங்களின் மோதல் மிக ஆபத்தானது என்றாலும் சில சமயங்களில் அதுவே நன்மையில் கூட முடியக்கூடும், 450 கோடி ஆண்டுகளுக்கு முன்னால் எரிமலைகள் நிரம்பி என்னேரமும் தங்கம் போல் முன்னி கொண்டே இருந்தது தான் இந்த பூமி, அதன் மீது ஒரு விண்கல் அல்லது வால்நட்சத்திரத்தின் மோதல் அதன் மீது பெரும் மாற்றத்தை ஏற்ப்படுத்தியது, முதலாவதாக சொல்ல வேண்டுமென்றால் பூமியின் பருவநிலை மாற்றத்திற்கு மிக முக்கிய காரணமாக இருக்கும் 23.5% சாய்வு கோணம் அதனால் தான் ஏற்பட்டது.
பூமியின் மேல் ஏற்பட்ட மோதலில் நம்மில் இருந்து பிரிந்து சென்றது அல்லது நம் மீது மோதிய கல்லும் கூடவே பூமியில் இருந்து பிய்த்து செல்லப்பட்ட தனிமங்களும் சேர்ந்தது தான் நிலா!, பசிபிக் பெருங்கடலில் உள்ள ஆழமான பகுதியில் நிலவை பொருத்தினால் அது சரியாக பொருந்தி கொள்ளும் அளவே உள்ளது!, நிலவு நம்மில் இருந்து வருடத்திற்கு ஒண்ணரை கிலோமீட்டர் விலகி செல்கிறது, நம் ஈர்ப்பு விசையின் எல்லையை அது கடக்கும் போது, தனி கோளாக மாறி பூமியை சுற்றாமல் சூரியனை சுற்றலாம், அல்லது செவ்வாயில் மோதி சுக்கல் சுக்கலாக உடையலாம்!
பூமியை சுற்றி கொண்டிருக்கும் நிலா தீடிரென்று பாதை மாறும் போது அதனால் சீரான பாதையை பெற முடியாது, ஒவ்வொரு பனிரெண்டாயிரமாவது சுற்றுக்கும் ஒருமுறை அது பூமியின் சுற்று பாதையை தொட்டு செல்லும், அப்போது அது பூமியின் மீதே மோதலாம், இதெல்லாம் நடக்கமூடிய சாத்தியங்கள் 40 லட்சம் வருடங்களுக்கு பின் இருப்பதால் இப்பொழுது கவலைப்பட வேண்டியதில்லை!,பூமிக்கு அடுத்த கோளாக இருக்கும் செவ்வாய் 700 கோடி வருடங்களுக்கு முன் இப்போதிருக்கும் அளவை விட இரண்டு மடங்கு இருந்தது, அதன் மீது மோதியது நிச்சயமாக ஒரு பெரிய விண்கல்லாக தான் இருக்கும் அல்லது வியாழன் கிரக்கத்தில் இருந்த துணை கோள் ஒன்று முன் கூறிய நிலவின் கதையைப்போல் அதன் சுற்று பாதையில் இருந்து பிரிந்து செவ்வாயின் மீது மோதியிருக்கலாம், அதன் பெரும் மோதல் அதனுடய சாய்வு கோணத்தையும் மாற்றிவிட்டது, பூமியை போலவே அதுவும் 24.5% சாய்வான கோணத்தில்  சுற்றி கொண்டிருக்கிறது, அதனுடன் மோதிய கோள் ஒன்று சேர முடியாமல் தன் உட்கருவை இழந்து சிறு சிறு கற்களாக ”அஸ்ட்ராய்டு பெல்ட்” என்ற பெயரில் செவ்வாய்க்கும் வியாழனுக்கும் இடையில் சுற்றி கொண்டிருக்கிறது.அஸ்ட்ராய்டு பெல்டில் ஆயிரக்கணக்கான கற்கள் இருக்கின்றன, சிறுகற்கள் என்று சொன்னேனே தவிர சில கற்கள் நுறு கிலோமீட்டர் சுற்றளவு கொண்டவை, செவ்வாய்க்கும், வியாழனுக்கும் உள்ள தூரம் மிக அதிகமென்பதால் அது வேறு கோள்களை அணுகி சுற்றாமல் தனியாக ஒரு வளையம் போல் சூறியனை சுற்றி வருகிறது, இதே போன்ற ஒரு வளையத்தை நாம் சனி கிரகத்தை சுற்றியும் பார்க்கலாம், அதுவும் மோதலில் ஒன்று சேர முடியாமல் தனி தனி கற்களாக சனிகிரகத்தை  சுற்றி வருகிறது, வியாழன் தான் சூரிய குடும்பத்தில் பெரிய கோள் என்பதால் அது பல சிறு கோள்களை இழுத்து சூரிய குடும்பத்தில் பல துணைகோள் கொண்ட பெரிய கிரகமாக சுற்றி வருகிறது.
1994 ஆம் வருடம் சூமேக்கர் என்பவரும் லெவி என்பரும் புதிதாக ஒரு வால் நட்சத்திரத்தை வானில் கண்டனர், அதற்கு முன் அந்த வால் நட்சத்திரத்தை பற்றி எந்த ஒரு குறிப்பும் இல்லை, அதனுடய சுற்று பாதை ஆச்சர்யபடும் வகையில் வியாழன் கிரகத்துக்கு அருகில் இருந்தது, அந்த வால் நட்சத்திரம் வியாழன் கிரகத்தால் ஈர்க்கப்பட்டு 21 துண்டுகளாக உடைந்து வியாழன் கிரகம் நோக்கி ஒரு ரயில் வண்டி பெட்டியை போல் அசுர வேகத்தில் சென்றது, வியாழன் கிரகத்தின் காற்று மண்டலத்தை அடைந்த போது அவற்றில் தீ பற்றி வரிசையாக ஒரு தோரணம் போல் சென்றதாக விஞ்ஞானிகள் சொல்கிறார்கள்.
அதற்கு முன் எந்த கோளிலும் இவ்வளவு பெரிய மோதலை பூமியில் வசிக்கும் மக்கள் கண்டிராதபடியால் அதன் விளைவுகள் எவ்வாறு இருக்கும் என யாராலும் கணிக்க முடியவில்லை, அந்த மோதலுக்கு பின் வியாழன் கிரகம் பெரிய தீப்பிழம்பாகி சூரிய குடும்பத்தில் இரண்டு சூரியன்கள் போல் காட்சியளிக்கலாம் என சில விஞ்ஞானிகள் கருத்து தெரிவித்தனர் ஆனால் ஆச்சர்யப்படதக்க வகையில் சூரிய குடும்பத்தின் பெரும் கோளான வியாழன் அதை ஒரு பெரிய பூகம்பம் போல் தன்னகத்தே ஏற்று கொண்டது, அதன் பின் அதிலிருந்து கிளம்பிய புகையில் நடுமையத்தில் இருந்த ஓட்டை மட்டும் பூமியை விட பெரிதாக இருந்ததாம், அப்போது ஏற்பட்ட புகை மண்டலம் மட்டும் ஆயிரம் கிலோமீட்டருக்கும் மேலே உயர்ந்து இன்று வரை அப்பகுதியை மறைத்து இருப்பதாக ஆராய்ச்சியாளர்கள் சொல்கிறார்கள்.
கோள்களின் மோதலில் மிக விசித்திரமான விளைவை பெற்றது யுரேனஸ் கோள் மட்டுமே, பூமியும், செவ்வாயும் தன் அச்சிலிருந்து 23.5% சாய்ந்திருப்பது போல் யுரேனஸ் கிரகம் 90% சாய்ந்திருக்கிறது, காட்சியமைப்பாக சொல்ல வேண்டுமென்றால் பூமியும், செவ்வாயும் சற்றே சாய்ந்த நிலையில் சுற்றும் பம்பரம் ஆனால் யுரேனஸ் கிட்டதட்ட உருளையின் அச்சில் சுற்றுகிறது தன்னை தானே!, அதற்கு காரணம் அதன் மீது மோதிய மாபெரும் விண்கல்லே!, விண்கற்களினால் சூரிய குடும்பத்தில் பெரும் மாற்றத்தை சந்தித்தது யுரேனஸ் மட்டுமே

*******

இந்த பிரபஞ்சம் பல ஆச்சர்யங்கள் நிரம்பியது தொடர்ந்து உரையாடுவோம்!

Five "Q"

உலகத்திலேயே ரொம்ப ஈஸி கேள்வி கேக்குறது தான்னு ஒரு படத்துல கமல் சொல்லுவாரு, அதை தான் நானும் இப்போ சொல்லப்போறேன்!, Five Q என்பது "ஐந்து கேள்விகள்" என்ற தத்துவத்தை சொல்லுது, மேலாண்மையில் இது அடுத்த கட்ட வளர்ச்சின்னு கூட சொல்லலாம்!, நொய்யு நொய்யுன்னு கேள்வி கேட்டா யார்யா பதில் சொல்லப்போறான்னு நினைக்காதிங்க, பல பெரிய பிரச்சனைகளின் ஆதாரம் ஒரு சிறு முடிச்சா தான் இருக்கும், அந்த முடிச்சை கண்டுபிடிச்சிட்டா அந்த பெரிய பிரச்சனை உடனே தீர்ந்து விடும்!

உதாரணமா ஒரு கம்பெனிக்கு நாம அனுப்ப வேண்டிய பொருள் போய் சேரலை, நீங்க ஒரு மேலதிகாரி, உங்களுக்கு கீழே இருக்குறவர்கிட்ட விசாரிக்கிறிங்க!

ஏன் பொருள் போகல!?

முக்கியமான ஒரு பொருள் இன்னும் தயாராகலை

ஏன் தயாராகலை?

அதற்கு உண்டான ரா மெட்டீரியல் வந்து சேரல

ஏன் வரல?

அதற்கான பணம் நாம இன்னும் கொடுக்கல

ஏன் பணம் கொடுக்கல?

நமக்கு வர வேண்டிய அவுட் ஸ்டேண்டிங் இன்னும் வந்து சேரல

அதை ஏன் பாலோ பண்ணல?

இதுல ஐந்தாவது கேள்வியோடு முதல் பிரச்சனை முடிந்தாலும், அவ்விடத்தில் இன்னொரு பிரச்சனை ஆரம்பிக்குது, அதன் பின் மீண்டும் ஐந்து கேள்விகள் தான், நமக்கு கீழ இருக்குறவங்க ஒழுங்கா வேலை செய்யுறாங்களான்னு பார்க்க வேண்டியது தானே ஒவ்வோரு மேலதிகாரின் கடமை, அதற்காக ஐந்து கேள்விகள் கூட கேட்க முடியலைனா எப்படி?

இன்னோரு விசயம், இந்த தத்துவம் பெரும் இயந்திர உற்பத்தியகங்களுக்கு மட்டும் பயன்தரும்னு இல்ல, சாதாரண பெட்டிகடைக்கும் பொருந்தும், வீட்டிற்கும் பொருந்தும், சும்மா ஒரு தடவை முயற்சி செஞ்சு பாருங்களேன்!

***************
வேலையை சுலபமாக்குதல் அல்லது இலகுவாக்குதல், ”வொர்க் சிம்பிலிஃபை”ன்னு நானே சொல்லிகுவேன்!, ஒரு வேலையை முத தடவை பத்து நாள்ல செஞ்சு முடிச்சோம்னா அடுத்த தடவை எட்டு நாள்ல வேலை முடிய என்ன செய்யனும்னு பார்க்கனும், சின்ன சின்ன வேலைகள் மூலமா இதை சாத்தியமாக்க முடியும்,

அடிப்படையில் இந்த தத்துவத்துக்கு ரொம்ப முக்கியம் முதல் தடவை செஞ்ச தப்பை மறுபடி செய்யக்கூடாது, அதனால நாம இல்லாட்டியும் அடுத்தவங்க அதை செய்யாம இருக்க அதை குறிச்சு வைக்கனும், வேலை செய்யாத சுவிட்சுகள் மேல ”டூ நாட் டச்சு”ன்னு கூட எழுதி வைக்கலாம், எந்தந்த பொருள்களில் என்னன்ன பிரச்சனைன்னு எல்லோருக்கும் தெரியிற மாதிரி குறிப்பு வைக்கிறது ரொம்ப முக்கியம்!

அடுத்து எடுத்த பொருளை எடுத்த இடத்தில் திரும்பவும் மறக்காம வைக்கிறது, இதுனால மணி கணக்குல கூட வேலை நிற்கலாம், அதனால ஒவ்வோரு பொருளுக்கும் இது தான் இடம்னு முன்கூட்டியே பிக்ஸ் பண்ணி வச்சிகனும்.

கடைசியா டைம் மேனேஜ்மெண்ட், மேலே உள்ளதெல்லாம் ஒழுங்கா இருந்தா தான் இது சரியா இருக்கும், அதே நேரம் ஒரு வேலை தடை பட்டுச்சுன்னா அதோட தொடர்புடய இன்னோரு வேலையை பார்ப்பது மூலம் இதை சரி செய்யலாம், அனைத்திற்கும் முன்னாள் நாம் செய்ய பத்துநாள் அனுபவம் கைக்கொடுக்கும்!


டிஸ்கி: நாங்க துறை சார்ந்த மொக்கைகளும் போடுவோம்ல!

குவியல்!..(11.11.09)

நாளையோட நான் பதிவெழுத வந்து இரண்டு வருடம் ஆகிறது!
இது எனது முதல் பதிவான அறிமுகப்பதிவு! அதன் பின் ஒரு வருடங்கள் தொடர்ச்சியான மரணமொக்கைகள் தான், இப்ப தான் கொஞ்சம் நானே திரும்ப படிக்கிற மாதிரி இருக்கு! எல்லாத்துக்கும் நீங்க தான் காரணம், உங்களது உளியே என்னை செதுக்கியது!
நன்றி நன்றி நன்றி!

பதிவரும் நண்பரும் ஆகிய ரோமியோபாய் அவர்களுக்கு இன்று ஆண்குழந்தை பிறந்திருக்கிறது!, நண்பர் முதல் நாளே எங்களை சந்தித்து சென்று விட்டதால் ட்ரீட் வாங்க முடியவில்லை, சென்னைக்கு வந்ததும் என் பங்கு ட்ரீட்டையும் நண்பர்கள் கேட்டு வாங்கி கொள்ளவும்!

***

இந்த முறை பெய்த பருவமழை வரலாறு காணாத கன மழையெல்லாம் கிடையாது, ஆனால் ஊட்டியில் இருப்பவர்களுக்கு வரலாற்றிற்கும் மறக்க முடியாமல் செய்து விட்டது, கனத்த மணல் அரிப்பிற்கு காரணம் மலை பிரதேசங்களில் இருக்க வேண்டிய போதுமான மரங்கள் இல்லாததே, மரத்தின் வேர்கள் மண்ணை இறுகபற்றி மண்ணரிப்பு ஏற்ப்படாமல் செய்திருக்கும்!, நீங்கள் நாட்டுக்கு எதாவது செய்ய விரும்பினால், எல்லையில் சென்று போரிட்டோ, குடுவைகள் வரிசையாக வைத்து ஆராய்ச்சி செய்தோ தான் நன்மை செய்ய முடியும் என்று அவசியமில்லை, தயவுசெய்து ஒரு மரமாவது நடுங்கள்!


**

வரும் 27 ஆம் தேதி ஈரோடில் ஒரு பதிவர் சந்திப்பு நடத்தலாம் என ஒரு சின்ன நப்பாசை, நண்பரும் பதிவருமான லவ்டேல் மேடியின்(பின்”மண்டை”த்துவ வாதி) திருமணம் ஈரோட்டில் நடக்கிறது, நண்பர்களுக்கு அழைப்பும் விடுத்திருக்கிறார், ஈரோட்டில் ஆங்காங்கே ஒளிந்திருக்கும் பதிவர்கள் நண்பர்கள் முக்காட்டை விலக்கி கொஞ்சம் முகம் காட்டினால் தன்யனாவேன்!

**

"தோஸ்தானா" என்ற ஹிந்திப்படம்(ராஜ் தாக்குரே வந்து தாக்கிறப்போறார்) சமீபத்தில் பார்த்ததில் உலக மொழி படங்கள் அளவுக்கு அசர வைத்தது!, சாதாரண நடிகர்களே நடிக்கத் தயங்கும் வேடம் ஜான் ஆபிரகாமும், அபிஷேக் பச்சனும் ஏற்று நடித்திருக்கிறார்கள், ஹிந்தி தெரியாமலேயே சிரித்து கொண்டே பார்த்தேன் என்றால் பாருங்களேன், ஜானும், பச்சனும் தங்குவதற்கு வீடு கிடைக்காமல் வேறு வழியின்றி ஓரிடத்தில் தாங்கள் ஓரினசேர்க்கை பிரியர்கள் என பொய் சொல்லி வீட்டில் நுழையும் காட்சியிலிருந்து நமக்கு சிரிப்பு ஆரம்பிக்கிறது, பின் கடைசி காட்சி வரை சிரிப்பு தான்!பிரியங்கா சோப்ரா சிறந்த நடிகையாக தேர்வு செய்யப்பட அனைத்து தகுதிகளும் உடையவர், அப்படியொரு நடிப்பு, பிரியங்கா தனது முதலாளியான பாபி தியோலை காதலிக்க, பிரியங்காவை காதலிக்கும், ஜானும், பச்சனும் அதை கெடுக்க பாபி தியோலுக்கு கேனத்தனமான ஐடியா கொடுத்து பிரியங்கா முன் அசடு வழிய வைக்க, இறுதியில் ஜானும், பச்சனும், பாபி தியோலை காதலிக்கிறார்கள் என பிரியங்கா நினைக்க, நினைக்கும் போதே சிரிப்பு வருதுல்ல, படம் பாருங்க நான் ஸ்டாப் காமெடி கேரண்டி!

**
அகநாழிகையின் ஒரு கவிதைக்கு நான் இட்ட பின்னூட்டம், கொஞ்சம் மாற்றம் செய்து!

எடை நிறைந்த சொற்கள்
புரிதலை தரவில்லை!
ஒவ்வோரு வரிகளுகிடையிலும்
தொடர்பற்று போனவனாய்
இருக்கிறேன்
மழுங்கி போன மூளையோ,
ஏன் புரியனும் என்ற
மமதையோ காரணமாக
இருக்கலாம் ஆயினும்
எனக்கும் கவிதைக்குமான
உறவு இறுதியற்றது!

எப்படியெல்லாம் வைக்கிறாங்கய்யா டிஸ்கி!..

சாதாரணமாக பதிவுகளிலில் டிஸ்கி என்ற வார்த்தையை பார்த்திருப்போம், disclaimer என்ற வார்த்தையின் சுருக்கம் தான் டிஸ்கி, அதில் கூட என்னன்ன ஏடாகூடாங்கள் செய்யலாம் என யோசித்ததில் வந்தது, நண்பர்களுக்கு தெரிவதை பின்னூட்டத்தில் சொல்லலாம்!

***

டிஸ்கி:
மேற்கண்ட கதையில் வரும் சம்பவங்கள் அனைத்தும் கற்பனையே, ஆனால் யாருடய கற்பனைன்னு தான் தெரியாது!


டிஸ்கி:
மேற்கண்ட கதையில் வரும் சம்பவங்கள் அனைத்தும் உண்மை, ஆனா இன்னும் நடக்கவில்லை!


டிஸ்கி:
மேற்கண்ட விமர்சனத்தை சம்பந்தபட்டவர் படிக்க நேர்ந்தால் தயவுசெய்து இதை புனைவாக எடுத்துக்கொள்ளவும்


டிஸ்கி:
மேற்கண்ட கட்டுரை யாரையும் புண் படுத்தும் நோக்கில் எழுதப்பட்டதல்ல, அப்படி யாரும் புண்பட்டிருந்தால் கம்பெனி மருந்து வாங்கிதராது!


டிஸ்கி:
தயவுசெய்து யாரும் கதையில் வரும் நாயகன்(நாயகி) கதாபாத்திரத்தோடு உங்களை உருவகப்படுத்தாதீர்கள், கதையில் வரும் நாயகி(நாயகன்) தற்கொலை செய்து கொள்ளக்கூடும்!


டிஸ்கி:
மேற்கண்ட கவிதை, கவிதை இல்லை எனும் பட்சத்தில், அதை எழுதியது நானில்லை என கொள்க!


டிஸ்கி:
இந்த அரசியல் விமர்சனகட்டுரை எழுதிய பதிவர் வெளிநாடு சுற்றிலாவில் இருப்பதால், சம்பந்தபட்டவர்கள் ஆட்டோ அனுப்பி ஏமாற வேண்டாம் என கேட்டுகொள்ளப்படுகிறார்கள்!


டிஸ்கி:
இது நகைச்சுவை பதிவு, படித்தும் சிரிப்பு வராத பட்சத்தில் சிரிப்பொலி சேனல் பார்த்துவிட்டு பின்னூட்டம் போடவும்!(விளைவுகளுக்கு கம்பெனி பொறுபல்ல)


டிஸ்கி:
இந்த ஆராய்ச்சி கட்டுரையை படிக்கும் போது யாரும் சோதனை குடுவைகள் அருகில் வைத்து கொள்ளவேண்டும் என்பது அவசியமல்ல!


டிஸ்கி:
இந்த கட்டுரை, படிக்க தெரிந்தவர்களுக்கு மட்டும், மற்றவர்கள் படிக்க வேண்டாம்!டிஸ்கி:
இங்கிருக்கும் டிஸ்கியை யாரேனும் பயன்படுத்தினால், இது வால்பையன் பதிவுலுள்ள டிஸ்கியென்று டிஸ்கி போட வேண்டும்!


டிஸ்கி:
கும்மி ஸ்டார்ட்!


பிடித்தவர், ரொம்ப பிடித்தவர்!..

தோழர் மாதவராஜ் என்னை ஒரு தொடர் பதிவுக்கு அழைத்திருந்தார், பழைய தொடர்கள் மாதிரியே இதுவும் சுற்றி கொண்டு தான் இருக்கிறது, சில சங்கடங்கள் கருதி 32 கேள்விகள், அ,ஆ,இ போன்ற தொடர்களை நான் நிராகரித்து விட்டேன், முக்கிய காரணமே பதிவுக்காக பொய் சொல்வது என்னை நானே ஏமாற்றி கொள்வது போல், அதற்கு எழுதாமலே இருக்கலாம் இல்லையா!

சரி இப்ப மட்டும் ஏன் எழுதுறேன்னு கேக்குறிங்களா!, வேகமாக ஓடி கொண்டிருக்கும் நதியை சற்றே திசை திருப்பிவிடும் நோக்கம் தான், அதனால் தலைப்பை மாற்றி விட்டேன், அடிப்படையில் எனக்கு பிடிக்காதவர்கள் என யாருமே கிடையாது, உங்களுக்கே தெரியும், யாருடனும் நாம் 100% முரண்பட்டிருக்க முடியாது, ஒன்றிரண்டில் உடன்படுவோம், பின் ஏன் பிடிக்கலைன்னு சொல்லிகிட்டு, மேலும் நமக்குள்ளயே பிடிக்கலைன்னு சொல்லி புதிய அரசியலுக்கு வழி வகுக்க காரணமும் ஆகிவிடக்கூடாது!

அதனால் இன்னும் எழுதாதவர்கள் இனி இந்த தலைப்பிலேயே எழுதலாம், உங்களுக்கு பழைய தலைப்பிலேயே எழுத ஆசையிருந்தாலும் எழுதலாம், உங்கள் விருப்பமே முக்கியம்!, மேட்டருக்கு போவோம்!

*****

அரசியல் தலைவர்

பிடித்தவர்:ஸ்டாலின்
பெரிதாக அலட்டல் இல்லாதவர் என்பது காரணம்!

ரொம்ப பிடித்தவர்:நல்லகண்ணு
இவரது எளிமையே இவரை தமிழகம் விரும்பக்காரணம்

*

எழுத்தாளர்

பிடித்தவர்:பிரபஞ்சன்
இவரது கதைகளில் சூழ்நிலை தான் வில்லன், மற்றபடி அனைவரும் நல்லவர்களே!

ரொம்ப பிடித்தவர்:சுஜாதா
நானெல்லாம் 425 பாலோயர் வச்சிருக்கேன்னா அதுக்கு இவர் தான் காரணம், எனக்கு மட்டுமல்ல தமிழ்நாட்டில் பலருக்கு வாசிக்கும் ஆர்வத்தை தூண்டியவர் என்பதால்!

*

கவிஞர்

பிடித்தவர்:பா.விஜய்
இவரது தன்னம்பிக்கை தரும் பாடல்களுக்காக

ரொம்ப பிடித்தவர்:வாலி
வாலிபக்கவிஞர் என்பதால், எச்சூழலுக்கும் ஏற்றவாறு எழுதுவார்

*

இயக்குனர்

பிடித்தவர்:விசு
எனக்கே ஆச்சர்யமான விசயம் இது, இன்றும் விசு படம் பொருமையாக பார்க்கிறேன், இந்தனைக்கும் நான் ஒரு அன்செண்டிமெண்டல் ஆள்!

மிகவும் பிடித்தவர்:நகைச்சுவை இயக்குனர்கள்
குறிப்பாக பெயர் சொல்லமுடியவில்லை, எனக்கு நகைச்சுவை ரொம்ப பிடிக்கும், கிரேஸிமோகன் வசனத்துக்காகவே படம் பார்ப்பேன்!

*

நடிகர்

பிடித்தவர்:விக்ரம்
இவரது தன்னம்பிக்கைகாக

மிகவும் பிடித்தவர்:பிரகாஷ்ராஜ்
தன்னம்ப்பிகையுடன் தொழிலில் இருக்கும் ஈடுபாட்டிற்காக!

*

நடிகை

பிடித்தவர்:ஆண்டி ஆகாத நடிகைகள் அனைவரும்
இந்த விசயத்தில் கஞ்சத்தனம் கூடாது!

மிகவும் பிடித்தவர்:ஆண்டி ஆன நடிகைகள் அனைவரும்
சரோஜாதேவியெல்லாம் பாட்டி வகையறா, அவர்களை லிஸ்டில் சேர்க்காதீர்கள்

*

இசையமைப்பாளர்

பிடித்தவர்:இளையராஜா
இவரது மெலோடி பாடல்கள் ரொம்ப பிடிக்கும்

ரொம்ப பிடித்தவர்:யுவன் ஷங்கர்ராஜா
புலிக்கு பிறந்தது பூனையாகுமா!?

*

பதிவர்

பிடித்தவர்:t.v.ராதாகிருஷ்ணன்
சிரிக்கலாம் வாங்கன்னு கூப்பிட்டு சிரிக்க வைப்பதற்காக

ரொம்ப பிடித்தவர்:குசும்பன்
எந்த விசயயமாக இருந்தாலும் அதில் நகைச்சுவை தேனை தடவி தருவதற்காக!

****

இப்ப நான் எனது நண்பர்களை இதில் சிக்க வைக்க வேண்டும், தலைப்பை மாற்றி விட்டதால் சிரமம் இல்லாமல் எழுதுவார்கள் என நம்புகிறேன்! நான் அழைக்கும் ஐந்து பதிவர்களில் 40% பெண்களுக்கு ஒதுக்குகிறேன்!

1.ரம்யா

2.தமிழரசி

3.நட்புடன் ஜமால்


4.கிருஷ்ணமூர்த்தி ஐயா(அவரே தான்)

5.டோண்டு

மறுக்க மாட்டீர்கள் என நம்புகிறேன்!

கொலை கொலையாம் முந்திரிக்கா!..

விடியற்காலையில் ஆடறுக்கும் போது அதை நேரில் சென்ற பார்க்க ஆசைபட்டு நேரமாக எழுந்து இறைச்சிகடைக்கு செல்லும் நந்தாவுக்கு ஒரு கொலை செய்து பார்க்கணும் என்று தோன்றியதில் ஆச்சர்யம் எதுவுமில்லை, ஆனால் ஒரே பிரச்சனை அவனது கொலையில் ஒரு நியாயம் இருக்க வேண்டும், தன்னளவில் குற்ற உணர்வு இல்லாமல் இருக்க வேண்டும் என்பதே அவனது திட்டம், வெளிஆட்களை தேடி அவர்களது நடவடிக்கைகளை அறிந்து கொள்வதை விட தன் மனைவி பூர்ணிமாவை கொல்வதே சிறப்பாக பட்டது அவனுக்கு!

அவனுக்கு இதைவிட சரியான தண்டனை இல்லை என்று மனதுக்குள் நினைத்து கொண்டாள் பூர்ணிமா!, என்ன இருந்தாலும் நான் ஆசையாக வளர்த்த புறாவை அப்படியா செய்வான், அவனுக்கு என்ன நான் அடிமையா!? இன்றோடு இதற்கு ஒரு முடிவு கட்ட வேண்டும், பச்சமுத்து இன்னும் ஒரு மணிநேரத்தில் வந்துவிடுவான், கேட்டது மட்டும் கிடைத்து விட்டாள் நந்தா சாட்சியே இல்லாமல் பரலோகம் அனுப்பிவிடலாம், கைப்பையை ஒரு முறை அமுக்கி பார்த்து உள்ளே பணமிருப்பதை உறுதி செய்து கொண்டாள்

அவனிடத்தில் அதற்கு காரணமும் இருந்தது, தான் ஆசையாக வளர்த்த பூனையை தோசை சுடும் தவாவினால் தலையில் அடித்து கொன்றுவிட்டாள், அப்படி பெரிதாக ஒன்றும் தவறும் செய்யவில்லை அந்த பூனை, அவள் சாப்பிட்டு கொண்டிருந்த தட்டில் வாய் வைத்து விட்டதாம், அதற்காக தலையில் அடித்து கொல்லலாமா!?, அத்தோடு விட்டாளா, கொள்ளை புறம் எடுத்து போய் அதன் தோலை உரித்து கொடியில் காயப்போட்டிருக்கிறாள், தவறு செய்த என் பூனையின் கதியை பார்க்க வேண்டுமாம்!

கூண்டுக்குள் இருந்தது அந்த புறா, அவன் பூனை மாதிரி எல்லா இடத்திலும் அசிங்கம் செய்து கொண்டா இருந்தது, அதை போய் அப்படி கொன்றானே, அவனை விடக்கூடாது, அதே போல் அவனும் துடிதுடித்து சாக வேண்டும், என்ன கொடுரமாக கொன்றான் என் செல்லப்புறாவை, அவன் போன் பேசும் போது கத்தி கொண்டிருந்ததாம், அதற்காக பெரிய சட்டியில் சுடுதண்ணீர் வைத்து உயிரோடு அதற்குள் என் செல்லப்புறாவை போட்டு மூடியிருக்கிறான், அத்தோடு விட்டானா, அதன் தோலை உரித்து என்னிடமே காட்டுகிறான்!

அந்த புறாவை வறுத்து தின்றிருப்பேன், ஆனால் அவள் வளர்த்த புறா அவளை போலவே விசமாய் இருக்கும், அதான் தோலை மட்டும் உரித்து டைனிங் டேபிளில் வைத்துவிட்டேன்! அப்போது அதை பார்க்கணுமே! வெளீர் ரோஸ் நிறத்தில் அவ்வளவு அழகாக இருந்தது, அதை போய் இறகுகளோடு அசிங்கமாக வைத்திருந்தாள், அவளுக்கு நாளை தான் கடைசி நாள்! கேஸ் சிலிண்டரின் டியூப்பை வெட்டி விட்டாச்சு! வாசம் வராமல் இருக்க ரூம்ஸ்பிரே அடிச்சாச்சு, காலையில் அடுப்பு பற்ற வைத்தாள் போதும், கருகி கரிகட்டையாகி விடுவாள், கருகினாள் எப்படியிருப்பாள் என கற்பணையில் மூழ்கினான் நந்தா!கதவுக்கு பின்னால் இருந்து பார்த்து கொண்டிருந்தால் பூர்ணிமா!, எழுந்து விட்டான், பல்விழக்கியதும் தண்ணீர் குடிக்கும் பழக்கம் அவனுக்கு அதன் பின் தான் காபி கூட, எப்படியும் ஃப்ரிட்ஜை திறப்பான் என கண் இமைக்காமல் பார்த்து கொண்டிருந்தாள், அதே முகம் துடைத்து கொண்டு வருகிறான், திறந்துவிட்டான், கையை உள்நுழைக்கிறான்,

சட்டென்று கையை உதறி வெளியே எடுத்தான் நந்தா, சுருகென்று முள் தைத்தது போன்று இருந்த இடத்தை பார்த்தான், அது பல் படிந்த இடம், கடித்தது பாம்பு, சற்றே விலகி ஃப்ரிட்ஜை திறந்து பார்த்தான், உள்ளே ஒரு விரியன் பாம்பு இன்னமும் சீற்றம் குறையாமல் இருந்தது, படாரென்று மூடியவன், பூர்ணிமா என்று கத்தினான், பதட்டத்தில் போன் ரீசிவரை தலைகீழாக எடுத்து காதில் வைத்தான், அது எப்படி வைத்தாலும் செத்து போய் ரொம்ப நேரம் ஆச்சு என்றே சொல்லியது, தற்செயலாக பூர்ணிமா கதவின் இடக்கில் நின்று கொண்டிருப்பதை பார்த்தான்!

பூர்ணிமாவுக்கு புரிந்து விட்டது பார்த்து விட்டான் என்று, மெளனபுன்னகையுடன் வெளியே வந்தாள், தன்னை தாக்க வந்த நந்தாவின் நெஞ்சில் அநாயசமாக ஒரு உதை விட்டாள், தூரபோய் விழந்தவனுக்கு எழ முடியவில்லை, பாம்பு கடித்த இடத்தில் இப்பொழுது வீங்கியிருந்தது, தோள்பட்டை வரை ஊசிகுத்தியது போல் பரவியது, நெஞ்சில் எதோ அடைப்பது போல் இருந்தது, கண்கள் சொருகி கொண்டு வந்தது, மெல்ல மெல்ல பூர்ணிமா அவனது பார்வையிலிருந்து மறைந்தாள்!

அவளுக்கு பாம்பு கொடுத்த பச்சமுத்துவுக்கு பூர்ணிமா எப்படி செத்தாள் என்று இன்றுவரை தெரியாது, யாரும் சொல்லிவிடாதீர்கள்!

!

Blog Widget by LinkWithin