தம்பிடா!............

எனக்கு ரெண்டு தம்பி, ரெண்டாவது தம்பி வயசு, பிலாலுக்கு. பிலாலும் என் தம்பியும் ஸ்கூலில் ஒரே செட்டு, எனக்கு பழக்கமாகி இருபது வருசம் இருக்கும்னு நினைக்கிறேன், அதே தான், நீங்க நினைக்கிற மாதிரியே அப்ப எனக்கு அஞ்சு வயசு தான்! :-)

பிலால் வீட்டுக்கு ஒரே பையன், அவுங்கப்பா ஏரியா கமலஹாசன், அவரை தெரியாதவர்கள் அங்கே யாருமில்லை, பிலாலுக்கு முதல் அடையாளம் அவுங்கப்பான்னு கூட சொல்லலாம், ஆனா பாருங்க, ஒரு கேஸில் விசாரிக்க கூட்டிகிட்டு போகும் போது, ஏண்டா பையனை பெத்தோம்னு வருத்துப்படுறேன்னு சொல்லிட்டார், நாங்க விடுவோமா! சிகரெட், பிரட்டுன்னு ஸ்டேஷனையே அமர்களப்படுத்திட்டோம்ல!

நான் சின்ன வயசுலயே வேலைக்கு போயிட்டேன்னு உங்களுக்கு தெரியும், இதில ஒற்றுமை என்னான்னா நான் ஒன்பதாவது முழுசாய் முடிச்சேன், பிலால் அதைக்கூட முடிக்கல! ஆனா நாங்க ரெண்டு பேரும் பேசுறதை பார்த்தா இவனுங்க ஃபாரின் ரிட்டனா இருப்பானுங்களோன்னு உங்களுக்கு சந்தேகம் வரும்! நிஜமா தாங்க நாங்க ரெண்டு பேருமே சரளமா ஆங்கிலம் பேசுவோம், ஆனா அது எங்க ரெண்டு பேருக்கு மட்டுமே புரியும்!, உங்களுக்கு அது வேற எதோ மொழியா கூட தெரியலாம், அது உங்க கஷ்டம்!

பொதுவா வீட்டில் என்ன நினைப்பாங்கன்னு பசங்களுக்கு சொல்ல வேண்டியதில்லை, பசங்க கெட்டு போறது அவுனுங்க ஃப்ரெண்ட்ஸால தான், அதில் நானோ பிலாலோ விதிவிலக்கல்ல, ஏன்னா நைட்டு மூணு மணிக்கு பிலாலை எழுப்பி சரக்கடிக்க கூட்டிகிட்டு போகும் மிக முக்கியமான ஒரே ஃப்ரெண்டு நான் தான், அன்னைக்கு மட்டுமல்ல, இதுவரைக்குமே நான் கூப்பிட்டு பிலால் வரமாட்டேன்னோ, நான் சொல்லி பிலால் மறுத்தோ நான் பார்த்ததில்ல, ரெண்டு தம்பியோட பிலால் எனக்கு ஒரு தம்பியா பிறந்திருக்கலாம்!, முரண்பாடா வாழ்கையை அனுவிக்கும் வாய்ப்பளிக்கும் வலையில் பிலால் வேற குடும்பத்தில் பிறந்துட்டான் போல!

பிலாலுக்கு சின்ன வயசிலிருந்தே ராயலா வாழத்தான் பிடிக்கும், ஒரே பையன்னு வீட்டில் செல்லம் கொடுத்ததா இருக்கலாம், நல்லா ட்ரெஸ் பண்ணுவான், நான் பிச்சைக்காரன் மாதிரி அவன் வீட்டுக்கு போகும் போதெல்லாம் அவனது சட்டை, பேண்ட் என்னை அலங்கரிக்கும், என்னை போலவே அவனுக்கும் நண்பர்கள் அதிகம், நாங்கள் எப்படி இருந்தாலும் நண்பனை நண்பனாகவே பார்ப்பதில் பிலால் மேல் எனக்கு பிரியம் ஏற்ப்பட பெரிய ஆச்சர்ய காரணம் ஒன்றுமில்லை, அப்துல்லா அண்ணன் சொல்லுவார், என் நம்பிக்கை என் நாலு சுவற்றிக்குள் தான்ணே, அதன் பொருட்டு நான் வெளியே விவாதித்ததில்லைன்னு!, நம்புங்க! பிலால் என்னுடம் மத ரீதியான விவாதத்திற்கு வந்ததேயில்லை, நான் எதாவது சொன்னால் அவனது பதில் ஒரு அழகிய புன்னகையாக தான் இருக்கும்!.

மத்திம வயதில் நாங்கள் கேங்ஸ்டாரா(வெட்டி ஆபிஸர்ன்னு அர்த்தம்) இருக்கும் போதும் பிலால் என் கூடவே இருந்தான், எந்த பிரச்சனைக்கும் முதலில் பேச்சுக்கு நான் தான் போவேன், அதில் உடன்பாடில்லா விட்டால் தான் வீச்சுக்கு வேலை, ஆச்சர்யமாக பிலாலும் பேச்சில் பிரச்சனையை முடிக்கும் என் போலவே இருந்தான், என்னை விட அவனுக்கு நல்ல அரசியல் செல்வாக்கு உண்டு என்பதில் பெருமை தான் எனக்கு! நாம நாசமாய் போனாலும் கூட இருக்கிறவன் நல்லா இருக்கட்டுமே என்ற நினைப்பு தான், ஆனாலும் நட்பு ரீதியில் பிரச்சனை வரும் பொழுது அத்தனை செல்வாக்குகளையும் தூக்கி போட்டு எனக்கு அருண் அண்ணன் தான் வேண்டுமென்று சொல்லும் பொழுது பிலால் நீ என் தம்பிடா என சொல்லத் தோன்றும்! வாய் திறந்து சொல்லாவிட்டாலும் அது அவனுக்கே தெரியும்!

வலையுலகில் மட்டுமல்ல, அதை தாண்டியும் எனது நண்பர்கள் அனைவருக்கும் பிலாலை தெரியும் எனும் பொழ்தே தெரிந்து கொள்ளலாம், பிலால் எந்த அளவு என் வாழ்க்கையில் கூடவே பயணிக்கிறான் என்று!, என் அன்பு தம்பிக்கு பிலாலுக்கு அக்டோபர் 30 பிறந்தநாள், அவனது பிறந்தாளுடன் அவனுடம் கழித்த எனது பழைய நினைவுகளை தோண்டி எடுக்கும் பொழுது கொஞ்சம் சிலிர்க்க தான் செய்கிறது. உங்களது வாழ்த்துகளையும் பகிர்ந்து கொள்ளுங்கள்!

அவனுக்கு எத்தனை வயசுக்கு கேட்டிங்கன்னா, என்னை மாதிரியே அவனுக்கும் கோவம் வரும், அதனால நானே சொல்லிடுறேன், அவனுக்கு 19 வயது!

நான் ஏன் நாத்திகனானேன்! - மறுஆய்வு

கடவுள் நம்பிக்கை கொண்டவர்களை முட்டாள்கள் என்றோ, வாழ தகுதியற்றவர்கள் என்றோ நான் எங்கேயும் எப்போதும் சொன்னதில்லை, நான் ஏற்கனவே பொதுபுத்தி பதிவில் சொன்னது போல் “உங்களை சுயமைதுனம் செய்யக்கூடாது” என சொல்ல எனக்கு எப்படி உரிமை இல்லையோ, அதே போல் கடவுள் நம்பிக்கை கொள்ளக்கூடாது என சொல்லவும் உரிமை இல்லை!

ஒரு செயலின் விளைவை பொறுத்தே அது சமூகத்திற்கு நன்மை அளிப்பதா அல்லது தீமை அளிப்பதா என தீர்மானிக்கப்படுகிறது, அந்தளவில் கடவுளை மறுப்பதோ அல்லது ஏற்றுக்கொள்ளுதலோ குற்றம் அல்ல, பொருள் சார்ந்த சமூகத்திலிருந்து அறிவு சார்ந்த சமூகத்திற்கு மாறிய நாகரீக காலம் முதல் நம்பிக்கை, அதன் செயல் மற்றும் விளைவு அனைத்தும் விவாதத்துக்குள்ளாக்கப்படுகிறது, அவையனைத்தும் எண்களின் முடிவைப்போல முடிவிலியாக தான் இழுத்து கொண்டிருக்கிறது என்பது உண்மை!

சிறிய உதாரணத்துடம் சொல்ல முயல்கிறேன் -

ஒரு அறை, முழுவதும் இருள் சூழ்ந்து இருக்கிறது, நம்பிக்கையாளன் அதன் உள்ளே உயரிய எதோ ஒன்று இருக்கிறது என்கிறான், அதனை கடவுளாகவும் உருவகப்படுத்திக் கொள்ளலாம், மறுப்பாளான்(இல்லை என்ற நம்பிக்கை, நம்பிக்கையே இல்லை என்று பொருள் தராது, ஆகையால் அவநம்பிக்கையாளன் என்ற சொல்லாடலை தவிர்க்கிறேன்), அவை வெறும் இருள் மட்டுமே அல்லது நீ நினைப்பது போல் அது ஒன்றும் உயரிய பொருள் அல்ல அதை தெளிவுறாமல் குருட்டு(இருட்டு) நம்பிக்கை கொள்ளாதே என்கிறான்! இவையே கடவுள் நம்பிக்கையாளனுக்கும், கடவுள் மறுப்பாளனுக்கும் உள்ள ஆரம்ப விவாதப்புள்ளி.

நம்பிக்கையாளர்களின் மிக சொற்பமே அதை ஆராய்ந்து தெளிவுற விரும்புகிறார்கள், அவ்வாறு ஆராய்ந்தவர்களும் கடவுளும் இல்லை, கண்றாவியும் இல்லை என புதியதோர் ஆன்மீகபாதையை காட்டி சென்று விடுகிறார்கள், பின்னால் வருபவர்கள் அதை வைத்து கல்லா கட்டுவது வேறு விசயம்! கடவுள் இல்லை என்று நம்பிக்கையாளனே தெளிவுற்றாலும் அவனால் தீர்க்கமாக வெளியே சொல்ல முடிவதில்லை, சமூகம் என்னும் விளக்கமாறு அதன் பயன்பாட்டை பூர்த்தியடைய செய்ய மேல் முனையில் குஞ்சத்தால் கட்டப்பட்டிருக்க வேண்டும். குழுமமாக செயல்படுத்தல், தனிமனித ஒழுக்கம், பிறப்பின் பயனை மெய்பித்துவிட்டு செல்லுதல் போன்ற சமூக காரணிகளை கட்டுக்குள் வைத்திருக்க கடவுள்/மதம் என்ற குஞ்சம் தேவைப்படுகிறது அல்லது பட்டது!

ஆனால் இங்கே நடப்பது என்ன? விள்க்கமாறு முழுவதும் குஞ்சம் கட்டப்பட்டிருக்கிறது, கடவுளின்/மதத்தை தேவை மறந்து என் கடவுள் பெருசு, என் மதம் சிறந்தது என்ற ஈகோ ஆரம்பித்து விட்டது, எல்லா முனைகளிம் குஞ்சம் கட்டபட்ட விளக்கமாறு இன்று தடித்த ஆயுதமாக காட்சியளிக்கிறது, என் மதம் அமைதியே உருவானது, அது அன்பை மட்டுமே போதிக்கிறது என்பவனை, இவன் அந்த மதத்தின் சிறப்பான பகுதிகளை மட்டும் பார்த்து பேசுகிறான் என நேர்மறையாக சிந்தித்தாலும் அவன் சொன்ன மதத்தின் செயல்பாடுகள் ஒருவேளை முதுகுபுறம் ஆயுதம் வைத்திருப்பானோ என எதிர்மறையாக சிந்திக்க் வைக்கிறது.மதம், சடங்குகள் அதன் பயன்கள் இப்படியான இத்யாதிகளை ஒதுக்கி வைத்து ஏன் கடவுள், எப்படி கடவுள் என சிந்திக்க தொடங்கினாலே போதுமானது, நான் ஏற்கனவே சொன்னது போல் இருட்டறைக்குள் ஆராய்ந்து தெளிவுற நம்பிக்கையாளர்களுக்கு தைரியமோ அல்லது ஆர்வமோ இல்லை. முதலில் தோல்வி பயம் இரண்டாவது இத்தனை பேர் சொல்றாங்க, அது எப்படி இல்லாம இருக்கும் என்ற பொதுபுத்தி!


கொஞ்சம் சிந்தித்து பாருங்கள், இருட்டறைக்குள் எதோ உள்ளது என்ற நம்பிக்கையை, அதன் மறுப்பாளன் விஞ்ஞானம், தத்துவ ஆராய்ச்சி, உளவியல் பகுப்பு என பல வழிகளில் வெளிச்சத்தை உருவாக்கி அறையில் இருளை போக்கி கொண்டிருக்கிறான், இதெல்லாம் எல்லாம் வல்ல இறைவனால் மட்டுமே முடியும் என சொல்லப்பட்ட பல செயல்கள் மனிதனால் உருவாக்கப்பட்டு விட்டது, கடந்த 500 வருடங்கள் அறிவு சார்ந்த சமூகம் அதன் வீச்சை முழுவதுமாக செயல்படுத்த தொடங்கிவிட்டது, ஆனாலும் பிற்போக்கு பழமைவாதிகளால் உண்மையை ஏற்று கொள்ள முடியவில்லை.

இந்த விவாதம் சண்டைக்காக அல்ல, நீங்கள் எனது எதிரியோ விரோதியோ அல்ல. கடவுளை நீங்களும் பார்த்ததில்லை, நானும் பார்த்ததில்லை. ஆனால் உங்களை விட ஆர்வமாக இருட்டறைக்குள் வெளிச்சம் கொடுக்கும் வேலையை கடவுள் மறுப்பாளனே செய்து கொண்டிருக்கிறான் என்பதை நீங்களே அறிவீர்கள், நான் கேட்பதெல்லாம் ஒன்றே ஒன்று தான், வாருங்கள் இருவரும் தேடுவோம், விவாததின் தெளிவில் அறிவு சுடர் ஏற்றி இருளை போக்குவோம்!
அங்கே நீங்கள் சொன்னது போல் உயரிய பொருள் இருந்தால் அப்போதிலிருந்து நானும் கடவுள் நம்பிக்கையாளன், அது வரை நான் கடவுள் மறுப்பாளனாகவே இருக்க விரும்புகிறேன்!

இருட்டுக்கு டார்ச் அடிக்கும் முயற்சியில்!..........................

பயப்படுதல் அல்லது பயங்காட்டுதல்!....

முஸ்கி: என் வாழ்வில் நடந்த இந்த அனுபவத்தை பகிரலாமா வேண்டாமா என பல நாட்கள் யோசித்திருக்கிறேன், இது போல் மற்றொரு முறை நடக்க வாய்ப்பேயில்லை அதே போல் மற்றவர்களுக்கு நடக்குமா என்பதும் சந்தேகமே!. படிச்சிட்டு வெளியே யார்கிட்டயும் சொல்லிறாதிங்க ப்ளீஸ்!

******எங்களது அலுவலகத்திற்கு இந்தியா முழுவதும் வாடிக்கையாளர்கள் இருக்கிறார்கள், தமிழ்நாடு தவிர்த்து உள்ளவர்கள், வங்கி மூலமாக கணக்கு தொடர்பும், தமிழ்நாட்டில் உள்ளவர்களை நேரில் பார்த்தும் பேசிக்கொள்வேம்! ஒரு வெள்ளி இரவு மதுரையில் நடக்க இருக்கும் வாடிக்கையாளர் சந்திப்பிற்கு செல்ல ஆயத்தமாகி, நிலையம் சென்று பேருந்தில் அமர்ந்தேன், மணி ஒன்றுக்கு மேல் இருக்கும் என நினைக்கிறேன், எனக்கு கடிகாரம் கட்டும் பழக்கம் இல்லாததாலும், அந்த நேரம் அலைபேசியை எடுத்து மணி பார்க்க சலிப்பாக இருந்ததாலும் சரியாக தெரியவில்லை, ஆச்சர்யமாக அன்று கூட்டமே இல்லை. என்னையும் சேர்ந்து மொத்தமே பேருந்தில் 8 பேர் தான் அமர்ந்திருந்தோம், நான் முன்வாசலுக்கு சற்றே பின்னே மூன்று பேர் அமரும் சீட்டில் சன்னல் ஓர இடத்தில் அமர்ந்திருந்தேன்!, இரவு பயணம் என்பதால் தூங்குவதற்கு வசதியாக, இருபது நிமிட காத்திருப்புக்கு பின் ஓட்டுனர் வண்டியை எடுக்க, நடத்துனர் தோள்பையை குலுக்க எனது மதுரை பயணம் இனிதே ஆரம்பித்தது!

அன்னைக்குன்னு பார்த்து எனக்கு பயங்கர அசதியா இருந்தது, சன்னலில் தலை சாய்ந்து லேசாக கண்ணயர்ந்தேன், பேருந்து என்னை குலுக்கி குலுக்கி தாலாட்டுப் பாடி கொண்டிருந்தது, தீடிரென்று தாலாட்டு நின்று விட்ட உணர்வு, வழியில் எங்கேயோ நிற்கிறோம், ஆனால் கிளம்பி வெகுநேரமும் ஆகவில்லை.. வாசல் பக்கம் அப்படியே நோட்டம் விட்டேன், இருபது வயது மதிக்கதக்க சுடிதார் அணிந்த ஒரு பெண் ஏறினாள், மங்கலான ஒளியில் அது வெளீர்நிற சுடிதார் என்பது மட்டும் நன்றாக தெரிந்தது, துப்பட்டாவை தலையோடு மூடியிருந்தாள், ஏறியவள் சுற்றும் முற்றும் பார்த்து நேராக என்னை நோக்கி வந்தாள், என்னை கடந்து செல்லப்போகும் அவளை தொடர்ந்து பார்க்கலாமா வேண்டாமா என சின்ன மனப்போராட்டம் நடந்து கொண்டிருந்தது, அதற்கு வேலையே இல்லாமல் அவள் நான் இருந்த இருக்கைக்கு முன் வந்து நின்றாள்.

இங்க உட்கார்ந்துக்கலாமா!...

உண்மையில் அவள் என்னுடம் தான் பேசிகிறாளா என சந்தேகம் எனக்கு, சுற்றும் முற்றும் பார்த்த போது தான் கவனித்தேன், மீதி இருந்தவர்கள் சீட்டில் கால் நீட்டி படுத்திருந்தார்கள், ஒரு தலையும் தெரியவில்லை, ஒருவேளை தனிமை விரும்பாமல் கேட்கிறாளோ இல்லை கதைகளில் வருமே மோகினிப்பேய், கன்னி!?ஆண்களை ஆசை காட்டி மயக்கி கொண்டு போய் என்னன்னமோ செய்யுமாம். குமார்மாமா, அது உண்மை எனவும் ஒருமுறை சைக்கிளில் ஒரு பெண்ணுக்கு லிஃப்ட் கொடுத்து மயிரிழையில் உயிர்தப்பியதாகவும் சொல்வார்!. சைக்கிள், மோகினி,லிஃப்ட் தவிர அவர் சொல்லும் பொழுது திரைக்கதை அடிக்கடி மாறும், பயத்தில் உளருகிராரோ என நினைத்து கொள்வேன்!

அவள் இன்னும் என்னை பார்த்து கொண்டு தான் இருக்கிறாள்.

ம்ம்!.... உட்காருங்க... என்றேன்.

அவளிடம் எந்த உபகரணமும் இல்லை, பெண்கள் சின்ன தோள்பை வைத்து கொள்வார்களே அது கூட இல்லை, ஒருவேளை முன்போகும் பஸ்ஸில் அதை தொலைத்திருப்பாளோ என யோசித்து கொண்டிருந்தேன்.

நீங்க மதுரைக்கா போறிங்க..... என்றாள்.

ஆமாங்க,.. நீங்க? உரையாடல் நாகரிகத்திற்காக கேட்டு வைத்தேன்.

அங்க போயிட்டு அப்புறம் ஊருக்கு போகனும்... என்றாள்.

ஓஓஓ.. என அமைதியானேன். நானே பேச்சை தொடர சங்கட்டமாய் இருந்தது. ப்ளீஸ் நம்புங்க எனக்கு அவ்வளவா பொண்ணுங்க கிட்ட பேசி பழக்கமில்ல, உங்களுக்கே தெரியும் எனக்கு ரெண்டு தம்பிங்க மட்டும் தான். படிச்சது கூட பசங்க மட்டும் படிக்கிற பள்ளின்னு! தீடிர்னு ஒரு பொண்ணு பக்கத்துல உட்கார்ந்து பேசினால் நான் எப்படி பேசுறது, விசாரனை கைதி மாதிரி தொண்டை வறண்டு கொண்டிருந்தது, ஒரு உண்மைய சொல்லட்டுமா, அவ இன்னும் பேசமாட்டாளான்னு எனக்குள் ஒரு ஆர்வம் இருந்தது!

என்பக்கமாய் திரும்பி, என் கண்ணை பார்த்து கேட்டாள்!

ஒரு ஹெல்ப் பண்ணமுடியுமா!?

தொடரும்!.........................................

கல்யாண ஆல்பம்!

ராஜனின் திருமணதிற்கு முதல் நாள் இரவு வரவேற்பு நடந்தது, பதிவர்கள் அனைவரும் அதுக்கு தான் வந்திருந்தார்கள், திருமணத்தின் போது யாரும் கலந்து கொள்ளவில்லை ஏன் நானே லேட்டாதான் போனேன், நண்பர்களில் கும்மி மட்டுமே இருந்தார், இருப்பினும் நேர்மையாக நடந்ததை ஒப்பு கொண்டோம்(டோண்டுவின் பின்னூட்டத்தில் காண்க), எதனால் நடந்தது என விளக்கமும் கொடுத்தோம். பொய் சொல்லி, மறைத்து எங்களை கொள்கைவாதியாக காட்டிகொள்ள வேண்டிய அவசியமும் எங்களுக்கு இல்லை, அந்த அளவு அடிப்படை நேர்மையற்ற மூடர்களும் நாங்கள் இல்லை!

”நாங்கள் கொள்கைக்காக உயிரைக்கூட விடுவோம்” என உதார் விடும் அளவுக்கு எங்கள் மூளை மழுங்கிவிட வில்லை(உளவியல் ரீதியாக அப்படி தான் சொல்றாங்க) , ஒரே மகளின் திருமணத்தை தன் ஆசைப்படி நடந்த ஆசைப்பட்ட ஒரு மாற்றுதிறனாளி(இதை சொல்ல வேண்டாம் என அவர்கள் கேட்டு கொண்டார்கள்- ஸாரி பங்கு) தந்தையின் சந்தோசத்திற்காக தன் விருப்பத்திற்கு மாறாக, கொள்கைக்கு மாறாக அந்த செயலை செய்ய ஒப்பு கொண்டார்!, இதை அவர் ரேவதிக்காக செய்திருந்தால் கூட நாங்களே முரண்பட்டிருப்போம், அட்லீஸ்ட் பார்பனிய மந்திரத்துக்கு!

நண்பர்களிடமேக்கூட கருத்து வேறுபாடுகள் இருந்தாலும் மனிதத்தை நாங்கள் என்றும் மறந்ததில்லை, தனிபட்ட முறையில் அனைத்து நண்பர்களிடமும் ஒரே மாதிரி தான் நடந்து வருகிறோம்!

சூழ்நிலையை புரிந்து கொண்ட நண்பர்களுக்கு நன்றி!


உண்மைத்தமிழன்,மணமக்கள், லக்கிலுக்,சிரிப்புபோலிஸ் ரமேஷ்,அப்துல்லா, ஜீவன், மங்குணிஅமைச்சர்.
(இந்த போட்டோ எடுத்தது நானு, எல்லாரும் பிரேமுக்குள் சிக்காததால் ரெண்டா எடுத்தேன்)


பலாபட்டறை சங்கர், என் தம்பி பிலால்(ப்ளாக்கர் அல்ல), ஜாக்கிசேகர், உண்மைத்தமிழன், மணமக்கள், லக்குலுக்.


நான், டாக்டர் ருத்ரன், மணமக்கள், டோண்டுநான், டாக்டர் ருத்ரன், மணமக்கள், டோண்டு
மணமக்கள், கேபிள் சங்கர், பக்கத்துல இருக்குறவர் பெயர் தெரியல, அவர் ப்ளாக்கரா? (கே.ஆர்.பி.செந்தில்-நான் இன்னும் நேரில் பார்த்ததில்லை)மாப்பிள்ளையை கடைசியா சிரிக்க வச்சு ஒரு போட்டோ :-)

உலகின் அழகிய மணமகன்!

ராஜன் திருமணம் குறித்து டோண்டு பதிவில் புகைப்படத்துடன் எழுதியிருந்தார், எதிர்பார்த்தது போலவே எங்களது கேள்விகளை எதிர்கொள்ள முடியாமல் திராணியற்று எங்கேயாவது வாய்ப்பு கிடைக்குமா என தேடியலைந்த மதவாதிகளுக்கு உச்சியில் ஏறி கொண்டது, புதிதாக திருமணமானரை தொந்தரவு செய்ய வேண்டாமே என நானும் கும்மியும் காத்து கொண்டிருந்தோம்! இந்த இடைவெளிக்குள் அவர்களை போலவே பதில் சொல்ல முடியாமல் அசிங்க கமெண்டுகளும், போன் மிரட்டல்களும் விடும் கோழைகள் என்று நினைத்து விட்டார்கள் போல, ஸ்டேட்டஸ் வச்சு பதிவு எழுத கும்பலே ரெடியாகிகிட்டு இருக்கு!

முக்கியமாக மனைவிமார்களை பர்தாவுக்குள் அடைத்து வைக்கும் ஆணாதிக்க சமூகம் ராஜனை கேள்வி கேட்க துடித்து கொண்டிருக்கிறார்கள், காரணம் உங்களுக்கே தெரியும் நமது கேள்விகளால் மூக்குடைபட்டவர்களில் அவர்கள் தான் அதிகம், அவர்களை போலவே ராஜனையும் ஆணாதிக்கவாதி என நினைத்து விட்டார்கள் போல, ”தேவையென்றால் மனைவியை அடி” என்று வேதத்தில் சொன்ன மதத்தில் பிறந்த கும்மி கூட ஒப்பு கொள்ள மாட்டார் ராஜனுக்கு ஆணாதிக்கம் இருக்கு என்றால்!

ராஜன் கடவுள் மறுப்பாளனாக இருந்தால் அவரது காதலியும் கடவுள் மறுப்பாளராக தான் இருக்க வேண்டும் என சட்டம் இருக்குதா அய்யா, இல்லை ”நான் கவுண்டன் அதுனால கவுண்டச்சியை தான் கட்டுவேன்” நான் கம்யூனிஸ்டு அதனால் ஒரு கம்யூனிஸ்டை தான் கட்டுவேன்” என உதார் விட ராஜன் என்ன இயந்திரமா, யாரை திருமணம் செய்ய வேண்டும் அப்பெண்ணுக்கு என்ன தகுதி இருக்க வேண்டும் என உத்தரவிட நீங்கள் யார்!?

இப்பிரச்சனை குறித்து நாங்கள் பத்திரிக்கை வந்த போதே பேசிவிட்டோம்.

உங்களது கொள்கையையும், காதலையும் விட தாயில்லாமல் இருபது வருடங்களுக்கு மேல் ஒரே பெண்ணை வளர்த்த தந்தைக்கு மகளின் வாழ்கையின் மேல் ஆயிரம் கனவுகள் இருக்கும், மேலும் விவாதங்களின் மூலம் புரியவைக்க நமக்கு நேர அவகாசமும் கிடையாது, நிச்சயம் மதவாதிகளுக்கு இது அவுல் தான், இருக்கட்டும் நண்பா, உன்னை நாங்களறிவோம், ஒரு வயதான தந்தைக்காக சில நிமிடங்கள் கொள்கையை விட்டுக்கொடுப்பதால் யார் உயிரும் போய்விடாது என அவருக்கு சமாதானம் சொல்லி அனுப்பி வைத்ததே நானும் கும்மியும் தான், வந்து கேளுங்க நாங்க பதில் சொல்றோம் உங்கள் கேள்விகளுக்கு, உங்களை போல் நூறு பேரை வரிசையாக நிற்க வைத்து விவாதிக்க எங்களிடம் திறமையும் இருக்கு, தூக்கி வாயில் போட்டு ஏப்பமிட தெம்பும் இருக்கு, நாங்கள் ஒன்றும் ஒழிந்து இந்த கல்யாணத்தை நடத்தவில்லை, ஊரறிய ப்ளாக்கில் எழுதி வருவபர்கள் யாரையும் மனங்கோணாதபடி நடந்து தான் அனுப்பினோம்!

இறைமறுப்பு என்பது மூடநம்பிக்கைகளுக்கு எதிரான முதல்வாதம், பார்பணியம் தீண்டாமைகெதிரான வாதம், அதை வெகு தீவிரமாக செய்து வரும் நாங்கள் எங்கேயும் தனிப்பட்ட முறையில் தனிநபரை தாக்கியோ அல்லது விரோதம் பாராட்டியோ நடந்து கொண்டதில்லை, பதில் சொல்ல முடியாமல் அனானியாக வந்து சீண்டிய மொள்ளமாறிகளுக்கு தான் ராஜனும் காட்டமாக பதிலளித்திருக்கிறார், எந்த விவாதத்த்திற்கும் முன்முடிவுகளோடு மனிதர்களை அணுகும் பழக்கம் எங்களுக்கில்லை!

நாங்கள் எந்த கட்சியையோ, எந்த இயக்கத்தையோ, எந்த சங்கத்தையோ சாராதவர்கள் அதே போல் நாங்கள் இதுவரை கூட்டம் சேர்த்ததும் கிடையாது, எங்களது நண்பர்களுக்குள்ளும் பலதரபட்ட விவாதங்களை முன்வைத்து அனைவரும் தத்தம் தனித்தன்மையுடன் இருக்கவே முன்மொழிகிறோம், எவனுக்கும் கூழைகும்பிடு போடுவதோ, யார் தோளிலும் ஏறி அமர வேண்டிய அவசியமோ எங்களுக்கில்லை/தேவையுமில்லை.

ராஜனை பற்றி எங்களுக்கு தெரியும், எங்களை விட நன்கறிந்த ரேவதிக்கு தெரியும், முரண்பாடில்லாத மற்றொரு சகமனிதனை உலகில் பார்க்க முடியாது, என் தாய், தந்தை ஆத்திகர்களாக இருப்பதால் நான் அவர்களை கவனிக்க மாட்டேன் என்றோ, உங்களுக்கும் எனக்கும் எந்த தொடர்புமில்லை என சொல்லும் அளவுக்கு கொள்கை வெறிபிடித்த மிருகமோ நாங்கள் அல்ல!, நாங்கள் முன்வைப்பது மதத்திலும், கடவுள் நம்பிக்கையிலும் இருக்கும் மனித விரோதங்களை, அவை என்றென்றும் தொடரும்!

உங்களது கேள்விகளுக்கு பதிலளிக்க நான் இருக்கிறேன்.

பங்காளி இன் ஹேப்பி மூட், சிங்கத்தை சீண்டாதிங்க.


*************
இது ராஜன் திருமணம் குறித்து கேள்விகள் கேட்டவர்களுக்கு விளக்கப் பதிவு மட்டுமே, எனது பயண கட்டுரையும், புகைப்படங்களும் தனியாக வரும்!

பங்காளி ராஜனுக்குக் கண்ணாலமுங்கோ!

இதனால் சகல நண்பர்களுக்கும் சொல்ல வருவது என்னவென்றால்!...

கதாநாயகன்: ப்ரொபைல் போட்டோ மஞ்சள் நிறத்தில் இருப்பதால், மஞ்சள் மூஞ்சி ராஜன் என்று எல்லோராலும் அன்பாக அழைக்கப்படும் எங்கள் தளத்தின் பங்காளி ராஜன்
.

கதாநாயகி: கனவுகளை கவிதைகளாக்கி, கனவுகளின் முகவரியில் கவிதை வழங்கும் ரேவதி

முன்கதைச் சுருக்கம்: ஜில்லுன்னு ஒரு காதல் அப்படின்னு சொல்லிக்கிட்டு இந்த ஜாக்கும் ஜில்லும் அடிச்ச கூத்து இருக்குதே, இங்க போயி பாத்துத் தெரிஞ்சிக்கிங்க
.

அடுத்தது?: டும் டும் டும் தான்.   

எங்கே?: காமாட்சி மீனாட்சி மஹால், சுவாமி நாயக்கன் தெரு, சிந்தாதிரிப்பேட்டை, சென்னை. விக்கிமேப்பியாவுல மண்டபத்தை அழகாக் குறிச்சி
 வச்சிருக்காங்க. எப்படி வர்றதுன்னு தெரியணும்னா எக்மோரிலேர்ந்து வர்ற வழியும், சிம்ப்ஸனிலிருந்து வர்ற வழியும் கூகிளாண்டவர் சொல்லுறாரு.
எப்போ?: வர்ற வியாழன் (21/10/2010) காலை 7:30 மணிக்கு 

வரவேற்பு கிடையாதா?: ஏன் இல்லாம? வர்ற புதன் (20/10/2010) மாலை 7 மணிக்கு!

E-invite-1.JPG

இதனால் சகலமானவர்களுக்கு அறிவிப்பது என்னவென்றால், நம் பதிவுலக நண்பர்கள் ராஜனும், ரேவதியும் மணவாழ்வில் இணையும் விழாவிலும், வரவேற்பிலும், பதிவுலக நண்பர்கள் அனைவரும் கலந்து கொண்டு வாழ்த்துமாறு கேட்டுக்கொள்கிறோம்.  

வால்பையன்: அவ்வளவுதானா?

கும்மி: வேற என்ன?

வால்பையன்: வாழ்த்து சொல்லலே.

கும்மி: சொல்லிட்டாப் போச்சு. 
கலைஞரும் பாராட்டு விழாக்களும் போல, 
ஜெயலலிதாவும் மிரட்டல் கடிதங்களும் போல,
கேப்டனும் புள்ளி விபரங்களும் போல
மணமக்கள் இணைந்து வாழ 
வாழ்த்துகிறோம்!

வால்பையன்: பதிவுலகும் நட்பும் போல,
கூகிளும் புதுமையும் போல, 
அறிவியலும் ஆராய்ச்சியும் போல 
மணமக்கள் சிறந்து வாழ
வாழ்த்துகிறோம்! 

நட்புடன் அழைப்பது,
வால்பையன் & கும்மி 

----
புதன் மதியத்திலிருந்தே நாங்கள் திருமண மண்டபத்தில்தான் இருப்போம். மாலையில், வரவேற்புக்கு முன்னர்,  ஒரு பதிவர் சந்திப்பை வைத்துக்கொள்வோமா?

----
தொடர்புக்கு: வால்பையன் - 99945 00540

எந்திரன்!...................

ரசிகன் = தொண்டன் = பக்தன்

நான் ஒன்றும் உலகைத்திருத்த வந்த ஞானப்பிறவி அல்ல, எனது விவாதங்களை எனது கருத்துகளுடனான சுயபரிசோதனையாகத் தான் எடுத்து கொள்கிறேன், ஆரம்பத்தில் இருந்தே பொதுபுத்திகெதிரான எனது விவாதங்கள் அனைத்தும் அப்படியே, ஆயினும் அயர்ச்சி தரும் விசயம் என்னவென்றால் நாம் ரஜினிக்கு எதிராக பேசினால் கமல் ரசிகன் என்று முத்திரை குத்தப்படுவோம், தி.மு.க விற்கு எதிராக பேசினால் அ.தி.மு.க காரன் என முத்திரை குத்தப்படுவோம், இஸ்லாத்துக்கு எதிராக பேசினால் ஆர்.எஸ்.எஸ் என முத்திரை குத்தப்படுவோம்!, விவாதத்தின் மையத்தை தொட்டு விவாதிப்பவர்கள் மிக குறைவாக இருப்பது ஆரோக்கியமான சூழல் இல்லை, விவாதிப்பவர்கள் சற்றே அதை கவனத்தில் கொள்க!

நான் தியேட்டருக்கு செல்வது அரிது என்பது சினிமா மீதான வெறுப்பினால் அல்ல, அந்த பொழுதுபோக்கு சாதனத்தில் பொழுதை போக்க எனக்கு போதுமான பொழுது இல்லாததே காரணம். செப்டம்பர் 30 ஆம் தேதி இரவு வரை எனக்கு தெரியாது, நாளை நான் எந்திரன் படத்துக்கு போவேன் என்று. 10 மணி காட்சிக்கு ஒன்பது மணிக்கு சொல்கிறான் பிலால் ”டிக்கெட் இருக்கு வாங்க”ன்னு, வரலைன்னு சொல்லி பார்த்தேன், அப்படின்னா டிக்கெட்டை கிழித்து போடுவதை தவிர வேறு வழியில்லை என்கிறான், சரி போய் தான் பார்ப்போமே என்று கிளம்பி தியேட்டருக்குள் உள்ளே சென்று அமரும் போது வசீகரன், சிட்டியை அறிமுகப்படுத்தும் காட்சி ஓடி கொண்டிருக்கிறது.முன் சென்ற காட்சிகளை இழந்தது குறித்து எனக்கு எந்த வருத்தமுமில்லை, தமிழ் சினிமாவை கடைசியில் பார்த்தாலும் புரியும் என்ன நடந்திருக்குமென்று, ஒருமுறை சொல்லியிருக்கிறேன் என்று நினைக்கிறேன், நான் சினிமா பார்க்கும் நேரம் இரவு ஒரு மணிக்கு மேல் தான், எந்த தொந்தரவும் இல்லாமல் முழு ஈடுபாட்டுடன் எதையும் செய்ய எனக்கு பிடிக்கும். ஆனால் ரசிகர்களின் கொண்டாட்டத்திற்கு மத்தியில் சினிமா பார்ப்பது விருப்பமில்லாத இடத்தில் வழுக்கட்டாயமாக அமர்ந்திருப்பது போல் உணர்வை தந்தது, அருகில் இருந்த குடிமகன் காலையிலே சுதி ஏற்றி கொண்டு வந்து என் காதை பஞ்சராக்கினார், கவனிக்க இவையெல்லாம் சாதாரணமான விசயமாக இருக்கலாம், எனக்கு வித்தியாசமாக தோன்றக்காரணம் முதல் நாள் முதல் காட்சி பார்ப்பது இதுவே முதல் முறை எனக்கு!படத்தை பற்றிய என்னுடய கருத்தை கிரியின் பதிவில் சொல்லிவிட்டேன், பொழுது போக்கு சித்திரம் பொழுதை போக்க உதவியது என்று, ஆனால் நல்லதொரு விவாதம் அமையும் பொருட்டு அங்கே ஏன் நமக்கு தலைவன் தேவை என்றால் ஒருவர் கிரிக்கெட்டுக்கு கேப்டன் மாதிரி எங்களுக்கு ரஜினி என்கிறார்!, தலைவன் என்று ஒருவன் தனியாக இல்லை என்பதே என் கருத்து, இரண்டு நபர்களில் ஒருவர் அதிக எடையுடன் இருக்கிறார், அவரால் மற்றொருவரை விட அதிக எடை தூக்க முடியும் என்றால் அதுவே அவரது கடமையும் ஆகிறது, தன்னால் செய்ய முடிந்ததை ஒருவர் செய்வது நிச்சயமாக கடமை தான், மற்றொருவர் தூக்க வேண்டியதையும் சேர்த்து அவரே தூக்கினால் சொல்லலாம், தலைவண்டா நீன்னு! அப்படி ஒரு தலைவனாவது காட்டுங்களேன் நான் பார்க்க ஆவலாய் இருக்கிறேன்!

புரட்சிகர கருத்தை சொல்லிவிட்டார் என்பதற்காக ஒருவரை தலையில் தூக்கி வைத்து ஆடுவது, புணர்ச்சிக்கும், விழிப்புணர்ச்சிக்கும் வித்தியாசமில்லாத செயலாக தான் எனக்கு படுகிறது. பிறக்கும் போதே யாரும் எதையும் கற்று கொண்டு பிறப்பதில்லை, வாழ்க்கை கற்று தருவதை தான் நாம் பயன்படுத்தி கொள்கிறோம், சில நேரங்களில் சிலரது அனுபவங்களையும் பயன்படுத்தி கொள்கிறோம். அவையும் கற்றலில் தான் சேரும், ஆனால் தொண்டனாக தான் இருப்பேன் என அடம்பிடிப்பது உண்மையில் கொள்கைரீதியாகவா அல்லது கூட்டத்துடன் தம்மையும் இணைத்து கொள்ளும் உளவியல் பிரச்சனையா என தெரியவில்லை!மனிதனுகென்று அடிப்படை நேர்மை இருக்கிறது, அதில் முக்கியமானது தான் செய்தது தவறு என்று உணரும் பட்சத்தில் அதை ஒப்பு கொள்வது அடுத்து மற்றவர் செய்தது தவறு என உணரும் பட்சத்தில் அதற்கு கண்டனம் தெரிவிப்பது, தொண்டைமான்களிடம் அடிப்படை நேர்மையை ஒருபொழுதும் எதிர்பார்க்க முடியாது, நாங்கள் அப்படியில்லை என்று சில இயக்க தோழர்கள் சொன்னாலும் அவர்கள் மனசாட்சிக்கும் தெரியும் அவர்களும் சில நேரங்களில் சமரசம் செய்து கொள்கிறார்கள் என்று. மாவோ, ஸ்டாலின் உருவ படத்துக்கு மரியாதை செலுத்தும் ஒருவர் ராமன் படத்துக்கு மரியாதை செலுத்துவதை ஏன் என்று கேட்கும் தகுதியை இழக்கிறார்!, நாங்கள் ஒன்றும் அவர்களை கடவுளாக வணங்கவில்லையே என ஒரு இயக்கத்தோழர் சொல்கிறார், இயக்கத்”தலைவர்கள்” புகழ் பாடுவதும், கடவுளுக்கு ”போற்றி” பாடுவதும் ஒன்று தான் என்று அவர்களுக்கு எப்படி புரியவைப்பது!..நான் ஏன் சாதியை மறுக்கிறேன், அது பிரிவினையை தூண்டுவதால்

அதே தான் மதத்திற்கும், அதே வேலையை தான் செய்கிறது கட்சியும், ரசிகர் மன்றங்களும்.

பக்தனுக்கு கடவுள்

தொண்டனுக்கு தலைவன்

ரசிகனுக்கு நடிகன்

அவர்களது ஆதர்ஷநாயகர்களை பற்றி ஏதேனும் கேள்வி கேட்டுவிட்டால் அவர்களது பதில் திரும்ப கேள்வி கேட்பதாகவே இருக்கிறது, அதுவும் ”நீ என்னாத்த புடிங்கின” என்ற கேள்வியெல்லாம் பக்தகோடிகளின் பொதுபுத்தியை வெளிச்சம் போட்டு காட்டுகிறது!

மனிதனை கசட்டு அடையாளங்கள் இல்லாமல் மனிதனாக பார்க்கும் ஆவல் இப்படியெல்லாம் என்னை எழுத வைக்கிறது!

*************
கிழட்டுபய, சின்ன பொண்ணோடு ஆடுறான் போன்ற விமர்சனங்களை இவ்விடத்தில் நான் வன்மையாக கண்டிக்கிறேன், தனது கையாலாகாத தனத்தை வெளிப்படுத்தும் கழிப்பறை வாசகங்கள் போன்றது அது. ரஜினி ஒரு நடிகர், நடிப்பு அவரது தொழில் அதை அவர் செவ்வனே செய்யும் பொழுது அது நாட்டுக்கு தேவையா, சமுதாயத்திற்கு நீ என்ன செய்தாய் போன்ற கேள்விகள் விளம்பரபிரியத்தனமாக தெரியுது!, மேலும் அது கொள்கைரீதியான விமர்சனமா அல்லது மற்றொரு நடிகரின் பால் இருக்கும் பிரியமா என்னுடமிடத்தில் பொதுபுத்தி வருகிறது!

விவாதிக்கலாமா!

!

Blog Widget by LinkWithin