2016!....

வருத்தம்!
மோடியின் டீமான்ஸ்டேசன் மாதிரி தீடீர்னு ப்ரேக் அப் பண்ணிக்கலாம்னு சொல்லுவான்னு எதிர்பார்க்கல. ஆதர்ச தம்பதிகள் மாதிரி ஆதர்ச காதலர்கள்னு எங்களை நினைச்சிகிட்டு இருந்தேன். ஆனால் தனிநபர் அவர் நலம் சார்ந்து எடுக்கும் முடிவு அவரது உரிமை. விளைவுகளுக்கும் அவரே பொறுப்பு. நெருக்கமானவர்களுக்கு ஆலோசனை சொல்லலாம். அதிகாரம் பண்ண நமக்கு உரிமை இல்லையே. ஆரம்பத்தில் கோவமாக வெளிபடுத்தினேன். பின் புலம்பலாக வந்தது. கோவம் போயிரும், பேசுவான்னு எதிர்பார்த்தா வீம்பா பத்து மாசத்துக்கு மேல நின்னுட்டா.
பேசும் போது பேசட்டும்னு நானும் விட்டுட்டேன்.

அதிர்ச்சி!
சொத்து குவித்து வழக்கில் தண்டனை பெற்று, மேல்முறையீட்டில் புகழ்பெற்ற குமாரசாமி குண்டங்க மண்டங்க கணக்கில் விடுதலை பெற்றாலும் மொத்தமாக ஊழலில் புரையோடி கிடத்த அதிமுகவை மக்கள் புறக்கணிப்பார்கள் என எதிர்பார்த்தேன். 200 ரூபாய்க்கு ஜனநாயகத்தை விற்று ச்சை இதுங்கெல்லாம் மனுசங்க தானான்னு துப்ப வைத்து விட்டார்கள்

ஆறுதல்!
மூன்று வருடங்கள் கழித்து என் குழந்தைகளை பார்க்கவும், அவர்களோட நேரம் கழிக்கவும் வாய்ப்பு கிடைத்தது. கடும் மன உளைச்சலில் இருந்த எனக்கு அது மாபெரும் ஆறுதலாக இருந்தது.

கடுப்பு!
இப்போதும் தொடரும் மதவாதமும், சாதிய அரசியலும்

காமெடி!
மக்கள் நல கூட்டணி

கோவம்!
ஊழலில் ஊறிய நாட்டில் திடீரென பண மதிப்பை திரும்ப பெறுதல் நல்ல பலனை கொடுக்கலாம் என பொது புத்தியில் நானும் நம்பினேன்.
முறையான செயல்திட்டவரைவு இல்லாமல்
”கொத்த தெரியாதவன் கையில் அம்மி கல்லை கொடுத்தது போல்” இந்தியாவை கொத்தி எடுத்து விட்டார் மோடி.

திட்டம் தோல்வி என்பதை ஒப்புக்கொள்ள மனமில்லாமல் பணமற்ற பரிவர்த்தனை என பிதற்றுவது. ஒவ்வொரு நாளும் மாற்றி மாற்றி அறிக்கை விட்டு காமெடி தர்பார் நடத்துவது என என்னை மட்டுமல்ல, நாட்டில் பலரின் கோவத்து ஆளான காமெடி பீஸ் மோடி.

இழப்பு!
இன்னும் சில வருடங்கள் வாழ்ந்திருக்கலாம் என பெரும் துயரில் விட்டு சென்ற மரணம் நா.முத்துகுமார். இன்றும் சிறந்த ஆற்றுபடுத்துனராய் இருப்பது அவர்கள் வரிகள் தான்.

கடுப்பு!
நாயை குளிப்பாட்டி நடுவீட்டில் வைத்தாலும் அது நக்குறை தான் நக்கும்னு ஒரு பழமொழி இருக்கு. அது மாதிரி தான் அடிமைகளும், அவர்களையும் மேல உட்கார வைத்தாலும் காலை நக்குவதை விட மாட்டார்கள் என வருட கடைசியில் கடுப்பேற்றி விட்டார்கள்

பார்த்ததில் பிடித்தது!

ஹிந்தியில் பிங்க்
தனிமனித உரிமைக்கு குரல் கொடுப்பவன் தான் என்றாலும் என் விசயத்தில் கோட்டை விட்டேன் செய்தது தவறு தான் என உணராமல் நம்மால் தவறை திருத்திக்கொள்ள முடியாது. முற்றிலுமாக உணர பிங்க் உதவி செய்தது

மலையாளத்தில் ஜேக்கபிண்டே சொர்க்கராஜ்யம்
இது ஒரு உண்மை கதை. நம்பிக்கை இழந்தவர்களுக்கு நம்பிக்கை கொடுக்கும் படம். பிடிப்பு இல்லாமல் வாழ்ந்துக்கொண்டிருந்த எனக்கு நம்பிக்கை அளித்தது

தமிழில் முக்கியான படங்கள் என பாராட்டு பெற்ற படங்கள் எதுவும் நான் பார்க்கவில்லை.

படித்ததில் பிடித்தது!

வா.மு.கோமுவின் தனாவதி நாவல்
கல்யாணம் ஆகாத ஒருவன் தனாவதியாக மாறுகிறான். அதாவது பிறருக்கு பெண் பார்த்து கொடுக்கும் கல்யாண புரோக்கர் வேலை.
கோமுவுக்கே உரிய வட்டார மொழி நடை. நகைசுவை நாவலில் கட்டிபோட்டாலும் இன்னொரு சிறப்பம்சம் மங்கலதேவதைகள் நாவலை போலயே இதுவும் சினிமாவுக்கு உரிய கதை. நல்ல திரைகதை அமைத்தால் மிகசிறந்த நகைச்சிவை படமாக எடுக்கலாம்.

**
கடந்த மூன்று வருடங்களாக ராஜபோதை என்ற நாவலை எழுதி வந்தேன். கதையோட ஒன்லைன்
பணம், புகழ்,பெண் என்ற போதையில் மயங்கி கிடக்கும் மூன்று வெவ்வேறு மனிதர்களின் வாழ்க்கை. கோர்வையாக இல்லாவிட்டாலும் தனி தனியா நூறு பக்கங்கள் வரை எழுதியிருப்பேன். தொகுக்கும் முன்னே ப்ரேக் அப் ஆன கடுப்பில் சிஃப்ட்+டெலிட் கொடுத்துட்டேன்.
வரும் ஆண்டு அதை கொண்டு வர முயற்சி பண்ணனும்

தண்ணிய விடப்போறேன், தம்மை விட போறேன்னு வெட்டி சபதம் போட விரும்பல. அவைகள் என் மன அழுத்தத்தின் போது ஆறுதலாக இருந்த நண்பர்கள். அவர்கள் ஆறுதல் தேவைபடாத மாற்று கிடைக்கும் வரை அவர்கள் நட்பு எனக்கு அவ்வபோது தேவைபடும் தான்.

நிறைய அனுபவங்கள் கொடுத்தது இந்த வருடம். என் தவறுகளை திருத்திக்கொண்டு சரியான முடிவெடுத்து எதிர்காலத்தை சிறப்பாக்க முயற்சி செய்வேன். நீங்களும் நம்பிக்கையோடு அடியெடுத்து வையுங்கள். சேர்ந்து பயணிப்போம்#வால்பையன்

தோல்வியின் நாயகனே!

திட்டமிடலின்மை!

பணமதிப்பை திரும்ப பெறுவது அவ்வளவு சுலபமான காரியமா? 130 கோடி மக்கள் தொகை கொண்ட நாட்டில் அதை செயல் படுத்த எவ்வளவு திட்டமிடல் தேவை. குறைந்தபட்சம் திட்டத்தின் நோக்கம் நிறைவேற இருக்கும் ஓட்டைகளை கண்டறிந்து அதை முன்கூட்டியே அடைத்திருக்க வேண்டாமா. எத்தனை ஓட்டைகள்....
பெட்ரோல் மூலமாக, அடுத்தவர் வங்கி கணக்கு மூலமாக, வங்கி அதிகாரிகள் மூலமாக.

6% கருப்பு பணம் இருப்பதாக ரிசர்வ் வங்கி சொல்லியது. 18 லட்சம் கோடியில் அதன் மதிப்பு ஒரு லட்சம் கோடியே 8 லட்சம். ஆனால் பிடிபட்டு இருப்பதாக ஆர்பிஐ சொல்லியுள்ளது 1472 கோடி ரூபாய் மட்டுமே. வங்கிக்கு வராமல் இருப்பதை சேர்த்து 50 ஆயிரம் கோடி என வைத்துகொண்டாலும் திட்டம் தோல்வி தான். ஏனென்றால் புது ரூபாய் நோட்டுகள் அடிக்க அரசுக்கு அதை விட செலவு ஆகும்.

பணமில்லா பரிவர்த்தனை!

இந்தியா 80% ரூபாய் நோட்டுகளை நம்பியிருக்கும் நாடு. காரணம் நாம் அடிப்படையில் விவசாய நாடு. நம் விவசாயத்தில் 72% உணவு பொருட்களே. அதை மாற்ற பணமில்லா பரிவர்த்தனை சாத்தியமில்லை. மேலும் அந்த பரிவர்த்தனைக்கு தேவையான அடிப்படை கட்டமைப்பு வசதிகள் நம்மிடம் இல்லை.

கிராமங்களில் கூட அந்த திட்டத்தை செயல்படுத்தி விட்டோம் என சில விளம்பர அறிவிப்புகள் வருகின்றன. அவை யாவும் அரசின் செலவில் வெளியிடப்படும் விளம்பரங்களே. அந்த ஊரில் அப்படினா என்னான்னே தெரியாதவங்க நிறைய பேர் இருக்காங்க.

நம் நாட்டில் 10 வகுப்பை தாண்டியவர்கள் வெறும் 48% மட்டுமே. எஞ்சியுள்ளவர்கள் விவசாயிகளும் வேறு துறை கூலி தொழிலாளிகளும். டிகிரி முடித்துவிட்டு வெளிநாட்டில் வேலை செய்பவரிடம் கேட்ட கேள்விகளுக்கு அவருக்கு பதில் தெரியாது.

இந்துதுவா ஆதரவாளர்கள் மட்டுமே இது வெற்றியடையும் திட்டம் எனவும் இதனால் கருப்பு பணம் ஒழிந்து விட்டது எனவும் ஒருவர் ஒரு படி மேலே போய் இதனால் வெளிநாட்டு கடன் நமக்கு குறையும் என்றும் எழுதியுள்ளார்

நம் நாட்டில்
100% கல்வியறிவு இல்லை
100% மின்சார வசதி இல்லை
100% இணைய வசதி இல்லை.

நானும் படிச்சேன்னு மக்கடிச்சிட்டு, வெளிநாடு போய் அவனுக்கு சம்பாரிச்சு கொடுத்துட்டு இங்கே கஷ்டபடும் மக்களை தேச விரோதிகள் என நாக்கூசாமல் சொல்கின்றனர்.

கருப்பு பணம் திட்டம் தோல்வி, அதனால் கேஸ்லெஸ் எக்கானமி என பல்டி அடிக்கின்றனர். அவர்களின் தோல்வியின் இயலாமையால் மாற்றி மாற்றி அறிக்கை விட்டு மக்களை குழப்புகின்றனர்.
இதனால் பல சிறுதொழில்கள் முடங்கியுள்ளன. பலர் வேலை வாய்ப்பை இழந்தனர் என எவ்வளவு தான் புள்ளி விபரத்தோடு விளக்கி சொன்னாலும்

அதெல்லாம் தெரியாதுங்க, மோடி பண்ணா சரியா தான் இருக்குன்னு சொல்லும் போது ங்கோத்தா டேன்னு வரும் பாருங்க ஒரு கோவம், அதெல்லாம் வாய்ல சொல்ல முடியாது..

அ(வல)திமுக!

யோசித்து பார்த்தால் இப்போது அல்ல. இதற்கு முன்னரே ஜெயலலிதா வசம் கட்சி இல்லை என்றோ தோன்றுகிறது. ஒழுங்கு நடவடிக்கையின் பேரில் மாவட்ட செயலாளர் நீக்கம், மீண்டும் சேர்ப்பு. அமைச்சர் நீக்கம், மீண்டும் சேர்ப்பு. நீக்கப்பட்டவருக்கே மீண்டும் தேர்தலில் சீட்டு. இந்த குழப்பத்திற்கு காரணம் ஜெயலலிதா என்ற தனிநபர் தான் என்பதை ஏற்றுக்கொள்ள முடியாது. ஆரம்பத்தில் இருந்தே பின்புலத்தில் யாரோ ஜெயலலிதாவை ஆட்டுவித்து கொண்டிருந்ததாக தான் தெரிகிறது.


சிறிதும் தகுதியற்ற சட்டமன்ற, நாடாளுமன்ற உறுப்பினர்கள். காஷ்மீர்
பிரச்சனை குறித்து பேச சொன்னால் “காஷ்மீர் பியூட்டிஃபுல் காஷ்மீர்” என பாடுகிறார் ஒரு நாடாளுமன்ற உறுப்பினர். நாடாளுமன்றத்திலே அந்த லட்சணமென்றால் சட்டமன்றத்தில் அதை விட மோசம் என்பதற்கு உதாரணம் ஜெயலலிதாவின் அனைத்து துறைகளுக்குமான 110 அறிக்கைகள்.

அறிக்கை விடுவது மட்டுமே ஜெயலலிதா, துறைக்கு கோப்பு வந்துவிட்டால் 20% கமிசன் இல்லாமல் கோப்பு நகராது என்று கட்சியில் இருந்து வெளியேறிய பழ.கருப்பையா குற்றம் சாட்டினார். அவரது குற்றசாட்டில் நியாயம் இருக்கத்தான் செய்கிறது.

தனியாரிடம் மின்சாரம் வாங்கியதில் ஊழல், புதிய டிஜிட்டல் மீட்டர் மாற்றியதில் ஊழல், புதிய எல்.இ.டி பல்புகள் மத்திய அரசு தர முன்வந்த போதும் தனியாரிடம் வாங்கியதில் ஊழல், சோலர் மின் திட்டத்திற்காக முறையற்று நிலம் கையகபடுத்தி அதை அதானிக்கு விற்றதில் ஊழல். போக்குவரத்து துறையில் ஊழல், இலவச மடிகணிணியில் ஊழல்( இந்த ஒப்பந்தம் பெற்றது பிரபல சீட்டிங் சாம்பியன் சேகர் ரெட்டியின் மகன் விகேக்) இலவச ஆடு, மாடு வாங்கியதில் ஊழல். ஆவின் ஊழல். 10000 சம்பளம் பெறும் ஒரு பியூன் வேலைக்கு 3 லிருந்து 5 லட்சம் வரை லஞ்சம். ஆக ஊழலும், லஞ்சலும் இல்லாத துறைகளே இல்லை தமிழகத்தில். ஊழல் என்றாலே அதிமுக என்றாகி இன்று அவலதிமுகவாக நிற்கின்றது.

2004 லிருந்து 2009 வரை ஆட்சியில் இருந்த காங்கிரஸ் அரசின் மேல் பெரிதாக குற்றசாட்டில்லை. மறுமுறை ஆட்சிக்கு வந்த காங்கிரஸ் ஊழல் பெருச்சாளி என பெயர் எடுத்தது. காமென்வெல் ஊழல், நிலகரி ஊழல், பெக்ட்ரம் ஊழல் என இந்தியாவெங்கும் அதிருப்தி பெற்று ஆட்சியை மதவாதிகள் கையில் கொடுத்தது. அதே போல் தான் அதிமுக இரண்டாம் முறையாக ஆட்சிக்கு வந்துள்ளது. சென்ற முறையே ஊழல் இல்லாத துறை இல்லை என பெயரெடுத்த அதிமுக இம்முறை என்ன செய்யும் என எதிர்பார்க்கிறீர்கள்.

சென்ற முறைக்கும் இந்த முறைக்கும் உள்ள வித்தியாசம். ஆட்சி பொறுப்பில் ஜெயலலிதா இல்லை. ஜெயலலிதாவின் வாய் ஜாலங்கள் இல்லை. பலகோடி ரூபாய் செலவில் நடத்தப்பட்ட சர்வதேச தொழில் முதலீட்டு மாநாடு என்றால் என்ன? அதனால் என்ன பயன்? அது எந்த நிலையில் இருக்கு என்று எந்த சாமான்யமும் கேள்வி எழுப்பப்போவதில்லை. விசன் 2023 என்றால் என்ன என்று சாமான்யனுக்கு தெரியாது. அது தான் அரசியல் கட்சிகளின் பலமே. மீண்டும் அதிமுக ஆட்சிக்கு வர காரணமே ஓட்டுக்கு துட்டு, ஜெயலலிதா என்ற தனிநபர் மேல் பெண்களுக்கு இருந்த பாசம். வேற கட்சி ஆட்சிக்கு வந்தால் டாஸ்மாக் போயிருமோ என்ற பயமே பிரதான சக்தியாக இருந்திருக்கின்றது.

எனக்கு புள்ளையா, குட்டியா. எனக்கு எல்லாமே நீங்கள் தான். உங்களை விட்டால் நான் எங்கே போவேன் என்று செண்டிமெண்டல் பாயிண்டில் ஆட்சியை பிடித்தார் ஜெயலலிதா. சசிகலாவுக்கும் குழந்தைகள் இல்லை. சசிகலாவும் ஜெயலலிதாவின் அதே டயலாக்கை சொல்லலாம். மன்னார்குடி மாஃபியாவின் அனைத்து கொட்டங்களும் மறக்கடிக்கப்படும். சசிகலா முதல்வராக கூட தேர்தெடுக்கப்படலாம்.

அப்பொழுது தைரியமாக சொல்லலாம்.
மாக்களால் நான். மாக்களுக்காக நான்!

மனசிதைவு நோய்

மனநல மருத்துவமனையில் சிகிச்சை பெறுபவர்கள் பத்தில் ஆறு பேர் ஹிஷோபெரினியா என்ற மனசிதைவு பிரச்சனையில் இருப்பவர்கள். உலகெங்கும் அதிகமான மனநோய் பிரச்சனை இதுதான்.
மூளையில் ஏற்படும் ரசாயனமாற்றம் காரணம் எங்கிறார்கள். ஆனாலும் பிறப்பிலே மூளை வளர்ச்சி குறைபாட்டை தவிர மற்ற அனைத்து மன பிரச்சனைகளும் இது வரை சர்ச்சையுடன் கூடிய காரணமா தான் இருக்கு.
அதிகமான போதை பழக்கம், முக்கியமா நரம்பு மண்டலத்தை பாதிக்கும் கஞ்சா போன்ற வஸ்துகள். அதிக மன அழுத்தத்தில் தனிமையில் விடப்படுதல் மேலும் உங்கள் பரம்பரையில் இருந்தால் உங்களுக்கும் வர 30% வாய்ப்பு உள்ளது.
இவர்களிடன் காணப்படும் அறிகுறிகள். அதீத தாழ்வு மனப்பான்மை. தன் மனதில் தாமே எண்ணுவதை பிறர் நமக்கு கட்டளையிடுவதாக எண்ணிக்கொள்வது. இன்ஸோமேனியா என்ற தூக்கமின்மை.
அதில் பாராநாய்டு ஹிரோபெர்னியா என்பது அனைவரையும் சந்தேகிக்கும். அவர்கள் நம்மை பற்றி தான் பேசிக்கொண்டு இருக்கிறார்கள். என்னை அடிக்கவோ, கொல்லவோ திட்டம் இடுகிறார்கள். சாப்பாட்டில் விசம் கலந்துள்ளார்கள் என்று.
இவர்களுது கற்பனையை உண்மை என்று நம்புவார்கள். சாதாரணமாக இருப்பவர்கள் சினிமா நடிகர்களையும், அரசியல் பிரபலங்களையும் பார்த்ததாக சொல்லுவார்கள். இதுவே ஆன்மீகத்தில் இருப்பவர்கள் கடவுளை கண்டதாக சொல்லுவார்கள். கோர்வையற்ற பேச்சை புதிதாய் பார்ப்பவர்களுக்கு சித்தர் போல தோற்றம் அளிக்கலாம். ஆனால் ராமகிருஷ்ணபரமஹம்சர் முதற்கொண்டு கடவுளை பார்த்தது இப்படி தான்.
உண்மையில் சொல்லவேண்டுமென்றால் மனிதர்கள் அனைவருமே மன சிதைவில் விழிம்பில் இருப்பவர்கள் தான். தன்னம்பிக்கையும், அவசர காலத்தில் எடுக்கும் தெளிவான முடியுமே அவர்களை காப்பாற்றிக்கொண்டிருக்கிறது. தனிமையை தவிர்த்தல். நடக்குமா நடக்காதா என தெரியாமல் நெகடிவ்வாகவே சிந்தித்தல் போன்றவனை தவிர்க்கப்பட வேண்டும்.
நம் உடலுக்கு எதாவது பிரச்சனை வந்தால் அதை நம்மாலே உணர முடியும்., ஆனால் மன பிரச்சனைகளை நம்மை சுற்றி இருப்பவர்கள் மட்டுமே உணர முடியும். நம் செயல் நமக்கு இயல்பாக தெரியலாம். ஆனால் காலம் கடந்த சிகிச்சை மனநோயை குணப்படுத்தாது. மனபிரச்சனைகள் எல்லாருக்கும் உண்டு. தயக்கமின்றி சிகிச்சை எடுத்து கொள்வதே நல்லது

சென்னை நண்பர்கள் கவனத்திற்கு!

நம் நுரையீரலில் பாதி மரத்திடம் இருக்கு, நாம் வெளியிடுவதை அது உள்வாங்கி கொள்கிறது. அது வெளியிடுவதை நாம் வெளிவாங்கிக்கொள்கிறோம் என்ற லாஜிக்கெல்லாம் சரி தான். ஆனா அதெல்லாம் பகலில் மட்டும் தான்.

சூரிய ஒளியின் துணைக் கொண்டு இலையில் இருக்கும் குளோரோபில்ஸ் என்ற பச்சையத்தின் மூலம் தாவரம் தனக்கு தேவையான உணவை தானே தயாரித்துக்கொள்கிறது. அந்த நேரத்தில் நம்மால் வெளியிடபடும் கார்பன் - டை - ஆக்சைடில் இருந்து கார்பன் என்ற கரியை உணவாக எடுத்துக்கொண்டு மீண்டும் ஆக்ஸிசனை வெளிவிடுகிறது தாவரம்.

பகல் நேரத்தில் ஒவ்வொரு தாவரமும் பிஸியான ஆலை போல் செயல்படும். இரவு நேரத்தில் சோம்பேறி மாதிரி தூங்கும். அதனால் தான் வெளியிட்ட ஆக்ஸிசனை தானே எடுத்துக்கொள்ளாமல் மற்ற உயிரனங்களும் வாழும் அளவில் ஆக்ஸிசன் உருவாக்கப்படுகிறது. உங்களுகெல்லாம் உண்மையிலயே தெரியாதா? இரவில் தாவரம் சுவாசிப்பதும் ஆக்ஸிசனை தான்.

அடர்த்தியான மரங்களுக்கு அடியில் இரவில் நின்றால் உங்களுக்கு மூச்சு முட்டும். புளியமரம் போன்ற அடர்த்தியான மரங்கள் ஆளை மயக்கமடைய செய்யும். நம்மாட்கள் முனி அடிச்சிருச்சுன்னு கதையை மாத்தி மரத்திற்கு ஆணி அடித்து வைப்பார்கள். பகம் நேரத்தில் அடர்த்தியான மரத்தின் அடியில் ஏசி போட்டா மாதிரி ஜில்லுன்னு இருக்கும். ஆக்ஸிசன் குளிர்ந்த வாயு. கார்பன் டை ஆக்ஸைடு எரிந்த கரி. கரி சுடத்தான் செய்யும்.

ஆவியாகி மேகமாக நிற்றும் அதே நீரின் மேல் குளிர்த்த காற்று பட்டால் தான் அது மழையாக மாறி நமக்கு நீர் ஆதாரங்களை தரும். குளிர்ந்த காற்றுக்கு ஒரே இயற்கை வழி மரம் வளர்த்தல் மட்டுமே. மரம் இல்லையென்றால் இயற்கை சமநிலை மாறும். பூமி வெப்பமயமாகுதல் உயரும். நிலபகுதிகளில் மழை இருக்காது. பாலைவனமாகும் நிலப்பகுதி

சென்னையில் விழந்த மரங்களை போல் எஞ்சி நின்ற பிற மரங்கள் தங்கள் பச்சையத்தை இழுந்து கரிகட்டையாக நிற்கின்றது. வரும் கோடையை நிச்சயமாக சென்னை மக்களால் சமாளிக்க முடியாது. வாடகை வீட்டில் இருந்தாலும் அடர்த்தியான பச்சையம் உள்ள பெரிய இலைகள் கொண்ட தாவரம் வளர்க்க உடனே ஏற்பாடு செய்யுங்கள். தாவரத்தை தவிர வேறு எவற்றாலும் உங்களை காப்பாற்ற மிடியாது!

#வால்பையன்

எனது 500-வது பதிவு

2006 ஆம் ஆண்டு ஆனந்தவிகடன் வலைபக்கங்கள் மூலம் ப்ளாக்ஸ்பாட் அறிமுகம் ஆகும் முன் வரை யாஹூ மெசஞ்சரில் தான் கடலை போட்டுகிட்டு இருப்பேன். அப்ப என் புனைபெயர் கைப்புள்ள.

முதலில் அறிமுகம் ஆனது இட்லி வடை வலைப்பூ. கமெண்ட் போடுவதற்காக கூகுள் அக்கவுண்ட் துவங்கினேன். பின் அறிமுகமான தருமி Sam George அவர்களின் வலைப்பூ பார்த்த பின் தான் எனக்கும் எழுதனும் என்ற ஆர்வம் வந்தது. கமெண்டுகளில் என் விவாதத்தை பார்த்து என் வலைப்பூவும் வேகமாக ஃபாலோயர்ஸ் சேர்ந்த்தது..

இணையம் மூலம் அறிமுகம் ஏற்பட்டு நான் முதலில் பார்த்த பிரபலம் தருமி அவர்கள் தான். இன்னும் அதே தந்தையின் அக்கறையோடு அறிவுரையுடனும், நலமும் விசாரிப்பார். அடுத்து பார்த்தது மறைந்த டோண்டு அவர்கள். அவரிடன் நான் கற்றுக்கொண்டது கருத்து வேறு நட்பு வேறு என்ற கோட்பாட்டை. அவரது பக்கத்தில் என்ன கமெண்ட் வந்தாலும் அழிக்காமல் அப்படியே வைத்திருப்பார். அவருடன் நான் எவ்வளவு முரண்பட்டாலும் அடிக்கடி போன் பண்ணி இணையம் சம்பந்தமில்லாமல் என் நலன் விசாரிப்பார். அவரிடமும் ஒரு தந்தையின் அன்பு இருந்தது

நான் துவண்டு கிடக்கும் பொழுதெல்லாம் என் தோள் தட்டி, உன் திறமை நீயே அறியாமல் இருக்க வால், இதெல்லாம் உனக்கு ஒரு பிரச்சனையா. உன்னால் முடியாட்டி யாரால் முடியும் என நம்பிக்கை கொடுத்து ஆரம்பத்தில் இருந்து உடன் பயணித்த அண்ணன்கள்
ஜ்யோவ்ராம் சுந்தர் M.m. Abdulla P Kathir Velu ஈங்கூர் ரகு Saadiq Samad Shallum Fernandas Ramesh Vaidya மிக முக்கியமானவர்கள்

தோள் மீது கை போட்டு, ஒரே சிகரெட்டை மாறி மாறி அடித்து, சியர்ஸ் சொல்லி, ஒரே படுக்கையில் ஒன்றாய் படுத்து, எனக்கு ஒரு பிரச்சனையென்றால் இது வேண்டுமானாலும் எனக்காக செய்யும் தோழமைகள்
Murali Krishna Shathish S S சாந்த குமார் வா.மு. கோமு Rasu Rasu Krenn Samuel Rajesh Coimbatore Mony Coimbatore முக்கியமானவர்கள்

என் தந்தை மரண படுக்கையில் கிடந்த பொழுதும், நான் தலையில் அடிபட்டு முகவாதம் வந்து கிடந்தபொழுதும் எனக்கு நம்பிக்கை அளித்து அனைத்து உதவிகளும் செய்த நண்பர்களை மறந்தால் நான் மனிதனே அல்ல. அவர்கள் இல்லையென்றால் இன்றும் எனக்கு பேச்சு வராமலே போயிருக்கும்

என்னுடன் விவாதிக்க முடியாமல் என்னை அசிங்கமாக திட்டிவிட்டு, ப்ளாக் செய்து போன பின் என்றோ பார்க்க நேர்ந்தால் நான் முன் சென்று கை கொடுத்து தல எப்படி இருக்கிங்கன்னு கேட்கும் பொழுது வெட்கி மன்னிப்பு கேட்டவர்களும் என் நட்பு வட்டத்தில் உண்டு.

சூழலால் பிரிந்த காதல், உன்னுடைய இந்த காதலுக்கு நான் தகுதியானவள் தானான்னு தெரியலன்னு பிரிந்த காதல் என சில காதல் கதைகளும் எனக்கு இணையத்தில் நடந்தது. அவர்கள் ரொம்ப நல்லவர்கள். அவர்களுடன் வாழ்ந்த நாட்கள் இனி கனவிலும் எனக்கு கிடைக்காது. பிரிவுக்கு கூட நானே தான் காரணமாய் இருப்பேன். எனக்கு கோவமோ, மகிழ்ச்சியோ இயல்பாய் வெளிபடுத்த தெரியாது. அதீதமாய் வெளிப்படுத்தி மூச்சுமுட்ட செய்துவிடுவேன். எதேனும் பிரச்சனை ஏற்பட்டு பிரிய நேர்ந்தால் தற்கொலை செய்து கொள்வேனோ என பயந்தே கொஞ்சம் கொஞ்சமாக விலகி என்னையே வெறுக்கும்படி செய்து மொத்தமாக விலகி சென்றாள் கண்ணம்மா!

இதை ஏன் மச்சி எங்கிட்ட சொல்றிங்க என்றால், நீ அடி வாங்கினா கூட வெட்கமில்லாம எழுதுவ மச்சி, ஆனா உன் பர்சனல் மட்டும் எழுதுவுவே தவிர பிறர் பர்சனல் எழுத மாட்ட, நான் உன்னை நம்புறேன் மச்சி என நெகிழசெய்யும் தோழிகளும் நிறைய. துரதிர்ஷ்டவசமாக கண்ணம்மா யார் என்று சிலருக்கு தெரிந்துவிட்டது. இருவருக்கும் மியூச்சுவல் நண்பர்கள் அதிகம் என்பதால்.. என் பதிவும், முந்திரிகொட்டை மாதிரி முதல் ஆளாய் போடும் கமெண்டும் போதுமே. ஆனாலும் கண்ணம்மா நல்ல மெச்சூர்ட். அவளிடன் இயல்பு வாழ்க்கை பாதிக்கும் அளவுக்கு யாரிடமும் பேச்சை வளர்க்க மாட்டா. இருப்பினும் நடந்த தவறுக்காக மனப்பூர்வமாக நான் மன்னிப்பு கேட்டுக்கொள்கிறேன்.

இவையல்லாது
இணையத்தில் என் தம்பி Rajan Radhamanalan
என் மகள் காயத்ரி
என் மருமகன் ராஜேஷ் பச்சையப்பன்

நான் ஒன்பதவாது வரை தான் படிச்சிருக்கேன்னு சொன்னா பொய் சொல்றேன்னே நினைக்கிறாங்க. படிப்பிற்கும் அறிவுக்கும் சம்பந்தமே இல்லை. என் ப்ளஸ்னு நான் பார்த்த வரையில் படிக்கும் காலத்தில் எனக்கு பொழுது போகலைனா பாடபுத்தகம் தான் எடுத்து படிப்பேன். கணக்கு, ஆங்கிலம் தவிர்த்து அனைத்தியும் படிச்சிருவேன். இதை படித்து மார்க் வாங்கனும் என்பதை விட, இதில் எதோ இருக்கு அது என்னான்னு தெரிஞ்சிக்கனும் என்ற ஆர்வம் எனக்கு சின்ன வயதில் இருந்தே உண்டு.

காலை இரண்டு மணி நேரம், இரவு இரண்டு நேரம் வீட்டில் விழித்திருக்கும் நேரம்(அதிகபடியாக) மற்ற எல்லா நேரமும் எனக்கு இணையம் தான். இணையம் தான் கற்றுக்கொடுத்தது, இணையம் தான் சம்பளம் கொடுத்தது, இணையம் தான் நம்பிக்கை கொடுத்தது, இணையம் தான் உயிர் கொடுத்தது. என் வாழ்க்கையை நான் இன்னும் கற்றுகொண்டு தான் இருக்கிறேன். என் ஆசானாக என் இணைய நண்பர்கள் இருக்கிறார்கள். அவர்களுக்கு நான் என்ன கைமாறு செய்யபோறேன்னு தெரியல.

உண்மையில் அடுத்த ஜென்மம்னு ஒன்னு இருந்தா, நீண்ட வருடங்கள் உயிர் வாழும் ஒரு மரமாக பிறந்து என் நன்றியை காணிக்கை ஆக்க விரும்புறேன்..

!

Blog Widget by LinkWithin