காதலே வலியும், சத்தியமும், ஜீவனுமாய் இருக்கிறது!

தோல்வியும், அவமானங்களையும் தாண்டி அதிக பாதிப்பையும், வலியையும் நிராகரிப்பில் தான் நான் உணர்ந்தேன். நிராகரிப்பு என்ற ஒன்றை வார்த்தைக்குள் நீ எதுக்குமே லாயக்கில்ல என்ற ஓராயிரம் அர்த்தங்கள் ஒளிந்துள்ளது.

நிராகரிப்பின் வலி தாழ்வு மனப்பான்மையும், இயலாமையும் உருவாக்கும், இயலாமை கோவமாக மாறும். முடிந்த வரை எதிர்தரப்பை குற்றம் சொல்லி திட்டித்தீர்ப்போம். புலம்பி தள்ளுவோம். என்ன தான் அறிவியல், உளவியல் படித்து, பேசி வந்தாலும் நிராகரிப்பின் அந்த கணம் சுயத்தை இழக்கச்செய்வது உண்மை தான்.

எனக்கு உண்மை சூழலை அறிய ஒரு மாதம் பிடித்தது. சரியான போன வருடம் இதே நாள் பழைய சாட்டுகளை படித்துள்ளேன்.

”நான்” உன்னை எவ்ளோ காதலிச்சேன் தெரியுமா?
“நான்” இல்லாமல் நீ இருந்திருவியா?
“என்னை” நீ ஏமாத்திட்ட. “என்” வாழ்க்கையை நாசம் பண்ணிட்ட. “எனக்கு” வலிக்குது.

நான், என்னை, என், எனக்கு... எல்லாமே முதல் தரப்பை சுற்றியே யோசிக்கப்பட்டுள்ளது. எதிர்தரப்பின் நியாயங்கள் சிறிதும் பரிசீலிக்கபடவில்லை. பழைய சாட்டை படித்தபொழுது தான் எனக்கு தெரிந்தது, ஈகோ தப்புன்னு சொல்ற நான் எவ்ளோ ஈகோ காட்டியிருக்கேன்னு. என் முகத்தில் காறி துப்பிக்கொள்ளனும் போல தோன்றியது.இந்த சின்ன வயதில் இவ்வளவு அறிவா என நான் பிரமிக்கும் ஒரு சிலரில் என் மாப்ளையும் ஒருவன். ஏற்கனவே பிரிந்திருந்தாலும் நேத்து போய் திரும்ப கதவை தட்டியிருக்கான். என்னால மறக்க முடியல. திரும்ப லவ் பண்ணலாம்னு

அவர்கள் இருவருமிடமும் செம ஈகோவை நான் உணர்ந்திருக்கேன். ஒரு பிரச்சனையில் இருவரையும் ஸாரி கேட்க சொன்னதுக்கு ஒரு தரப்பு அவன் பண்ண தப்புக்கு நான் ஏன் ஸாரி கேட்கனும் என்றும். எத்தனை தடவை தான் ஸாரி கேட்பது என இன்னொரு தரப்பும் சொல்லுது. அப்பவே சொன்னென். உங்களுக்குள் ஒத்து வராது. பேசி புரிதலுடன் நண்பர்களாக பிரிந்து விடுங்கள்னு

நான் கண்ணம்மாவிடம் சொல்வேன், நாம் தான் வாழ போகிறோம். சண்டையென்றாலும் எப்படியும் பேசி தான் ஆகவேண்டும். ஈகோ பார்த்து நாலு நாள் பேசாமல் இருப்பது நம்மை நாமே ஏமாற்றிக்கொள்வது. கோவமா இருந்தா திட்டு, நாலு அடி கூட அடி. ஆனால் பேசாமல் இருப்பதால் எதுவும் சரியாகப்போவதில்லைன்னு. இவர்கள் இருவரும் அடிக்கடி நாட்கணக்கில் பேசாம இருந்துள்ளார்கள். உன்னை வச்சு காலம் தள்ளமுடியாது என ஒரு தரப்புமே அடிக்கடி சண்டை போட்டுள்ளது.

காதல் ஒரு ஹார்மோன் விளையாட்டு,
மூணாம் காதல் முழுமையடையுமடா,
டாக்டர் பொண்ணு நோ சொன்னா, நர்ஸ் பொண்ண காதலின்னு அட்வைஸ் பண்ணும் தகுதி எனக்கில்லை. இதெல்லாம் தெரிந்தும் இன்னும் அவ நல்லாருக்காளான்னு அடிக்கடி எட்டி பார்த்திகிட்டு தான் இருக்கேன்.காதலிப்பது என்பது என்ன? நான் உன்னை சந்தோசமா வச்சுகுவேன் என்பது தானே, உன்னுடன் இருப்பதை விட உன் இல்லாமை உனக்கு சந்தோசம் தருதுன்னா அவள் கேட்கும் இடத்தை அவளுக்கு கொடுத்து அவள் மகிழ்வை கண்டு ரசிப்பதே காதல்.

நீ அவளை உண்மையிலயே காதலிப்பதாய் நினைச்சேனா, அவள் மகிழ்வை கெடுக்காதே!

ஒழுக்கக்கோட்பாட்டு விதிகளும், மதமும்!

நம் விருப்பம் சார்ந்த உணர்வுகளுக்கு ஒரு விலை உண்டு, உதாரணமாக எனக்கு உப்புமா பிடிக்காது என்பவர்களை ஆயிரம் ரூபாய் தர்றேன் சாப்பிடுறியான்னு கேட்டா சரின்னு சொல்வாங்க. இந்த விலையில் வேறுபாடு இருக்கலாம். ஆனால் நிச்சயமாக விருப்பம் சார்ந்த உணர்வுக்கு விலையுண்டு

ஆனால் ஒழுங்கம் சார்ந்த உணர்வுகள் தன் மற்றும் தம் சார்ப்பு பிம்பம் சார்ந்தவை. அவைகளை உடைப்பது ஓட்டுமொத்த ஒழுக்க கோட்பாட்டு விதிகளையும் உடைப்பது. பொது வெளியில் யாவரும் செய்ய தயங்குவர். உதாரணம் உங்க அம்மா ஒழுங்கமில்லாதவள்னு சொல்ல உங்களுக்கு விலை பேசப்பட்டால் மறுப்பீர்கள்.

கடவுள் நம்பிக்கை ஒழுங்கம் சார்ந்த விதிக்களுக்குள் அடங்கியது தான் அதனை பற்றிய கேள்விகளுக்கு கோபம் அடைதலும், சுயபரிசோதனையாக தம் நம்பிக்கையை தாமே கேள்வி கேட்காமல் இருப்பதும்.

ஒரு பகுத்தறிவாளன் ஆன்மீகவாதியின் ஒழுக்கவிதிகளுக்குள் அடங்க மாட்டான். அவன் தம் அடிக்காமல், பாக்கு போடாமல் இருப்பது தன் ஆரோக்கியத்திற்காக, நான் ஒழுக்கமானவன் என்று பறைசாட்டிக்கொள்ள அல்ல. ஒரு ஆன்மிகவாதி அவன் ஒழுக்க கோட்பாட்டை அவனே மீறினாலும் கடவுள் நம்பிக்கை என்ற ஒழுக்க விதியின் முன்னால் அவைகள் கடுகு. கடவுள் நம்பிக்கை எல்லா தவறுகளுக்கும் அபராதம் கட்டி அவனை சொர்க்கத்திற்கு அனுப்பும் என நம்ப வைக்க பட்டுள்ளான்.

இயற்கையை கட்டுபடுத்த தெரியாமல் அதனை கண்டு அஞ்சி, அதனை வணங்கி வந்த மனிதன் என்று தனி மனிதனை தொழ ஆரம்பித்தானோ அன்றே கடவுளும், கடவுள் மறுப்பாளனும் தோன்றினான். நிச்சயமாக முதல் கடவுள் பெரும் புத்திசாலியாகவும், வீரனமாகவும் இருந்திருக்க வேண்டும். குழு மக்கள் தம்மை காக்க வந்தவனாக தொழுது கடவுள் ஆக்கினர்.பகுத்தறிவும் ஆரம்பத்தில் இருந்தே இருக்கு. ஆனால் இந்த கதவை திறக்காதே, உன் உயிர் போய்விடும் என்று பயப்படுத்தியே வளர்க்கப்பட்ட ஒருவன், அவன் ஆர்வத்தையும் தாண்டி கடவுளுக்கு அப்பால் யோசிக்க மறுக்கும் காரணம் உயிர் பயம். ஆனால் கடந்த சில நூற்றாண்டுகளாக அறிவியல் வளர்ச்சியின் கூடவே பகுத்தறிவும் வளர்ந்து வருகிறது.

பல தலைமுறைகளாக கோவில் பூசாரியாக இருந்தவனின் வாரிசு கடவுள் மறுப்பாளனாக சிந்திக்கிறான். பல தலைமுறைகளாக ஆண்ட பரம்பரை என சாதி பெருமை பேசியவனின் வாரிசு சாதி மறுப்பாளனாக தம்மை அடையாள படுத்திக்கொள்கிறான். இந்த வளர்ச்சிக்கு அடிப்படை கல்வி விழிப்புணர்வு. சமூக விழிப்புணர்வு. மனிதம் சார்ந்த உணர்வு. மாற்று சிந்தனை.

யாரும் பிறக்கும் போதே அறிவாளியும் இல்லை, முட்டாளும் இல்லை. நாம் எங்கே செல்ல வேண்டும் என்பதை நாமே தீர்மானிக்கிறோம்

வன்முறை எந்த வடிவத்திலும் தீர்வாகாது ஆனாலும்...

வன்முறை எந்த வடிவத்திலும் தீர்வாகாது என்பதை
முழுமையாக கடைபிடிப்பவன் நான். ஆனாலும் என் அண்டைவீட்டுகாரனே, விருந்தாளியாக வந்தவனோ என் உழைப்பையும், என் வளங்களையும் சுரண்டி எடுத்தால் என்ன செய்வது நான்.

பிரிட்டீஷ் அதை தான் செய்தான், ஒரு பக்கம் அஹிம்சா வழியிலும், மறுபக்கம் ஆயுதம் ஏந்தியும் போராட்டம் நடந்தது. இலங்கையில் புலிகள் ஆயுதம் ஏந்த காரணமும் அதுதான். ஆனால் ஒருமுறை ஏந்தி விட்டால் அது புலிவாலை பிடித்தது போல் என்பதற்கு உதாரணம் இந்திய நக்ஸல்கள்.

கிழக்கு மற்றும் வட கிழக்கு மாநிலங்களில் நக்ஸல் மற்றும் மாவோயிஸ்ட் புரட்சியாளர்கள் அவ்வபோது யாரையாவது கடத்தி பேச்சு வார்த்தை நடத்துவது. அரசுக்கு எதிராக புரட்சியை தூண்டுவது என பேர் பெற்றுள்ளனர். பொதுமக்களை கொன்றார்கள், ஏழை மக்களின் சொத்தை திருடினார்கள் என நான் எங்கேயும் படிக்கவில்லை. அப்படி இருந்தால் காட்டவும் தெரிந்துகொள்கிறேன்

வாழ்தார பிரச்சனைகள் சரி செய்யப்படும் என உறுதி அளிக்கும் சமயங்களில் சிலர் ஆயுதங்களை ஒப்படைத்து சரண் அடைவார்கள், சிலர் அரசின் மேல் நம்பிக்கை இல்லாமல் மறைந்தே வாழ்வார்கள். அல்லது பிரச்சனை இருக்கும் வேறு மாநிலங்களுக்கு உதவி செய்ய போய் விடுவார்கள். சுதந்திரத்தின் தாகம் அவ்வளவு எளிதல் அடங்குவதல்லஅர்ஜெண்டினாவில் பிறந்த எர்னாஸ்டோ, கியூபா விடுதலைக்கு ஏன் போராட வேண்டும். கியூபா மந்திரி சபையில் பதவி அளிக்கிறேன் என சொன்னபோதும் ஏன் மறுத்து அடுத்த நாட்டு விடுதலைக்கு போராட செல்லவேண்டும். மனிதத்தின் மீதுள்ள தீராகாதல் அது. அதை தான் அதிகார வர்கம் தீவிரவாதம் என அழைக்கும்

பொது புத்தியில் உங்களுக்கு புரியும் படி சொல்லனும்னா தனி ஒரு மனிதனுக்கு உணவில்லை எனில் ஜெகத்தினை அழித்திடுவோம்னு பாரதி பாடினா அது புரட்சி, அதையே செயலில் காட்டினால் அது தீவிரவாதம்.

சிறப்பு காவல் படையினர் அரசாங்க பணியாட்கள், நாட்டில் அமைதியை நிலைநாட்ட உறுதி பூண்டு சேவை மனப்பான்மையில் உயிரையும் கொடுத்து பணியாற்ற துணிந்தவர்கள். நடந்த சண்டையில் உயிர் நீத்த சிறப்பு காவல்படையினருக்காக வருந்துகிறேன்.

நம் கண் முன்னே பார்க்கிறோம்
நெடுவாசல் மீத்தேன் திட்டத்திற்கு எதிராக மாதகணக்கில் போராட்டம், விவசாயிகளின் தற்கொலைக்கு தீர்வு வேண்டி டெல்லியில் போராட்டம். அரசாங்கம் அவனை மதிக்கவேயில்லைனா அவன் என்ன தான் செய்வான்

நக்சல்பாரிகளும், மாவோயிஸ்டுகளும் பிறப்பதில்லை, உருவாக்கப்படுகிறார்கள்..

நான் என்ன ஆயுதம் எடுக்க வேண்டும் என்பதை என் எதிரியே தீர்மானிக்கிறான்.

மூளையின் செயல்திறனை அதிகரிப்பது எப்படி?

எளிய அறிமுகம் மட்டும். எல்லா மூளையும் கொழுப்பால் ஆனது தான். அதன் வளார்ச்சிக்கு புரதமும், செயல்பாட்டுக்கு பிராணவாயுவும் தேவை. நம் வலப்பக்க மூளை உடலின் இடது பாகத்தை கட்டுப்பாட்டில் வைத்துள்ளது. அது போக கலை சார்ந்த கிரியேட்டிவ் வேலையும் அந்த பக்கம் தான் கவனித்துக்கொள்கிறது. இசை, ஓவியம், சிற்பம் வகையறா, இடதுபக்க மூளை லாஜிக்கல் வேலையை செய்கிறது. ஒப்பிடுதல், முன் அனுபவம் ஆகியவற்றை கணக்கிட்டு முடிவு எடுக்கும் வேலை. மனிதர்களில் 85% பேர் இடது பக்க மூளை செயல்பாட்டில் உள்ளவர்கள் தான்.

மனித மூளையை பயோ கம்பியூட்டர் என்பார்கள். அதாவது உயிருள்ள கணிணி. அதன் உண்மையான செயல்திறன். ஒரு லட்சம் சூப்பர் கம்பியூட்டரை விட அதிகம். மூளையை சூப்பர் பிராஸஸர்னு சொல்லலாம். ஆனா பிரச்சனை என்னான்னா நம் மக்கள் அந்த பிராஸஸரை அப்டேட் பண்றதேயில்ல. மூளை தான் ஹார்ட் டிஸ்கும், உங்கள் ஞாபக அடுக்குகளும் அங்கே தான் இருக்கு. பிராஸஸர் அப்டேட்டா இல்லைனா அதனால் ஞாபக அடுக்கில் இருந்து சரியான பதிலை எடுத்துத்தர இயலாது போய் விடும்.இந்த கட்டுரையின் புரிதல் முழுக்க முழுக்க என்னுடையது மட்டுமே, என் பயிற்சி மட்டுமே. மூளையின் செயல் திறனை குறைக்கக்கூடியது ஆல்கஹால். நான் இரண்டு முறை டீஅடிக்சன் போயும் பிராஸஸர் நல்லா இருக்குன்னா அதற்கு நான் செய்து வரும் பயிற்சிகளே காரணம். மூளையின் செயல்திறனை கூட்ட ஆதி பால பாடம் கணிதம் மட்டுமே. கணிதத்தை மனப்பாடம் செய்ய இயலாது. சிந்திக்கனும். சிந்தனை மட்டுமே மூளையை உயிர்ப்புடன் வைத்திருக்கும்.குறுகிய சிந்தனை என்பார்கள், அதை பொதுபுத்தியுடன் வகைப்படுத்தலாம்.,  குறுகிய சிந்தனை என்பது மாற்று சிந்தனை இல்லாமல் இதுவரை எல்லாரும் என்ன பண்ணாங்களோ அதையே தானும் செய்வது. இதற்கான பயிற்சி புதிர்கள் விடுவிப்பது. கணித புதிர்கள், எழுத்து புதிர்கள், அடுத்து என்ன என்னும் லாஜிக்கல் புதிர்கள் உங்களுக்கு மாற்று சிந்தனைக்கு வழி வகுக்கும்.
பதில் தெரியாத புதிர்களை ஒதுக்கி விடாமல் பதிலை அறிந்து கொள்ளுதல் நல்லது. அப்படி ஒரு கோணம் இருப்பதை உணராமல் உங்களால் மாற்று சிந்தனைக்கு செல்ல முடியாது

ஞாபக சக்தி என்பது தான் இன்றைய தலையாய பிரச்சனை. நம் கல்வி முறை 80% மனப்பாடம் செய்து அதை ஞாபகம் வைத்து கொள்ளவதை மட்டுமே செய்கிறது. ஞாபகசக்தியின் பாலபாடம் ஆர்வம். ஒன்றை கடமைக்கு படிக்கனும்னு படிக்கக்கூடாது, மதிப்பெண்ணுக்காக படிக்கக்கூடாது. இதில் எதோ இருக்கு, அது என்னான்னு நான் தெரிஞ்சிக்கனும் என்ற ஆர்வத்தை மையப்படுத்தனும். சினிமா, கதை படிப்பதில் போல் ஆர்வம் இல்லாமையே அது நம் மனதில் தங்காமல் இருப்பது. மறக்காதீர்கள், ஞாபக சக்தியின் சூத்திரம். :இதில் எதோ இருக்கு, அது என்னான்னு நான் தெரிஞ்சிக்கனும்”

கணிதம், கணித புதிர்கள் விளையாட்டாய் செய்யலாம், அதே போல் உள்ள இன்னொரு எளிய பயிற்சி. எண்கள்.
ஒன்னு, டூ, மூணு, ஃபோர், அஞ்சு, சிக்ஸ் இப்படி 50 வரை தவறில்லாமல் சொல்லிபழகுங்கள், பழக பழக வேகம் கூட்டுங்கள், 100 வரை சொல்லுங்கள், உங்களுக்கு மூன்றாவதாக வேறு மொழி தெரியும் என்றால் அம்மொழியையும் சேர்த்துக்கொள்ளுங்கள். தினம் காலையில் இப்பயிற்சி செய்வது கவனமுடன் வேலை செய்யவும், ஒருநிலை மனதில் எதையும் கவனிக்கவும் வழி செய்யும்.

வலதுகை பழக்கக்காரர்கள், இடது கையில் எழுதி பழகுங்கள். ஆரம்ப இடத்தில் சரியாக முடிக்கும் முட்டை(ரவுண்டு) போட்டு பழகுங்கள்(வேடிக்கையா இருக்கும், அழகான கையெழுத்துக்காக பயிற்சி இது) இசை கேளுங்கள். கூடவே பாடுங்கள். இல்லையென்றால் இசை ஒருபக்கம் ஒலிக்கும், உங்கள் சிந்தனை வேறு பக்கம் இருக்கும். நடனமாடுங்கள்.

இதை 3 வயசு குழந்தையில் இருந்து 113 வயசு குழந்தை வரை செய்து பார்க்கலாம்

மகிழ்ச்சியாக இருங்கள் எல்லாம் உங்கள் வசப்படும்

நான் ஏன் எந்த கட்சியிலும் இல்லை?

கேள்வி: நீங்கள் ஏன் எந்த கட்சியிலும் உங்களை இணைத்துக்கொள்ள வில்லை?

பதில்: ஒரு இடத்தில் இரண்டு பொருள் இருந்தாலே அங்கே ஒப்பீடு(compare) அரசியல் வந்து விடும். இரண்டு பொருளும் ஒரே மாதிரி இருந்தாலும் ஒன்னு வலபக்கம் இருக்கு, ஒன்னு இடப்பக்கம் இருக்கு. வலம் பெருசா, இடம் பெருசா என்றோ. ஒன்னு மேலே இருக்கு, ஒன்னு கீழே இருக்கு. மேல் பெருசா, கீழ் பெருசா என்றோ எதாவது ஒன்றிற்கு சிறப்பமைப்பு கொடுத்து அதனுடன் தன்னை இணைத்துக்கொள்வதே பொதுபுத்தி என்பதாகும்.

ஒப்பீடு என்ன அவ்ளோ பெரிய குற்றமா என்பவர்களுக்கு.
அனைத்து பிரச்சனைகளின் அடிநாதமே அங்கே தான் ஆரம்பிக்கிறது.
இது சரி என்று ஒன்றை ஏற்றுக்கொள்வதை விட, எது நமக்கு வசதி என்று ஏற்றுக்கொள்ள தெடங்கியது இந்த ஒப்பிட்டளவில் தான். ஒருவர் இரண்டு விதங்களாக இஸங்களில் சிக்கிக்கொள்கிறார். ஒன்று திணிக்கப்படுதல், இன்னொன்று மற்றவைகளை விட இது பரவாயில்ல என்ற மதிப்பீடு

ஒரு இஸத்தை ஏற்றுக்கொண்டு விட்டால் நீங்கள் அந்த வட்டத்திற்குள் நுழைந்துவிட்டீர்கள். இப்பொழுது உங்களால் அந்த வட்டத்தின் ஒரு பகுதியை மட்டுமே பார்க்க முடியும். அதில் இருக்கும் தவறுகள் உங்களுக்கு மறைக்கப்படும் அல்லது பார்க்க விரும்ப மாட்டீர்கள். ஒவ்வொரு கட்சி தொண்டனுக்கும், ஒவ்வொரு மதவாதிக்கும் இது பொருந்தும்.

தவறுக்கு நியாயம் கற்பிப்பது, சிறப்பானது என்று நினைத்தவுடன் இருப்பதால் நானும் சிறப்பானவன் என்ற மமதை கொள்வது. நான் சிறப்பானவன் என்பதை நிரூப்பிக்க பிற இஸங்களை சிறுமைக்குள்ளாக்குவது இவைகள் உங்கள் இயல்பாகிவிடும். உங்கள் இஸத்தின் தவறுக்கெல்லாம் வக்கிலாகி நிற்பீர்கள், பிற இஸத்தின் தவறுக்கு நீதிபதி ஆகிவிடுவீர்கள்.

அதே நேரம் பிறர் என் மீது போர்த்தும் அடையாள போர்வை மீது எனக்கு எந்த அக்கறையும் இல்லை. பார்பனியத்தை விமர்சித்தால் தலித் என்பது, தலித் தவறுகளை சுட்டிக்காட்டினால் உயர்சாதிய திமிர் என்பது. இஸ்லாத்தை விமர்சித்தால் காவி என்பது, காவியை விமர்சித்தால் பச்சைகளிடன் காசு வாங்கிட்டான் என்பது. இது போன்ற உங்கள் இயலாமைகள் எனக்கு எந்த பாதிப்பும் ஏற்படுத்தியதில்லை.

அதிமுகவை கேள்வி கேட்டால், திமுக ஒழுங்கா என்பார்கள்.
பாஜகவை கேள்வி கேட்டால் காங்கிரஸ் ஒழுங்கா என்பார்கள்
இதுவே மதவாததிற்கும். தன்னை நியாயபடுத்திக்க பிறர் மீது குற்றங்களை சுமத்துவது ஒருபோதும் பதில் ஆகாது. அவ்வாறு செய்பவர்கள் தன் தவறுகளை மறைப்பதோடு, அவர்கள் ஒருபொழுதும் திருந்தப்போவதில்லை என்பதை ஆணித்தரமாக பறைசாட்டுகிறார்கள்.என்னுடம் பேசும் நண்பர்கள், நான் உங்கள் ரசிகன் என்றால் நான் மிகவும் வருத்தப்படுவேன். என் ரசிகன் என்றால் என்னை கொண்டாடுகிறீர்கள். பின் என் தவறுகளுக்கும் நியாயம் கற்பிக்க ஆரம்பிப்பீர்கள். என் தவறுகளை நீங்கள் சுட்டிக்காட்டாமல் எனக்கு ஒருபொழுதும் அது தெரியப்போவதில்லை. எனக்கு வாசகர்களை விட நண்பர்களே நெருக்கமாக உணர்கிறேன். நீங்கள் அனைவரும் என் நண்பர்கள் தான்.

டீ.ராஜேந்தரை எடுத்துக்கொள்ளுங்கள். ஆரம்பகாலங்களில் கதை, திரைகதை மொக்கையா இருந்தாலும் இசையும், பாடல் வரிகளும் உலகதரம் வாய்ந்தவை. அவரை ஏத்தி விட்டு மேலே கொண்டு போய் சிதறு தேங்காய் போல் உடைத்துவிட்டார்கள். ஆனால் இன்றும் அந்த புகழ் போதையில் இருந்து வெளியே வர முடியாமல் வாய்லயே வடை சுட்டுகிட்டு இருக்கார்.

சசிகலாவை பார்க்க போன கம்யூனிஸ்டுகளையும் விமர்சிக்க முடியுது என்றால் கட்சி சாராமல் அவர்களை வட்டத்திற்கு வெளியே இருந்து பார்ப்பதால் தான் முடிகிறது. எழுத்தை கொண்டாடுங்கள். எழுத்தாளனுடன் நண்பனாக இருங்கள், நடிப்பை கொண்டாடுங்கள், நடிகனுடன் நண்பனாக இருங்கள்.#வாலியிஸம்

நீங்களும் உங்க புண்ணாக்கு சடங்குகளும்!

ஒரு ஊர்ல ஒரு மடம் இருந்தது. அங்கே நிறைய மாணவர்களும் ஒரு குருவின் இருந்தார். அந்த மாணவர்களுக்கு தினம் பாடம் சொல்லிக்கொடுப்பது அந்த குருவோட வேலை.

நல்லா போய்கிட்டு இருந்தா அந்த மடத்துகுள்ள திடீர்னு ஒரு பூனை வந்தது. குறுக்கும் மறுக்குமா ஓடிகிட்டு மாணவர்களை படிக்க விடாமல் தொந்தரவு பண்ணிகிட்டே இருந்தது.

என்ன பண்ணலாம்னு யோசிச்ச குரு, அந்த பூனைய பிடிசசு தூண்ல கட்டுங்கடான்னு உத்தரவு போட்டாரு, மாணவர்களும் அந்த பூனைய பிடிச்சு தூண்ல கட்டுனாங்க. வகுப்பு முடிந்ததும் அவுத்து விட்ருவாங்க. ஆனா அந்த கிறுக்கு பூனை மறுநாளும் மடத்திற்கு வந்தது. மாணவர்கள் பிடிச்சு கட்டி போடுவாங்க. இது அப்படியே தொடர்ந்தது.

ஒரு நாள் அந்த பூனை செத்து போச்சு. வகுப்புக்கு வந்த மாணவர்கள் பூனைய தேடுறாங்க எங்கேயும் கிடைக்கல. உடனே எல்லாரும் கூடி, குரு வந்தா பூனை எங்கன்னு கேட்பாரு. நாம ஊருகுள்ள போய் எதாவது பூனைய பிடிச்சிட்டு வந்து கட்டி வைக்கலாம்னு முடிவு பண்ணி அப்படியே பண்ணாங்க.ஒருநாள் அந்த குருவும் செத்து போய்ட்டாரு, பின் அந்த மடத்துக்கு புதுசா ஒரு குரு வந்தாரு. அவரு வரும் போது தூண்ல பூனை கட்டப்பட்டு இருந்தது. இது என்னப்பான்னு கேட்டாரு. எங்க பழைய குரு சொல்லியிருக்காரு. வகுப்பு நடக்கும் போது தூண்ல பூனைய கட்டிப்போடச்சொல்லி. அதான் நாங்களும் பண்றோம்னு சொன்னாங்க. புது குருவும் எதோ காரணம் இருக்கும் போல. சரி இருக்கட்டும்னு விட்டுட்டாரு.இதை ஏன் சொல்றேன்னா. கலாச்சாரம்,, பண்பாடு, மயிரு, மட்டைன்னு ஏன்னு காரணமே தெரியாம நீங்க பண்ற சடங்கு, சம்ருதாயங்கள் எல்லாமே இப்படி பூனைய தூண்ல கட்டுன கதை தான். தாத்தன் பண்ணான் அதான் நானும் பண்றேன்னு சொல்ல தெரியுமே தவிர அதை ஏன் பண்ணான்னு சொல்லத்தெரியாது.அதெல்லாம் முட்டாள்தனம்னு சொன்னா என்னை பைத்தியகாரன்னு சொல்விங்க. சரி சொல்லிட்டு போங்க. அதானே உங்களுக்கு தெரியும்

ரசிகன் - தொண்டன் - பக்தன் பாகம் 2

அடிப்படையில் இந்த மூணுபேருமே ஒரே கேட்டகிரி தான். தன் ரசனையும், கொள்கையும், நம்பிக்கையும் தான் பெருசு என அதிகபட்சமாக கொலை செய்யும் அளவுக்குக்கூட போவாங்க. இந்த மூணு பேருமே பொதுபுத்தி அடிப்படையில் பெரும்பான்மை பக்கம் தான் இருப்பதாக காட்டிக்கொள்வதில் பாதுகாப்பாக இருப்பதாக உணர்வார்கள். இவர்களுக்கு செலிபிரட்டி வொர்ஷிப் கண்டிப்பா செய்யனும். தன்னம்பிக்கை குறைந்தவர்கள். தம்மை யாரிடமாவது ஒப்புக்கொடுத்தே ஆகவேண்டும் இவர்களுக்கு.

இந்த லிஸ்ட்டை பற்றி நிறைய அலசலாம். ஆனாலும் இன்னைக்கு பார்க்கப்போறது தொண்டர்கள் பற்றி. குறிப்பாக அதிமுக தொண்டர்கள் பற்றி.

புரட்சிதலைவி அம்மா வழியில் ஆட்சி நடத்தப்படும் என்பதே இந்திய அரசியலைப்புசட்டபடி கோர்ட் தீர்ப்பை அவமதிப்பது. மக்களை முட்டாள் ஆக்குவது. குற்றவாளி என தீர்ப்பளிக்கப்பட்ட, மக்கள் பணத்தை கொள்ளையடித்த ஒருவரை இன்னும் தம் தலைமையாக கொள்வது நாங்களும் அதே தான் செய்வோம் என்பதை தவிர வேறென்ன கொள்கையாக இருக்கமுடியும்இந்த மூணு பேரிடமும் இருக்கும் தவறான, அதை விசமானன்னு கூட சொல்லலாம். எல்லா தில்லுமுல்லுகளையும் ஆதாரத்தோடு நிரூப்பித்தாலும் யார் சார் தப்பு பண்ணலன்னு வந்து நிற்பார்கள். இவர்களின் கொள்கை பிடிப்பு என்பது அவனை பிடிக்கல அதுனால இவனை பிடிச்சிருக்கு என்பதாகவே இருக்கு. அதிமுகவின் முதன்மை கொள்கை திமுக எதிர்ப்பு மட்டுமே.மன்னார்குடி குடும்பம் கையில் கட்சி போனதும் முகநூலில் பலர் கட்சியை விட்டு வெளியேறுவதாக அறிவித்தார்கள். அதில் ஒருவர் இரட்டை இலை சின்னம் யாருக்கு போகுதோ அவர்களை ஆதரிப்பேன்னு பதிவு போட்ருக்கார். செலிபிரட்டி மோகம், சின்னம் என்ற ப்ராண்ட் மோகம் தான் இவர்கள் கொள்கை போல. அதனால் தான் கட்சிகள் மக்களை அனைவரையும் முட்டாளாக நினைத்து அந்த சின்னத்தில் கழுதை நின்னாலும் ஜெயிக்கும்னு சொல்றாங்க. அப்படினா ஓட்டு போடும் உங்கள் அனைவரையும் கழுதைன்னு சொல்றாங்கன்னு அர்த்தம். அது தெரியாம குட்டிசுவற்றில் பேப்பர் பொறுக்குவதில் பிஸியா இருக்காங்க இந்த தொண்டர்கள்.செயல்படாத அரசுன்னு போன ஆட்சியிலே சொன்னேன். ஜெயலலிதாவிற்கு பிறகு அரசியல் பழகாமல் யோகாசனம் பழகிய அமைச்சர்கள் மக்கள் நலதிட்ட பணிகளை யோசிப்பதை விட கட்சியை காப்பாற்றுவது, தன் பதவியை காப்பாற்றுவது என தியானநிலையில் பிஸியா இருக்காங்க

மோடி அரசு மன்னார்குடி குடும்பத்தின் மீது வன்மம் வைத்தே தாக்குதுன்னு வச்சிகுவோம். அது கூடாதுன்னா அடுத்து திமுக ஆட்சிகள் அவர்கள் ஊழலை வெளிகொண்டுவர மாட்டோம்னு சொல்றிங்களா உபிஸ்? நாங்கள் ஒரே குட்டையில் ஊறிய மட்டைகள்னு நீங்களே ஒத்துகிறிங்க. அதிமுகவை காப்பாத்தி நீங்க என்ன பண்ண போறிங்கன்னு எனக்கு புரியவேயில்ல. உங்க கட்சியில் இருப்பவனும் அதிமுக நல்ல கட்சி போலன்னு ஓடிபோயிருவான்

ஹேப்பி பர்த்டே டு மீ

பார்ன் இன் சில்வர் ஸ்பூன்னா வசதியான குடும்பத்தில் பிறப்பது தானே, ஆனா நான் அப்படி தான் வாழ்ந்தேன் என் பால்யத்தில்.

மதுரை தங்கரீகல் தியேட்டர் முன்னாடி பிரேமாவிலாஸ்னு ஒரு அல்வா கடை இருக்கும். அங்க தான் எங்கப்பா வேலை பார்த்தார். ரீகல் தியேட்டரில் ப்ரூஸ்லி படம் போட்டா ஒரு ஆட்டோகாரர்ட்ட பணம் கொடுத்து என்னை வீட்ல வந்து கூட்டிகிட்டு, அவரும் என் கூட படம் பார்த்து, இண்டர்வெல்லில் முத ஒரு ஐஸ்கிரீம், படம் போடப்போகும் சமயம் ஒரு ஐஸ்கிரீம் வாங்கி கொடுத்து படம் முடிந்ததும் வீட்ல கொண்டு போய் விடனும்.

ஏழு வயசில் என் பிறந்தநாளுக்கு திருப்பரங்குன்றம் போற வழி ரெண்டாவது பாலத்துக்கு கீழ ஒரு பிள்ளையார் கோயிலில் அன்னதானம் பொட்டார். புத்தருக்கு போதி மரத்தடியில் ஞானம் வந்த மாதிரி எனக்கு அந்த கோவிலில் தான் ஞானம் வந்தது. எல்லாம் சரி, இந்த கல்லு எப்படி சாமியாகும்னு அப்ப தான் கேட்டனாம்.

எங்கப்பா என்னை அடிச்சதில்ல, கேள்வி கேட்டாதன்னு சொன்னதில்ல. மொத பையன்னு செம செல்லம். ரெண்டாவது படிக்கும் போது என் பாக்கெட் மணி ரெண்டு ரூபாய். அப்ப பால் ஐஸே 15 பைசா தான்னா பார்த்துக்கோங்க. என் கிளாஸுக்கே வாங்கி தருவேன். அப்ப பழகியது இப்ப ஃப்ரென்ஸ்க்கு சரக்கு வாங்கி கொடுத்து நாசமா போனேன்.

ப்ரேக்கிங் பாயிண்ட்ன்னு பார்த்தா அப்பா, அம்மா பிரிஞ்சு நான் ஈரோடு வந்தது. கேட்க ஆளில்லாமன்னு சொல்றதை விட கத்து கொடுக்க ஆளில்லாமன்னு சொல்லலாம். 14 வயசிலயே தண்ணி, தம்மு எல்லாம் கத்துகிட்டேன். கூடவே மனிதன் என்ற கெட்ட பழக்கமும். இன்று வரை என்னுடன் பழகும் யார்ட்டயும் சாதி கேட்டதும் இல்ல, பார்ப்பதும் இல்ல. என்னை வாழ வைத்த மனிதத்தை பிரிச்சி பார்க்க எனக்கு பிடிக்கல

ஊனமுற்ற பெண்ணை கல்யாணம் பண்ணனும்னு நினைச்சேன். டைவர்ஸ் ஆன பொண்ணு ஒன்னு பிடிச்சு கல்யாணம் பண்ணேன். வர்ஷா பிறந்தப்ப கண்ணுல தண்ணி வந்துருச்சு. என்னடா பொண்ணுன்னு அழுகிறியான்னு அம்மா கேட்டாங்க,. இல்லம்மா அவளுக்கு எவ்ளோ கஷ்டமா இருந்திருக்கும்னு நினைச்சேன்னு சொன்னேன். ஒன்னே போதும்னு நினைச்சேன். அவ விருப்பம் போல வருணாவும் எட்டு வருசம் கழிச்சி பிறந்தா.

ஆயிரம் முரண்பாடு இருந்தாலும் ஒன்னா தான் இருந்தோம். முதல் கண்ணம்மா வந்தா பிரச்சனை ஆச்சு. 4 வருசம் தனியா போய்ட்டா, திரும்ப வரப்போறா. இன்னைக்கு இப்ப பேசினோம். வர்ஷாவும், வருணாவும் பேசினாங்க. கண்ணம்மா, கன்னுகுட்டியெல்லாம் தூக்கி போட்டு நான் பெத்த ரெண்டு செல்லகுட்டிகளை நல்லா வளர்க்கனும்.

நல்ல வேளை ரெண்டும் பொண்ணா பெத்தேன். இல்லைனா அவனுக்கு நல்லது சொல்லி கொடுத்தே என் வாழ்க்கை போயிருக்கும்
இந்த பிறந்தநாளும் எனக்கொடு ப்ரேக்கிங் பாயிண்ட்
எவளாவது லவ் பண்ண மாட்டாளான்னு தொங்கிட்டு திரியிறதை விட என் பொண்ணுங்களை நல்லா வளர்க்க கவனம் செலுத்தலாம்

நான் வாழ்த்து என்ன கிழிச்சேனு நான் சொல்ல வேண்டியதில்ல, என் பொண்ணுங்க காட்டுவாங்க அதைஹேப்பி பர்த்டே டு மீ

திராவிடமும் நீர்த்துப்போன கொள்கைகளும்!

ஆர்.கே.நகர் திமுக வேட்பாளர் மருது கணேஷ் ஒரு கோவிலில் கும்பிட்டு கொண்டு இருப்பதை கிண்டல் செய்து போஸ்ட் போட்ருந்தேன். ஏன் திமுகவில் இருந்தா சாமி கும்பிடக்கூடாதா என்ற கேள்வி கமெண்டாக வந்தது. அதை இன்னொரு திமுக அனுதாபி கேட்ருந்தா எப்படியோ நாசமா போங்கன்னு போயிருப்பேன். ஆனா கேட்டது ஒரு இந்துத்துவாவாதி. திராவிட கொள்கைகள் நீர்த்து நாசமாய் போவதில் வேற யார் அவ்வளவு மகிழ்வடைய முடியும்.

ஒரு கட்சியில் உறுப்பினர் ஆக அடிப்படை கட்டுமானமே கொள்கைகள் தான். பாஜகவிற்கு இந்துத்துவா கொள்கை, பாமகவிற்கு பாட்டாளி மக்கள் எழுச்சி கொள்கை(அப்படின்னு சொல்லிகிறாங்க) திராவிர கட்சிகளுக்கு சமூகநீதி கொள்கை பொதுவா இருந்தாலும் திராவிட கட்சிகளின் வேர் பெரியாரின் கொள்கை கடவுள் மறுப்பு, அதை அதிமுக தண்ணீரில் கரைத்தது. இப்ப திமுக காற்றில் கரைக்குது.

நான் பெரியாரிஸ்ட், இப்பொழுது தமிழ்தேசியவாதி. என் கடவுள் முருகன் என்று தன் கொள்கைகளை மாற்றிகொண்ட ஒருவரை மற்ற பெரியாரிஸ்டுகளால் ஏற்றமுடியவில்லை. இருக்காது எங்கிறார்கள்/. பெரியார் அடிமை அதாவது பெரியார்தாசன் என்று பெயர் வைத்துக்கொண்ட சேஷாசலம்  அப்துல்லாவாக மாறியது மறந்துபோய்விட்டது போல. இந்த கொள்கை முரணுக்கு அடிப்படை சிக்கல் என்ன என்பதை பெரியாரிஸ்டுகள் யோசிக்கவேயில்லை

பெரியார் கடவுள் மறுப்பு கொள்கையை ஏற்றது சுற்றி நடந்த அவலங்களால். அவரின் அடிப்படை கேள்விக்கு பதில் இல்லாத காரணத்தால் ஆனால் அவருக்கு அறிவியல் பூர்வமாக கடவுள் மறுப்புக்கு ஆதாரம் எதுவும் இருந்திருக்காது. பெருவெடிப்பு கொள்கையே 19 நூற்றாண்டின் தொடக்கத்தில் தான் முழுமனதாக ஏற்றுக்கொள்ளப்பட்டது. அதே காலத்தில் வாழ்ந்த பெரியாருக்கு உலகம் எப்படி தோற்றியது என்று அதிக பட்ச சாத்தியகூறுகளாக விஞ்ஞானிகளால் ஏற்றுக்கொள்ளப்பட்ட ஒன்று  இருக்கு என்பதே தெரியுமா தெரியாதா என தெரியவில்லை.மக்கள் பெரும்பாலும் பொதுபுத்தி கொண்டவர்கள். என்னிடம் கடவுள் இருப்பை நிரூபிக்கமுடியாத சிலர். அந்த ஜட்ஜ் சாமி கும்பிடுறார், அந்த டாக்டர் சாமி கும்பிடுறார் அவர்களெல்லாம் முட்டாளா என்பார்கள். திராவிட இயக்கத்தில் மட்டுமல்ல, இடதுசாரிகளில் இருப்பவர்களுக்கு கூட பிரிவினை வாதத்திற்கு எதிர்பாகதான் கடவுள் மறுப்பு உள்ளது. கடவுள் மறுப்பு என்ற பதத்தை உடைக்க சில சலுகைகளும், சில தேவைகளும், சில தேற்றல்களும் போதுமானதாய் இருக்கிறது.

உங்களால் ஆணிதரமாக கடவுள் மறுப்பு கொள்கையில் நிலைக்கமுடியவில்லை என்றால் நீங்கள் நாத்திகன் என்ற மதத்தை உருவாக்கி வருகிறீர்கள் என்ற உண்மையை திராவிர கட்சிகள் ஒத்துக்கொள்ளத்தான் வேண்டும். குறிப்பாக திகவும், திமுகவும். ரம்ஜானுக்கு வாழ்த்து சொல்றது, கிறிஸ்துமஸ்க்கு கேக் வெட்றது சிறுபான்மையினர் நலன்னா ஆவணி அவிட்டத்திற்கு பூணூல் சப்பி கோர்த்து கொடுக்கலாம். ஏன்னா பார்ப்பானும் சிறுபான்மையினர் தான் இந்தியாவில்.

ஓட்டை காசுக்கு விற்பதும், கொள்கையை ஓட்டுக்கு விற்பதும் ஒன்று தான். தமிழகத்தில் இருக்கும் திராவிர கட்சிகளை அழிக்க வெளியே இருந்து ஆள் தேவையில்லை. உள்ளிருக்கும் நீங்களே போதும்..

தோற்றம் - பரிணாமம்

அண்ணே, இந்த உலகம் எப்படி உருவாச்சுன்னு சொல்லுங்கண்ணே

மண்டைகுள்ள ஏற்கனவே இருப்பதையெல்லாம் கழட்டி அக்கட்ட வச்சிட்டு கேளு. இல்லைனா எல்லாத்தையும் எது கூடவாவது கம்பேர் பண்ணிட்டு இருப்ப

சரி சொல்லுங்க.

ஒண்ணுமேயில்ல

என்னாண்னே பொசுக்குன்னு முடிச்சிட்டுங்க

அடேய், இப்ப தான் ஆரம்பிச்சிகிறேன். எதுவுமேயில்ல அதாவது nothing. சரியா ஒண்ணுமேயில்ல என்பது ப்ளாங்க். அதற்கு கற்பனை கூட தேவையில்ல. ஒரு விபத்து ஏற்பட்டது. அதாவது ஒரு எனர்ஜி உருவாச்சு

இந்தா மாட்டிகிட்டிங்க

என்னடா.

நீங்க சொல்ற எனர்ஜி தான் நாங்க சொல்ற கடவுள்

சரி வச்சிக்கோ

அப்ப கடவுள் இருக்குன்னு ஒத்துகிறிங்களா

நீ தான் கடவுள் இல்லைன்னு ஒத்துகிட்ட

என்ன சொல்றிங்க

நான் nothingனு சொன்னேன். நீ godனு சொன்ன. அப்படினா nothing is god, god is nothing.

திரும்பவும் கடவுள் இல்லைன்னு சொல்றிங்களா

நான் ஆரம்பத்தில் இருந்தே அதை தானடா சொல்லிகிட்டு இருக்கேன்

சரி மேல சொல்லுங்க

உருவான எனர்ஜி ஒரு அழுத்தம் உருவாக்குச்சு, அழுத்தம் இருந்தால் நகர்வு இருக்கும், நகரனும்னா அதற்கு இடம் வேணும். அங்க தான் ஒன்னுமேயில்லயே. ஆக அந்த எனர்ஜி நகரமுடியாமல் வெடிச்சது. அது தான் பெருவெடிப்பு எனப்படும் பிக்பேங்க்.அதுகுள்ள இருந்து இத்தனையும் வந்துச்சா?

அதென்ன ஃப்ரிஜ்ட் பொட்டியாடா உள்ள இருந்து வர்றதுக்கு. அந்த வெடிப்பு கொடுத்த அழுத்தம் வெப்பத்தை உண்டாச்சு, வெப்பம் மின்னோட்டத்தை உருவாக்குச்சு. அதுக்கு அளவுன்னு எதும் கிடையாது. ஆனா “இடத்தை உருவாக்கியது” அந்த மின்னோட்டம் தான் முதல் பொருள்னு சொல்லலாம்.மின்னோட்டம்னா அலை தானே, அது எப்படி பொருளாகும்.

அந்த மின்னோட்டம் ஒரு பந்து மாதிரி வேகமாக சுற்றிகொண்டே இருந்தது. இதை புரிய வைக்கனும்னா சைக்கிள் டயர் எடுத்துக்கோ அது சுற்றாம இருக்கும் போது உன்னால் ஒரு பொருளை அதன் இடையில் வீச முடியும். அதுவே வேகமா சுற்றும் போது அது ஒரு தடுப்பா செயல்பட்டு தடுக்கும்ல.

அங்க போக்ஸ் கம்பி இருக்கும்ல.

பாயிண்ட் பிடிச்சிட்ட, அங்க போங்க்ஸ் கம்பி இருக்கு தடுத்தது. ஆனா வேகமான காத்து எப்படி பொருளை தடுக்குது. உன்னால் ஒரு பலூனை மேல் நோக்கி ஊதியே தள்ளி முடியும், அந்த இடத்தில் பொருளா இல்லாத காற்று தடுப்பா இருக்குதுல்ல. அது மாதிரி அந்த மின்னோட்டத்தின் வேகம் தடுப்பா செயல் பட்டு உலகின் முதல் பொருளாக உருவெடுத்தது. அங்கே தான் இடமும், காலமும் உருவாச்சுஅந்த பொருளுக்கு எதும் பேரு இல்லையா?

இதெல்லாம் நான் படிச்சு சொல்லல, அதுக்கு அவங்க எதாவது பேர் வச்சிருப்பாங்க. நீ அந்த கற்பனையில் அந்த பொருளை மட்டும் நினைச்சிக்கோ

அந்த ஒரு பொருளில் உலகம் எப்படி உருவாச்சு

அந்த பெருவெடிப்பு அங்கேயே நிற்கல. அதன் அழுத்தம் தந்த விசை அது இடத்தை உருவாக்கிக்கொண்டே போனது. அந்த அழுத்தம் எவ்ளோன்னு உனக்கு புரியும் படி சொல்லனும்னா இந்த மொத்த பிரபஞ்சத்தையும் அந்த ஒன்றை புள்ளியில் இருந்து வெளிபட்டதுன்னா அதோட அழுத்தத்தையும், வேகத்தையும் பார்த்துக்கோ

மொத்த பிரபஞ்சமுமா, முதல்ல அதென்ன ஃபிர்ட்ஜ் பொட்டியான்னு கேட்டிங்க

முதல் பொருள் உருவாச்சுன்னு சொன்னேன்ல, அதில் இருந்து பரிணாமம் பெற்று மாறியது தான் இந்த பிரபஞ்சம். இடம் விரிவடையும் போது அந்த மின்னோட்ட பொருள் மேலும் மேலும் உருவாகிக்கொண்டே இருந்தது. அது ஒன்றை ஒன்றை ஈர்த்து மேலும் வெப்பத்தை உண்டாக்கி மின்னோட்டம் அதிகமாகிக்கொண்டே போனது. பொருள் அதிகமாக ஆக மேலும் அழுத்தம் ஏற்பட்டு அது ஒன்றுடன் ஒன்று இணைந்தது. உருவம் பெற்றது. அந்த உருவத்தை சுற்றி மின்னோட்டங்கள் சுற்றி வந்தன.

ரைட்டு, எலைக்ட்ரான், புரோட்டான் பற்றி சொல்றிங்க

அதான் இந்த உலகமும்.எலைக்ட்ரானும், புரோட்டனும் போட்டுகொண்ட போட்டியில் அல்லது அழுத்தத்தில் ஏகப்பட்ட தனிமங்கள் உருவாகின. தனிமங்கள் இணைந்து உலோகங்கள் உருவாகின. உலோகங்கள் இணைந்து கோள்களாக மாறின. இப்படி தான் உலகம் உருவாச்சு.

இதான் உண்மைன்னு எதை வச்சு சொல்றிங்க.

முதல் காரணம், அந்த பெருவெடிப்பின் தாக்கம் இன்னும் இந்த பிரபஞ்சம் விரிவடைந்துக்கொண்டே இருக்கு. இரண்டாவது காரணம் அந்த மின்னோட்டங்கள் இன்னும் இணைந்தும் பிரிந்தும் புது கோள்களை உருவாக்கியது. இருக்கும் கோள்கள் அழித்தும் மீண்டும் உருவாகுது

அதற்கு ஏன் கடவுளை மறுக்கனும்

கடவுள் தோற்றம் நோக்கம் கொண்டது. ஆனால் பெருவெடிப்பு எந்த நோக்கமும் கொண்டதல்ல, அதற்கு நீ நன்றி சொல்லவும் தேவையில்ல. ஏன்னா அது ஒரு விபத்து.

கடவுளுக்கும் உங்க அறிவியல் கோட்பாடும் எந்த இடத்தில் வேறுபடுது

உலகம் கடவுளால் படைக்கபட்டது என்றால் அதற்கு நிலைதன்மை இருக்கும். அணுக்கள் மாறி மாறி பிரிந்தும், சேர்ந்தும் நிலையற்ற தன்மை இருக்காது. கடவுள் தான் உலகத்தை படைத்தார் என்றால் கடவுளை படைத்தது யார் என்ற கேள்வியும் வரும்

அதான் முதல்ல நீங்க சொன்ன எனர்ஜி

அதை நான் திரும்பவும் சொல்றென். நத்திங் இஸ் காட், காட் இஸ் நத்திங்


நான் ஒரு முட்டாள்!

பிறப்பால் ஒருவர் அறிவாளி என்பதை என்னால் ஏற்றுக்கொள்ள முடியாது.
எனக்கு நாலு விசயம் தெரியும்னா அதுக்கு இரண்டு காரணங்கள் இருக்கு
ஒன்று 3 வயதிலேயே எனக்கு கூட்டல், கழித்தல், பெருக்கல் கணக்கு போட சொல்லிக்கொடுத்து யோசிக்க வைத்தது. இரண்டு சும்மா சும்மா கேள்வி கேட்டுகிட்டே இருக்காதன்னு என்னை மொன்னையாக்காமல் விட்டது. பகுத்தறிவின் பாலபாடமே இது இரண்டும் தான் என்பது என் புரிதல்.

அதிகபட்ச சாத்தியகூறுகள் இல்லாத எதையும் நம்பிக்கை அடிப்படையில் நான் ஏற்பதில்லை. அதன் சாத்தியகூறுகளை அறிய பகுத்தறிவு வேண்டும். மதம் சார்ந்த கேள்விகளையும், புரிதலையும் பயபடாமல் எழுது என எனக்கு கையை பிடித்து ஆனா போட கத்து கொடுத்தது தருமி அய்யா, ஆனால் அவர் மதம்/கடவுள் சார்ந்த விவாதங்களுக்கு மட்டும்  அறிவியலை துணைக்கழைப்பார். ஒருவேளை அரசியல் பேராசியராய் இருந்ததால் அதன் மேல் அதிக ஆர்வம் காட்டவில்லை போல.

முகநூலில் பாபு மற்றும் ராஜ்சிவா நிறைய அறிவியல் கட்டுரைகள் எழுதுவாங்க. எனக்கும் அறிவியல் மேல் தீராத காதல் உண்டு. அரசியல்/மதம் சார்ந்த விசயங்கள் அப்போதைய பிரச்சனை குறித்து தான் எழுதுவேன். அறிவியல் மட்டும் தான் இறந்த காலத்தில் தொடங்கி எதிர்காலத்தை நோக்கி பயணத்திக்கொண்டே இருக்கும்.

ஆனால் முகநூல் நண்பர்கள் இரண்டு வரி பதிவுகளையே விரும்புகின்றனர். ஒரு கமெண்டை படிக்கும் போதே அதற்கு பதில் அளிக்க எனக்குள் பல விவாதங்கள் நடக்கும். ஒரு கமெண்டுக்கே அப்படினா ஒரு பதிவு எழுத எவ்ளோ யோசிக்கனும். ஆனாலும் படிக்கும் நாற்பது நண்பர்களோ போதும்னு திருப்தி அடைஞ்சிட்டேன். அதில் சந்தேகம் கேட்பவர்களையும், புரிதல் கொண்டவர்களையும் என்னை கண்ணாடியில் பார்ப்பது போல் உணர்கிறேன்.

ஒன்றை தெரிந்துகொள்ள வேண்டும், புரிந்துகொள்ள வேண்டும் என்று பலர் ஆர்வம் இல்லாமல் இருப்பது வருத்தம் தான். ஒரு நண்பர் வானவியல் கட்டுரைகள் தொடர்ந்து எழுதுவார். நாசா கண்டுபிடித்த புதிய கோள்கள். அதன் தன்மை என பல சுட்டிகளோடு. ஆனா கடைசியில் தென்னாட்டுடைய சிவனே போற்றின்னு முடிச்சிருவார். பதிவை விட்டுட்டு அந்த ஒரு வரிக்காக அவருடன் விவாதிப்பேன். கடைசி வரை கடவுள் இருக்குன்னு அவரால் நிரூப்பிக்கமுடியவில்லை ஆனால் எனக்கு கடவுள் வேணும்னு முடிச்சிட்டார். ஒருவருக்கு என்ன வேணும், வேண்டாம் என்பது அவர்களது தனிபட்ட உரிமை. கஷ்டப்பட்டு எழுதியிருக்கேன் ஏன் படிக்கலன்னு யார் சட்டையையும் நான் பிடிக்கமுடியாது.

அதை படிக்காமல் போகின்றவர்கள் அறிவாளியாகக்கூட இருக்கலாம். என்னை போன்ற கற்றும் ஆர்வமுள்ளவர்கள் சிறிதேனும் நாமும் அறிவாளி என நினைக்கத் தொடங்கினால் அன்றோடு கற்கும் ஆர்வம் போய்விடும். கற்றல் இல்லாத மனிதம் ஒரே இடத்தில் தேங்கிய குட்டை போன்று. நான் நதியாக இருக்க விரும்புகிறேன். அதனால் என்னை முட்டாள் என்று ஒப்புக்கொள்வதில் எனக்கு எந்த தயக்கமும் இல்லை.எழுத்தாளர் ஆகனும்னு நான் சின்னவயதில் நினைத்ததில்லை. கற்றலும், எழுத்தும் சிறந்த ஆர்த்துபடுத்தனராக அறிந்தபொழுது எனது அறிவியல் கட்டுரைகளை அச்சில் ஏற்றவேண்டும் என்று ஆசை வந்தது. அதனால் சில தகவல்கள் என்ற ஹேஷ்டேக்கில் அறிவியல் துணுக்குகள் எழுதினேன். இனி அந்த அறிவியல் செய்தியில் இருக்கும் சாத்தியகூறுகளையும் சேர்த்து புரியும்படி எழுத வேண்டும் என நினைக்கிறேன்.

நான் கேள்வி-பதில் பகுதி எழுதியது எனக்கு எல்லாம் தெரியும் என்று அல்ல. உங்கள் கேள்வி ஒரு புது விசயத்தை படிக்க என்னை தூண்டும் என்ற ஆவலினால் தான். அதே போல் தான் விவாவத்தையும் விரும்புவேன். இவையெல்லாமே என்னை உயிர்ப்புடன் வைத்திருப்பவை.

சாத்தியகூறுகளுடன் எழுத இருக்கும் சில விசயங்கள்

எந்திரன் பட ரோபோ போல் அவ்வளவு வேகமாக படித்து ஞாபகம் வைத்திருப்பது சாத்தியமா?

காலபயணம் சாத்தியமா?

மேலும் உங்கள் கேள்விகளுக்கும் சாத்தியகூறுகளுடன் எழுத முயற்சிக்கிறேன்

!

Blog Widget by LinkWithin