யார் பெரியவன்!
இந்த ஒரு சாட்சியே உங்களுக்கு போதும் என்று நினைக்கிறேன்.
இனிமேலாவது மொக்கை சாமிகள் என்னிடம் மோதும் போது ஜாக்கிரதையாக இருங்கள்


பேரிழப்பும், பெருங்குழப்பமும்!!முதலில் மத்திய அரசுக்கு கண்டங்கள் என்று தான் தலைப்பு வைக்கலாம் என்று இருந்தேன். நமது பதிவுலக அரசியலில் ஒன்றை பிடிக்கவில்லை என்றால் மற்றொன்று பிடித்தே ஆகவேண்டிய கட்டாய சூழல். நான் இந்த,அந்த கட்சிக்கு தொண்டன் என்ற முத்திரை பிடிக்காததால் அந்த தலைப்பை தவிர்க்கிறேன்

இந்த பதிவு வாழ்வியல் மூலஆதாரங்களை பற்றியது.
என் வணிகமும் சம்பந்த பட்டிருந்தாலும் குற்றம் குற்றம் தானே.
இத்துடன் ஒரு வருட கச்சா எண்ணையின் வார சார்ட்டை இணைத்திருக்கிறேன்.சென்ற வருட மே மாதம் விற்ற விலையில் இப்போது கச்சா எண்ணெய் வியாபாரம் ஆகிகொண்டிருக்கிறது. இந்திய பண மதிப்பில் ஒரு பீப்பாயின் விலை மூவாயிரத்து ஐநூறுக்கும் கீழே. இதே விலையில் இருந்து தான் கச்சா எண்ணெய் ஆறாயிரத்துக்கு உயர்ந்தது. நஷ்டம் பொறுக்க முடியாமல் விலையேற்றிய அரசாங்கம் ஒரு வருடத்திற்குள் மறுபடியும் விலையேற்றியது.

தற்பொழுது கச்சா எண்ணையின் விலை வீழ்ச்சிக்கு பின்னும் பெட்ரோலிய பொருள்களின் விலையை குறைக்காமல் இருப்பது ஏன்? இரண்டு காரணங்கள் இருக்கலாம், ஒன்று பெட்ரோலிய நிறுவனக்கள் இந்த வாய்ப்பை பயன்படுத்தி கொள்ளை லாபம் சம்பாரிக்க அரசாங்கத்தை தன் வசப்படுத்தி விலையை குறைக்காமல் வைத்திருக்கலாம். இரண்டு வரவிருக்கும் மத்திய அரசு தேர்தலில் மக்கள் தொண்டன் வேடம் போட தன் கை காசை கொடுப்பது போல் தேர்தல் நேரத்தில் பெட்ரோல் விலையை குறைப்பது.

அரசியல் கட்சிகளுக்கு மக்கள் மேல் அக்கறை இருக்கும் என்ற நம்பிக்கை எனக்கு மைனஸில் போய் கொண்டிருக்கிறது.

பணவீக்கத்தின் மூல காரணம் பெட்ரோலிய பொருள்களின் விலையேற்றம் என்பது பள்ளி மாணவனுக்கும் தெரியும். இவர்களுக்கு தெரியாமலா இருக்கும். வங்கியின் கையிருப்பை குறைப்பதால் பணப்புழக்கம் அதிகமாகலாம் ஆனால் பணவீக்கம் குறையுமா. பெட்ரோலிய பொருள்களின் விலையேற்றமே பணவீக்கத்திற்கு காரணம் என்பதை சிறு உதாரணத்துடன் சொல்ல விருப்புகிறேன்.

தக்காளியை எடுத்து கொள்வோம். ஆண்கள் தங்கமணியிடம் கேட்டு பாருங்கள் என்ன விலை இப்போது என்று. ஈரோட்டில் எடையை தவிர்த்து ஒரு தக்காளி இன்ன விலை என்று விற்று கொண்டிருக்கிறார்கள். சாமான்யனும் வாங்கி கொண்டிருந்த தக்காளிக்கு என்ன வந்தது. அதே நிலம் அதே விவசாயி ஆனால் விலை மட்டும் உயருகிறது. காரணங்கள் அகரத்தில் இருந்து பார்ப்போம்

பயிரிட விவசாயி நிலத்தை உழவேண்டும். டீசல் விலை உயர்வால் ட்ராக்டர் கூலி அதிகம். அடுத்த விதைகள், போக்குவரத்து கட்டணங்கள் அதிகமாகி விட்டதால் விதையும் விலையுயர்வு. அடுத்து உரம், தயாரிக்க ஆகும் மூலப்பொருள்கள் விலையுயர்வு. காரணம் போக்குவரத்து கட்டணம். தயாரித்த உரத்தை ஒரு இடத்தில் இருந்து மற்றொரு இடத்திற்கு கொண்டு செல்ல கட்டணம் உயர்வு. எல்லாம் ஆகிவிட்டது, அறுவடை முடித்து மார்கெட் கொண்டுவர மீண்டும் கட்டணம் அதிகம் காரணம் அனைத்திற்கும் ஒன்று தான் பெட்ரோலிய பொருள்களின் விலையுயர்வு.

பிரச்சனைகளை திசை திருப்பி விடுவது அரசாங்கத்திற்கு கை வந்த கலை. எனக்கு விபரம் தெரிந்த வரையில் அதில் எப்போதும் அவர்கள் தோற்றதில்லை. இம்முறையும் அப்படியே. ஆனாலும் பூனைக்கு யார் மணிக்கட்டுவது. அடிமட்டத்தில் இருப்பவனுக்கு பெட்ரோல் நேரடி தேவையில்லை, ஆனாலும் விலையுயர்வுக்கு காரணம் பெட்ரோல் தான் என்பதும் தெரியாது, நடுத்தர வர்க்கம் நாளை என்ற நாளில் நானும் இருக்க வேண்டும் என்ற வெறியிலே ஓடிக்கொண்டிருக்கிறது. அவனுக்கு இதையெல்லாம் கவனிக்க நேரமில்லை. பெட்ரோல் விலையேறி விட்டதா பைக்கை நிறுத்திவிட்டு பஸ்சில் போகலாம் என்பான். மேல் தட்டுக்கு என்ன விலை விற்றாலும் கவலை இல்லை.

ஆகமொத்தம் அரசாங்கம் என்னும் அதிகாரமையத்திடம் வாழ்நாள் முழுவதும் கையேந்தி நிற்கும் விளிம்பு நிலை பிச்சைகாரர்கள்(மக்கள்) தான் நாம் போல

அன்றைய அரசியலும்! இன்றைய அரசியலும்!

பிரபஞ்சனின் சித்தன் போக்கு சிறுகதை தொகுப்பு படித்தவர்களுக்கு, மற்றவர்கள் என்ன தவறு செய்தாலும் அவர்கள் மேல் கோபம் வராது ஒருவித பரிதாப உணர்வே ஏற்படும்.
ஒரு மனிதன் பிறக்கும் போதே தவறு செய்ய பிறக்கவில்லை. சூழ்நிலையும் இயலாமையுமோ அவனை தவறு செய்ய தூண்டுகிறது என்று அருமையாக விவரித்திருப்பார். அதில் இருபது கதைகள் இருந்தாலும் அதில் ஒன்றை மட்டும் உங்களிடம் பகிர்ந்து கொள்கிறேன்.தியாகி என்ற தலைப்பில் இருக்கும் சிறுகதை அது. ஒரு சுதந்திர போராட்ட தியாகி தனது பென்ஷன் பணத்தை இதோடு நிறுத்தி கொள்ளுங்கள் என்று சொல்வதற்காக வந்திருப்பார். அதிகாரிக்கோ பெரும்குழப்பம். ஒருவேளை பைத்தியமாக இருக்குமோ என்று நினைத்து காரணத்தை விசாரிக்கிறார். அவருடைய பதில்.

ஒருவன் பணத்தை நான்கு வழிகளில் பெறலாம். ஒன்று உழைத்து சம்பாரிப்பது. என்னால் உழைக்க முடியாது, முதுமை காரணமாக வேலை செய்யும் திறனை இழந்து விட்டேன். இரண்டு திருடலாம், நான் காந்தியவாதி திருடமாட்டேன். மூன்றாவது கடன் வாங்கலாம், என்னால் கடனை திருப்பி தர முடியாது அதனால் கடன் வாங்க மாட்டேன். நான்காவது வழி தானம் பெறுதல் ஆகவே பென்ஷனை தானமாக நினைத்து பெற்றேன். இப்போது என் மகன் படிப்பை முடித்து வேலைக்கு செல்கிறான். அவன் எனக்கு ஒரு பிடி சோறு போடுவான். வாழ்வதற்குண்டான தகுதி படைத்து தானம் பெறுபவன் சண்டாளன். ஆகவே எனக்கு பென்ஷன் வேண்டாம் என்பார்.

சுதந்திர போராட்டத்திற்கு முன் என்ன தொழில் செய்தீர்கள் என்று கேட்பார்.
லட்ச லட்சமாக சம்பாரித்து கொண்டிருந்த நான் தாய் நாட்டின் மீது ஆர்வம் கொண்டு பணத்தை இல்லாதவர்களுக்கு கொடுத்து விட்டு போராட்டத்தில் இறங்கினேன் என்பார். ஏன் போராட்டத்தில் இருந்து கொண்டே வியாபாரத்தையும் பார்த்திருக்கலாமே என்ற அதிகாரியின் கேள்விக்கு அவரது பதில்

நீங்கள் இளைஞர், இந்த காலத்தவர். நிகழ்கால அரசியலும், அரசியல்வாதிகளும் உங்களை இப்படி சொல்ல வைத்திருக்கிறார்கள். எங்கள் காலத்து அரசியல் வேறு. அரசியலுக்கு எங்கள் அர்த்தம் வேறு. அரசியல் என்றாலே ஆட்சி மாற்றம் என்பதையே குறியாக வைத்து இன்றைய அரசியல் இயங்குகிறது. எங்களுக்கும் ஆட்சி,அதிகார மாற்றம் நோக்கமாக இருந்தது. ஆனால் அது பத்தாவது நோக்கம், எங்களை பூரணப்படுத்தி கொள்வதையும், பொதுமக்களை மனதளவில் முழுமைப்படுத்துவதுமே எங்கள் முதலான அரசியல் பணியாக நினைத்தோம். அரசியலை ஒரு புனிதமான பணியாக ,தொண்டாக நாங்கள் நினைத்தோம். ஒருநாளில் இருபத்திநான்கு மணி நேரத்தையும் தேசசேவைக்காக அர்ப்பணித்தோம். தேசசேவைக்காக தன்னை அர்ப்பணித்து கொண்ட மனிதனுக்கு வேறு எதிலும் நாட்டம் இருக்காது. ஒரு மனிதன் ஏக காலத்தில் இரண்டு மனைவிகளுடன் இல்லறம் நடத்துவது எவ்வளவு இழிவோ, நீசத்தனமோ, அந்த அளவிலும் இழியது ஒரு அரசியல்வாதி வியாபாரியாக இருப்பது என்று நாங்கள் நினைத்தோம்.

இதுதான் அந்த கதையின் சாராம்சம் மட்டுமே, இதிலேயே தேவையான கருத்துக்கள் வந்திருக்கும் என்று நினைக்கிறேன். இன்றைக்கு நாட்டில் இருக்கும் எல்லா அரசியல்வாதிகளையும் நான் வெறுப்பதற்கு இதுவும் ஒரு காரணமாக இருக்கலாம்

சினிமாவும், நானும் கூடவே வாலும்

என்னை இந்த பதிவிற்கு அழைத்த லேகாவுக்கும் கார்க்கிக்கும் நன்றி!
இதில் என்ன காமெடிஎன்றால் எந்த தொடருக்கு நம்மை அலைபார்களா என்று ஏங்கி கொண்டிருக்கிறோமோ அதில் கழட்டி விட்டு விடுவார்கள். நமக்கு தெரியாத விசயத்தில் மாட்டி விடுவது நண்பர்களுக்கு பிடித்த விஷயம். சரி சினிமா கூட தெரியாதா என்று கேட்கிறீர்களா. கடந்த மூன்று வருடத்தில் நான் தியேட்டருக்கு சென்று பார்த்த படம் ஒன்றே ஒன்று.

1. எந்த வயதில் சினிமா பார்க்க ஆரம்பித்தீர்கள்? நினைவுதெரிந்து கண்ட முதல் சினிமா? என்ன உணர்ந்தீர்கள்?

நினைவில் எதுவும் இல்லை என்பது தான் உண்மை.
ஆனாலும் திருப்பரங்குன்றம் ராஜா தியேட்டரில் விக்ரம் பார்த்ததாக ஞாபகம்.
அப்போது எதுவும் உணரவில்லை.

ஆனாலும் இன்னொரு சுவாரிசயமான சம்பவம் ஞாபகம் வருகிறது.
விடுமுறைக்கு சென்னையில் உள்ள மாமா வீட்டுக்கு போயிருந்தேன்.
சினிமாவுக்கு போகலாம் என்று மாமா பையனையும் அழைத்து கொண்டு சென்றேன். செங்குன்றம் லட்சுமி தியேட்டரில் "தென்றல் சுடும்" என்ற படம். ராதிகா நடித்தது.
படம் போடும் வரை அமைதியாக இருந்த மாமா பையன் திடீரென்று சத்தமாக அழ ஆரம்பித்து விட்டான். அப்போது சிறுவர்கள் என்பதால் திரைக்கு முன்வரிசையில் மிக அருகில் அமர்ந்திருந்தோம். எனக்கோ காரணம் ஒன்றும் புரியவில்லை. அவனோ வீட்டுக்கு போகலாம் என்று அழுதுகொண்டிருக்கிறான். வெளியே அழைத்து வந்து என்னவென்று கேட்டால், அப்போது தான் முதன் முதலில் தியேட்டருக்கு வருகிறானாம். திரையில் அவ்வளவு பெரிய மனிதர்களை அதற்கு முன் பார்த்ததில்லையாம். இப்போது அதை சொன்னால் அவன் பொண்டாட்டி(என் தங்கை) அடிக்கவருகிறாள்.

2. கடைசியாக அரங்கில் அமர்ந்து பார்த்த தமிழ் சினிமா?

கடந்த மூன்று வருடத்தில் திரையரங்கில் நான் பார்த்த சினிமா "தசாவாதாரம்"
ஏற்கனவே இதை பற்றி பலரும் எழுதி விட்டதால் நான் விமர்சனம் எழுதவில்லை.
தற்போது வந்த தகவல்படி பில்லாவுடன் சேர்த்து மூன்று வருடத்தில் இரண்டு படம் பார்த்திரிக்கிறேன்.(தெளிவா போனா தானே ஞாபம் இருக்குறதுக்கு)

3. கடைசியாக அரங்கிலன்றிப் பார்த்த தமிழ் சினிமா எது, எங்கே, என்ன உணர்ந்தீர்கள்.

தினமும் தொலைகாட்சியில் பிட்டு பிட்டாக பார்க்கும் வழக்கமுண்டு. நகைச்சுவை படமென்றால் மட்டுமே முழுதாக பார்ப்பேன். கடைசியில் திரையரங்கு தவிர்த்து முழுதாக பார்த்த தமிழ்படம். சுப்பிரமணியபுரம். மதுரையிலிருந்து ஈரோடு வரும் போது பேருந்தில்.

4. மிகவும் தாக்கிய தமிழ்ச்சினிமா?

நிறைய உண்டு பராசக்தியிலிருந்து சுப்பிரமணியபுரம் வரை.

5.அ. உங்களை மிகவும் தாக்கிய தமிழ்ச்சினிமா-அரசியல் சம்பவம்?

சினிமா நடிகர்கள் மட்டும் தான் அரசியலுக்கு தகுதியானவர்கள் என்ற மனப்போக்கு.
திரையில் செய்யும் சாகசத்தை எல்லாம் நேரிலும் செய்வார்கள் என்று நினைக்கும் மக்களின் அறியாமை. அதை வைத்து அவர்கள் செய்யும் அரசியல்.

5-ஆ. உங்களை மிகவும் தாக்கிய தமிழ்ச்சினிமா-தொழில்நுட்ப சம்பவம்?

ஒலி அமைப்பையும், கிராபிக்ஸ் காட்சிகளையும் உணர்கிறேன். மிக நுட்பமாக தொழில் நுட்பத்தை பார்க்கும் நுண்ணறிவு எனக்கில்லை.

6. தமிழ்ச்சினிமா பற்றி வாசிப்பதுண்டா?

உண்டு. ஆனந்தவிகடன், குமுதம் படிப்பேன்.

7.தமிழ்ச்சினிமா இசை?

இது தலைமுறை வித்தியாசத்தில் மாறுகிறது.
முதலில் எம்.எஸ்.வியில் ஆரம்பித்து இளையராவின் ஆட்சிக்கு பிறகு நிலையான ஆட்சியை யாரும் பிடிக்கவில்லை என்பதே உண்மை. ரகுமானின் இசையில் மயங்கினாலும் ஆங்காங்கே வரும் புதிய இசையமைப்பாளர்கள் அட போட வைப்பார்கள். நல்லது தான் போட்டியில் தான் தரமான சரக்கு நமக்கு கிடைக்கும்

8. தமிழ் தவிர வேறு இந்திய, உலக மொழி சினிமா பார்ப்பதுண்டா? அதிகம் தாக்கிய படங்கள்?

எனது பாஸ் கார்த்திக்கின் உதவியால் பல்வேறு மொழிப்படங்கள் பார்க்கும் வாய்ப்பு கிடைத்திருக்கிறது. பாரபட்சமின்றி எல்லா மொழி படங்களையும் பார்க்கிறேன். முக்கியமாக பிரான்ஸ்(அங்கே சென்சார் இல்லை) குறிப்பாக தாக்குபவை என்று சொல்லமுடியாது. ஒவ்வொன்றும் ஒவ்வொரு திசையில் இன்னமும் என்னை தாக்குகின்றன.


9. தமிழ்ச்சினிமா உலகுடன் நேரடித்தொடர்பு உண்டா? என்ன செய்தீர்கள்? பிடித்ததா? அதை மீண்டும் செய்வீர்களா? தமிழ்ச்சினிமா மேம்பட அது உதவுமா?

கண்டுகொண்டேன்,கண்டுகொண்டேன் படப்பிடிப்பில் இருந்த சமயம் ஒரு நண்பரின் உதவியுடன் ராஜிவ் மேனனிடம் உதவி இயக்குனராக வேலை கேட்டு போயிருந்தேன். பார்த்திபன் என்ற அவரது உதவியாளர் நேர்முக தேர்வு செய்து அடுத்த படத்திற்கு அழைப்பதாக சொல்லியிருந்தார். அதன் பின் ராஜிவ்மேனன் படமே எடுக்கவில்லை.
அதன் பின் சினிமா துறையில் சேர பெரிதாக சிரத்தை எடுத்து கொள்ளவில்லை. மீண்டும் செய்யும் வாய்ப்பும் இல்லை. ஆனால் குறும்படம் எடுக்கும் ஆவல் உண்டு.
தமிழ்சினிமாவில் நான் இல்லாததே அது மேம்பட நான் செய்யும் உதவி

10. தமிழ்ச்சினிமாவின் எதிர்காலம் பற்றி என்ன நினைக்கிறீர்கள்?

ஆட்டுமந்தை ரசிகர் கூட்டம் இருக்கும் வரை அதன் எதிர்காலத்திற்கு எந்த குறையுமில்லை. ஒருவேளை மக்களுக்கு விழிப்புணர்வு ஏற்ப்பட்டால் கொஞ்சம் சறுக்கலாம்

11. அடுத்த ஓராண்டு தமிழில் சினிமா கிடையாது, மற்றும் சினிமா பற்றிய சமாச்சாரங்கள், செய்திகள் எதுவுமே பத்திரிகைகள், தொலைக்காட்சி, இணையம் உள்ளிட்ட ஊடகங்களில் கிடையாது என்று வைத்துக்கொள்வோம்? உங்களுக்கு எப்படியிருக்கும்? தமிழர்களுக்கு என்ன ஆகும் என்று நினைக்கிறீர்கள்?

எனக்கு எந்த பாதிப்பும் இருக்காது. ஏனென்றால் இப்போதும் எனக்கு அப்படி தான் இருக்கிறது. பல தமிழ் மக்களுக்கு பைத்தியம் பிடிக்கும் வாய்புண்டு என்று தெரிகிறது.


இப்பதிவை தொடர நான் யாரையாவது அழைக்கவேண்டும்.
கிட்டத்தட்ட அனைவரும் எழுதி விட்டனர். அப்படி எழுத வில்லைஎன்றால் தயவு செய்து எழுதி என் மானத்தை காப்பாற்றுங்கள்.

1.தருமி

2.ஜாலிஜம்பர்

3.நல்லதந்தி

4.ஆர்.கே.சதீஷ்குமார்

5.ஜ்யோவ்ராம் சுந்தர்

மீண்டும் ஒருமுறை என் ஞாபங்களை நினைவுகூற வைத்த சகா கார்க்கிக்கும் தோழி லேகாவுக்கும் நன்றி
வால்பையனும், வாசிப்பும் பின்னே ஞானும்!!

உனக்கு என்ன தெரியும்னு எழுதுற!

ஒண்ணும் தெரியாதுங்க!

ஒண்ணும் புரியாம தெரியாம எழுதி எங்களையும் முட்டாள் ஆக்கக்கூடாது புரியுதா

சரிங்க

இனிமே எதுவும் எழுதக்கூடாது

சரிங்க, ஐயா ஒரு சந்தேகம்

என்ன

என் சம்சாரந்தான் வீட்ல சமைக்கிறாங்க

சரி

அவுங்க கேட்டரிங் காலேஜெல்லாம் போனதில்லை

அதுக்கு

ஒண்ணும் புரியாம, தெரியாம சமைக்ககூடாதுன்னு நிறுத்த சொல்லிருட்டுமா

**********************************

இணையத்தினால் நாம் பெற்றது என்னவென்றால் சொல்லோரும் சொல்வது நல்ல நண்பர்கள். ஆனால் இழப்பு,அனைவராலும் ஒத்து கொள்ளபடுவது புத்தக வாசிப்பு.
நிறைய நண்பர்கள் புத்தகம் வாசிக்க என்னை ஊக்குவிக்கிறார்கள். பின்னூட்டநாயகன் கும்கி ஒரு பை நிறைய புத்தகங்கள் எடுத்து கொண்டு என்னை தேடியே வந்துவிட்டார்.

ஆனாலும் இயற்கையின் அமைப்பில் நிறைய குறைபாடுகளும் இருக்கிறது. அது ஒருவருக்கு பிடித்தது மற்றவர்களுக்கு பிடிக்காமல் போவது. ஒருவருக்கு ரஜினி பிடித்தால் ஒருவருக்குய் கமல் பிடிக்கிறது, ஒருவருக்கு குச்சி ஐஸ் பிடித்தால் ஒருவருக்கு கப் ஐஸ் பிடிக்கிறது. எல்லோருடனும் ஒத்து போகும் இயந்திரமாக பிறக்கவில்லையே என்று எனக்கு வருத்தமாக இருக்கிறது.

குறுநாவல், சில பயணக்குறிப்புகள் தவிர்த்து வாழ்வியல் சார்ந்த கதைதொகுப்புகளை படிக்கும் போது, பாசமலர், பாவமன்னிப்பு படம்பார்க்கும் போது கண்ணீர் தாரை தாரையாக கொட்டுமே அது போல் எனக்கும் வருக்கிறது. தனிமையில் இருந்தாலும் அது எனக்கு பெருத்த வெட்கத்தை வரவழைக்கிறது என்று வெக்கப்படாமல் சொல்லிக்கொள்கிறேன்.

நல்ல கதை நடைகள், நிகழ்வுகளில் தொகுப்புகள் படிப்பது நல்ல அனுபவமே! ஆனால் மனநிறைவு என்பது ஆளுக்கு ஆள் மாறுபடுகிறது. ஒரு சிறு ஜனரஞ்சக கதை தொகுப்புகளில் திருப்பி அடைந்து விடுகிறேன். இது நுனிப்புல் மேயும் வேலை தான்.கண்டிப்பாக நண்பர்கள் சிபாரிசு செய்யும் கதைகளை படிப்பேன். ஏனென்றால் அரைகுறை தெளிவுகள் வேறொரு மாய பிம்பத்தை உருவாக்கிவிடும்.

நான் எழுதுகிறேன் என்பதை விட கிறுக்குகிறேன், உளறுகிறேன், புலம்புகிறேன் என்பதே சரியாக இருக்கும். எழுதுவதற்கு முன் நான் எந்த ஒத்திகையும் பார்ப்பதில்லை. ஒத்திகை பார்த்து நண்பர்களிடம் சொன்னதில் ஒன்று கூட எழுத முடியவில்லை. கணினியில் அமர்ந்தவுடன் என்ன தோன்றுகிறதோ அதை அப்படியே பதிவு செய்வது தான் என் வழக்கம். அது மாபெரும் அபந்தமாக இருந்தாலும் அது என் அறியாமையின் சுவடுகளாக இருக்கட்டும் என்று விட்டுவிடுவேன்.

இம்மாதிரியான எழுத்துகளில் பெரும் ஆபத்து இருக்கிறது. சில உணர்பூர்வமான எழுத்துகள் உண்மை என்று நம்பப்படும் வாய்ப்புகள் அதிகம். அது மாபெரும் தவறு என்று நான் உணர்கிறேன். நண்பன் தியாகு கூட ஒவ்வொரு பதிவிற்கும் "ஏன் இப்படி உளறி கொட்டுகிறாய்" என்று அலைப்பேசியில் அழைத்து திட்டுவான்

ஆனாலும் இது வகையில் எனக்கு நன்மையே! தெரிந்தவர்களிடம் தெரியாதவர்கள் கேட்டு தெரிந்து கொள்வார்கள். நான் அதையையே வேறு மாதிரி சொல்லி நீங்கள் தரும் சரியான கருத்துகளை புரிந்து கொள்கிறேன். என்னுடைய பதிவுகள் பல அம்மாதிரி எனக்கு சொல்லிகொடுத்தவையே. ஆனாலும் புரியாமல் எழுவது தவறு என்று குற்றம் சாட்டுபவர்களுக்கு என்ன சொல்லலாம்.

இயேசு சொன்னாராம், எவனொருவன் எந்த குற்றமும் செய்யவில்லையோ அவன் அவள் மீது கல்லெறியுங்கள் என்று. நான் இயேசு அல்ல, குற்றவாளி கூண்டில் நிற்கிறேன். ஆனாலும் இந்தய அரசியல் சட்டப்படி ஒரு குற்றவாளி தனக்காக வாதாட உரிமை இருக்கிறது. அதன்படி யாரொருவர் ஒன்றை முழுமையாக புரிந்து கொண்டவர்கள் என்று நம்புகிறீர்களோ, அதனை தர்க்க ரீதியாக பின்வாங்காமல் வாதம் செய்யமுடியும் என்று சொல்கிறீர்களோ அவர்களுக்கு

வாயில் சிகரெட் பிடித்து காதில் புகைவிடும் கலையை கற்று தருவேன்.

கொஞ்சம் இங்கே வாங்களேன்!!

எனதருமை நண்பர்களுக்கு!

கடந்த திங்கள் முதல் சீனா ஐயாவின் வேண்டுகோளுகிணங்க பலரும் தனக்கு அந்த வாய்ப்பு கிடைக்காதா என்று ஏங்கி கொண்டிருக்கும் வலைசரத்தில் இந்த வார ஆசிரியராக எழுதி கொண்டிருக்கிறேன். பல பணிகளுகிடையே ஐயாவின் வேண்டுகோளையும் நிறைவேற்ற வேண்டும், அதற்கு உங்கள் ஆதரவும் தேவைபடுகிறது.

இது வரை அதில் எழுதிய பதிவுகள்

நான் சந்தித்த பதிவர்கள்!!


மீண்டும் ஒரு முறை!!


இருளும் ஒளியும் அல்லது அதுவும் இதுவும்!!


நன்றி

கடவுளும், டெர்மிநேட்டரும்
மதுரையில் வாழ்ந்தவர்களுக்கு ஆங்கில திரைப்படம் பிடித்திருப்பதில் ஆச்சரியமில்லை.
அதிக படங்கள் திரையிட திரையரங்குகள் இருந்ததும் ஒரு காரணமாக இருக்கலாம். கவுண்டரில் நிற்கும் பொழுது சக ரசிகனின் ஞானம் நம்மை ஆச்சரிய படுத்தும், சில அதிர்ச்சியை தரும், சிலவைகள் கோபத்தை வரவழைக்கும்.

நமது மக்கள் திரைப்படத்தை கொண்டாடுவார்கள் என்பது உண்மையே, சில வருடங்களாக திரைப்பட அனைத்து துறை கலைஞர்களையும் கொண்டாடுவது வழக்கமாகி வருகிறது, நடிகர்களை மட்டுமே தெரிந்து வைத்திருந்த உலகம், இன்று அந்த இயக்குனர் படமென்றால் தவறாமல் பார்ப்பேன் என்று சொல்லும் அளவுக்கு உயர்ந்திருக்கிறது.

இது சினிமா பற்றிய பதிவு தான். ஹாலிவுட்டில் ஆரம்ப நாட்களில் நாடக பாணி படங்களே வெளிவந்தன, ஸ்பீல்பெர்க் ஆரம்பித்து வைத்த ஃபிக்சன் தொற்று வியாதியை போல் எல்லோருக்கும் பத்தியது. ஆனாலும் நிலைத்தது சிலரே. அவர்களில் முக்கியமானவர் ஜேம்ஸ் கேமரூன், இவரை தெரியாதவர்களுக்கும் இவரை அடையாளம் காட்ட ஒரே படம் போதும், அது டைட்டானிக்.
ஸ்பீல்பெர்க் ஏலியன்கள்(ஈ.டி, க்ளோஸ் என்கவுண்டர்) படங்களில் அவைகளை நல்ல விதமாக காட்டி அவைகளின் மேல் ஒரு மரியாதையை காட்டியிருந்தாலும். கேமரூன் தனது ஏலியன் படத்தில் அவைகளை கொடுரமாக காட்டி முரட்டியிருப்பார். அவருக்கு முதல் படம் இது இல்லை என்றாலும் ஏலியன்(ALIEN) தான் அவருக்கு பெயர் பெற்று தந்த படம். அதில் நடித்த சிக்யூரணி வீவரும் அந்த படத்தின் மூலமே புகழ் பெற்றார்.மேலுள்ளவைகள் அவரைப் பற்றிய அறிமுகம் மட்டுமே. இந்த பதிவு டெர்மினேட்டர் என்ற படத்தை பற்றி, அதன் முதல் பாகத்தை வி்ட இரண்டாம் பாகமே பரபரப்பாக பேசப் பட்டது. காரணம் அதிலிருந்த கிராபிக்ஸ் காட்சிகளும் சிறு வயது ஜான் கானராக நடித்த சிறுவனும் தான். முதல் பாகம் , இரண்டாம் பாகம் வருவதற்கு சில மாதங்களுக்கு முன் தான் திரையிடப்பட்டது. தொடர்ச்சி விடப்படக்கூடாது என்ற எண்ணத்தில் வெளியிட்டாலும், அவர்கள் சொன்ன காரணம் படத்தில் அதி பயங்கர வன்முறை காட்சிகள் என்று. தன் கண்ணை தானே அர்னால்டு புடுங்கம் காட்சியை தவிர வேறொன்றும் அதில் பெரிதாக வன்முறை இல்லை.

படத்தின் கதை, இன்னும் சில வருடங்கள் கழித்து பூமி முழுவதும் இயந்திரங்களின் கட்டுப்பாட்டில் வரப்போகிறது. அப்போது அவர்களின் ஒரே எதிரி மனிதர்கள் மட்டுமே.
அப்போதும் அந்த இயந்திரங்களுக்கு சிம்மசொப்பனமாக இருப்பது நாயகன் ஜான் கானர். மனிதர்களை ஒன்று திரட்டி அவர்களுக்கு தலைமையேற்று இரக்கமற்ற இயந்திரங்களுக்கு எதிராக போர் நடத்தி கொண்டிருப்பான். சரி இது கதை தானே இங்கே கடவுள் எங்கிருந்து வருகிறான் என்று கேட்கிறீர்களா, அது பற்றிய உரையாடலை கீழே பாருங்கள்
நண்பன்: ஒரு குழுவுக்கு தலைவனாக இருப்பதால் அவனை கடவுள் என்கிறாயா?

நான்:கடவுள் தோன்றியது அப்படி தான் என்றாலும் நான் அதை சொல்லவில்லை

நண்பன்:வேறு எப்படி?

நான்:பைபிள் படித்திருக்கிறாயா

நண்பன்:ஆம்

நான்:அதில் இறைதூதராக வரும் இயேசுவுக்கு தந்தை இல்லை தானே.

நண்பன்:ஆம்

நான்:அதனால் தான் அவரையும் கடவுளாக கிறிஸ்துவ மதம் பார்க்கிறது இல்லையா

நண்பன்:ஆம்

நான்:இந்த கதையிலும் நாயகனுக்கு தந்தை இல்லை, அப்படியானால் அவனும் கடவுள் தானே

நண்பன்:தந்தை இல்லையா? என்ன கதை விடுகிறாய்

நான்:கதையே அப்படி தான். கேள்

ஜான் கானரை அழிக்கமுடியாமல் திணறும் இயந்திரங்கள், அவன் பிறப்பதற்கு முன்னாள் சென்று அவனது அம்மாவை அழித்துவிட்டால் அவன் பிறக்க மாட்டான் என்று அவனை அளிக்க ஒரு இயந்திரத்தை அனுப்புகிறது, (அந்த பாத்திரத்தில் தான் அர்னால்டு நடித்திருப்பார்) இதை தெரிந்து கொண்ட ஜான் கானர் தானும் அவ்வழியே முற்காலத்திற்கு சென்று தன் தாயை காப்பாற்றுகிறார். முன்னரே குறிப்பிட்ட படி அப்போது அவர் பிறக்கவே இல்லை. அவருடைய அம்மாவுக்கும் திருமணம் ஆகவில்லை. கதையின் ஒரு கட்டத்தில் தான் எப்படியும் இறப்பது உறுதி என்று தெரிந்ததும் தன் அம்மாவுடனேயே கூடுகிறார். இறுதியில் அந்த இயந்திரத்தை அழித்து தானும் இறக்கிறார்.

நண்பன்:இதில் கடவுள் எங்கே

நான்:மடையா! ஜான் கானர் கூடியதால் அவர் அம்மாவுக்கு உருவாகும் சிசு தான் ஜான் கானர்.

நண்பன்;அவர் தான் இறந்து விடுகிறார்

நான்:பத்து மாதம் கழித்து மீண்டும் தன் தாயின் மூலமாக பிறக்கிராரே

நண்பன்:அப்படியானால்

நான்:ஜான்கானர் ஒரு சுயம்பு, தன்னை தானே உருவாக்கி கொண்டவர், அப்படியானால் கடவுள் தானே


டிஸ்கி:இந்த பதிவு கிறிஸ்தவர்களை புண்படுத்தும் நோக்கில் எழுதப் பட்டது அல்ல

டிஸ்கி:கடவுள் மறுப்பாளன் எல்லா கடவுள்களையும் மறுக்கிறான்

டிஸ்கி:வழக்கம் போல் நான் அவனில்லை

தமிழ்மணம் தூங்குகிறதா!!பங்கு சந்தையை பற்றி ஒரு பதிவிட்டு விட்டு துறை சார்ந்த பதிவுகளில் தேடினால் இது தான் கிடைத்தது, சினிமாவும் ஒரு துறை தான் என்பதால் விட்டு விட்டார்களோ

பங்குசந்தை- ஒரு சூதாட்டம்

அமெரிக்காவின் பொருளாதார வீழ்ச்சி பட்டிதொட்டிஎங்கும் பேசப்படும் விசயமாக மாறி விட்டது. பொதுவாக வங்கிகளின் வீழ்ச்சிக்கு காரணம் வரா கடன் என்றாலும், நிதி நிறுவனக்களின் வீழ்ச்சிக்கு காரணம் பங்களில் அவர்களின் முதலீடு தான் என்பது தெரிந்த விஷயம். அவர்களின் நட்டத்தில் அமெரிக்கா பங்கெடுத்து கொள்கிறது என்பது தெரிந்து விஷயம் தான். ஆனால் தெரியாத விஷயம் அவர்கள் நட்டப்பட்ட பணம் எங்கே சென்றது.

வியாபாரம் என்பதின் பொதுவான விதி. வாங்குபவர் ஒருத்தர் விற்பவர் ஒருத்தர், ஒருவருக்கு லாபம் என்றால் ஒருவருக்கு நஷ்டம் என்பது அனைவரும் அறிந்ததே. அமெரிக்க நிதி நிறுவனக்களின் நட்ட பணம் வேறு யாருக்கோ லாபமாக இருந்திருக்க வேண்டுமே, அது யாருக்கு, அந்த பணம் எங்கே?

அது ஒரு பக்கம் இருக்கட்டும், அந்த நிதி நிறுவனக்கள் எத்தனையோ லட்சம் பேர்களை தற்கொலைக்கு தூண்டின என்று தெரியுமா, அதை சொல்வதற்கு முன் பங்கு சந்தைகளை பற்றி சில முன்னுரையும் தேவை. ஏற்கனவே பங்கு சந்தையை பற்றி அறிந்தவர்கள் இதில் ஏதும் தவறிருந்தால் சுட்டி காட்டலாம்.

பங்குகள் என்பது ஒரு நிறுவனம் தமது வளர்ச்சியில் மற்றவர்களையும் சேர்த்து கொண்டு அவர்களையும் பங்குதாரர்களாக மற்ற பங்குகளை வெளியிடுகிறது, உதாரணமாக ஒரு நிறுவனத்தின் மதிப்பு பத்தாயிரம் என்று வைத்து கொள்வோம், அதில் பாதியை பங்குகளாக வெளியிடுகிறார்கள், மீதி ஐந்தாயிரத்தை ஒரு பங்கின் மதிப்பு ஐம்பது வீதம் நூறு பேர் வாங்குகிறார்கள் என்று வைத்து கொள்வோம்.

அதாவது அவர்கள் பங்கு ஒன்றின் விலை ஐம்பது என்று தீர்மானித்திருப்பார்கள். ஆனால் பங்கு வெளியீடு என்ற அறிவிப்பு வந்தவுடன் அதனில் சூதாட்டம் ஆரம்பித்து விடுகிறது. அந்த நிறுவனத்தின் வளர்ச்சியில் நம்பிக்கை கொண்டு அவர்கள் அதை வெளியீட்டு விலையை விட அதிக விலைக்கு கேட்பார்கள். சரி இது நம்பிக்கையின் அடிப்படையில் தானே இங்கெ சூதாட்டம் எங்கிருந்து வந்தது என்று கேட்கிறீர்களா,

ரிலையன்ஸ் நிறுவனத்தின் பவர் என்ற பங்குகள் மேலே ஆகாயத்திற்கு சென்று பின் அதல பாதாளத்தில் விழுந்ததை பார்த்திருப்பீர்கள், அந்த நிறுவனம் இன்னும் ஆரம்பிக்கவே படவில்லை என்பது தான் உண்மை, அந்த நிறுவனத்தின் பங்குகள் வெளியிடும் போதே அது 2011-ல் தான் ஆரம்பிக்கப்படும் என்று சொல்லியே ஆரம்பித்திருக்கிறார்கள். இருப்பினும் ரிலையன்ஸ் பவர் என்னும் குறியீடு வெறும் சூதாட்டத்திற்காக பயன்பட்டது.

வெளிநாடுகளை சேர்ந்த நிதி நிறுவனக்கள் லாபம் பார்க்க வேறொரு நிறுவனத்தின் பங்குகளை வாங்கி மாயை தோற்றத்தில் அந்த பங்குகளை விலை உயர செய்து பின் உயர்ந்த விலையில் விற்க தொடங்குவார்கள். அதிக விலையில்,வாங்கிய சிறு முதலீட்டாளர்கள் மொத்த முதலையும் இழந்து நடுத்தெருவுக்கு வர வேண்டியது தான். இவைகளுக்கு காரணம் வெளிநாட்டு முதலீட்டாளர்கள் தான் என்று தெரிந்தும் அதனை மாற்ற நமது அரசாங்கம் பெரிதாக எந்த முயற்சியும் எடுக்கவில்லை.

ஒரு நிறுவனத்தின் வளச்சியை பொறுத்து அதன் பங்குகளின் வளர்ச்சியும் இருக்கவேண்டும். வளரலாம் என்ற மாயை தோற்றத்தில் விலையுயர்ந்த பங்குகள், இன்று அந்த விலைகளை மீண்டும் தொடுமா என்பதே சந்தேகத்திற்கு இடமளிக்கும் வகையில் உள்ளது. பங்குகளில் முதலீடு செய்பவர்கள் தயவுசெய்து அதை முதலீடாக நினைக்காதீர்கள், முழுக்க முழுக்க அது நீங்கள் குதிரையில் கட்டிய பணமே!


பின்னாளில் விலைபொருள்கள்(கமாடிடி) பற்றியும் எழுதுகிறேன்

புலம்பல்கள்!!!

இன்று மதியம் சன் தொலைக்காட்சியில் முதல்வன் படம் போட்டிருந்தார்கள்,
மற்ற சேனல்களில் ஓடும் படத்தை விட இதுவே என்னை கவர்ந்ததால் நான் முதல்வன் படத்தையே பார்த்தேன், கவனிக்க "நான் பார்த்தேன்" என்று தான் சொல்லியிருக்கிறேன், தமிழகமே பார்த்தது, இந்தியாவே பார்த்தது, உலகமே பார்த்தது என்றெல்லாம் நான் சொல்ல வரவில்லை, காரணம் இந்த பதிவு முதல்வன் படத்தை பற்றியும் அல்ல, அதை ஒளிப்பரப்பிய தொலைக்காட்சியை பற்றியும் அல்ல.

நாடும்,நாட்டு மக்களும் உருப்பட வேண்டும் என்று நினைப்பவன் எவனுக்கும் அந்த படத்தை பார்த்து இரத்தம் கொதிக்காமல் இருக்காது. கடந்த இருபது வருடங்களாக தமிழகத்தில் நடந்தவைகள் தான் அந்த படத்தில் காட்டப்பட்டது என்றால் அது மிகையல்ல. முதலில் வரும் கலவரக்காட்சியே ஒரு உதாரணம், ஒரு சின்ன பிரச்சனைக்கும் கும்பல் சேருவது சாதிக்காரனும் ,கட்சிகாரனும் தான். இவர்கள் எங்கேயிருந்து சாதியை ஒழிக்க போகிறார்கள்.

பல நூற்றாண்டுகளாய் இருப்பது சாதி, அதை சுலபத்தில் ஒழிக்க முடியாது, சாதியை ஒழிக்க மக்களே முன் வரவேண்டும் போன்ற காரணங்கள் சொல்லப்படுகின்றன. ஆறாவது படிக்கும் ஒரு மாணவனுக்கு சாதியை பற்றி ஒன்றுமே தெரியாது, அவன் நல்ல மதிப்பெண் வாங்கியிருந்தாலும் அவனுக்கு சலுகை வழங்க அவன் சாதி சான்றிதல் தரவேண்டும், சிறு வயதிலேயே அவன் மனதில் சாதியின் வன்மம் ஊன்றப்படுகிறது.

சாதியும் ,மதமும் விரும்பி ஏற்கப்படுவதில்லை, அது திணிக்கப்படுகிறது, எந்த குழந்தையும் தான் இந்த சாதியில் பிறந்ததற்காக பெருமைப்படுவதில்லை, ஆனால் வளர்ப்பில் அதையும் சேர்த்து விடுகிறார்கள் பெருசுகள். ஒரு குழந்தையை ஒண்ணாம் வகுப்பு சேர்க்க சென்றால் அங்கேயும் சாதி சான்றிதல் கட்டாயம். திறமை மிக்கவன் நல்ல மதிப்பெண்கள் பெற்றும், அவன் வசதி குறைவாக இருந்தாலும், அவன் பேக்வேர்ட் க்ளாசாக இருந்தால் அவனுக்கு சலுகை இரண்டாம் பட்சம் தான். தகுதியின் அடிப்படையில் இல்லாமல் சாதியின் அடிப்படையில் புறக்கணிக்க படுவதால் அப்போதே அவனுக்கு மற்ற சாதிகளின் மீது வெறுப்பு ஏற்படுகிறது பிறகு எங்கிருந்து அழியும் இந்த சாதிகள்.

இடஒதுக்கிட்டீற்கு நான் எதிரி இல்லை, ஒரு காலத்தில் பார்பநிசம் இருந்தது, பார்பனர்களை ஆதரிப்பவர்களுக்கே பதவிகள் தரப்பட்டன. இருக்கலாம் ஆனால் தமிழகத்தை ஆண்ட எந்த மன்னனும் பார்ப்பான் என்ற சரித்திரம் இல்லை பின் எப்படி வந்தது பார்ப்பினிய ஆதிக்கம், வெகு இடைக்காலத்தில் அல்லது ஆங்கிலேயர்களின் ஆட்சிகாலத்தில் தான் நடந்திருக்க வேண்டும். அதை மாற்ற பெரியாரின் தலைமையில் நடந்த சீர்திருத்தங்களை நான் வரவேற்கிறேன்.

நன்றாக படிக்கும் மாணவன், பொருளாதாரத்தில் குறைவாக இருந்தால் அவனது நண்பர்களே அவனுக்கு உதவி செய்வது இன்று எல்லா பள்ளியிலும் நடக்கிறது.
அந்த பிஞ்சு உள்ளங்களில் சாதி என்னும் நஞ்சை புகுத்துவது யார். அரசாங்கத்தின் சலுகைக்காக எங்களை பேக்வேர்டிலிருந்து, மோஸ்ட் பேக்வேர்டாக மாற்றுங்கள் என்று கெஞ்ச வைப்பது யார். ஒரு பார்ப்பனம் நான் இன்ன சாதி என்று சொல்லிகொள்வது போல் மற்றவர்கள் சொல்ல முடியவில்லை, அதன் காரணம் என்ன. இனி அரசாங்கத்தின் எந்த இடத்திலும் சாதி தேவையில்லை என்று சொல்வதற்கு அரசினை தடுப்பது யார்.

சாதியின் பெயரால் அரசியல் நடத்துபவர்கள்.
அரசியல் நன்மைக்காக சாதி கலவரத்தை தூண்டுபவர்கள்.
சாதி இரண்டொழிய வேறில்லை என்று சொல்லிவிட்டு சாதி கட்சி நடத்துபவர்கள்.
இவர்களை தானா எதிர்பார்க்கிறது இந்த தமிழகம், இவர்களாளா தமிழகத்துக்கு விடுவு காலம் பிறக்கும்.

முதல்வன் படத்தில் ஒரு காட்சி வரும், ஊனமுற்ற ஒருவன் அர்ஜுனின் கழுத்தில் மாலையிட்டு இந்த தமிழகம் என்னைப் போலவே நொண்டியாக இருக்கிறது தூக்கி விடுங்கள் தலைவா என்பான், இங்கு தமிழக அரசியலே நொண்டியாக இருக்கும் பொது எங்கிருந்து தமிழகத்தை தூக்கி நிறுத்த போகிறார்கள்

!

Blog Widget by LinkWithin