இந்தி சினிமாவும், தமிழகமும்,,,...

போன் எடுத்துட்டு போனா சரியா முள் எடுத்து மீன் சாப்பிட முடிவதில்லைன்னு இன்னைக்கு போனை வீட்லயே வச்சிட்டு போனேன், ஆனாலும் கை சும்மா இருக்காதே, அங்கே பார்சல் மடிக்க வைத்திருந்த பழைய இந்தியன் எக்ஸ்பிரஸ் ஆங்கில பேப்பரை எடுத்து புரட்டினேன், அதில் நான் படித்த கட்டுரையின் சுருக்கம் இது

breaking language barriers என்ற தலைப்பு தான் அந்த கட்டுரை படிக்கத்தூண்டியது. கட்டுரை ஆசிரியர் வட இந்தியர் என்பது பெயரை பார்க்கும் பொழுதே தெரிந்து, அவர் சொல்றார்.

2001-2011 நடந்த கணக்கெடுப்பில் அதாவது உங்களுக்கு எத்தனை மொழிகள் தெரியும் என்ற பகுதியில் அதற்கு முன்பை விட 50%க்கும் அதிகமானோர் இந்தி தெரியும் என குறிப்பிட்டுள்ளனர், அதனால் இந்த ஆட்சி தான் இந்தியை திணிக்கிறது என சொல்லமுடியாது

1968 ஆம் ஆண்டு ராஜ்கபூர், வைஜெயந்திமாலா நடிந்த சங்கம் என்ற திரைபடம் சென்னை சாந்தி தியேட்டரில் 188 நாட்கள் ஓடியது, 1969 ஆம் ஆண்டு வெளியான ஆராதனா(ருப்புதரா மஸ்தானா பாட்டு) என்ற திரைபடமும் மாஸ் ஹிட்.ஆரம்பத்தில் இருந்து சமீபத்தில் வந்த dangal படம் வரை தமிழகத்தில் நல்ல வரவேற்றை பெற்றுள்ளது, dangal திரைப்படம் தமிழகத்தில் 153 திரையங்களில் திரையிடப்பட்டது எங்கிறார்

மேலும் ரஜினிகாந்த், கமலஹாசன் அவ்ளோ ஏன் இளம் நடிகர் தனுஷ் கூட இந்தியில் நடிப்பதை பெருமையாக கருதிகிறார், ஆனால் இந்தி நடிகைகளை தவிர ஆண் நடிகர்கள் தமிழ் படங்களில் லீடிங் ரோலில் நடிக்க ஆர்வம் காட்டுவதில்லை. பெருவாரியான மக்களின் ஆதரவை பெற்றது இந்தி என முடிக்கிறார்.மறுத்து பேசும் திரைதுறை பிரமுகர் சொல்கிறார். நகரமயமாக்கலின் காரணமாக மக்கள் CBSE மற்றும் ISBE!?(அப்படி ஒன்னு இருக்கா) பள்ளிகளில் தங்கள் பிள்ளைகளை சேர்கிறார்கள், அங்கே ஹிந்தி இரண்டாம் மற்றும் மூன்றாம் மொழியாக கட்டாய பாடமாக்கப்பட்டுள்ளது.

ஆதியில் இருந்தே சென்னையில் மார்வாடிகள் அதிகம், மேலும் மேல் சொல்லப்பட்ட படங்கள் தமிழகத்தில் ரிபீட் ஆடியன்ஸை பெற காரணம் அந்த படத்தின் இசையமைப்பாளர் ஆர்.டி.பர்மன். dangal  திரைபடம் நேரடி இந்தியில் 24 திரையரங்களில் மட்டுமே திரையிடப்பட்டது, தமிழில் டப் செய்யப்பட்டது தான் 153 திரையிரங்களில் வெளியிடப்பட்டது.

சென்னை, வேலூர் பகுதிகளில் இந்தி, தெலுங்கு, கன்னட படங்களும், நாகை, கோவை பகுதியில் மலையாளப்படங்கள் வெளியிடுவதும் இயல்பான ஒன்று, அங்கே அந்த மொழி தெரிந்தவர்கள் அதிகம் இருப்பதால். மற்றப்படி மக்கள் சினிமாவில் மொழியை தேடுவதில்லை என முடிக்கிறார்

இந்த கட்டுரை வெளிவந்தது நவம்பர் 2018 ஆம் ஆண்டு. எங்க இழுத்து எதுல கொண்டு போய் முடிச்சி போடுறான் பாருங்க, இவனுங்க மொழி வன்புணர்வுக்கு தமிழ் தான் கிடைச்சதா கிறுக்கு கூவைங்க.

கடமை தவறுகின்றார்களா ஆசிரியர்கள்?......

என் கட்டுரைக்கு வந்த கேள்விகளுக்கு என்னால் முடிந்த விளக்கத்தை கொடுக்க முயற்சிகிறேன்

ஆசிரியர்கள் மட்டுமே போராடவில்லை, அரசு பணியாளர்கள் அனைத்து துறையில் இருந்து இந்த போராட்டத்தில் கலந்து கொண்டுள்ளனர். அவர்களது கோரிக்கை, மத்திய அரசு 7வது ஊதிய கமிசன் சொன்ன படி சம்பளம் கொடுக்கப்பட்டிருக்க வேண்டும், ஆனால் 21 மாதங்களாக அரசு அந்த ஊதிய கமிசன் பரிந்துரையை மதிக்கவேயில்லை, சரி யாருக்குமே தான் தரவில்லை, ஏன் போராட்டம் என்ற கேள்வி எழுகிறதா? அது தான் இல்லை, ஏழாவது ஊதிய கமிசன் பரிந்துரையின் படி ஐ,ஏ,எஸ்/ ஐ.பி,எஸ் மற்றும் நீதிதுறையில் அனைவர்களுக்கும் சம்பளம் உயர்த்தி நிலுவை தொகையும் கொடுக்கப்பட்டு விட்டது. ஏமாற்றப்படுவது இடை மற்றும் கடை நிலை ஊழியர்கள் மட்டுமே. அந்த நிலுவை தொகையை தான் கேட்கிறார்கள், யாரும் பிச்சை கேட்க வில்லை,

மத்திய அரசின் புதிய பென்சன் திட்டம் நாடு முழுவதும் உள்ளதே, ஏன் தமிழகம் மட்டும் எதிர்க்க வேண்டும் என்பது அடுத்த வாதம்.

நாடு முழுவதும் உள்ளது என்பது ஏற்புடையதல்ல. பல மாநிலங்கள் அதை எதிர்த்துக்கொண்டு தான் இருக்கிறன.,  காரணம் என்ன?
பங்கு வணிக ஆலோகரகான நான் பரிந்துரைப்பது உங்கள் வயதுக்கு தகுந்தாற்போல் ரிஸ்க் எடுங்கள் என்று, ஆனால் அரசோ இவர்களிடம் பணத்தை வாங்கி அதை பங்கு வணிகத்தில் முதலீடு செய்து அதில் வரும் லாபத்தில் இவர்களுக்கு பென்சன் தருவார்களாம். தற்போது இருக்கும் அரசின் பொருளாதார கொள்கை என்பது நீண்டகால பலனளிக்கும் திட்டமாக தெரியவில்லை, இவர்கள் திட்டமிடதலும் மக்களுக்கு சிக்கலை உருவாக்குவதாகவே இருக்கிறது. மேலும் ஊழியர்களின் பிடித்தம் செய்யப்பட்ட பணத்தின் தற்போதைய நிலை என்ன என்பதும் தெரியவில்லை. அதன் வெள்ளை அறிக்கை கேட்கிறார்கள். அவர்கள் பணம் என்னானது என கேட்பதில் என்ன தவறு கண்டீர்கள்?

நீட் தேர்வை ஏன் அரசு பள்ளி ஆசிரியர்கள் எதிர்க்கவில்லை?

சில வருடங்களுக்கு முன்பு வரை தமிழகம் மட்டுமல்லாது இந்தியா முழுவதும் நுழைவு தேர்வு இருந்தது. ஆனால் அது சமூக நீதிக்கு எதிரானது. தாழ்த்தப்பட்ட/பிற்படுத்தப்பட்ட மக்கள் கடைசி வரை சமநிலைக்கு வர வாய்ப்பை நுழைவு தேர்வு தரபோவதில்லை என்பதை அறிந்து சமூகநீதியின் மேல் அக்கறை கொண்ட அன்றைய ஆட்சியாளர்கள் நுழைவுதேர்வை ரத்து செய்து இடஒதுக்கீட்டிற்கு மதிப்பளித்து கட்-ஆஃப் மார்க் முறையில் மருத்துவபடிப்பிற்கு வாய்ப்பளித்தனர், ஆனால் இட ஒதுக்கீடு என்றாலே ஒவ்வாமை அடையும் உயர்சாதி மற்றும் உயர்சாதியின் பால் பற்று கொண்ட ஆட்சியாளர்கள் நீட் தேர்வை கொண்டு வரும் பொழுது இது தனியார் கல்லூரியில் மருத்துவம் பயில ஆகும் செலவை குறைக்கும் என்றார்கள்., ஆனால் சமூக நீதியை மறந்தார்கள். அனிதாவை யாரும் மறக்க முடியாது

நுழைவு தேர்வை ரத்து செய்தது அரசின் கொள்கை முடிவு என்பதால், அதில் தலையிட முடியாது என நீதிமன்றம் அறிவித்துவிட்டது, அப்போதும் ஆசிரியர்கள் எதுவும் கருத்து சொல்ல வில்லை. நீட் தேர்வுக்கும் அவர்கள் கருத்து கூற முடியாது, இது தானா உங்கள் கல்வியின் தரம், போட்டி தேர்வுக்கு கூட உங்களால் தயார் செய்யமுடியாதா என்ற கேள்வி தான் திருப்பி வரும், நியாயமாக இதை ஒட்டுமொத்தமாக எதிர்க்க வேண்டியது தமிழக மக்களும் சமூகநீதியை காக்க வேண்டிய தமிழக அரசும் தான், ஆனால் தற்போது தமிழக அரசின் நிலை உங்களுக்கே தெரியும், ஜெயலலிதா இருந்தபொழுது கூட நீட்டில் இருந்து விலக்கு வாங்கி வைத்திருந்தார், இவர்கள் மத்திய அரசு வீட்டிற்கு ஒருவரை கொன்று விடுங்கள் என்றாலும் சரின்னு தலையாட்டுவார்கள் போல...பள்ளிகளில் அடிப்படை வசதிக்காக ஏன் போராடவில்லை?

மத்திய அரசும், மாநில அரசும் தனது பட்ஜெட்டில் கல்வி மற்றும் சுகாதாரத்திற்கு குறிப்பிட்ட தொகையை ஒதுக்குகிறது, ஆனால் அது முழுமையாக தேவைப்படும் பள்ளிகளுக்கு போய் சேருகிறதா என்பதே இங்கே கவனத்தில் கொள்ளவேண்டும், அடிப்படை தேவைகளுக்கு நிதி கேட்டால், அரசிடம் பணம் இல்லை, பள்ளியை மூடிவிடலாம் என சொல்லும் அரசிடம் என்ன கேட்க முடியும், பெற்றோர்-ஆசிரியர் சங்கம், முன்னாள் மாணவர்கள் சங்கம் மூலம் நிதி திரட்டி அரசு பள்ளிகள் அடிப்படை வசதியை செய்து கொண்டிருக்கிறார்கள். சமீபத்தில் ஒரு ஆசிரியர் தனது நகைகளை விற்று பள்ளி கட்டுமானத்திற்கு உதவினார், சிறந்த ஆசிரியர் விருது பெற்ற ஒரு ஆசிரியர் தனக்கு வந்த பணத்தை அந்த பள்ளிக்கே செலவு செய்தார், கொடுமை என்ன தெரியுமா? அந்த ஆசிரியர் நேற்று கைது செய்யப்பட்டுள்ளார்

குறைந்த மாணவர்கள், ஒரு ஆசிரியர் பள்ளி தேவையா? மூடுவதில் என்ன தப்பு?

நீங்கள் ஒரு பேருந்தில் வெளீயூர் சென்று கொண்டிருக்கிறீர்கள், பாதி வழியில் அனைவரும் இறங்கி நீங்கள் மட்டுமே பேருந்தில் இருக்கிறீர்கள், ஒரு ஆளுக்காக ஓட்ட முடியாது, இறங்கி போயான்னு சொன்னா உங்கள் மனநிலை எப்படி இருக்கும், அவர் சொல்வதும் நியாயம் தானேன்னு இறங்கி நடந்து போவிங்களா?
கல்வி என்பது அடிப்படை உரிமை. மேல்தட்டு வர்க்க சிந்தனையால் அடிதட்டு மக்களின் வாழ்வியலை புரிந்துகொள்ளவே முடியாது என்பது இதிலிருந்து தெரிகிறது.

மக்கள் தொகை உயர்ந்து கொண்டே இருக்கிறது. கிராமபுறங்களில் இருக்கும் பள்ளிகள் சும்மா வரவில்லை, இங்கே வசிக்கும் அடிதட்டு மக்கள் கல்வி அறிவு பெறவேண்டும் என்ற நோக்கத்தில் கொண்டு வரப்பட்டவை, அதை மூடிவிட்டால் அவர்கள் அரசு பள்ளிக்கு நீண்ட தூரம் செல்ல வேண்டும் அல்லது கடன் வாங்கி தனியார் பள்ளியில் சேர்க்க வேண்டும், ஆனால் ஒரு பொழுதும் மூடிய பள்ளிகளை அரசு திரும்ப திறக்காது, ஏனெனில் அவர்களுக்கு அடிதட்டு என்றல்ல, மக்களை பற்றியே எந்த கவலையும் இல்லை

நாம் வாங்கும் ஒவ்வொரு பொருளுக்கும் எஜுகேசனல் செஸ் என்ற பெயரில் வரி கட்டி வந்தோம், அடிதட்டு மக்களும் தான். கல்வி நமது உரிமை, அதை தரமாக தர வேண்டும் என நாம் தான் கேட்க வேண்டுமே ஒழிய எவன் எப்படி போனா எனகென்ன என்ற மனநிலை, நாளை உங்களை நிச்சயமாக பாதிக்கும், உங்களால் தப்பிக்க முடிந்தாலும் உங்கள் தலைமுறையை பாதிக்கும், நம் உரிமையை கேட்டு பெறுவதில் என்ன தவறு இருக்கிறது. மூடி விடலாம் என சுலமாக சொல்லி விடலாம், இன்று அரசுக்கு நாம் தரும் உரிமை நாளைக்கு அனைத்து பொது துறைகளும் நட்டத்தில் இயங்குகின்றன என சொல்லி மூடிவிடுவார்கள், நாடே தனியார்மயாகி நிற்கும், இது தான் உங்கள் ஆசை என்றால். அதை தான் மேல்தட்டு வர்க்க சிந்தனை எங்கிறேன்

அரசு பள்ளிகளில் கிண்டர் கார்டன் வகுப்பு வரும் பொழுது அங்கன்வாடிகள் எதற்கு?

கிண்டர் கார்டன் வகுப்புகளை குழந்தைகளுக்கான வதைக்கூடம் என்பேன் நான், கல்வியில் சிறந்து விளங்கும் பின்லாந்து நாட்டில் ஏழு வயதில் தான் பள்ளியில் சேர்கிறார்கள், நாம் தான் ஓட்டபந்தயம் போல் நம் குழந்தை முதலாவதாக வர வேண்டும் என்று அவர்களின் சிறு வயதிலேயே மன அழுத்ததை கொடுக்கிறோம், ஆனால் அங்கன்வாடிகள் அப்படி அல்ல. வெளிநாட்டில் வேலைக்கு செல்லும் தம்பதியினர் குழந்தைகள் காப்பகத்தில் விடுவது போல் தான் செயல்படும்

பல குழந்தைகளுக்கு மத்தியில் விளையாட்டாகவே அவர்களின் சமூக பிணைப்பு வளரும், அங்கன்வாடியில் பரிட்சை இல்லை, அதனால் அங்கே ஓட்டபந்தயமும் இல்லை, சிறந்த ஊட்டசத்து மிகுந்த உணவு கொடுக்கப்படுகிறது. படித்த ஒரு ஆசிரியருக்கும், படிக்காத ஒரு சமையல் அம்மாவிற்கும் வேலை கிடைக்கிறது, அதை கொடுக்க வேண்டியது அரசின் கடமை, வருவாய் இல்லையென்றால் மதுபானத்தின் விலையை பத்து மடங்கு உயர்ந்துங்கள். ஆடம்பர பொருள்களுக்கு வரியை கூட்டுங்கள். குழந்தைகள் வாழ்வில் ஏன் விளையாடுகிறீர்கள். மேலும் ஆரம்ப மற்றும் நடுநிலை பள்ளியில் மாணவர்களுக்கு பாடம் எடுக்கும் ஆசிரியரை பச்சிளம் குழந்தைகளுக்கு பாடம் எடுக்கச்சொல்வது வேடிக்கையாக இல்லையா?

குறைந்த சம்பளத்தில் வேலை செய்ய தனியார் பள்ளி ஆசிரியர்கள் தயாராய் இருக்கும் பொழுது இவர்களை ஏன் தொங்க வேண்டும்?

உலகில் உங்கள் வளர்ச்சியை உங்களை தவிர யாராலும் தடுக்கமுடியாது, உங்களை தடுப்பது உங்கள் பொறாமை தான். உங்கள் குறிக்கோளை நோக்கி ஓடாமல் அடுத்தவன் எப்படி ஓடுறான்னு பார்த்துகிட்டு ஒரே இடத்தில் நிற்கிறீர்கள். தனியார் பள்ளி ஆசிரியர்களுக்கு சம்பளம் குறைவு என்பது யார் தவறு

அரசு தனியார் பள்ளிகளுக்கு கட்டணம் நிர்ணயம் செய்ய ஒவ்வொரு பள்ளியின் செலவு கணக்குகளை கேட்டது, அவர்கள் கொடுத்த கணக்கு படி கிண்டர் கார்டன் வகுப்பு ஆசிரியருக்கே 20000 சம்பளம் கொடுக்க வேண்டும், அதை கேட்டு சண்டை போட அந்த ஆசிரியர்கள் தயாராய் இல்லை, வேலை இல்லாமல் இருப்பதற்கு இதுவாவது கிடைக்குதே என்று இருக்கிறார்கள்., ஆக உங்கள் கோவம் தனியார் துறையின் மீதோ, அதை கண்டுகொள்ளாத அரசின் மீதோ வராது, அரசு பள்ளி ஆசிரியர்கள் மீது தான் வரும், தமிழகத்தில் ஆசிரியர்கள் தவிர பல அரசு துறைகள் இருக்கின்றது, அவர்களெல்லாம் எதுக்கு இவ்வளவு என்று கூட சொல்வதில்லை நீங்கள், ஆசிரியர் பணி என்பது உங்களுக்கு அவ்வளவு எளிமையானதாக தெரியிகிறது போல....

ஆசிரியர்கள் ஏன் அரசு பள்ளிகளில் தங்கள் குழந்தைகளை சேர்ப்பதில்லை?

இந்த விசயத்தில் எனக்கும் வருத்தம் உண்டு, ஆனால் அதனால் மட்டுமே தனியார் கொடுக்கும் லேப் வசதி, ப்ராக்டிகல் வசதி, தொழில் சார்ந்த சுற்றுலா வசதி வந்து விடுமா என்றால் நிச்சயம் வராது, நியாயமாக முதலில் அரசியல்வாதிகள் அவர்கள் குழந்தைகள், பேரக்குழந்தைகளை அரசு பள்ளியில் சேர்க்க வேண்டும், கல்வி துறை அமைச்சர், செயலர் என முக்கிய பொறுப்பில் இருப்பவர்கள் குழந்தைகள் கண்டிப்பாக அரசு பள்ளியில் படிக்க வேண்டும், அப்பொழுது தான் அவர்கள் அரசு பள்ளிக்கு தேவையான நிதியை ஒதுக்குவார்கள், தேவையான வசதியை செய்து கொடுப்பார்கள்.

இந்த போராட்டத்தின் ஆணிவேரும், முக்கிய பிரச்சனையும் அரசின் மெத்தனமும், ஆவண போக்கும் தான், ஆனால் ஊதிய உயர்வு என்ற பொய்யை சொல்லி, ஆசிரியர்கள் அனைவரையும் சோம்பேறிகள், சும்மா உட்காந்து சம்பளம் வாங்குபவர்கள் போல் சித்தரித்து, அரசு தனது நோக்கத்ததை நிறைவேற்றிக்கொண்டது, தமிழகம் முழுக்க 50000 ஆசிரியர் பணியிடங்கள் காலியாக உள்ளது, 40 பேர் படிக்க வேண்டிய வகுப்பில் 70க்கும் மேற்பட்ட குழந்தைகள் படிக்கிறார்கள், ஆனால் அரசோ காலி பணியிடங்களை நிரப்பவோ, பள்ளிகளுக்கு வசதி செய்து தரவோ தயாராய் இல்லை, மாறாக பள்ளிகளை மூடவே எத்தனிக்கிறது,

திரும்பவும் சொல்றேன், இது முழுக்க முழுக்க உங்கள் தலைமுறையை பாதிக்கும், உங்கள் குழந்தை தனியார் பள்ளியில் படிக்கலாம், ஆனால் அரசு வேலை வாய்ப்பிற்கு போட்டி போடும் பொழுது அங்கே வேலையே இருக்காது, எல்லாம் தனியார்மயம் ஆகிவிடும், இன்று தனியார் பள்ளி ஆசிரியர்களுக்கு என்ன கதியோ அதுவே உங்கள் குழந்தையின் நிலையாகலாம்,

அரசின் மிரட்டலுக்கு பயந்து ஆசிரியர்கள் பணிக்கு திரும்ப வில்லை, ஜாக்டோ ஜியோ போராட்டம் பல அரசு துறை ஊழியர்கள் முன் நின்று நடத்திக்கொண்டு தான் இருக்கிறார்கள்., ஜோக்கர் படத்தில் ஒரு வசனம் வரும், நாம யாருக்காக போராடுறமோ அவர்களே நம்மை பைத்தியம்னு சொல்றாங்கன்னு, அவர்கள் பணிக்கு திரும்ப காரணம் நீங்கள் தான், உங்கள் புரிதலின்மை தான். உங்கள் மேல்தட்டு வர்க்க சிந்தனை மாறாமல் உங்களால் மனிதம் குறித்து சிந்திக்கவே முடியாது, பொதுநலன் குறித்து ஒரு செங்கல்லை கூட எடுத்து வைக்க மாட்டீர்கள், ஒரு நாள் இந்த சமூகத்தில் தனித்து நிற்பீர்கள், அன்றாவது உணர்வீர்கள் என நம்புகிறேன்

#வால்பையன்
#ஜாக்டோஜியோ

ஆசிரியர்கள் போராட்டம் ஏன்?

சில வருடங்களுக்கு முன்னால் நான்கு சக்கர வாகனம் அறிமுகம் ஆன காலம் அது. ஒரு புகழ்பெற்ற கார் நிறுவனம் அமெரிக்க அரசியல்வாதிகளுடன் ஒரு மறைமுக ஒப்பத்தம் போட்டுக்கொண்டது. அதன் சாராம்சம் பொது போக்குவரத்தை குறையுங்கள் என்பது. பொது மக்கள் பொது போக்குவரத்து இல்லாமல் அவதிப்பட்ட பொழுது ஆங்காங்கே விளம்பர பலகைகள் தென்பட்டது. குறைந்த முன் பணத்தில் சொந்த வாகனம், குறைந்த மாத தவணை என்று. அமெரிக்காவில் இன்றும் பொது போக்குவரத்து உண்டு(ஸ்பீட் படம் பாருங்க)  ஆனால் மக்கள் தொகை உயர்வுக்கு ஏற்ப அவர்கள் போக்குவரத்தை உயர்த்தவில்லை, தரத்தை மட்டும் நன்றாக பார்த்துக்கொள்கிறார்கள்

மேல் உள்ள பத்தி ஒரு உதாரணம், இப்பொழுது ஆதாரம், உங்கள் வீட்டில் இருந்து ஒரு கிலோமீட்டர் தொலைவுக்குள் எங்கேயேனும் 1001 ரூபாய் முன் பணத்தில் சொந்த வாகனத்தை ஓட்டிச்சொல்லுங்கள் என்ற விளம்பர பாதகை உள்ளதா? ஓய்வு பெறும் பணியார்களுக்கேற்ப புது பணியாளர்கள் சேர்க்கபடுகிறாரா? மக்கள் தொகை உயர்வுக்கு ஏற்ப பேருந்துகள் அதிகமாக்கப்பட்டுள்ளனவா? அரசு தன் பொறுப்பில் இருந்து நழுவுவதும், நம்மை தனியார் பக்கம் தள்ளுவதும் உங்களால் உணர முடிகிறதா? சரி இதற்கும் ஆசிரியர்கள் போராட்டத்திற்கும் என்ன சம்பந்தம்?

இந்த போராட்டத்தை வெறும் ஊதிய உயர்வுக்காக என அரசு பொது மக்களிடம் பரப்பி விட்டு அரசின் பக்கம் நல்ல பெயர் எடுக்க பார்க்கிறது, ஆனால் அரசு செய்வது மக்கள் விரோத நடவடிக்கை என்பதை மறைக்கிறது. பள்ளிகளை இணைக்கிறோம் என்ற பெயரில் பள்ளிகளை மூடுவது தான் அந்த செயல். இதனால் மக்களுக்கு என்ன கெடுதல் என்பதை உணராமல் மக்கள் ஊதியத்தை மட்டுமே பேசிக்கொண்டு வருகின்றனர்

நான் மதுரை கிழக்கு ஊராட்சி ஒன்றிய ஆரம்ப பள்ளியில் ஐந்தாம் வகுப்பு படித்தேன், அங்கே ஒன்றிலிருந்து ஐந்து வரை தான். 1-2 வகுப்புகள் ஒரு டீச்சர், 3-4 தலைமை ஆசிரியர், 5 ஆம் வகுப்புக்கு ஒரு ஆசிரியர். இதுவாவது 30 வருசம் முன்னால். இப்போதும் ஒரு ஆசிரியர் பள்ளி உள்ளது. ஐந்து வகுப்பிற்கும் அவர் ஒருவரே ஆசிரியர்.  எழுத்தறிவித்தவன் இறைவன் ஆவான்னு சொலவடை  கூடஉண்டு. சிறப்பு கவனம் எடுத்துக்கொள்வது. பெற்றோர்களை அழைத்து அறிவுரை வழங்குவது என குழந்தைகள் பெற்றோர்கள் அருகில் இருப்பதை விட ஆசிரியர்கள் தான் அதிகம் இருக்கிறார்கள். கல்லாக இருக்கும் ஒரு மாணவனை சிலையாக செதுக்குகிறார்கள். ஆசிரியர் பணி மட்டுமே லஞ்சம் வாங்காத ஒரே அரசு பணி

சரி பள்ளிகளை மூடுவதால் என்னாக போகுது என கேட்கும் மேல்தட்டு வர்க்க சிந்தனையுள்ள சக நண்பர்களுக்கு. காலை 7 மணிக்கு உங்கள் ஊரில் உள்ள அரசு மருத்துவமனைக்கு சென்று பாருங்கள். அங்கே உள்ள மக்கள் கூட்டம் எல்லாம் ஏன் அங்கே வந்துள்ளார்கள்? அவர்களுக்கு வசதியில்லை. அவர்களுக்கு என்ன வியாதி என்பதே அவர்கள் உணர்ந்து கொள்ளும் கல்வி அறிவு இல்லை. அந்த கல்வியை அவர்கள் ஆக்ஃபோர்டில் போய் எடுக்க முடியுமா? யார் கொடுக்கவேண்டும் மக்களின் அடிப்படை உரிமைகளான கல்வி, சுகாதாரம், பட்டினியில்லாத உணவு?இந்த போராட்டத்தில் மொத்தம் 53 துறைகள் போராடிக்கொண்டிருக்கிறது, ஆனால் அரசு ஆசிரியர்களை மட்டுமே குறி வைத்து வதந்தியை பரப்பி வருகிறது. பொது மக்களிடையே அரசு பள்ளி ஆசிரியர்கள் மேல் அவபெயர் ஏற்படுத்தி தனியார் பக்கம் குழந்தைகளை அனுப்ப வேண்டும் என்பதே இந்த கார்ப்ரேட் சதியின் நோக்கம், ஏன் காவிரி மேலான்மை  வாரியம் அமைத்தார்கள் தெரியுமா? அப்ப தான் காவிரியில் தண்ணி வராது., டெல்டா பகுதி விவசாயிகள் இனி விவசாயம் வேண்டாம் என வடநாட்டு பக்கம் பிழைக்க செல்வார்கள், இந்த கார்ப்ரேட் சார்பு அரசிடம் அனுமதி பெற்ற ரிலையன்ஸ் நிறுவனம் இந்த பூமியில் ஹைட்ரோ கார்பன் எடுத்து அரசிடம் விற்கும்!?.

அரசு பள்ளிகள் என்பது தான் அடித்தளம், கல்வி முக்கியம் என்பதால் தான் காமராஜர் மதிய உணவு திட்டத்தை கொண்டு வந்தார். அப்படி 60 வருடங்களாக பாமர மக்களுக்கும் கல்வி கொடுத்து, அரசு பள்ளியில் படித்த அப்துல்கலாமை ஜனாதிபதி ஆக்கி அழகு பார்த்த தமிழகத்தில் தற்சமயம் 5000 அரசு பள்ளிகளை மூட போகிறார்கள். அடிதளத்தை இடிக்க பார்க்கிறார்கள்., நாம் கட்டிவைத்த சமூகநீதி, சமூக முன்னேற்றம் என்ற அனைத்தையும் அடித்தளத்தை இடிப்பதன் மூலம் மீண்டும் சர்வாதிகார போக்குக்கு கொண்டு செல்கிறார்கள்

அடிதட்டு மக்களை பற்றிய கவலை அரசுக்கு துளியும் இல்லை. சமகாலத்தில் நம்மால் சமாளிக்க முடியலாம், நம் அவசரத்துக்கு நண்பர்கள் உதவி செய்யலாம், ஆனால் நம் வருமானத்தையும் மீறி செலவு செய்ய வேண்டிய நெருக்கடி இருப்பின் குடும்ப சூழலுக்காக அதை தவிர்க்க முடியாத நிலையில் நீங்கள் கடன்காரன் தான் ஆவீர்கள். பள்ளிகள் மூடபடுவதால், பேருந்துகள் குறைக்கப்படுவதால் நாளை மக்கள் தொகைகேற்ப அரசு பணி இருக்காது, நம் குழந்தைகள், பேர குழந்தைகள் தனியாரை மட்டுமே நம்பி இருக்க வேண்டும்,எல்லாமே தனியார் மயம் என்றால் பின் எதற்கு அரசு என்ற இயந்திரம்?

மத்திய அரசின் சரி, மாநில அரசின் சரி, அடிதட்டு, நடுதட்டு மக்களின் மேல் துளியும் அக்கறை இல்லை. சம்பளம் கொடுக்க பணம் இல்லைன்னு சொல்லும் மாநில அரசு ஒவ்வொரு ரேசன் கார்டுக்கும் 1000 ரூபாய் பணம் கொடுக்கிறது பொங்கலுக்கு. போலியோ சொட்டுமருந்து வாங்க பணம் இல்லை என சொல்லும் மத்திய அரசை யாராவது பார்த்ததுண்டா? இரண்டு அரசுக்குமே பொருளாதாரத்தில் அரிச்சுவடி கூட தெரியவில்லை, எது அவசியம், எது அத்தியாவிசயம் என்ற பொது மக்களின் பார்வையில் பார்ப்பதில்லை

ஆசிரியர்களின் போராட்டம் மக்களுக்கான போராட்டம். அதை கொச்சை படுத்துவது நம் விரலால் நம் கண்ணை நாமே குத்திக்கொள்வது. அவர்களின் தனிபட்ட ஊதிய கோரிக்கை, ஓய்வூதிய கோரிக்கை. பற்றி பேசுவதற்கு முன்னால் அரசு பள்ளிகளை மூடாதீர்கள் என்று ஒவ்வொரு பொது மக்களும் போராட வேண்டும். இது ஆசிரியர்களுக்கு மட்டும் உண்டான உரிமை அல்ல, ஒவ்வொரு குடிமகனுக்கும் கல்வி பிறப்புரிமை, இரண்டு அரசுகளும் தமிழர்கள் அறிவு சார்ந்த சமூகமாக இருப்பது பிடிப்பதில்லை, நீங்கள் அதில் ஒருவர் என்றால் அரசு பள்ளிகளை மூடாதே என்ற கோஷத்தை வையுங்கள். அரசு விரும்புவது போல் கேள்வி கூட கேட்க தெரியாத பிற்போக்கு சமூகத்தின் அங்கத்தினர் ஆக விருப்பமென்றால், ஆசிரியர்களுக்கு எதுக்கு இவ்ளோ சம்பளம்னு கேட்டுகிட்டே இருங்க

#வால்பையன்
#ஜாக்டோஜியோ


ஏன் மாத்திரை சாப்பிடுறோம்!.....

கேள்வி:
முழுங்கற மாத்திரைக்கு எப்படி தெரியும் அத நான் பல் வலிக்குதான் சாப்பிட்டேன்னு 🤔??

பதில்:
வலி என்பது குறிப்பிட்ட பகுதியில் இருந்து மூளைக்கு அனுப்பப்படும் செய்தி. அந்த பகுதியில் நரம்பு மண்டலத்தின் நியூரான் படு வேகத்தில் இருக்கும், ஏனெனில் வலி என்பதே என்னை கவனி என்னை கவனி என நம்மை உசுப்பேத்துவது தான். நாம் சாப்பிடும் மாத்திரை வயிற்றில் கரைந்து குடல் உறிஞ்சிகள் மூலம் உறிஞ்சப்படும் பொழுது ரத்தத்தில் உள்ள வெள்ளை அணுக்கள் வந்துடுச்சுன்னா நமக்கான ஆயுதம் அதை தூக்கிக்கொண்டு வலி உள்ள பகுதிக்கு ஒடி மூளைக்கு செய்திகளை எடுத்துசெல்லும் நியூரான்களின் செயல்பாட்டை மட்டு படுத்தும்

ஒன்னு தெரியுமா? வலி நிவாரணி எடுத்துக்கொள்வதால் மட்டுமே பல் வலியோ அல்லது உடல் வலியோ, காயங்களோ ஆறுவதில்லை, நம் உடலெ ஒரு ஆச்சர்யமான பயோ மெக்கானிசம், நம் மூளை பல ஆயிரம் மடங்கு கம்பியூட்டர் அதாவது பயோ கம்பியூட்டர். கரையான் புற்றில் ஒரு ஓட்டை போட்டால் உடனே போராளி கரையான்கள் வேறு இடத்தில் இருந்து மண்ணை தின்று வந்து ஓட்டை விழந்த இடத்தை அடைக்கும்நம்மை கேட்டா இதயம் துடிக்குது, நம்மை கேட்டா நுரையீரல் சுவாசிக்குது, நம்மை கேட்டா செரிமாண மண்டலம் வேலை செய்யுது. அது மாதிரி தான் நம் உடலின் வெள்ளை அணுக்களும். தட்ப வெப்ப சூழலில் ஏற்படும் உடல் மாற்றம், உணவால் உடலில் ஏற்படும் அலர்ஜி போன்றவற்றை சரி செய்யும், ஆனால் மருத்துவத்தின் துணையோட தான் சரி செய்ய முடியும் என் நிலையும் உடலுக்கு ஏற்படும்

நோய் தொற்று அதிகமாக இருத்தல். நம் உடலை நாமே சில பழக்கங்களால் கெடுத்துக்கொள்ளுதல். இந்த உடல் உபாத்தைக்கு இதை செய்யக்கூடாது என அறிவுறுத்தியும் அதை செய்தல் போன்றவை நோயை அதிகப்படுத்தும், உங்களுக்கே தெரியும், நமக்கு அறிகுறிகள் அதிகமானால் தான் டாக்டரிடம் போறோம், அதை அதிக படுத்துவதே நாம் தான்

அதிமுக உண்மையில் யார் கையில்?...

இந்த நீதிமன்றம் பல விசித்திர வழக்குகளை சந்தித்துள்ளது, இதுவும் அப்படி ஒன்று தான் என்ற புகழ் பெற்ற வசனத்தை யாரும் மறக்க முடியாது, நான் சொல்ல போவதும் அப்படி ஒன்று தான், ஓய்வு பெற்ற நீதிபதி ஆறுமுகசாதி தலைமையில் ஆணையம் அமைத்து விசாரிக்கப்படும் ஜெயலலிதா மரணம் தான் அந்த வழக்கு.

இது வரை நடந்த விசாரணைகளை கோர்த்து பார்த்தால் பயங்கர இடியாப்ப சிக்கலாக இருக்கிறது. ஆனால் ஒன்று மட்டும் நிச்சயம், அதிமுகவில் எவனும் யோக்கியன் இல்லை. மக்கள் அனைவரும் முட்டாள் ஆக்கப்பட்டுள்ளோம். இன்னும் அதுவே தான் நடக்கிறது, உண்மையில் அதிமுக மூன்று அணி, தினகரனை இணைத்துகொள்ள வேண்டும் அல்லது அங்கே போய் சேர வேண்டும் என்பது ஒரு அணி, பாஜகவுடன் கூட்டணி வைத்துக்கொள்ள வேண்டும் என்பது ஒரு அணி, யாரும் வேண்டும், அதிமுக என்ற பெயரை கெடுக்காமல் இருப்போம் என்பது ஒரு அணி.

இந்த மூன்று அணிக்களுக்கும் உள்ள சண்டையில் ஜெயலலிதா மரணத்தின் உண்மை காரணம் அம்பலமாக உள்ளது. இந்த ஆணையத்தின் விசாரிப்பு மே மாதத்திற்கு மேல் நீடித்தால் கண்டிப்பா ஆகும், ஒருவேளை அதன் முன் வெளியிடப்பட்டால் என்னாகும்னு உங்களுக்கே தெரியும்

ஜெயலலிதா மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட பொழுது ஒ.பி.எஸ் மூன்றாவது முறையாக முதல்வர் பதவியில் அமர்த்தப்பட்டார். ஏற்கனவே இரு முறை ஜெயலலிதாவால் பரிந்துரைக்கப்பட்டவர் என்பதால் எந்த சட்டமன்ற உறுப்பினர்களும் போர் கொடி தூக்க வில்லை, மன்னார்குடியும் வாய் திறக்கவில்லை.அம்மா நலமுடன் உள்ளார், இட்லி சாப்பிட்டார் என ஒவ்வொருவராக சொல்லிக்கொண்டிருந்த பொழுதே ஜெயலலிதாவால் ஒதுக்கி வைக்கப்பட்ட சசிகலா கணவர் நடராஜன், தினகரன், திவாகரன் அப்பல்லோவுக்குள் நுழைந்தனர், இங்கே நீங்க யோசிக்கவேண்டிய ஒரு விசயம் இருக்கிறது, அந்த சமயத்தில் ஜெயலலிதாவின் ரத்த உறவான தீவாவோ அவரது தம்பியோ அனுமதிக்கப்படவில்லை

ஜெயலலிதா இறந்ததும் அல்லது இப்பொழுது தான் இறந்தார் என சொல்லப்பட்ட பொழுது தமிழகத்தில் அரசியல் மாற்றங்கள் நிகழ்ந்தது. சசிகலா பொது செயலாளர் ஆக்கப்பட்டார். அவருக்கு முதல்வர் பதவியை விட்டுக்கொடுக்க ஓ.பி.எஸ் தன் பதவியை ராஜினாமா செய்தார், ஆனால் மத்தியில் இருப்பவர்களுக்கு சசிகலா முதல்வர் ஆவது பிடிக்கவில்லை. மேலும் சொத்துகுவிப்பு வழக்கை இறுக்கி சசிகலாவுக்கு நான்கு ஆண்டுகள் சிறை தண்டனை வாங்கி கொடுத்தனர்.

சசிகலா சிறை செல்லும் முன் தனக்கு தான் முதல்வர் பதவி என எதிர்பார்த்தார் ஓ.பி.எஸ். ஆனால் காட்சி மாற்றத்தில் செங்கோட்டையனுக்கு கூட கிடைக்காமல் அது ஈ.பி,எஸ் கைக்கு சென்றது. உள்வட்டாரத்தில் ஓ.பி.எஸ் ஜெயலலிதாவுக்கு பணிவாக இருந்துள்ளார். ஈ.பி.எஸ் ஜெயலலிதாவை விட சசிகலாவுக்கு பணிவாக இருந்துள்ளார். என்ற பேச்சுகள் உண்டுசசிகலா சிறை சென்ற பின் ஓ.பி.எஸ் தன் தர்மயுத்ததை ஆரம்பிக்கிறார். அம்மா சாவில் மர்மம் உள்ளது. அப்போதும், இப்போதும் இருக்கும் சுகாதாரதுறை அமைச்சர் விஜயபாஸ்கர் தான் முதல் குற்றவாளி  எங்கிறார். அது ஊழல் அரசு அகற்றியே ஆக வேண்டும் என பேசிக்கொண்டிருக்கும் பொழுது தான் கூவந்தூர் கூத்து நடக்குது. அங்கிருந்து மாஃபா பாண்டியராஜன் தப்பித்து வருகிறார்.

இங்கே ஒரு ப்ளாஷ்பேக், பாண்டியராஜன் ஒரு பக்கா இந்துதுவாவாதி, முன்னாள் பாஜக உறுப்பினர், அப்புறம் தான் தேமுதிக, அதிமுக என ஆடுறா ராமா கதை நடந்தது. அப்போதும் தினகரன் பிடியில் அதிமுக இருக்கவே பாஜக பன்னீர் அணியை மறைமுகமாக ஆதரிக்க ஆரம்பித்தது. அதன் பிண்ணனியில் இருந்தது குருமூர்த்தி. அந்த சமயத்தில் கே.சி.பழனிசாமி என்னும் முன்னாள் எம்.பி பொதுசெயலாளர் மொத்த கட்சியின் உறுப்பினர்களால் தேர்ந்து எடுக்கப்பட வேண்டும் என குட்டைய குழப்ப. பாஜகவை அதிமுக ஆதரிக்காது என டீவி பேட்டியில் பேசியதற்காக கட்சியை விட்டு நீக்கப்படுகிறார்

ஆர்.கே.நகர் தேர்தலை மறந்தே விட்டேன். முதல் முறை தொப்பி சின்னத்தில் தினகரனை ஆதரிக்கும் பொழுது ஓ.பி.எஸ் பதவியில் தான் இருக்கிறார். ஜெயலலிதா பிணம் போல் செட் செய்து ஓட்டெல்லாம் கேட்டார்கள். அதன் பின் தான் ஓ.பி.எஸ் ராஜினாமா செய்கிறார். பாஜக பார்வையில் ஆட்சியில் இருக்கும் ஈ.பி.எஸ் அணியையும் விட மனமில்லை, அவர்களுக்கு நிச்சயமாக ஒரு குதிரை வேண்டும். அவர்கள் தூண்டுதலால் ஈ.பி.எஸ் குழப்பத்தில் இருக்கிறார்

ஓ.பி.எஸ் தேர்தல் ஆணையத்தில் கொடுத்த வழக்கினால் இரட்டை இலை சின்னம் முடக்கப்படுகிறது. சின்னத்தை பெற தினகரன் முயற்சி செய்ய திகாரில் தள்ளப்படுகிறார். அந்த சமயத்தில் மன்னார்குடியை ஓரம் கட்ட பேரம் நடத்தப்படுகிறது. ஆக ஈ.பி,எஸ் பாஜக வலைக்குள் சிக்குகிறார். தினகரன் எம்.எல்.ஏ ஆனது.  ஒன்று சேராமல் இருந்தாலும் தினகரனை தனியே சென்று ஓ.பி.எஸ் சென்று சந்திந்தது என பல கதைகள் இருந்தாலும் நாம் ஜெயலலிதா மரணத்திற்கு வருவோம்

மன்னார்குடியை ஓரம் கட்ட வேண்டும் என முடிவெடுத்த பின் அது வரை இட்லி ஊட்டி விட்டவர்கள் மாற்றி பேசினர்., திண்டுக்கல் சீனிவாசன் பொது மேடையில் மக்களே நாங்கள் பொய் சொல்லி விட்டோம், எங்களை யாரையுமெ மன்னார்குடி பார்க்க அனுமதிக்கவில்லை என்றார். மேலும் அம்மாவை ஸ்லோபாய்சன் கொடுத்து கொன்றூ விட்டார்கள் என்றார்

அப்பவே தினகரன் சொல்லி கொண்டிருப்பார். அதிமுகவுக்குள் எங்களுக்கு ஸ்லீப்பர் செல் உள்ளது என்று. இந்த ஆணைய விசாரனையில் சுகாதாரதுறை அமைச்சர் விஜயபாஸ்கர் நாங்கள் அனைவரும் அம்மாவை பார்த்தோம், ஒரு டாக்டர் என்ற முறையில் அவர்களுக்கு ஆலோசனை வழங்கினேன் என வாக்குமூலம் கொடுத்துள்ளார். இது குறித்து ஒரு ஆலோசனை கூட்டம் நடந்ததாக முன்னாள் தலைமைசெயலர் ராம்மோகன்ரெட்டி சில ஆணவங்களை தற்போதைய தலைமை செயலர் கிரிஜா வைத்தியநாதனிடம் கொடுத்துள்ளார்

ஆனால் பொன்னையனும், விஜயபாஸ்கரும் அப்படி ஒரு ஆலோசனை கூட்டம் நடக்கவில்லை என்று ஆணையத்தில் தெரிவித்துள்ளனர்.  ஜெயலலிதாவிற்கு வைத்தியம் பார்த்த அப்பல்லோ டாக்டர் தான் பன்னிர்செல்லம் தம்பிக்கு வைத்தியம் பார்த்தது. இதுவல்லாது நாடாளுமன்ற துணை சபாநாயகர் லண்டன் டாக்டர் பீலெவை சென்று சந்திந்துள்ளார். கேட்டால் தன் உடல்நலம் குறித்து ஆலோசனை பெற எங்கிறார், ஆனால் தர்மயுத்தம் சமயத்தில் அந்த டாக்டர் மேல் எங்களுக்கு சந்தேகம் உள்ளது என்றனர் அதிமுகவினர்இதில் மொத்தமாக விழிபிதிக்கி நிற்பது பன்னிர்செல்வன் தான். அப்போதைய முதல்வருக்கு என்ன நடக்கிறது என்பது எல்லாம் தெரியும், அவரே நேரில் பார்த்தார்னு அப்போதைய சுகாதாரதுறை அமைச்சர் விஜயபாஸ்கர் சொல்கிறார். தலைமை செயலர் நேரில் பார்த்ததாகவும் ஜெயலலிதா கட்டைவிரலை தூக்கி காட்டியதாகவும் பதிவு செய்த்துள்ளார்.

இப்போ கேள்வி என்னான்னா ஜெயலலிதா மரணத்திற்கு முன் எங்களை பார்க்க அனுமதிக்க வில்லை என பாடியவர்கள் இன்று அதற்கு எதிராக நிற்கின்றனர், தர்மயுத்தம் நடத்தி மன்னார்குடியை ஓரம்கட்டிய ஓ.பி.எஸ் பெரும் சிக்கலில் இருக்கிறார். ஈ.பி.எஸ்க்கு கொடநாடு பிரச்சனை.

நிச்சயமாக ஜெயலலிதா மரணம் பெரும் சர்ச்சை வாய்ந்தது, ஆனால் அதை வைத்து அரசியல் செய்யபோவது அதிமுக அல்ல. இவர்கள் குடுமியை கையில் வைத்திருப்பவர்கள். முழுங்கவும் முடியாமல், துப்பவும் முடியாமல் அதிமுக தலைமை முழிக்கிறது. பத்தாததுக்கு எடபாடி மேல் ஊழல் குற்றசாட்டு விசாரணை வேறு நடக்கிறது.

குடுமிகள் எலக்ட்ரானிக் மிசினில் தான் கைவைப்பார்கள்னு நினைச்சேன், ஆனால் ஜெயலலிதா இறந்தபொழுது சசிகலாவை நெஞ்சில் சாய்த்து ஆறுதல் சொன்னது ஞாகபம் வந்த பொழுது புரிந்துவிட்டது. அவர்களுக்கு செக் பாயிண்ட் எதுவென்று

இதையெல்லாம் பாமர மக்களுக்கு எப்படி கொண்டு செல்வது???

!

Blog Widget by LinkWithin