அ(வல)திமுக!

யோசித்து பார்த்தால் இப்போது அல்ல. இதற்கு முன்னரே ஜெயலலிதா வசம் கட்சி இல்லை என்றோ தோன்றுகிறது. ஒழுங்கு நடவடிக்கையின் பேரில் மாவட்ட செயலாளர் நீக்கம், மீண்டும் சேர்ப்பு. அமைச்சர் நீக்கம், மீண்டும் சேர்ப்பு. நீக்கப்பட்டவருக்கே மீண்டும் தேர்தலில் சீட்டு. இந்த குழப்பத்திற்கு காரணம் ஜெயலலிதா என்ற தனிநபர் தான் என்பதை ஏற்றுக்கொள்ள முடியாது. ஆரம்பத்தில் இருந்தே பின்புலத்தில் யாரோ ஜெயலலிதாவை ஆட்டுவித்து கொண்டிருந்ததாக தான் தெரிகிறது.


சிறிதும் தகுதியற்ற சட்டமன்ற, நாடாளுமன்ற உறுப்பினர்கள். காஷ்மீர்
பிரச்சனை குறித்து பேச சொன்னால் “காஷ்மீர் பியூட்டிஃபுல் காஷ்மீர்” என பாடுகிறார் ஒரு நாடாளுமன்ற உறுப்பினர். நாடாளுமன்றத்திலே அந்த லட்சணமென்றால் சட்டமன்றத்தில் அதை விட மோசம் என்பதற்கு உதாரணம் ஜெயலலிதாவின் அனைத்து துறைகளுக்குமான 110 அறிக்கைகள்.

அறிக்கை விடுவது மட்டுமே ஜெயலலிதா, துறைக்கு கோப்பு வந்துவிட்டால் 20% கமிசன் இல்லாமல் கோப்பு நகராது என்று கட்சியில் இருந்து வெளியேறிய பழ.கருப்பையா குற்றம் சாட்டினார். அவரது குற்றசாட்டில் நியாயம் இருக்கத்தான் செய்கிறது.

தனியாரிடம் மின்சாரம் வாங்கியதில் ஊழல், புதிய டிஜிட்டல் மீட்டர் மாற்றியதில் ஊழல், புதிய எல்.இ.டி பல்புகள் மத்திய அரசு தர முன்வந்த போதும் தனியாரிடம் வாங்கியதில் ஊழல், சோலர் மின் திட்டத்திற்காக முறையற்று நிலம் கையகபடுத்தி அதை அதானிக்கு விற்றதில் ஊழல். போக்குவரத்து துறையில் ஊழல், இலவச மடிகணிணியில் ஊழல்( இந்த ஒப்பந்தம் பெற்றது பிரபல சீட்டிங் சாம்பியன் சேகர் ரெட்டியின் மகன் விகேக்) இலவச ஆடு, மாடு வாங்கியதில் ஊழல். ஆவின் ஊழல். 10000 சம்பளம் பெறும் ஒரு பியூன் வேலைக்கு 3 லிருந்து 5 லட்சம் வரை லஞ்சம். ஆக ஊழலும், லஞ்சலும் இல்லாத துறைகளே இல்லை தமிழகத்தில். ஊழல் என்றாலே அதிமுக என்றாகி இன்று அவலதிமுகவாக நிற்கின்றது.

2004 லிருந்து 2009 வரை ஆட்சியில் இருந்த காங்கிரஸ் அரசின் மேல் பெரிதாக குற்றசாட்டில்லை. மறுமுறை ஆட்சிக்கு வந்த காங்கிரஸ் ஊழல் பெருச்சாளி என பெயர் எடுத்தது. காமென்வெல் ஊழல், நிலகரி ஊழல், பெக்ட்ரம் ஊழல் என இந்தியாவெங்கும் அதிருப்தி பெற்று ஆட்சியை மதவாதிகள் கையில் கொடுத்தது. அதே போல் தான் அதிமுக இரண்டாம் முறையாக ஆட்சிக்கு வந்துள்ளது. சென்ற முறையே ஊழல் இல்லாத துறை இல்லை என பெயரெடுத்த அதிமுக இம்முறை என்ன செய்யும் என எதிர்பார்க்கிறீர்கள்.

சென்ற முறைக்கும் இந்த முறைக்கும் உள்ள வித்தியாசம். ஆட்சி பொறுப்பில் ஜெயலலிதா இல்லை. ஜெயலலிதாவின் வாய் ஜாலங்கள் இல்லை. பலகோடி ரூபாய் செலவில் நடத்தப்பட்ட சர்வதேச தொழில் முதலீட்டு மாநாடு என்றால் என்ன? அதனால் என்ன பயன்? அது எந்த நிலையில் இருக்கு என்று எந்த சாமான்யமும் கேள்வி எழுப்பப்போவதில்லை. விசன் 2023 என்றால் என்ன என்று சாமான்யனுக்கு தெரியாது. அது தான் அரசியல் கட்சிகளின் பலமே. மீண்டும் அதிமுக ஆட்சிக்கு வர காரணமே ஓட்டுக்கு துட்டு, ஜெயலலிதா என்ற தனிநபர் மேல் பெண்களுக்கு இருந்த பாசம். வேற கட்சி ஆட்சிக்கு வந்தால் டாஸ்மாக் போயிருமோ என்ற பயமே பிரதான சக்தியாக இருந்திருக்கின்றது.

எனக்கு புள்ளையா, குட்டியா. எனக்கு எல்லாமே நீங்கள் தான். உங்களை விட்டால் நான் எங்கே போவேன் என்று செண்டிமெண்டல் பாயிண்டில் ஆட்சியை பிடித்தார் ஜெயலலிதா. சசிகலாவுக்கும் குழந்தைகள் இல்லை. சசிகலாவும் ஜெயலலிதாவின் அதே டயலாக்கை சொல்லலாம். மன்னார்குடி மாஃபியாவின் அனைத்து கொட்டங்களும் மறக்கடிக்கப்படும். சசிகலா முதல்வராக கூட தேர்தெடுக்கப்படலாம்.

அப்பொழுது தைரியமாக சொல்லலாம்.
மாக்களால் நான். மாக்களுக்காக நான்!

3 வாங்கிகட்டி கொண்டது:

Unknown said...

விவேக் தமிழ் நாட்டின் முன்னாள் தலைமை ஊழல் செயலாளர் ராமமோகன்ராவின் மகன் எனத் திருத்துக.



வால்பையன் said...

நன்றி தல

Ravi said...

தியாக செம்மல், அமைதியின் மறு உருவம், நாடாளும் சிங்கம் எங்கள் புரட்சி தோழி சின்ன அம்மா சசிகலா அவர்களை ....நாங்கள் ஒரு குவாட்டர் + ஒரு பிரியாணி + 2000 ரூபாய் (புது நோட்டு தான்) வாங்கிக்கொண்டு நிரந்தர முதல்வர்-ஆக்க போகிறோம் .. ஏன் நாங்க வருங்கால பிரதமர் .. மன்னிக்கவும் .. வருங்கால நிரந்தர பிரதமர் ஆகுவோம்

!

Blog Widget by LinkWithin