பரிணாமம் - RESTART

முன்னோட்டம்-
உலகம் முழுவதும் கடவுளால் படைக்கபட்டது. அதிலுள்ள உயிரனங்கள் அனைத்தும் இப்பொழுது எப்படி உள்ளனவையோ அப்படியே கடவுளால் படைக்கபட்டது என்பதே படைப்புவாத கொள்கை. உலகில் உள்ள 99% மதங்கள் படைப்புவாத கொள்கையை நம்புகின்றன. ஆனால் சார்லஸ் டார்வினின் பரிணாம கோட்பாடு படைப்புவாதத்தை கேள்விக்கு உள்ளாக்கியது. இங்குள்ள உயிர்கள் அனைத்தும் ஒன்றிற்கு ஒன்று தொடர்பு உடையவை என்றது பரிணாம கொள்கை. மனிதன் குரங்கினத்தின் மேம்பட்ட படிநிலை என்றது பரிணாமவாதம்.

மதவாதிகளால் ஏற்றுக்கொள்ள முடியாவிட்டாலும் அமெரிக்கா, பரிணாம கோட்பாட்டை தற்பொழுது பாடதிட்டத்தில் சேர்ந்துள்ளது அறிவியலுக்கு கிடைத்த வெற்றி தான். நம் கண் முன்னே பரிணாமத்தின் பல சான்றுகள் காண கிடைக்கின்றன. ஆனால் மத அடிப்படை வாதம் அதை ஏற்றுக்கொள்ள மறுக்கின்றது. பரிணாம கொள்கையை ஏற்றுக்கொண்டால் படைப்புவாத கொள்கை பொய்யென்று ஆகிவிடும். படைப்புவாதமே இல்லையென்றால் கடவுளுக்கு வேலையில்லை என்பதால் கடவுளை காப்பாற்ற முடிந்தவரை மதவாதிகள் போராடிக்கொண்டு இருக்கின்றார்கள்.

ஏற்கனவே பரிணாமம் என்ற லேபிளில் பல பதிவுகள் சான்றுகளுடனும், அதிக பட்ச சாத்தியகூறுகளை விளக்கியும் எழுதியுள்ளேன். நீங்கள் புதிது என்றால் அதையும் ஒரு நடை பார்த்து விடுங்கள்.

*****

படைப்புவாதத்தை எதிர்த்து வைக்கும் ஒரே ஒரு கேள்விக்கு கூட மதவாதிகளால் பதில் சொல்ல முடியாது. எல்லாவற்றிக்கும் அவர்கள் பதில் அது கடவுள் விருப்பம் என்பதாக மட்டுமே இருக்கும். பூமியில் வாழும் மனிதர்கள் ஏன் ஒன்று போல் இல்லை. ஆப்பிரிக்கர்கள், சீனர்கள், ஐரோப்பியர்கள் என நம்மாள் கண்டவுடன் அடையாளம் தெரியக்கூடிய அவர்கள், கடவுளால் படைக்கபட்ட ஒரே ஒரு ஜோடியால் உருவானவர்கள் என்றால் ஏன் இத்தனை வித்தியாசம்?

பரிணாமம் என்பது இருக்கும் சூழலுக்கும், வாழும் தேவைக்கும் உயிர்களின் தகவமைப்பை இயற்கை மாற்றி அமைப்பது. எந்த உயிரும் நான் இப்படி ஆகவேண்டும், அப்படி ஆகவேண்டும் என வேண்டி விரும்பி பெற்றுக்கொள்வதில்லை இந்த வளர்ச்சியை. நீங்கள் பயன்படுத்தாத உறுப்பு நாளடைவில் காணாமல் போகும், நீங்கள் அதிகம் பயன்படுத்தும் உறுப்பு நாளடைவில் மேலும் சிறக்கும்.

பூமியில் உள்ள உயிரனங்களில் மனிதனுக்கு அதிக தொடர்பு உடையது சிம்பன்சி குரங்குகள். நமக்கும் அவற்றிக்கும் 98% மரபணு ஒற்றுமை உள்ளது.
பண்டைய அதாவது பல லட்சம் வருடங்களுக்கு முன்னால் வாழ்ந்த குரங்கு வகையில் இருந்து இடம் பெயர்ந்த குரங்கினங்கள் நாட்பட நாட்பட பரிணாம மாற்றம் கண்டன., நான் முன்னறே சொல்லியது போல் தேவைக்கு தான் இயற்கை சில மாற்றங்களை கொடுத்தது. பரிணாமம் கண்டாயம் நடந்தே ஆகவேண்டும் என்றில்லை. பல கோடி வருடங்களாக சுறா மீன் வடிவத்தில் சிறுத்துள்ளதே தவிர உருவத்தில் மாற்றமில்லை.

சிம்பன்சி வகை குரங்குகள் நமது மூதாதைருடன் நெருங்கிய தொடர்பு உடையவர்கள். நியாண்டர்தால் மனிதர்களுக்கும் அவர்களுக்கும் 99% மரபணு ஒற்றுமை இருக்கலாம் என நம்பப்படுகிறது. அதிலிருந்து பிரிந்து ஹோமோஎரக்டஸ் உருவாகினர், பின் ஹோமோ சேபியன்ஸ். ஹோமோ சேபியன்ஸ், ஹோமோ எரக்டஸ் மனிதர்களை வேட்டையாடியே கொன்று விட்டதாக ஆராய்ச்சியாளர்கள் கருதுகின்றனர். எஞ்சியிருந்த ஹோமோ சேபியன்ஸில் இருந்து பரிணாம மாற்றம் பெற்ற ஹோமோ சேபியன்ஸ் சேபியன்ஸ் தான் இன்று இந்த கட்டுரை எழுதிக்கொண்டிருக்கும் வால்பையன் என்ற மனிதன். படித்துக்கொண்டிருக்கும் நீங்களும் தான்.
ஆப்ரிக்காவின் நடுப்பகுதியில் தற்பொழுது ஓடிக்கொண்டிருக்கும் காங்கோ ஆறு. நைல் நதிக்கு அடுத்த படியாக இரண்டாவது இடத்தில் ஆப்ரிக்கா செளுமைக்கு உதவுகின்றது.  இன்று குறுக்காக பாயும் ஆறு இருந்த பகுதியில் சில ஆயிரம் ஆண்டுகளுக்கு முன் பெரிய ஏரி ஒன்று இருந்துள்ளது(அதற்கான படிமங்கள் கிடைத்துள்ளன). அந்த காலகட்டத்தில் சிம்பன்சி வகை குரங்குகள் அந்த ஏரியை சுற்றிலும் வாழ்ந்து வந்தன. பூமியின் தட்பவெட்ப மாறுதலின் போது அந்த ஏரி வற்றிப்போனது மட்டுமல்லாமல் அதற்கு தண்ணிர் கொண்டு வரும் ஆற்றின் தொடர்ச்சியாக மட்டும் மாறியது, அப்படி உருவானதே காங்கோ ஆறு.

பெரிய காட்டாறாக உருவெடுத்தபோது காங்கோ பகுதியே இரண்டு துண்டுகளாக பிரிந்தது போல் ஆனது. அங்கே வாழ்ந்த உயிரனங்கள் இரு பகுதிகளில் பிரிக்கபட்டது, அவ்வாறு பிரிந்த உயிரனங்களில் அங்கே வாழ்ந்த சிம்பன்சி வகை குரங்குகளும் உண்டு.1925 சமயங்களில் டார்வினிசம் வேகமாக பரவி உடல்கூறுயிலாளர் என புது ஆராய்ச்சியாளர்கள் பெருகினர். அதில் ஜெர்மனை சேர்ந்த Edward Tratz மற்றும்  Heinz Heck என்ற இருவர் காங்கோ ஆற்றின் வடக்கு பகுதியில் வாழ்ந்த குரங்கினங்களை ஆராய்ச்சி செய்து வந்தனர். அப்பொழுது அவர்கள் சிம்பன்சி என நம்பிக்கொண்டிருந்த குரங்கு வகையில் சில வித்தியாசங்களை கண்டனர். மேலும் அந்த பகுதியில் வாழ்ந்த மக்கள் அந்த குரங்குகளை பொனோபோ குரங்கு என அழைந்தனர். அந்த பகுதியின் பெயரான பொலோபோ என்ற பெயர் மருவி குரங்குக்கு இந்த பெயர் வந்துருக்கலாம் என ஆராய்ச்சியாளர்கள் அறிந்தனர்.

பொனோபோ சிம்பன்சிக்கும், காமன்(common)சிம்பன்சிக்கும் மரபணு 99.99% ஒத்துபோனாலும் அவை தோற்றத்தில் வித்தியாசபட்டு இருந்தன. பொனோபோ குரங்கள் சிம்பன்சியை விட உருவத்தில் சிறியவை. சிறிய தலைபகுதியும், லேசான புருவமேடும் கொண்டவை. பொனோபோ பெண் குரங்களுக்கு சிம்பன்சி போல் இல்லாமல் சிம்பன்சி பெண் குரங்குகளை விட பெரிய மார்பகங்கள்(முலைகள்) இருந்தன.  சிம்பன்சிகளை விட அதிக நேரம் இரு கால்கள் மட்டுமே நிற்க கூடிய ஆற்றல் பெற்றுள்ளது.


குடும்ப அமைப்புகளில் சிம்பன்சிகளை விட வன்முறையை குறைவாக கையாளும், கோவமாக இருக்கும் ஆண் குரங்கை பெண் குரங்குகள் தாமக அணுகி அதனுடன் உடலுறவில் ஈடுபட்ட கூட்டத்தை அமைதியடைய செய்யும். ஒவ்வொரு குரங்கும் தனித்த முகசாடை கொண்டவையாகவும் இருந்தன. அமர்ந்திருக்கும் பொழுது சிம்பன்சிகளை விட இவைகள் மனிதனையே அதிகம் ஞாபகபடுத்தும் வகையில் இருக்கும்.

காங்கோ ஆற்றின் மறுகரையில் வாழும் சிம்பன்சிகள் இதற்கு அப்படியே நேர் எதிர். வன்முறை மிகுந்திருக்கும். கூட்டத்தில் உள்ள குரங்குகளையே கொல்லும். உருவ அமைப்பும் வித்தியாசமானது. சின்பன்சி வகைகள் ஆண் ஆதிக்கம் கொண்டது. நேர்மாறாக பொனோபோ வகை குரங்குகள் பெண் ஆதிக்கம் கொண்டது.

சின்பன்சிகளை விட உடலுறவில் அதிக நாட்டம் கொண்டவை பொனோபோ வகைகள். மனிதனை போல் முகம் பார்த்து உறவு கொள்ளுதல். வாய்வழி பாலறவு போன்ற விளையாட்டுகள் என அவற்றின் வாழ்க்கை பெரும்பகுதி உடலுறவில் கழிக்கின்றது. புதிதாக உணவு இருக்கும் பகுதியை கண்டாலும் முதலில் உடலுறவில் ஈடுபட்டு பின் ஆற அமர உணவை சாப்பிடுவதை அறிந்தனர். பொனோபோ வகை குரங்குகள் 5 வருடங்கள் ஒரு குட்டியை வளர்ப்பது வரை அடுத்த குட்டியை ஈனுவதில்லை. பால் கொடுக்கவில்லை என்றாலும்.அறிவில் சிம்பன்சியை விட மேம்பட்டவை. தன் முகத்தை முக கண்ணாடியில் அறியும் திறன் பெற்றுள்ளது. மற்ற குரங்குகளை அடையாளம் காணவும். தங்களுக்குள் சில ஒலிகளை எழுப்பி தகவல் தொடர்பு கொள்கின்றது. சோதனையில் 3000 வகையான கை சமிஞ்சைகளை கற்றுகொண்டு அவற்றை வரைகணித குறியீடுகளாக அடையாளம் அறியும் திறன் இருந்தது.

காங்கோ ஆற்றின்  பகுதியில் மட்டுமே வாழும் பொனொபோ குரங்கு வகை தற்பொழுது 10000 மட்டுமே இருக்கலாம் என ஆராய்ச்சியாளர்கள் கருதுகின்றனர். உள்நாட்டு போரின் காரணமாக காட்டுக்குள் பதுங்கிய போராட்டகாரர்கள் உணவுக்காக பெருமளவு அழித்துவிட்டதாக தெரிகிறது

பொனொபோ வகை குரங்குகள் மனிதனின் அடுத்த கீழ் படிநிலையில் இருப்பதாக ஆராய்ச்சியாளர்கள் கருதுகின்றனர். மற்ற உயிரனங்கள் இனபெருக்கத்திற்காக மட்டுமே உடலுறவு கொள்ளும், மனிதம் மட்டுமே அதை ஒரு சந்தோச பகிர்வாக பயன்படுத்தி வருகிறான். இதே பழக்கம் பொனோபோ வகைகளில் காணபடுகின்றன. சிம்பன்சியை விட அறிவில் மேம்பட்டவைகளாக உள்ளன. அவற்றை காக்க பொனோபோ அமைதி காடுகள் திட்டம் என்று ஒன்றை உருவாக்கி. பல அமைப்பின் நிதி உதவியுடன் இந்த குரங்கு வகைகளை பாதுகாத்து வருகின்றனர்.

ஒரே கண்டத்தில் ஒரு ஆற்றின் ஒரு கரையில் பிரிந்த குரங்குகளின் உடல் அமைப்பு, வாழும் தகவமைப்பு அனைத்தும் மாறியுள்ளன. இவை ஏற்பட பல ஆயிரம் வருடங்கள் பிடித்திருக்கும் என்கிறார்கள் ஆராய்ச்சியாளர்கள். தொடர் ஆராய்ச்சி மூலம் பரிணாமம் 100% உண்மை என்பதை மக்களுக்கு நிரூப்பிக்க முடியும் என நம்புகின்றனர்.

-இனி தொடரும்

!

Blog Widget by LinkWithin