முதல் விமான பயணம் என்பது, முதன்முதல் பள்ளி செல்வது போலவும், வேலைக்கு செல்வது போலவும், பெண்பார்க்க செல்வது போலவும் ஆச்சர்யங்களும்,மகிழ்ச்சியும் கலந்த கலவையாக இருக்கும். அந்த அனுபவத்தை நாளை(01.04.09) அனுபவிக்க போவது நண்பர் ரெளத்ரன். முதம் முதலாக விமானத்தில் டெல்லி செல்கிறார். படத்தில் இருப்பது போல் உலகம் முழுதும் சுற்ற அவருக்கு வாழ்த்துக்கள்

மற்றொரு விசயம் விமானத்தில் போய் வந்தால் மட்டும் பத்தாது! அதை எப்படியாவது இந்த உலகிற்கு நாமே எடுத்து சொல்ல வேண்டும். அது எப்படி என்று சில டிப்ஸ்!
1.பெட்டியில் ஒட்ட வைத்திருக்கும் ”டேக்கு”களை குறைந்தது ஆறு மாததிற்கு கிழிக்க கூடாது!
2.விமான டிக்கெட் எப்போதும் பாக்கெட்டில் இருப்பது நலம். விசிட்டிங் கார்டு எடுக்கும் போது கூடவே எடுத்து டெல்லி சென்றேனே, அந்த டிக்கெட் என்று ப்ளீம் காட்ட உதவும்.
3.விமானத்தில் ஏறும் முன்னரே நண்பர்களுக்கு போன் செய்து டெல்லியில் யாராவது நண்பர்கள் இருக்கிறார்களா? அங்கே தான் செல்கிறேன் என்று போன் செய்ய வேண்டும்.
(யாரும் இல்லாத நண்பர்களாக அழைப்பது நலம், இல்லையென்றால் அங்கே போய் ஸ்வெட்டர் வாங்கிவர வேண்டியிருக்கும்)
4.சென்று இறங்கியவுடன் அழைப்பது இன்னும் நலம். மச்சான் ரூம் பூட்டினேனா இல்லையான்னு தெரியலை கொஞ்சம் போய் பாரேண்டா என்று அன்பு கட்டளை இடலாம்! அப்படியே தான் டெல்லியில் இருப்பதாகவும் ஞாயிறு 8 மணிக்கு ப்ளைட் என்ற பிட்டையும் சேர்த்து போடலாம்.
(நண்பர்களிடன் அவரே பகிர்ந்து கொள்வார்)
5.திரும்பி வந்த பிறகும் டெல்லி புராணம் பாடுவது மேலும் சிறப்பு
(அப்துல்லா சிங்கப்பூர் புராணம் பாடுறாரே அது மாதிரி). அங்கே குளிர் அப்படி. ரோடு பெருசு, பானிபூரி சிறுசுன்னு கண்ணுல பாக்குற எல்லாத்தையும் ஒப்பிடனும்.
6.நண்பர்களுடன் அரட்டை அடிக்கும் போது அவர்கள் எந்த சப்ஜெக்டை எடுத்தாலும் அப்படியே பிடிச்சி கொண்டு போகனும். இப்படி தாண்டா மச்சான் ப்ளைட்ல போகும் போது ஒரு பிகர் சரக்கு வேணுமான்னு கேட்டா நானும் இருக்குட்டுமேன்னு வாங்கிட்டேன், ”தேவாமிர்தமடா” என்று புகழ வேண்டும்.(முக்கியம்=நீங்கள் பினாயிலை குடித்திருந்தாலும் தேவாமிர்தம் என்று தான் சொல்லவேண்டும்)
7.சோகத்தில் இருக்கும் நண்பனிடம் தத்துவம் பேசும்போது கூட ”என்னடா உலகம்”, நான் ப்ளைட்ல போகும் போது பார்க்கிறேன் ”இந்தியாவே கைக்குள்ள அடிக்கிறுச்சு” என்று புருடா விடணும்.
8.யாருடனாவது பேசி கொண்டிருக்கும் போது வானத்தில் விமானம் பறந்தால், அது ஏர்டெக்கான், கிங் பிஷ்ஷர் என்று வாய்க்கு வந்த பெயரை எடுத்து விடலாம். செல்லும் திசையை வைத்து ஆஸ்திரேலியா போகுது, அமெரிக்கா போகுது என்பது, ”கூடுதல் பிட்டி”ல் சேரும்.
இந்த மாதிரி ப்ளீம் காட்டினால் இங்கே மட்டுமல்ல! எல்லா இடங்களிலும் உதை வாங்க வாய்ப்புண்டு!