என் பொழப்பு இது தான்!

Friday, November 20, 2009

கோள்களும் மோதல்களும்!

நாம் மில்கிவே என்னும் கேலக்ஸியில் ஓரத்தில் சிறு புள்ளியாக தெரியும் சூரிய குடும்பத்தில் உள்ள மூன்றாம் கோளான பூமியில் வசிக்கிறோம், இந்த பிரபஞ்சம் உருவாகி பல கோடி கோடி ஆண்டுகள் ஆனாலும் பூமியில் உயிர்கள் உருவாக காரணமாக இருந்த சம்பவம் நடந்து 450 திலிருந்து 500 கோடி வருடங்கள் ஆகியிருக்கலாம் என கணிக்கப்பட்டுள்ளது, அது எவ்வாறு நடந்திருக்கலாம் என தமிழில் ஆராயலாம்!




கோள்களில் விண்கற்கள் அல்லது வால் நட்சத்திரங்களின் மோதல் மிக ஆபத்தானது என்றாலும் சில சமயங்களில் அதுவே நன்மையில் கூட முடியக்கூடும், 450 கோடி ஆண்டுகளுக்கு முன்னால் எரிமலைகள் நிரம்பி என்னேரமும் தங்கம் போல் முன்னி கொண்டே இருந்தது தான் இந்த பூமி, அதன் மீது ஒரு விண்கல் அல்லது வால்நட்சத்திரத்தின் மோதல் அதன் மீது பெரும் மாற்றத்தை ஏற்ப்படுத்தியது, முதலாவதாக சொல்ல வேண்டுமென்றால் பூமியின் பருவநிலை மாற்றத்திற்கு மிக முக்கிய காரணமாக இருக்கும் 23.5% சாய்வு கோணம் அதனால் தான் ஏற்பட்டது.




பூமியின் மேல் ஏற்பட்ட மோதலில் நம்மில் இருந்து பிரிந்து சென்றது அல்லது நம் மீது மோதிய கல்லும் கூடவே பூமியில் இருந்து பிய்த்து செல்லப்பட்ட தனிமங்களும் சேர்ந்தது தான் நிலா!, பசிபிக் பெருங்கடலில் உள்ள ஆழமான பகுதியில் நிலவை பொருத்தினால் அது சரியாக பொருந்தி கொள்ளும் அளவே உள்ளது!, நிலவு நம்மில் இருந்து வருடத்திற்கு ஒண்ணரை கிலோமீட்டர் விலகி செல்கிறது, நம் ஈர்ப்பு விசையின் எல்லையை அது கடக்கும் போது, தனி கோளாக மாறி பூமியை சுற்றாமல் சூரியனை சுற்றலாம், அல்லது செவ்வாயில் மோதி சுக்கல் சுக்கலாக உடையலாம்!




பூமியை சுற்றி கொண்டிருக்கும் நிலா தீடிரென்று பாதை மாறும் போது அதனால் சீரான பாதையை பெற முடியாது, ஒவ்வொரு பனிரெண்டாயிரமாவது சுற்றுக்கும் ஒருமுறை அது பூமியின் சுற்று பாதையை தொட்டு செல்லும், அப்போது அது பூமியின் மீதே மோதலாம், இதெல்லாம் நடக்கமூடிய சாத்தியங்கள் 40 லட்சம் வருடங்களுக்கு பின் இருப்பதால் இப்பொழுது கவலைப்பட வேண்டியதில்லை!,



பூமிக்கு அடுத்த கோளாக இருக்கும் செவ்வாய் 700 கோடி வருடங்களுக்கு முன் இப்போதிருக்கும் அளவை விட இரண்டு மடங்கு இருந்தது, அதன் மீது மோதியது நிச்சயமாக ஒரு பெரிய விண்கல்லாக தான் இருக்கும் அல்லது வியாழன் கிரக்கத்தில் இருந்த துணை கோள் ஒன்று முன் கூறிய நிலவின் கதையைப்போல் அதன் சுற்று பாதையில் இருந்து பிரிந்து செவ்வாயின் மீது மோதியிருக்கலாம், அதன் பெரும் மோதல் அதனுடய சாய்வு கோணத்தையும் மாற்றிவிட்டது, பூமியை போலவே அதுவும் 24.5% சாய்வான கோணத்தில்  சுற்றி கொண்டிருக்கிறது, அதனுடன் மோதிய கோள் ஒன்று சேர முடியாமல் தன் உட்கருவை இழந்து சிறு சிறு கற்களாக ”அஸ்ட்ராய்டு பெல்ட்” என்ற பெயரில் செவ்வாய்க்கும் வியாழனுக்கும் இடையில் சுற்றி கொண்டிருக்கிறது.



அஸ்ட்ராய்டு பெல்டில் ஆயிரக்கணக்கான கற்கள் இருக்கின்றன, சிறுகற்கள் என்று சொன்னேனே தவிர சில கற்கள் நுறு கிலோமீட்டர் சுற்றளவு கொண்டவை, செவ்வாய்க்கும், வியாழனுக்கும் உள்ள தூரம் மிக அதிகமென்பதால் அது வேறு கோள்களை அணுகி சுற்றாமல் தனியாக ஒரு வளையம் போல் சூறியனை சுற்றி வருகிறது, இதே போன்ற ஒரு வளையத்தை நாம் சனி கிரகத்தை சுற்றியும் பார்க்கலாம், அதுவும் மோதலில் ஒன்று சேர முடியாமல் தனி தனி கற்களாக சனிகிரகத்தை  சுற்றி வருகிறது, வியாழன் தான் சூரிய குடும்பத்தில் பெரிய கோள் என்பதால் அது பல சிறு கோள்களை இழுத்து சூரிய குடும்பத்தில் பல துணைகோள் கொண்ட பெரிய கிரகமாக சுற்றி வருகிறது.




1994 ஆம் வருடம் சூமேக்கர் என்பவரும் லெவி என்பரும் புதிதாக ஒரு வால் நட்சத்திரத்தை வானில் கண்டனர், அதற்கு முன் அந்த வால் நட்சத்திரத்தை பற்றி எந்த ஒரு குறிப்பும் இல்லை, அதனுடய சுற்று பாதை ஆச்சர்யபடும் வகையில் வியாழன் கிரகத்துக்கு அருகில் இருந்தது, அந்த வால் நட்சத்திரம் வியாழன் கிரகத்தால் ஈர்க்கப்பட்டு 21 துண்டுகளாக உடைந்து வியாழன் கிரகம் நோக்கி ஒரு ரயில் வண்டி பெட்டியை போல் அசுர வேகத்தில் சென்றது, வியாழன் கிரகத்தின் காற்று மண்டலத்தை அடைந்த போது அவற்றில் தீ பற்றி வரிசையாக ஒரு தோரணம் போல் சென்றதாக விஞ்ஞானிகள் சொல்கிறார்கள்.




அதற்கு முன் எந்த கோளிலும் இவ்வளவு பெரிய மோதலை பூமியில் வசிக்கும் மக்கள் கண்டிராதபடியால் அதன் விளைவுகள் எவ்வாறு இருக்கும் என யாராலும் கணிக்க முடியவில்லை, அந்த மோதலுக்கு பின் வியாழன் கிரகம் பெரிய தீப்பிழம்பாகி சூரிய குடும்பத்தில் இரண்டு சூரியன்கள் போல் காட்சியளிக்கலாம் என சில விஞ்ஞானிகள் கருத்து தெரிவித்தனர் ஆனால் ஆச்சர்யப்படதக்க வகையில் சூரிய குடும்பத்தின் பெரும் கோளான வியாழன் அதை ஒரு பெரிய பூகம்பம் போல் தன்னகத்தே ஏற்று கொண்டது, அதன் பின் அதிலிருந்து கிளம்பிய புகையில் நடுமையத்தில் இருந்த ஓட்டை மட்டும் பூமியை விட பெரிதாக இருந்ததாம், அப்போது ஏற்பட்ட புகை மண்டலம் மட்டும் ஆயிரம் கிலோமீட்டருக்கும் மேலே உயர்ந்து இன்று வரை அப்பகுதியை மறைத்து இருப்பதாக ஆராய்ச்சியாளர்கள் சொல்கிறார்கள்.




கோள்களின் மோதலில் மிக விசித்திரமான விளைவை பெற்றது யுரேனஸ் கோள் மட்டுமே, பூமியும், செவ்வாயும் தன் அச்சிலிருந்து 23.5% சாய்ந்திருப்பது போல் யுரேனஸ் கிரகம் 90% சாய்ந்திருக்கிறது, காட்சியமைப்பாக சொல்ல வேண்டுமென்றால் பூமியும், செவ்வாயும் சற்றே சாய்ந்த நிலையில் சுற்றும் பம்பரம் ஆனால் யுரேனஸ் கிட்டதட்ட உருளையின் அச்சில் சுற்றுகிறது தன்னை தானே!, அதற்கு காரணம் அதன் மீது மோதிய மாபெரும் விண்கல்லே!, விண்கற்களினால் சூரிய குடும்பத்தில் பெரும் மாற்றத்தை சந்தித்தது யுரேனஸ் மட்டுமே

*******

இந்த பிரபஞ்சம் பல ஆச்சர்யங்கள் நிரம்பியது தொடர்ந்து உரையாடுவோம்!

Tuesday, November 17, 2009

Five "Q"

உலகத்திலேயே ரொம்ப ஈஸி கேள்வி கேக்குறது தான்னு ஒரு படத்துல கமல் சொல்லுவாரு, அதை தான் நானும் இப்போ சொல்லப்போறேன்!, Five Q என்பது "ஐந்து கேள்விகள்" என்ற தத்துவத்தை சொல்லுது, மேலாண்மையில் இது அடுத்த கட்ட வளர்ச்சின்னு கூட சொல்லலாம்!, நொய்யு நொய்யுன்னு கேள்வி கேட்டா யார்யா பதில் சொல்லப்போறான்னு நினைக்காதிங்க, பல பெரிய பிரச்சனைகளின் ஆதாரம் ஒரு சிறு முடிச்சா தான் இருக்கும், அந்த முடிச்சை கண்டுபிடிச்சிட்டா அந்த பெரிய பிரச்சனை உடனே தீர்ந்து விடும்!

உதாரணமா ஒரு கம்பெனிக்கு நாம அனுப்ப வேண்டிய பொருள் போய் சேரலை, நீங்க ஒரு மேலதிகாரி, உங்களுக்கு கீழே இருக்குறவர்கிட்ட விசாரிக்கிறிங்க!

ஏன் பொருள் போகல!?

முக்கியமான ஒரு பொருள் இன்னும் தயாராகலை

ஏன் தயாராகலை?

அதற்கு உண்டான ரா மெட்டீரியல் வந்து சேரல

ஏன் வரல?

அதற்கான பணம் நாம இன்னும் கொடுக்கல

ஏன் பணம் கொடுக்கல?

நமக்கு வர வேண்டிய அவுட் ஸ்டேண்டிங் இன்னும் வந்து சேரல

அதை ஏன் பாலோ பண்ணல?

இதுல ஐந்தாவது கேள்வியோடு முதல் பிரச்சனை முடிந்தாலும், அவ்விடத்தில் இன்னொரு பிரச்சனை ஆரம்பிக்குது, அதன் பின் மீண்டும் ஐந்து கேள்விகள் தான், நமக்கு கீழ இருக்குறவங்க ஒழுங்கா வேலை செய்யுறாங்களான்னு பார்க்க வேண்டியது தானே ஒவ்வோரு மேலதிகாரின் கடமை, அதற்காக ஐந்து கேள்விகள் கூட கேட்க முடியலைனா எப்படி?

இன்னோரு விசயம், இந்த தத்துவம் பெரும் இயந்திர உற்பத்தியகங்களுக்கு மட்டும் பயன்தரும்னு இல்ல, சாதாரண பெட்டிகடைக்கும் பொருந்தும், வீட்டிற்கும் பொருந்தும், சும்மா ஒரு தடவை முயற்சி செஞ்சு பாருங்களேன்!

***************




வேலையை சுலபமாக்குதல் அல்லது இலகுவாக்குதல், ”வொர்க் சிம்பிலிஃபை”ன்னு நானே சொல்லிகுவேன்!, ஒரு வேலையை முத தடவை பத்து நாள்ல செஞ்சு முடிச்சோம்னா அடுத்த தடவை எட்டு நாள்ல வேலை முடிய என்ன செய்யனும்னு பார்க்கனும், சின்ன சின்ன வேலைகள் மூலமா இதை சாத்தியமாக்க முடியும்,

அடிப்படையில் இந்த தத்துவத்துக்கு ரொம்ப முக்கியம் முதல் தடவை செஞ்ச தப்பை மறுபடி செய்யக்கூடாது, அதனால நாம இல்லாட்டியும் அடுத்தவங்க அதை செய்யாம இருக்க அதை குறிச்சு வைக்கனும், வேலை செய்யாத சுவிட்சுகள் மேல ”டூ நாட் டச்சு”ன்னு கூட எழுதி வைக்கலாம், எந்தந்த பொருள்களில் என்னன்ன பிரச்சனைன்னு எல்லோருக்கும் தெரியிற மாதிரி குறிப்பு வைக்கிறது ரொம்ப முக்கியம்!

அடுத்து எடுத்த பொருளை எடுத்த இடத்தில் திரும்பவும் மறக்காம வைக்கிறது, இதுனால மணி கணக்குல கூட வேலை நிற்கலாம், அதனால ஒவ்வோரு பொருளுக்கும் இது தான் இடம்னு முன்கூட்டியே பிக்ஸ் பண்ணி வச்சிகனும்.

கடைசியா டைம் மேனேஜ்மெண்ட், மேலே உள்ளதெல்லாம் ஒழுங்கா இருந்தா தான் இது சரியா இருக்கும், அதே நேரம் ஒரு வேலை தடை பட்டுச்சுன்னா அதோட தொடர்புடய இன்னோரு வேலையை பார்ப்பது மூலம் இதை சரி செய்யலாம், அனைத்திற்கும் முன்னாள் நாம் செய்ய பத்துநாள் அனுபவம் கைக்கொடுக்கும்!


டிஸ்கி: நாங்க துறை சார்ந்த மொக்கைகளும் போடுவோம்ல!

Wednesday, November 11, 2009

குவியல்!..(11.11.09)

நாளையோட நான் பதிவெழுத வந்து இரண்டு வருடம் ஆகிறது!
இது எனது முதல் பதிவான அறிமுகப்பதிவு! அதன் பின் ஒரு வருடங்கள் தொடர்ச்சியான மரணமொக்கைகள் தான், இப்ப தான் கொஞ்சம் நானே திரும்ப படிக்கிற மாதிரி இருக்கு! எல்லாத்துக்கும் நீங்க தான் காரணம், உங்களது உளியே என்னை செதுக்கியது!
நன்றி நன்றி நன்றி!

பதிவரும் நண்பரும் ஆகிய ரோமியோபாய் அவர்களுக்கு இன்று ஆண்குழந்தை பிறந்திருக்கிறது!, நண்பர் முதல் நாளே எங்களை சந்தித்து சென்று விட்டதால் ட்ரீட் வாங்க முடியவில்லை, சென்னைக்கு வந்ததும் என் பங்கு ட்ரீட்டையும் நண்பர்கள் கேட்டு வாங்கி கொள்ளவும்!

***

இந்த முறை பெய்த பருவமழை வரலாறு காணாத கன மழையெல்லாம் கிடையாது, ஆனால் ஊட்டியில் இருப்பவர்களுக்கு வரலாற்றிற்கும் மறக்க முடியாமல் செய்து விட்டது, கனத்த மணல் அரிப்பிற்கு காரணம் மலை பிரதேசங்களில் இருக்க வேண்டிய போதுமான மரங்கள் இல்லாததே, மரத்தின் வேர்கள் மண்ணை இறுகபற்றி மண்ணரிப்பு ஏற்ப்படாமல் செய்திருக்கும்!, நீங்கள் நாட்டுக்கு எதாவது செய்ய விரும்பினால், எல்லையில் சென்று போரிட்டோ, குடுவைகள் வரிசையாக வைத்து ஆராய்ச்சி செய்தோ தான் நன்மை செய்ய முடியும் என்று அவசியமில்லை, தயவுசெய்து ஒரு மரமாவது நடுங்கள்!


**

வரும் 27 ஆம் தேதி ஈரோடில் ஒரு பதிவர் சந்திப்பு நடத்தலாம் என ஒரு சின்ன நப்பாசை, நண்பரும் பதிவருமான லவ்டேல் மேடியின்(பின்”மண்டை”த்துவ வாதி) திருமணம் ஈரோட்டில் நடக்கிறது, நண்பர்களுக்கு அழைப்பும் விடுத்திருக்கிறார், ஈரோட்டில் ஆங்காங்கே ஒளிந்திருக்கும் பதிவர்கள் நண்பர்கள் முக்காட்டை விலக்கி கொஞ்சம் முகம் காட்டினால் தன்யனாவேன்!

**

"தோஸ்தானா" என்ற ஹிந்திப்படம்(ராஜ் தாக்குரே வந்து தாக்கிறப்போறார்) சமீபத்தில் பார்த்ததில் உலக மொழி படங்கள் அளவுக்கு அசர வைத்தது!, சாதாரண நடிகர்களே நடிக்கத் தயங்கும் வேடம் ஜான் ஆபிரகாமும், அபிஷேக் பச்சனும் ஏற்று நடித்திருக்கிறார்கள், ஹிந்தி தெரியாமலேயே சிரித்து கொண்டே பார்த்தேன் என்றால் பாருங்களேன், ஜானும், பச்சனும் தங்குவதற்கு வீடு கிடைக்காமல் வேறு வழியின்றி ஓரிடத்தில் தாங்கள் ஓரினசேர்க்கை பிரியர்கள் என பொய் சொல்லி வீட்டில் நுழையும் காட்சியிலிருந்து நமக்கு சிரிப்பு ஆரம்பிக்கிறது, பின் கடைசி காட்சி வரை சிரிப்பு தான்!



பிரியங்கா சோப்ரா சிறந்த நடிகையாக தேர்வு செய்யப்பட அனைத்து தகுதிகளும் உடையவர், அப்படியொரு நடிப்பு, பிரியங்கா தனது முதலாளியான பாபி தியோலை காதலிக்க, பிரியங்காவை காதலிக்கும், ஜானும், பச்சனும் அதை கெடுக்க பாபி தியோலுக்கு கேனத்தனமான ஐடியா கொடுத்து பிரியங்கா முன் அசடு வழிய வைக்க, இறுதியில் ஜானும், பச்சனும், பாபி தியோலை காதலிக்கிறார்கள் என பிரியங்கா நினைக்க, நினைக்கும் போதே சிரிப்பு வருதுல்ல, படம் பாருங்க நான் ஸ்டாப் காமெடி கேரண்டி!

**
அகநாழிகையின் ஒரு கவிதைக்கு நான் இட்ட பின்னூட்டம், கொஞ்சம் மாற்றம் செய்து!

எடை நிறைந்த சொற்கள்
புரிதலை தரவில்லை!
ஒவ்வோரு வரிகளுகிடையிலும்
தொடர்பற்று போனவனாய்
இருக்கிறேன்
மழுங்கி போன மூளையோ,
ஏன் புரியனும் என்ற
மமதையோ காரணமாக
இருக்கலாம் ஆயினும்
எனக்கும் கவிதைக்குமான
உறவு இறுதியற்றது!

Monday, November 9, 2009

எப்படியெல்லாம் வைக்கிறாங்கய்யா டிஸ்கி!..

சாதாரணமாக பதிவுகளிலில் டிஸ்கி என்ற வார்த்தையை பார்த்திருப்போம், disclaimer என்ற வார்த்தையின் சுருக்கம் தான் டிஸ்கி, அதில் கூட என்னன்ன ஏடாகூடாங்கள் செய்யலாம் என யோசித்ததில் வந்தது, நண்பர்களுக்கு தெரிவதை பின்னூட்டத்தில் சொல்லலாம்!

***

டிஸ்கி:
மேற்கண்ட கதையில் வரும் சம்பவங்கள் அனைத்தும் கற்பனையே, ஆனால் யாருடய கற்பனைன்னு தான் தெரியாது!


டிஸ்கி:
மேற்கண்ட கதையில் வரும் சம்பவங்கள் அனைத்தும் உண்மை, ஆனா இன்னும் நடக்கவில்லை!


டிஸ்கி:
மேற்கண்ட விமர்சனத்தை சம்பந்தபட்டவர் படிக்க நேர்ந்தால் தயவுசெய்து இதை புனைவாக எடுத்துக்கொள்ளவும்


டிஸ்கி:
மேற்கண்ட கட்டுரை யாரையும் புண் படுத்தும் நோக்கில் எழுதப்பட்டதல்ல, அப்படி யாரும் புண்பட்டிருந்தால் கம்பெனி மருந்து வாங்கிதராது!


டிஸ்கி:
தயவுசெய்து யாரும் கதையில் வரும் நாயகன்(நாயகி) கதாபாத்திரத்தோடு உங்களை உருவகப்படுத்தாதீர்கள், கதையில் வரும் நாயகி(நாயகன்) தற்கொலை செய்து கொள்ளக்கூடும்!


டிஸ்கி:
மேற்கண்ட கவிதை, கவிதை இல்லை எனும் பட்சத்தில், அதை எழுதியது நானில்லை என கொள்க!


டிஸ்கி:
இந்த அரசியல் விமர்சனகட்டுரை எழுதிய பதிவர் வெளிநாடு சுற்றிலாவில் இருப்பதால், சம்பந்தபட்டவர்கள் ஆட்டோ அனுப்பி ஏமாற வேண்டாம் என கேட்டுகொள்ளப்படுகிறார்கள்!


டிஸ்கி:
இது நகைச்சுவை பதிவு, படித்தும் சிரிப்பு வராத பட்சத்தில் சிரிப்பொலி சேனல் பார்த்துவிட்டு பின்னூட்டம் போடவும்!(விளைவுகளுக்கு கம்பெனி பொறுபல்ல)


டிஸ்கி:
இந்த ஆராய்ச்சி கட்டுரையை படிக்கும் போது யாரும் சோதனை குடுவைகள் அருகில் வைத்து கொள்ளவேண்டும் என்பது அவசியமல்ல!


டிஸ்கி:
இந்த கட்டுரை, படிக்க தெரிந்தவர்களுக்கு மட்டும், மற்றவர்கள் படிக்க வேண்டாம்!



டிஸ்கி:
இங்கிருக்கும் டிஸ்கியை யாரேனும் பயன்படுத்தினால், இது வால்பையன் பதிவுலுள்ள டிஸ்கியென்று டிஸ்கி போட வேண்டும்!


டிஸ்கி:
கும்மி ஸ்டார்ட்!


!

Blog Widget by LinkWithin