தமிழக அரசியல்!

இன்னும் சில மாதங்களில் உள்ளாட்சி தேர்தல் வர இருக்கிறது. ஜெயலலிதாவின் மரணம் தமிழக அரசியலுக்கு ஏற்படுத்தியுள்ள சாதக, பாதகங்களை அலசலாம்.

உள்ளாட்சி தேர்தலை பொறுத்தவரை கட்சி பெயர், சின்னம் தவிர்த்து நிற்பவர் நெருக்கமானவரா என்ற பார்வை உண்டு. அந்த அடிமட்ட நிர்வாகி தான் கட்சியின் கொள்கைகளை மக்களுக்கு சொல்லி மேல் மட்ட அரசியல் வரை கொண்டு செல்வது. அதே போல் உள்ளாட்சி தேர்தலில் கட்சிகள் காட்டும் மெத்தன போக்கு மேல்மட்ட அரசியல் வரை பாதிக்கும்.

அரசியல் கட்சிகளில் விதிவிலக்கில்லாமல் அனைவரும் பயன்படுத்துவது எதிர்ப்பு அரசியல்/ அதை ஆட்சி பொறுப்பில் இல்லாதவர்கள் செய்வதில் கூட ஒரு நியாயம் இருக்கும். ஆட்சியில் இருப்பவர்களும் அதையே தான் செய்வார்கள். அதிமுகவிடன் ஒரு கேள்வி கேட்டால் திமுக யோக்கியமா என்பார்கள். பாஜகவிடன் ஒரு கேள்வி கேட்டால் காங்கிரஸ் யோக்கியமா என்பார்கள். அவர்கள் யோக்கியம் இல்லைனு தான் உன்னை தேர்தெடுத்தோம் கூமுட்டைன்னு கேட்க தான் ஆள் இல்லை.



ஜெயலலிதாவின் இழப்பு அதிமுகவிற்கு நிரப்பயியலா வெற்றிடத்தை உருவாக்கியுள்ளது. அதிமுகவின் முக்கிய வாக்கு வங்கி ஜெயலலிதா என்ற பெண்ணுக்கு இருந்த பெண்கள் வாக்கு, சரிபாதி திமுக எதிர்ப்பு வாக்கு. அதிமுக என்ற பெயருக்கும், சின்னத்திற்கும் இருந்த வாக்கு வங்கி கடந்த 30 ஆண்டுகளில் கணிசமாக குறைந்துவிட்டது. இது சுதந்திர இந்தியாவின் மூன்றாம் தலைமுறை இளைஞர்கள் காலம்.

இந்த இளைஞர்களை நம்புறதும் ரொம்ப கடினமான விசயம் தான். படிப்பு இருக்கும் அளவுக்கு பகுத்தறிவு இல்லை. வெகு சுலமாக மூளை சலவை செய்யபடுகிறார்கள். முதலில் யார் அவரை நெருங்கிறார்களோ அவர்கள் சொல்வதே உண்மை என்றாகிவிடுகிறது. அல்லது யார் எதை சொன்னாலும் கேள்வியே இல்லாமல் எல்லாவற்றையும் நம்பி தொலைக்கிறார்கள். சமீபத்திய உதாரணம் தடுப்பூசி எதிர்ப்பு அரசியல்.

அரசியல் ரீதியாக ஜெயலலிதாவின் இழப்பு தமிழகத்தில் இரண்டு கட்சிகளுக்கு சிறிது வளர்ச்சியை தந்துள்ளது. அவர்கள் இருவர் செய்ததும் எதிர்ப்பு அரசியலும், இணைய ஊடுருவலும் தான். பாஜக அதில் முதல் இடம். அதிமுக திராவிட கட்சின்னு சொல்லிகிட்டாலும் அதற்கும் பாஜக கொள்கைக்கும் வித்தியாசமில்லைன்னு பாஜக பிரமுகம் செல்வாரு. அதிமுக சொல்ல மாட்டாங்க. ஆனா அப்படி தான் செய்வாங்க

அதிமுக தலைமையில் இருக்கும் குழப்பம் தொண்டர்களுக்கு சோர்வை கொடுத்துள்ளது. ஜெயலலிதா என்ற ஆளுமையின் பலம் இப்பொழுது தான் கட்சிக்கே தெரிகிறது. அவர்கள் வேறு அணிக்கு மாறினாலும் ஓட்டு அவர்களுக்கு தான் போடுவார்கள் என சொல்லமுடியாது. ஏற்கனவே பொதுபுத்தியில் ஜெயிக்கிற கட்சிக்கு தான் ஓட்டு போடுவேன்னு அடம் பிடிப்பாங்க. தமிழகத்தில் பாஜக முகவரி இல்லாத கட்சின்னாலும் மத்தியில் ஆட்சியை பிடித்தது பொது புத்தி மக்களுக்கு பாஜக மேல் பார்வை விழுந்துள்ளது. அதிமுக அதிருப்தி தொண்டர்களும் பாஜக பக்கம் சாய வாய்புண்டு. அதான் லாஜிக்கல் பாயிண்டும் கூட.



இன்னொரு கட்சி நாம் தமிழர். யோசிக்க வைக்கும் பிரச்சாரம் இவர்களின் பலம். சீமானின் அனல் தெறிக்கும் பேச்சை கேட்க கூட்டம் அதிகமாகிக்கொண்டு இருக்கிறது. கூட்டம் எல்லாம் ஓட்டு ஆகாது என்றாலும் பிற கட்சிகளின் பலவீனம் இவர்களுக்கு ஓட்டு சேர்க்கிறது. இவர்களின் கொள்கைகள் மக்களுக்கு பிடித்துள்ளது. ஆனால் அதை நடைமுறை படுத்த இருக்கும் திட்டவரைவு பற்றி இவர்களின் எந்த ஆதாரமும் இல்லை. உதாரணத்திற்கு கட்சதீவு என்பார்கள். எப்படி கொண்டு வருவிங்கன்னு கேட்டா வழக்கு போடுவோம் என்பார்கள்(வழக்கு ஏற்கனவே இருக்கு). எதிர்ப்பு அரசியல் மட்டுமே இவர்களுக்கு கூடுதல் பலம் சேர்கிறது.



தமிழகத்தில் நடக்கும் பிரச்சனைகளை திமுக தலைமை வேறு மாநிலத்தில் நடப்பது போல் பார்த்துக்கொண்டு இருக்கிறது. நெடுவாசல் போராட்டத்திற்கு பேருக்கு ஒரு ஆதரவு. ஜக்கியின் அடாவடிதனத்திற்கு பலமான எதிர்ப்புகுரல் இல்லை. மறு தேர்தல் உடனே வரணும். அடுத்து நாமதான்னு மனபிராந்தியில் இருக்கிறார்கள். நிச்சயம் அதிமுக அதிருப்தி ஓட்டு இவர்களுக்கு வராது. திமுக வாக்கு வங்கி மட்டுமே அவர்களுக்கு. அதையும் பொருந்தாத வேட்பாளரை நிறுத்தி பல்பு வாங்குவது இவர்களின் வழக்கம்



பாமக வாக்கு வங்கியில் மாற்றம் இல்லை.சாதிய ரீதியாக அதிமுக அதிருப்தி வாக்குகள் சில பகுதியில் பெற வாய்ப்புண்டு. அதுனால் உள்ளாட்சி தேர்தலில் அதிகாரம் பெற வாய்ப்புகள் உண்டு. ஆனால் இவர்கள் சாதியை விட்டு வெளியே வராமல் தமிழகத்தில் வளர்ச்சியடைய வாய்ப்பில்லை. நாடாளுமன்ற தேர்தலின் போது இருந்த இணைய ஆதரவாளர்கள் வேகம். இப்பொழுது தூங்கிக்கொண்டு இருக்கிறது. சாதியை மட்டுமே நம்பி அரசியல் செய்யும் எந்த கட்சியும் உருபட்டதா சரித்திரம் இல்லை.


மக்கள் நல கூட்டணி இப்பொழுது இல்லை என்று இடதுசாரிகள் அறிவித்து விட்டார்கள். வைகோ கோமாளி அரசியல் செய்து கொண்டிருக்கிறார். அதிமுகவை யாரும் அழிக்க விடுமாட்டேன்னு இவர் அறிக்கை கொடுத்த மறுநாள் அவர் கட்சியான மதிமுகவில் இருந்து 1000 பேர் பன்னீர் அணியில் இணைகிறார்கள். அதிமுக தான் மக்கள் கருத்து கேட்பதில்லை. இவர் தனக்கு சொந்தமாக ஒரு கட்சி இருப்பதையே மறந்து செயல் படுகிறார்

விடுதலை சிறுத்தைகள் தலித் ஓட்டுகளையும் முற்போக்கு சிந்தனையாளர்கள் ஓட்டுகளையும் மட்டுமே நம்பியுள்ளது. ஆட்சி பொறுப்பில் இல்லாவிட்டாலும் ஆங்காங்கே நடக்கும் கட்டபஞ்சாயத்துகளில் இந்த கட்சி பொறுப்பினர் இருப்பது முற்போக்கு சிந்தனையாளர்களை யோசிக்க வைக்கின்றது. அவர்கள் குரல் கொடுக்க போனால் பரவாயில்லை. மிரட்டி பணம் பறிக்கும் வேலையெல்லாம் நடக்குது. பாமக மாதிரி சாதி அரசியல் முத்திரையில் சிக்கினால் தலித் வாக்குகளையும் இழக்க நேரிடம். தலித் முன்னேற்றம் என்பதை தவிர்த்து மக்கள் முன்னேற்றம் என்பதற்கு இவர்களின் எந்த திட்ட வரையரையும் இல்லை. இது இவர்கள் அரசியல் எதிர்காலத்திற்கு முன்னடைவு.



நான் ஒரு காம்ரேட் என்று பெருமையான சொல்லிகொள்ளும் காலம் என் வாழ்நாளில் தமிழகத்தில் வராது போல. ஒரு சிலரை தவிர அனைவரும் சுயநல அரசியல் செய்துக்கொண்டிருக்கிறார்கள். தொழிலாளர் நலன் காப்பதே இடதுசாரிகளின் முக்கிய கொள்கை. தமிழகத்தில் தொழில் நசிவு. தொழிலாளர் வேலை இழப்பு. விவசாயிகளின் தற்கொலை இதற்கு இவர் அழுத்தமாக இல்லை. பெரும்பான்மையை ஆதரித்து காலம் ஓட்டுவதிலேயே குறியாக இருக்கின்றனர். பெயரளவில் தான் கொள்கை இருக்கிறதோ என சந்தேகபட வைக்கிறார்கள். இது அரசியல் எதிர்காலத்திற்கு நல்லதல்ல.

தேமுதிக இனி பிரேமலதா கையில் தான் இருக்கு. விஜயகாந்த பொது மேடைகளில் பேசாமல் இருப்பது நல்லது. விஜயகாந்தின் நிர்வாக திறன் குறைபாடு சமீபகாலமாக வெளிபடையாக தெரிகிறது. அதிமுக போலயே ஒரு சரிவை சந்தித்துள்ளது தேமுதிக.



காங்கிரஸுக்கு யார் மீதாவது சவாரி செய்யலைனா நகர முடியாது. பாஜக எதிர்ப்பு அரசியலை சரியாக அறுவடை செய்ய தெரியவில்லை. பல மாநிலங்களில் மீண்டும் பாஜக ஆட்சி. உள்ளாட்சி தேர்தல் சொல்ல தகுந்த இடம். கட்சி தலைமையின் திட்டமிடமில் கோளாறு உள்ளது. தலையே அப்படி இருக்கும் போது கடைகோடி தலைமை வேறு எப்படி இருக்கும். சென்ற அதிமுக ஆட்சியில் எதிர்ப்பு பங்கு காங்கிரஸுக்கே அதிகம். இப்பொழுது யாரை ஆதரிப்பது என தெரியாமல் உள்கட்சி குழப்பத்தில் இருக்கிறார்கள்.



நான் எப்பொழுதும் சொல்வது ஒன்றே ஒன்று தான்
ஒரு வேட்பாளருக்கான தகுதி அவரது கட்சியோ சின்னமோ அல்ல
அவரது பொதுநல பங்களிப்பு, சம்பந்தபட்ட ஊர் பிரச்சனைகளில் உள்ள தெளிவு. மக்கள் தகவல் தொடர்பு. தேவையான அறிவு இவைகள் தான். தவறு செய்வது மனித இயல்பு. அதிலிருந்து நம்மை மாற்றிக்கொள்வதே அறிவு. கடைசி வரை மாற்றிக்கொள்ள மாட்டோம். பணத்திற்கு ஓட்டை விற்போம் என்றால் உங்கள் வாழ்வாதாரம் கடைசி வரை உயரப்போவதில்லை.

1 வாங்கிகட்டி கொண்டது:

'பரிவை' சே.குமார் said...

நல்ல அலசல்...
அருமை.

!

Blog Widget by LinkWithin