பொது புத்தி!

உளவியல் பொதுபுத்தியை எப்படி எளிமையாக விளக்குகின்றது என்றால்..

நீங்கள் ஒரு கடற்கரையில் நின்று அண்ணாந்து பார்த்துக்கொண்டு இருக்கிறீர்கள். கவனிக்க கடலை அல்ல. அண்ணாந்து பார்த்து கொண்டிருக்கிறீர்கள்.
உங்களை பார்க்கும் நபர் ஆர்வமுகுதியில் அவரும் அண்ணாந்து பார்ப்பார். இருவரை பார்த்து நால்வர் வருவர். அப்படியே எண்ணிக்கை கூடிக்கொண்டே போகும்.

இதை கூட்டு மனப்பான்மை அல்லது பெரும்பான்மையுடன் தன்னை இணைத்துக்கொள்ளும் குணம் என உளவியல் சொல்கிறது.

இந்த உளவியலை தான் தற்சமயம் ஊடக புரோக்கர்கள் பயன்படுத்திக்கொண்டிருக்கிறார்கள். செயற்கையாக கருத்து கணிப்பு என்ற பெயரில் அவர்களே யார் வெற்றி பெற வேண்டும் என தீர்மானிக்கிறார்கள். மக்களிடன் இருக்கும் குறைபாடு ஜெயிக்கும் பக்கம் நிற்க வேண்டும் என்ற மனப்பான்மை. அதனால் அவர்களுக்கு ஒரு பயனும் கிடைக்கபோவதில்லை. ஆனாலும், என்னால் ஜெயித்தார்கள் என்ற ஒன்றுக்கும் உதவாத திருப்தி பட்டு போவான் பொதுபுத்தி மனிதன்.

தேர்தல் என்பது 5 ஆண்டுகளுக்கு ஒரு முறை வருவது, வரும் ஐந்து ஆண்டுகளும் உங்களுக்கு அடிப்படை வசதிகளும். வாழ்வாதார உயர்வும் ஏற்படுத்த வேண்டியவர்கள் தான் உங்கள் பிரதிநிதியாக வரவேண்டும். உங்கள் சாதிகாரனோ, சரக்கு வாங்கி கொடுத்தவனோ அல்ல.

கடந்த 5 வருடத்தில் உங்கள் வாழ்வாதரத்தில் என்ன முன்னேற்றம் கண்டீர்கள்? இலவசமாய் பெற்ற மின் விசிறியும், மிக்ஸியும் இன்னும் ஓடிக்கொண்டிருக்கிறதா? அதனால் ஏறிப்போன உங்களின் மின் கட்டணத்தை கந்து வட்டிக்கு வாங்கி கொடுப்பது தான் நீங்கள் பெற்ற முன்னேற்றமா?

நல்லாட்சி என்பது நாடும், நாட்டு மக்களும் மகிழ்வாகவும் ஒற்றுமையாகவும் இருக்கவேண்டும். ஆட்சிக்கு வந்தவுடன் பரமகுடியில் நடந்த துப்பாக்கி சூடு ஞாபகம் இருக்கின்றதா? ஒரே பள்ளியில் படித்து, ஒன்றாய் விளையாடிய உன் நண்பன் உனக்கு சாதியால் எதிரியானான், சாதி எப்படி வந்தது, ஏன் வந்தது, யார் கொண்டு வந்தது கூட தெரியாமல் சாதிய பிரிவினைக்கு முன் நிற்கிறாய். இதை தடுக்காமல் வேடிக்கை பார்த்தோடு மட்டுமல்லாமல் தூண்டி விடுவதும் இந்த அரசு தான்.

நியாயமான முறையில் அரசு அனுமதி பெற்று மதுகடையை மூட போராடிய சசிபெருமாளை கடையை மூடுகிறோம் என வாக்குறுதி கொடுத்து கீழே இருக்காமல், இப்ப கீழ இருக்குறியா இல்ல ஃப்யர்சர்வீஸ் கொண்டு வந்து தண்ணீர் பீச்சி அடிக்கவா என மிரட்டியே அவர் தவறி விழுந்து செத்துபோனார். விளம்பரத்துக்கு செத்தார் என அவரை இழிவு படுத்தியது இந்த அரசு

கோவன் இருக்கும் வினவு இயக்கத்தை எனக்கு எட்டு வருடங்களாக தெரியும். அவர்களது பத்திரிக்கை பெயரே புதிய ஜனநாயகம் தான். அவர்கள் போராட்டம் என்றும் ஜனநாயக முறை தாண்டி வன்முறைக்கு போனதில்லை. அம்மா, அம்மா என சொல்லி கொண்டு ஊருக்கு ஊத்தி கொடுக்கும் மவராசியேன்னு பாட்டு பாடியதற்கு தேசதுரோக வழக்கு.

கோவன் கூட பெரிய மனுசன், வழக்கை சந்தித்து வெளியே வருவார். நாலு வயசு குழந்தை மதுவிலக்கு பிரச்சாரம் செய்ததற்கு தேசதுரோக வழக்கு. சட்டகல்லூரி மாணவி நந்தினி மதுவிலக்கு பிரச்சாரம் செய்ததற்கு கொலை மிரட்டல். அவர் தந்தையை கொல்லவே முயற்சி செய்தார்கள்.

ஊனமுற்றோர் தங்களுக்கு உதவி தொகையும், வேலை வாய்ப்பும் கேட்டதற்கு கண் தெரியாதவர், கால் இல்லாதவர் என பார்க்காமல் லத்தி சார்ஜ். விதவை உதவி தொகை ரத்து. முதியோர் உதவி தொகை குறைப்பு. தொழிலாளிகளின் ஃப்ராவிடண்ட் ஃபண்ட் பணம் 10 ஆயிரம் கோடிக்கும் மேல் எங்கே இருக்குன்னே தெரியல.

நிதி அமைச்சர் கஜானாவில் இருக்கின்றது என்கிறார். ஆனால் கல்வி துறைக்கு வழக்கபட்ட நிதியோ, ஆதி திராவிடர் நலனுக்கு வழக்கப்பட்ட நிதியோ, நீர்நிலை ஆதாரங்கள் பாதுகாப்புக்கு வழக்கப்பட்ட நிதியோ எதுவும் முழுமையாக பயன்படுத்தபடவில்லை. கடந்த 2011 ஆண்டு வரை 1.10 கோடியாக இருந்த தமிழகத்தின் கடன் ஐந்தே வருடங்களில் இரு மடங்குக்கு மேல் உயர்ந்தது

பேருந்து கட்டணம் உயர்வு, மின்சார கட்டணம் உயர்வு, பால் கட்டணம் உயர்வு. பருப்பு விலையில் இருந்து அனைத்து அத்தியாவசய பொருட்களும் விலை உயர்வு. இருந்தும் தமிழகத்தின் ஒவ்வொரு மனிதனுக்கும் கடன் அழுத்தப்பட்டிருக்கிறது. அதுவா வாழ்கை தரத்தை உயர்த்தியாக எண்ணுகிறிர்கள்.

சாதிக்காகவோ, பணத்துக்காவோ உங்கள் ஓட்டை விற்பீர்களேயானல் அது உங்கள் வீட்டு பெண்களை விற்பதற்கு சமம். ஐந்து வருடம் உங்களாக உழைக்கப்போகும் வேட்பாளருக்கு ஓட்டு போடுங்கள். சாதியவாதம்/மதவாதம் பேசும் கட்சி நம்முள் பிரிவினையை தான் தூண்டும்.

பேசுங்கள், ஐந்து வருடம் என்ன அனுபவித்தோம் என்று பேசுங்கள். வீட்டில் பேசுங்கள், நண்பர்களிடம் பேசுங்கள். டீ கடையில் பேசுங்கள். வாட்ஸ் அப்பில் பேசுங்கள். ஃபேஸ்புக்கில் பேசுங்கள். நீங்கள் விழிப்புணர்வு பெற்றால் மட்டும் போதாது. சகமனிதன் அக கண்ணை திறக்க வேண்டியதும் உங்கள் பொறுப்பு தான்

0 வாங்கிகட்டி கொண்டது:

!

Blog Widget by LinkWithin