நலமா என விசாரிப்பது உனக்கு பிடிக்காது, நல்லாயில்லைன்னா சாப்பிடமாட்டியா என எதிர் கேள்வி கேட்பாய். சம்ருதாயங்கள் தவிர்த்து நேரடியாகவே விசயத்திற்கு வருகிறேன்.
சென்ற கடிதத்தில் தற்கொலை என்பது தைரியமா, கோழைதனமா என்று கேட்ருந்தாய். இரண்டுமே பொருந்தும் தற்கொலைக்கு.. மரணத்தை மெய் உலகின் விடுதலை என்கிறார்கள் சில அறிஞர்கள். ஒரு சிலர் யாரோ ஒருவரை பழிவாங்கவும் கூட தற்கொலை செய்யக்கூடும். அதை விடு. நமக்கு அடுத்தவர்களை கொன்று தானே பழக்கம். தற்கொலை குறித்து நமக்கேன் ஆராய்ச்சி.
கோடை வந்துவிட்டது. அதிகமாக ஊர் சுற்றாதே. எப்போதும் சிறிய குடை ஒன்று பையில் இருக்கட்டும். நிறைய தண்ணிர் குடி. அவன் பேசல, இவன் பார்க்கல என வருத்தப்பட்டுக்கொண்டிருக்காதே. நீ யாரிடமும் இறங்கி போக தேவையில்லை. உலகம் உன் காலடியில் கிடக்கட்டும். பொய்யாகவாவது எப்போதும் புன்னகையுடன் பிறரை எதிர்கொள்.
நீ எழுதும் கவிதையை விட உன் சினிமா விமர்சனம் தான் அழகிய கவிதை போல் இருக்கும். அதிலும் அந்த முதல் பேராவின் ரசிகன் நான். சமீபமாக நீ அதில் கவனம் செலுத்துவதில்லை. மொத்த சினிமாவின் உன் பார்வையை அந்த ஒன்றை பேராவில் கொடுத்துவிடுவாய். அதை ரொம்ப மிஸ் பண்றேன்.
சினிமா டவுன்லோடு செய்ய புதிய தளத்தின் முகவரி ஒன்றை உனக்கு குறுங்செய்தியாக அனுப்பியிருந்தேன். பார்த்தாயா? நான் குறுங்செய்தி அனுப்புவது குறித்து நீ எதுவும் எதிர்வினை செய்யவில்லை.
உன்னை அடைய முடியாமல், மொட்டைமாடி ஓர மரத்தில் குடியிருக்கும் குயில் பாடும் ஒலி கேக்கிறது. ஆசையாய் வளர்த்த நாயை பருவம் அடைந்ததும் தூக்கி கொடுத்துவிட்டாய், உன்னை அடைய முடியவில்லை என்ற அதன் ஓலம் இங்கு கேக்கின்றது. நான் அனுப்பிய குறுங்செய்தி உன்னை அடைந்ததா இல்லையா என்பது தான் தெரியவில்லை.
இரண்டு நாள் விடுமுறையை மகிழ்வாய் கழிக்க வாழ்த்துங்கள்
0 வாங்கிகட்டி கொண்டது:
Post a Comment