மனிதத்தை கொல்லும் கர்வம்!

சண்டையிட்டு சென்ற மனைவி அவளாக வருவாள் என காத்திருந்தான் நாகராஜ்.
வரவில்லை, போனில் அழைத்தும் தவிர்க்கப்பட்டான். வேற எண்ணில் இருந்து அழைத்தால் குரல் கேட்டதும் அணைக்கப்பட்டான். இறுதியாக நேரில் சென்றான்.
இப்பல்லாம் நான் குடிப்பதில்லை. இனியும் குடிக்கமாட்டேன். நீயும் சண்டையிடாதே. வா சேர்ந்து வாழலாம்.என்றான்.
நீயும் சண்டையிடாதே என்பதில் ஆரம்பித்தது சண்டை. நான் சண்டைகாரியா, நீ என்ன சொன்னாலும் பொத்திட்டு போகனுமா என பெரிதான சண்டை இறுதியில் வெளியே போடாவில் முடிந்தது.
வெளியே வந்தவன் நேராக போனது ஒயின்ஷாப். காலை வீட்டில் தூக்கில் இருந்து இறக்கப்பட்டான். அவன் மனைவி கத்தினாலும் கதறினாலும் இனி வருவானா?
அப்ப தானே மக்கா பார்த்துட்டு போனன்னு நாகராஜ் அம்மா அழும்பொழுது நம் ஈரக்கொலை அறுக்குது. சரியாக 2014 இதே நாள் அவனை பார்த்தேன்.
என்னை எப்போ பார்த்தாலும் பயங்கர மகிழ்வடைவான். சுறுசுறுப்பானவன். கடினமான வேலையா அது எப்படி இருக்கும் என்பான்.
என் ஒரே மகவும் போயிருச்சே மக்கான்னு அம்மா அழும் பொழுது நானும் மகன் தான்மான்னு ஆறுதல் சொல்ல முடியுமே தவிர உடன் பயணிக்க முடியாதுன்னு எனக்கு தெரியும். இம்மாதிரி வரும்பொழுது எதாவது மானிட்டரி ஹெல்ப் பண்ணலாம். அவ்ளோ தான்
என்னை குடைவதெல்லாம் அவனை கொன்றது எது?
அவன் குடிப்பழக்கமா அல்லது
அந்த பெண்ணின் ஈகோவா?
மாற்றிக்கொள்ளக்கூடியது எது?
யாரும் பிறக்கையில் குடிகாரன் இல்லை. அதே போல் கோவமும் எல்லாரிடமும் வராது. நமக்கு யார் உரிமை கொடுத்துள்ளாரோ அவர்கள் மீது கோவப்படலாம்.
என்னுடள் பயணிப்பவள். என்னில் பாதி, என் சுகதுக்கங்களில் பங்கெடுப்பவள், உடன் மகிழ்வது போலே சகிப்பதும் உறவில் ஒரு கடமை தானே, உரிமை கொடுப்பது உயிரை பறிக்கவா?
நட்பின் கதாபாத்திரங்கள் ஆயிரம் நம்மை கடந்துபோகும். நம்முடன் அவர்கள் ஒன்றும் ஒன்றும் ரெண்டு. நட்பிடன் காட்டும் அன்பை போல் ஆயிரம் மடங்கு பரிமாறிக்கொள்ளும் காதல் இணைவது ஒன்றும் ஒன்றும் பதினொன்று.
பரவாயில்ல நீ எடுத்துக்கோ என விட்டு கொடுத்து மகிழ்வது. நீ சந்தோசமா இருந்தியா என துணையின் மகிழ்வு கண்டு இன்பம் காண்பது வாழ்வை அர்த்தப்படுத்தும்.

கோவம் என்பது பிறர் செய்யும் தவறுக்கு உனக்கு நீயே கொடுத்துகொள்ளும் தண்டனை என புத்தர் கூறினார்.
நாகராஜின் அன்பு கோட்டையை கோபகல் எறிந்து தகர்த்த நாகராஜ் மனைவி ரெண்டு கைகுழந்தைகளுடன் இருக்கிறார். அது அவருக்கு தண்டனையா வரமா என்பதை காலம் அவருக்கு புரியவைக்கட்டும்.
இன்று அவள் அன்புக்காக ஏங்கலாம். அது போல் எத்தனையோ ஜீவன் பூமியில் வாழ்கிறது.
அதீத அன்பினால் வெறுத்து போகிறேன் என்பவர்களுக்கு, நீங்கள் அவர்கள் மனதில் நஞ்சை விதைத்து செல்கிறீர்கள். ஒன்று அது அவரை கொல்லும் அல்லது என்றேனும் ஒரு நாள் யாரோ ஒருவர் அந்த நஞ்சுக்கு பழியாவார்
உங்கள் ஈகோவினால் எதை வென்றீர்க்ள், யாரை வென்றீர்கள் என யோசித்துப்பாருங்கள். ஊரில் இன்னும் பல நாகராஜுக்கள் நடைபிணமாக திரிந்துகொண்டிருக்கிறார்கள்.
அன்பால் எதையும் வெல்லலாம் என்ற உலக கூற்றை மகாபொய்யாக்கிக் கொண்டுயிருக்கிறது உங்கள் ஈகோ.
வாழ்க்கையை அர்த்தமுள்ளதாக்குங்கள்.

1 வாங்கிகட்டி கொண்டது:

sharfudeen said...

வாழ்கையின் எல்லா ( சிறிய - பெரிய ) சுவராசியங்களையும் கெடுக்க ரொம்ப மெனகெட வேண்டாம். எப்போதாவது என்றுதானே என்று "குடிக்க " ஆரம்பித்தால் போதும். - இது எனக்கு நானே சொல்லிகொண்டது!

!

Blog Widget by LinkWithin