ஏன் முட்டாள்கள் தினம்!?

ஒரு விசயத்தை செய்யுறதுக்கு முன்னாடி நம்ம மக்கள் அதை ஏன் செய்யுறோம் என்று யோசிப்பதேயில்லை, அவன் செஞ்சான், நானும் செஞ்சேன், எங்க தாத்தா செஞ்சார், நானும் செஞ்சேன் என்பதே அனைவரின் பதிலும், சரி அவர் ஏனப்பா செஞ்சார் என்றால் அதுக்கு எதாவது அறிவியல் காரணம் இருக்கும் என்பார்கள், காதலனர் தினத்திற்கு ஒவ்வொரு வருடமும் வேலெண்டின் பெயர் ஞாபக படுத்தப்படுவதால் இன்னும் வரலாறு திரிக்கப்படாமல் இருக்கு, இன்னும் சில வருடங்களில் அம்பிகாபதி, அமராவதி மாதிரி அமரக்காதல் கொண்ட பாதிரியார் சட்டத்தால் தண்டிக்கபட்ட தினம் தான் காதலர் தினம் என்பார்கள்!, நம் மக்களுக்கு புரளியை கிளப்பி விடுவதென்றால் அல்வா சாப்பிடுவது மாதிரி!

பெரும்பாலான தினங்கள்(days) இங்கிலாந்திலேயே ஆரம்பிக்கப்பட்டதாக வரலாறு சொல்கிறது!, கொண்டாட்டத்திற்கும், ஐரோப்பிய கண்டத்துக்கும் எதோ சம்பந்தம் இருக்கும் போல பெரும்பாலான விழாக்கள் கூட அங்கே தான் ஆரம்பித்திருக்கின்றன!, முற்காலத்தில் ராஜாவுக்கு மலச்சிக்கல் இல்லாமல் கக்கா போனால் கூட விழாவாக கொண்டாடுவார்களாம், நல்ல வேளை தமிழ்நாட்டில் ”பாராட்டு விழா” என்ற பெயரில் நடப்பதால் உண்மையான காரணம் யாருக்கும் தெரிந்திருக்கவில்லை!, கள்ளன் பெருசா, காப்பான் பெருசான்னா, கள்ளன் தான் பெருசுன்னு ஒரு பழமொழி உண்டு, அங்கே அடிமட்டத்தில் இருப்பவன் பெருசு, ஜனநாயகத்தில் மட்டும் என்றுமே மக்கள் தான் முட்டாள்கள்!, ஐந்து வருடத்திற்கொரு முறை பெரிய முட்டாளாக ஆக வருடா வருடம் நாம் எடுக்கும் ட்ரைனிங்க் தான் ஏப்ரல் ஒன்னு என்று சென்னையில் வசிக்கும் ஒரு அதிர்ஷ்டகார ஞானி சிரித்து கொண்டே சொல்லுவார்!




முட்டாள்கள் தினம் கதையை சொல்ல வந்து நாம் முட்டாளான கதையை சொல்லி கொண்டிருக்கிறேன் பாருங்கள், வாங்க நாம முதல்ல அந்த கதையை பார்த்துட்டு வரலாம்!.

1550 வாக்கில் இங்கிலாந்தில் இருந்த பல செல்வந்தர்களில் முக்கியமான ஒரு செல்வந்தர் எட்வர்ட் மார்ஷல், அப்போதைய கெஜட்டில் மட்டும் அவர் 158 தொழில்கள் செய்து கொண்டிருந்ததாக பதிவாகியிருக்கிறதாம்!, வெகு சிறப்பாக தொழில் செய்து கொண்டிருந்த அவருக்கு 1579 ஆம் வருடம் ஏப்ரல் முதல் தேதி ஒரு மகன் பிறந்தார் அவரது பெயர் ஸ்டீவ் மார்ஷல், அது அவரது செல்ல மகனும் கூட, மூத்த மகன் ஒருவர் இருந்தாலும் அவர் ஒரு விபத்தில் இறந்த விட்டதாக மட்டும் தகவல் இருக்கிறது.

பெரும் செல்வமும், செல்லமும் கொண்ட ஸ்டீவ் படிக்க வீட்டிலேயே ஆசிரியர்கள் அமர்த்தப்பட்டார்கள், அவர்களுக்கு சொல்லி கொடுப்பதை விட, ஸ்டீவ் எதையும் உடைக்காமல் பார்த்து கொள்வதே முக்கிய பணீயாக இருந்தது! சன்னல் ஏன் பெருசா இருக்கு, இந்த ரொட்டி ஏன் சிறுசா இருக்கு என்ற அறிவு பூர்வமான கேள்விகளும் அவ்வபோது கேட்பதுண்டு!, ஆசிரியர்களும் வாங்கும் சம்பளத்துக்கு வஞ்சகம் செய்யாமல் வேலை பார்த்தார்கள், மேற்படிப்பு படிக்க விருப்பமில்லை என்றும், தனக்கு தொழிலை கவனித்து கொள்ள எல்லா தகுதியும் வந்துவிட்டது என சொல்லும் பொழுது அவரது தந்தைக்கு மிகவும் பெருமையாக இருந்தது, காரணம் ஸ்டீவ் அதை சொல்லும் பொழுது அவனுக்கு வயது எட்டு!


அந்த சமயம் சிரித்து கொண்டே மறுத்த தந்தை ஸ்டீவின் 21 ஆம் வயதில் மறுக்க முடியாத இக்கட்டில் சிக்கினார்! ஸ்டீவுக்கு 21 வயது ஆகும் பொழுது அவனிடம் கம்பெனியின் முழு பொறுப்பை ஒப்படைத்து விட்டு, தனது ஏழு மனைவியருடன் உலகை சுற்றி வர வாக்களித்திருந்தார், அவரது ஏழாவது மனைவி வாக்கு தவறினால் குதிரை வண்டிகாரனுடன் ஓடி போய்விடுவதாக ஏற்கனவே மிரட்டியிருந்ததால், வேறு வழியில்லாமல் அரைமனதுடன் கெம்பேனி பொறுப்பு ஸ்டீவுக்கு மாற்றப்பட்டது!, அடுத்த இரண்டு வருடத்தில் 158 கம்பெனிகளும் திவாலாகி ஸ்டீவ் வீட்டில் வந்து அமர்ந்தான், அதன் பிறகு அவனது வேலை யார் என்ன கதை விட்டாலும் உங்களை போலவே சீரியஸாக கேட்டு கொண்டிருப்பது! உங்களுக்கும் ஸ்டீவுக்கும் ஒரே ஒற்றுமை தான், இன்னைக்கு ஏப்ரல் ஒன்னு!


டிஸ்கி:சும்மா லுலுலாயி
😂😂😂😂😂😂😂😂😂

0 வாங்கிகட்டி கொண்டது:

!

Blog Widget by LinkWithin