நான் வாழ்க்கையில் சந்தித்த மனிதர்களில் நம்பிக்கைக்கு அர்த்தம் இதுதான் என வாழ்ந்து காட்டியது தோழர் ரம்யா தான். அவுங்களுக்கு ஏற்பட்ட சூழல் பிறருக்கு ஏற்பட்டால் அவர்களால் அதை தாண்டி வந்துருக்க முடியுமான்னு யோசிக்க கூட முடியல. இந்த மகளிர் தினத்தில் மகளிர் முன்னேற்றத்தை விரும்பும் ரம்யாவிடம் ஒரு பேட்டி.
வாழ்க்கைக்கு நம்பிக்கை வேண்டும் என்பது எவ்வளவு முக்கியமோ அதே அளவு நம்பிக்கையான ஆட்கள் நம்மை சுற்றி இருக்கனும் என்பது அதைவிட மிகவும் முக்கியம்.
நண்பர்கள் அனைவருக்கும் வணக்கம்!!
மகளிர்தின வாழ்த்து
1857ஆம் ஆண்டு அமெரிக்காவில் நெசவுத் தொழிலில் ஈடுபட்ட பெண்களின் உரிமைப்போராட்டமே, பின்னர் கிளர்ச்சிக்கு வித்திட்டது. 1909 ஆம் ஆண்டு, ஐக்கிய அமெரிக்காவின் சோசலிசக் கட்சியால், உழைக்கும் பெண்களுக்காக உருவாக்கப்பட்ட தினம் தொடர்ச்சியாக மாற்றமடைந்து, 1975ஆம் ஆண்டு சர்வதேச பெண்கள் தினமாக ஐக்கிய நாடுகள் சபையில் கொண்டாடப்பட்டதோடு, அந்த வருடத்தில் இருந்து மார்ச் 8 ஆம் தேதி, சர்வதேச பெண்கள் தினமாக மாறியிருந்தது. இவ்வாறாக ஏறத்தாழ நூறு வருடங்களை கடந்த வரலாற்றைக் கொண்டது நமது இனிய மகளிர் தினமாகும், என்ற விளக்கத்தோடு இந்த பதிவில் அனைத்து மகளிருக்கும் எனது இனிய மகளிர் தின வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்கின்றேன்!!
1. உங்களுக்கு நேர்ந்த விபத்தை பகிர்ந்த கொள்ள விருப்பம் இருந்தால் பகிரலாம். அல்லது உங்களை நகர்த்திய அந்த நம்பிக்கை தந்த சம்பவம் மற்றும் நம்பிக்கையான ஆட்கள் பற்றிய உங்கள் பகிர்வு?
அறிமுகம்
கண்டிப்பாக பகிரலாம் நண்பரே... இணையத்தில் நிறைய பகிர்ந்திருக்கின்றேன். ஓரளவிற்கு என்னை நண்பர்கள் அனைவருக்கும் தெரிந்திருக்க வாய்ப்பு இருக்கின்றது. ஆனாலும் மறுபடியும் சிறிய அறிமுகத்துடன் ஆரம்பிக்கின்றேன். முதன் முதலில் தேவதை என்ற பத்திரிகை எனது பேட்டியை வெளியிட்டது.. அதற்குப் பிறகு பல பத்திரிகைகள் என்னை பேட்டி எடுத்து வெளியிட்டனர்.
அதன் பலனாக பல இடத்தில் இருந்தும் என்னை தொடர்பு கொண்டு, ஏதோ ஒரு விதத்தில் பாதிக்கப்பட்ட பல பெண்கள் அவர்களின் குறைகளை என்னிடம் பகிர்ந்து கொண்டிருக்கிறார்கள், அவர்களின் குறைகளைய நான் கூறிய அறிவுரைகளை ஏற்றுக்கொண்டும், அதன்படி நடந்து கொண்டும், இன்று அருமையான எதிர்காலத்தை உருவாக்கிக் கொண்டும், தங்களை நோக்கி வரும் அனைத்து சோதனைகளையும் எதிர் கொள்ளும் திறன் படைத்தவர்களாக இருக்கின்றார்கள் என்பதில் எனக்கு சிறு மகிழ்ச்சியும் உண்டு..
கடந்துவந்த பாதை திரும்பிப் பார்க்கிறேன்
அரைகுறை விவரம் தெரிந்த வயதில் கடுமையான தீ விபத்தில் சிக்கி, அதில் நாற்பத்தி எட்டு நாட்கள் நினைவை இழந்து, முடிந்துவிட்டது என்று முடித்த நேரத்தில் உயிர்த்தெழுந்து இன்றும் ஜீவிக்கின்றேன் என்றால் அது மிகையாகாது.
இரண்டு வருடங்கள் மருத்துவமனையிலேயே இருந்து சிகிச்சை மேற்கொண்டேன். அதற்கு மேல் வீட்டில் இருந்து கொண்டு அவ்வப்போது சிகிச்சைக்கு வரலாம் என்று மருத்துவமனையில் அறிவுறுத்தினார்கள். ஏற்றுக் கொள்ள வேண்டிய ஒன்றுதான்.,
அடுத்து மனதில் எழுந்த கேள்வி எங்கு செல்வது? யாரிடம் செல்வது? நம்மை யார் பாசமாக ஏற்றுக் கொள்வார்கள்.? பாசம் அது எனக்கு கிட்டியது என்னை வளர்த்த பாட்டியிடம் மட்டும்தான்.. அவர்களும் எனக்கு நேர்ந்த விபத்தை கேட்ட அடுத்த இரண்டு நாட்களில் இறைவனடி சேர்ந்து விட்டார்கள். பாட்டியை தொடர்ந்து தந்தையும்...அனைத்து நிகழ்வுகளும் மிகவும் தாமதமாகவே எனக்கு அறிவிக்கப்பட்டது.
தாமதமாக அறிவிக்கப்பட்ட உண்மைகளை என்னால் ஜீரணிக்க முடியாமல் இதயம் வெடித்து உள்ளேயே தத்தளித்து நொறுங்கிப்போனேன்.. எந்த உணர்ச்சியையும் வெளிக்காட்டிக் கொள்ளாமல் சிந்திக்க தொடங்கினேன்.. நான் என்ன செய்ய வேண்டும் என்று நான்தானே முடிவெடுக்க வேண்டும்? வயது சிறிதானாலும் சிந்தனை என்னவோ தெளிவாக மிக தெளிவாக இருக்க வேண்டும் என்று கடுமையாக யோசித்தேன்.
யாருடைய உதவியும் இல்லாமல் என்ன செய்வது ?. சவாலான வாழ்க்கையை எப்படி எதிர் கொள்வது ? அமைதியான வாழ்க்கையை எப்படி அமைத்துக்கொள்வது ? இப்படி டன் கணக்கிலான கேள்விகள் மனதை துளைத்தெடுத்தன.
சுற்றங்களால் எடுக்கப்பட்ட முடிவு
இதற்கிடையே என் சுற்றங்களோ!! வெளியே சென்றால் நான் தற்கொலை செய்து கொள்வேன் என்று அவர்களே உறுதி செய்து கொண்டு, அவர்களுக்குள்ளேயே குழப்பிக்கொண்டு, முடிவெடுக்க முடியாமல் கஷ்டப்பட்டு அடுத்து என்ன செய்வது என்று கூடி யோசித்திருக்கிறார்கள், அந்த யோசனையின் முடிவு, நான் யாரிடம் இருக்க வேண்டும், யாரிடம் இருந்தால் சரியாக வரும் என்பவைகள்தான். இறுதியாக எனது இளைய சகோதரன் அழைத்துச் செல்ல தயாராக இருந்தார்.
அறுவை சிகிச்சை மேற்கொண்ட மருத்துவர்
மகளாக என்னை பாவித்து எனக்கு சிகிச்சை அளித்த அந்த தெய்வத்துடன் கலந்து ஆலோசித்தேன். எனது வயதை மனதில் வைத்து அவரும் எனக்கு சில அறிவுரைகளை கூறினார், அவர் கூறிய பல அறிவுரைகளில் உறவினர்களுடன் செல்வதும் ஒன்று. உறவினர்களிடம் செல்வது என்பது என் மனதிற்கு ஏற்புடையதாக இல்லை. சகோதர, சகோதரிகள் இருந்த போதிலும் அவர்களின் சுதந்திரத்தில் பங்கு கொள்ள விருப்பம் இல்லை. அந்த நாள் கடுமையான - மிகவும் சவாலான நாள் என்றே என் மனதிற்கு தோன்றியது.
நகர்த்திய அந்த நம்பிக்கை தந்த சம்பவம் -
மனதில் தோன்றிய சிறிய ஆராய்ச்சி, அப்படியே சென்றாலும், பத்து நாட்கள் மருந்து என் கைகளில் கிடைக்கும், ஒரு மாதத்தில் நான் அறிவுறுத்தினால்தான் மருந்துகள் எனக்கு கிடைக்கும். அதற்குப்பிறகு நான் காணாமல் போயிடுவேன், என் துயரம் தாழ்வு மனப்பான்மையாக மாறி என்னை கீழே போட்டு அழுத்தி அது சிம்மாசனம் போட்டு அமர்ந்து விடும். இந்த எண்ணம் மனதில் தோன்றியவுடன். அனைவரையும் ஒதுக்கிவிட்டு, எத்துணை துன்பங்கள் வந்தாலும் எதிர்கொள்ளவது என்ற திடமான மனதுடன் ஒரு முடிவிற்கு வந்தேன்
முதலில் உறவினர்களிடம்தான் கூறினேன். அவர்கள் எனது இந்த முடிவை எதிர்பார்க்கவில்லை போலும்.. பிறகென்ன சொந்தங்களால் கடுமையான விமர்சனத்திற்கு ஆளாக்கப்பட்டேன். கடும் சொற்களாலும், சுடு சொற்களாலும் தாக்கப்பட்டேன். அங்கேயே எனக்கு முதல் சோதனை ஆரம்பமாகிவிட்டது எனலாம்
தனித்து வாழ்ந்து எல்லாவற்றையும் எதிர்கொள்ள துணிந்து விட்டதை மருத்தவரிடம் கூறினேன். என்னை மிகவும் ஆச்சர்யமாக பார்த்தார், அருமையான யோசனைதான் என்றதோடு மட்டுமில்லாமல், என் கைகளை பிடித்து "மகளே உன்னை வணங்க வேண்டும் என்ற எண்ணம் தீர்க்கமாக என் மனதில் எழுகின்றது.. உனக்கு இன்னமும் முழு அறுவைச் சிகிச்சையும் முடியவில்லை இந்த கோலத்தில் எங்கு செல்வாய்? என்ன செய்வாய்? வாழ்வே சவாலாக அமையுமே! " என்று கேட்ட கேள்விகளில் அன்று கொஞ்சம் தடுமாறித்தான் போனேன். ஆனாலும் தைரியத்துடன் என்னால் முடியும் என்று கிளம்பி விட்டேன்.
எனது தந்தைக்கு நிகரான அந்த மருத்துவர் என்னை வாழ்த்தி அனுப்பிய வரிகள் இதோ.. "புறப்படு உன் புது வாழ்க்கையை நோக்கி! என் குடும்பம் அது இனி உன் குடும்பமானது. நாங்கள் அனைவரும் உனக்கு துணை நிற்போம்" என்று சந்தோஷம் கலந்த கண்ணீரை துணையாக்கி என்னை அனுப்பி வைத்தார்கள் மருத்துவரும் அவரின் குடும்பத்தினரும்.
நம்பிக்கையான ஆட்கள் பற்றிய உங்கள் பகிர்வு
முதன் முதலில் என்னைக் கவனித்துக்கொண்ட ஸ்டாப் நர்ஸ் பிரிஸ்க்கா அக்கா அன்றும் இன்றும் என்னுடன் தொடர்பில் இருக்கிறார்கள். ஆரம்பகால கட்டத்தில் அவர்கள் அரவணைப்போடு மட்டுமல்லாது பண உதவிகளும் செய்திருக்கிறார்கள்.. என் உயிர் மூச்சு இருக்கும் வரை இந்த நன்றி மறவேன். மருத்துவமும் பார்த்துக் கொண்டு மேலே மேலே படித்தேன். வேலை தேடும் நேரமும் வந்தது.. எதையும் யோசிக்காமல் முயற்சித்தேன். பெரிய கம்பெனியில் கணினித்துறையில் வேலையில் அமர்ந்தேன். முதல் வேலை, அருமையான மனிதர்கள். எனக்கு அந்த அலுவலகம் தேவதைகள் வாழும் இல்லமாக காட்சி அளித்தது என்றால் அது மிகையாகாது. இப்படியாக நாட்கள் நகர்ந்தன..
அறுவை சிகிச்சை பல மேற்கொண்டதால் மெலிந்த தேகம்தான், ஆனால் கண்களில் எப்போதும் குறும்பு இதுதான் என் அப்போதைய சொத்து.. அதில் கிடைத்த நட்புகள்தான் இப்போது எனது மிகப் பெரிய சொத்துக்கள்.
பெண்கள் விடுதியில் கிடைத்த என் தாய்க்கு நிகரான கலைச்செல்வி அவர்களின் நட்பு.. அதை நட்பு என்று சொல்ல முடியாது. அவர்களை எனது அம்மா என்றுதான் அன்றும், இன்றும், என்றும் கூறுவேன். அவர்கள் அரசுத்துரையில் மிக உயர்ந்த பதவியில் இருந்தார்கள். எனக்கு ஒவ்வொரு முறை உடல் நிலை சரியில்லாத நேரத்திலும் அவர்கள் உடலால் மட்டுமின்றி, பணத்தாலும் நிறைய உதவிகள் செய்திருக்கிறார்கள், எத்தனை ஜென்மம் எடுத்தாலும் அவர்களின்பால் எனக்கு உள்ள நன்றி கடன் தீர்க்கமுடியாத ஒன்று.. அதே போல் அலுவலகத்தில் அறிமுகமான நண்பர்களும் பல உதவிகள் செய்திருக்கின்றார்கள். எதையும் என்றும் என்னால் மறக்க இயலாது.
இதுவரை நான் கண்டது நாற்பத்தியெட்டு அறுவை சிகிச்சைகள். இன்னமும் ஐந்து அறுவை சிகிச்சைகள் செய்தால் போதும் என்று மருத்துவர்கள் கூறுகிறார்கள், ஆனால் என் அறிவோ உன்னோட மருத்துவத்திற்கு முடிவே இல்லை என்றுது.. ஏற்றுக் கொண்டேன் துன்பங்களை புன்முறுவலுடன்.
மட்டமாக நினைத்தவர்கள் முன்னே உயர்ந்தேன் உயர்ந்து கொண்டுதான் உள்ளேன் எனபதில் கொஞ்சம் மகிழ்ச்சியே.. இன்று எனது உயர்வை அனைவரும் பிரிமிப்பாகப் பார்ப்பதில் இருக்கின்றது எனது வெற்றி...
*********
2. பெண்கள் முன்னேற்றத்துக்கு கல்வி அவசியம் என்பது என் கருத்து. அது சமகாலத்தில் அனைவருக்கும் கிடைக்கின்றதா? பெண்கள் முன்னேற்றத்திற்கு வேறு அடிப்படை தேவைகள் உள்ளனவா?
பெண்கள் முன்னேற்றத்திற்கு கல்வி மிகவும் அவசியமானதே.. அதில் எனக்கு மாற்றுக கருத்தே இருந்தது இல்லை.
நகரம் மட்டுமின்றி, கிராமத்திலும் படித்த மற்றும் படிக்காத பெற்றோர்கள் கஷ்டப்பட்டாவது அவர்களின் பெண்களை படிக்க வைத்து விடுகிறார்கள். இது நடுத்தர மக்களின் செயல்பாடு. மேல் படிப்பு படித்தால்தான் அவளின் வாழ்க்கை நல்ல முறையில் அமையும் என்பது அவர்களின் கனவு அது உண்மையும் கூட, ஆனால் அதே கிராமத்திலும், நகரத்திலும் வறுமைக்கோட்டிற்கு கீழே இருக்கும் பெற்றோர்கள் தங்களது பெண்களை பள்ளிக்கு அனுப்ப மறுக்கிறார்கள். திருமணம் முடிந்து செல்பவளுக்கு படிப்பு தேவை இல்லை என்கிறார்கள். அதற்கும் பல விழிப்புணர்வு முகாம் அமைத்து பெண் குழந்தைகளுக்கு ஏன் கல்வி தேவை என்பதை பல முறை உணர்த்தியும், ஏற்றுக்கொள்ளும் பெற்றோர்களின் பெண்கள் தப்பித்து விடுகிறார்கள்.. ஏற்றுக் கொள்ள மறுக்கும் பெற்றோர்கள் நம்மிடையே தோற்றுப் போகிறார்கள். இதில் தோல்வி அவர்களுக்கா இல்லை நமக்கா என்ற பெரும் கேள்வி நம் முன்னே எழுகின்றது. கல்வியறிவு இல்லாத பெண்கள் எந்த விதத்தில் வாழ்க்கையில் முன்னேற முடியும்.? ஒரு வட்டம் போட்டு அதற்குள் அடங்கிவிடுவதா வாழ்க்கை. இதை உடைத்து அனைத்து நிலை பெண்களுக்கும் கல்வி தேவை என்பதை கட்டாயமாக்க வேண்டும் இது இயலுமா??
கல்வி பெற்ற, ஆளுமைபெற்ற, சுதந்திர உணர்வுடைய, அச்சமற்ற, ஆணுக்கு நிகராக அனைத்துத் துறைகளிலும் வீறுகொண்டு வெற்றி உலாவரும் புதுமைப் பெண்களை போற்றி பாதுகாக்க இந்த சமுதாயம் என்றும் தவறியதில்லை.. பெண்கள் முன்னேற்றத்திற்கு திறமையும், மன உறுதியும் கண்டிப்பாக வேண்டும். இறுதியாக, கல்வியும் பெண்கள் முன்னேற்றத்திற்கு முக்கிய பங்கு வகிக்கின்றது என்பதே எனது உறுதியான நிலைப்பாடாகும்.
3. 2000 த்திற்கு பிறகு உலகை இணைய புரட்சி உலகம் என்றே அழைக்கலாம். நாம் அறிமுகமான 2008/2009 காலங்களில் பரவலாக பெண்கள் இணையத்தில் இல்லை. நீங்கள் வந்த காலத்தில் இருந்து
ஆமாம் 2000 மேல் புரட்சி உலகம்தான் ஒத்துக்கொள்கின்றேன். நான் 2008 மே மாதத்தில்தான் என் வலையை தொடங்கினேன்.. அப்போது இணையத்தில் ஓரளவிற்கு பெண்கள் இருந்தார்கள்.
அதே போல் முகநூலில்கூட இப்போது இருக்கும் அளவிற்கு அப்போது பெண்களின் எண்ணிக்கை சற்றே குறைவுதான். இப்போதுதான் உள்ளங்கையில் உலகைப் பார்க்கின்றோம்..
அறிவியல் சார்ந்த வளர்ச்சியே. இந்த வளர்ச்சி தேவையானதாக இருந்தாலும் சற்றே ஆபத்தான வளர்ச்சியாகவும் உணர்கின்றேன்.
இணையத்தில் பெண்களின் பாதுகாப்பு
பெண்களின் பாதுகாப்பு என்பது பெண்களிடம்தான் உள்ளது. எந்த ஒரு செயலும் அளவிற்கு மேல் போகக்கூடாது. இணையத்தில் மட்டும் அல்ல எங்கும் பெண்கள் தனது ஒவ்வொரு செயலிலும் மிகவும் கவனமாக இருத்தல் அவசியம். என்பதை மனதில் ஆழமாகப் பதிய வைத்துக்கொள்ள வேண்டும். தன்னை பாதுகாத்துக் கொள்ள தவறினால் அந்த பெண்ணின் வாழ்வே ஒரு கேள்விக்குறியாக மாறிவிடும் அபாயமும் இருக்கின்றது.. கவனம் என்ற ஒரு ஆயுதத்தில் எல்லாமே அடங்கிவிடும், பட்டியலிட தேவை இல்லை என்று எண்ணுகின்றேன். எங்கும் எப்போதும் கண்ணியம், கவுரவம் குறையாத தன்மை நம்மிடம் இருந்தால் மதிப்பும் மரியாதையும் நம்மைத் தேடி தானாக வரும் என்பதில் சிறிதளவும் ஐயமில்லை.
ஆணோ பெண்ணோ அவர்தம் கண்ணியத்தை காத்துக் கொள்ளும் வகையில் நடந்து கொள்ளும் வரை அவர்களின் சுதந்திரத்துக்கு எவ்வித தீங்கும் ஏற்படப் போவதில்லை. தன் அடையாளங்களை வெளிப்படுத்திக் கொள்ளும் பெண்கள், தன் கவுரத்தை காப்பாற்றிக் கொள்ளும் காரணிகளையும் தெரிந்து வைத்துக் கொள்ள வேண்டும். இணையம் மட்டும் அல்ல எல்லா துறையில் இருக்கும் பெண்களுக்கும் இது பொருந்தும்.
******************
4. நீங்க அரசியல் பேசி, எழுதி நான் பார்த்ததில்ல, ஆனா சல்லிகட்டி போராட்டத்திற்கு பிறகு அரசியல் விமர்சனம், ஆதங்கம் உங்களிடம் வெளிபட்டது. ஓட்டு போடுவது மட்டுமே சாமான்ய பெண்ணின் கடமையா இருக்கு. அதை தாண்டி அரசியலில் ஒரு பெண்ணின் பங்களிப்பு எந்த அளவு இருக்கனும்னு நினைக்கிறிங்க?
ஆமாம் நான் அரசியல் பேசியதுமில்லை, அரசியல் செய்ததும் இல்லை..
ஆனால் அந்த அரசியல் மீது எப்போதுமே தீராத காதல் உண்டு. ஆமாம் வேலைக்கு ஏற்ற பட்டங்கள் பெற்றதோடு நிற்காமல், அரசியலிலும் முதுகலை பட்டம் பெற்றேன். படித்த அரசியலைவிட நான் கண்ட கனவு அரசியல் மிகவும் யதார்த்தமானது. ஒரே ஒரு வார்த்தை மக்களுக்காக மக்களின் நலன் மட்டுமே சிந்தையில் வைத்து பாடு படவேண்டும் என்பது எனது கருத்து. விடியலில் கழனிக்குச் செல்லும் கணவன் மாலையில் நிதானத்தில் வீட்டுக்கு வந்தால் அன்றுதான் அந்த இல்லத்தில் தீபாவளி.. தினமும் அதே நிலைமை நீடித்தால்... இந்த இடத்தில் இருந்து ஆட்ச்சி பயணிக்க வேண்டும்.
ஜல்லிக்கட்டு
" ஏர் இருந்தால் ஜனனம் இல்லையேல் மரணம்..." இதுதான் நமது பாரம்பர்யம், ஜல்லிக்கட்டில் நாங்கள் முழக்கிய வீர முழக்கத்தில் இந்த வரிகள்தான் என்னை மிகவும் கவர்ந்தவை..
ஆயிரம் கோவில்களுக்குச் சென்றாலும் நம் குலதெய்வ வழிபாட்டை மிகச் சிறப்பாக செய்வதில்லையா? அதே போல்தான் ஆயிரம் விளையாட்டுக்கள் இருந்த போதிலும் ஜல்லிக்கட்டில் இருக்கின்றது தமிழர்களின் பாரம்பரியத்தின் அடையாளம். அந்த விளையாட்டை நிறுத்தியதில் ஏற்பட்ட நம் மக்களின் எழுச்சிதான் தை புரட்சியாக வெடித்தது, என் மனதில் இருந்த அரசியல் உத்வேகம் அப்போது விழித்திட சில அரசியல் பதிவுகளும் என்னிடம் இருந்து வெளிப்பட்டன.
ஓட்டு போடுவது மட்டும் நமது கடமை இல்லைங்க. நம்மால் தேர்ந்தெடுக்கப்பட்டவர்கள் தான் தேர்ந்தெடுக்கப்பட்ட தொகுதி மக்களுக்கு அவர்களின் கடமைகளை சரியாகச் செய்யாவிடில் தட்டிக் கேட்கவேண்டும் என்பது எனது கருத்து, அவ்வாறு செய்ய தவறியதால் வந்த விபரீதம்தான் இன்று நம்மக்கள் படும் வேதனைகளும், கஷ்டங்களும், துயரங்களும், துன்பங்களும் எண்ணிலடங்காதது என்பதை யாரால் மறுக்க இயலும்? . .
தமிழ்நாட்டில் எல்லா இடங்களிலும் நீக்கமற நிறைந்திருக்கும் தண்ணீர் பஞ்சம், குடிக்க மட்டும் இல்லீங்க எதுக்குமே தண்ணீர் இல்லை, அண்டை மாநிலத்திலும் தண்ணீர் பிச்சை எடுக்கும் நிலை இன்று நமக்கு எழுந்துள்ளது. ஆனால் அவர்களோ சிறுபிள்ளைத்தனமாக தண்ணீர் தர மறுக்கிறார்கள்..உச்சநீதிமன்றம் எத்தனை தீர்ப்பு வழங்கினாலும் ஏமாந்து நிற்பவர்கள் நம் மக்களே!!
மக்கள் தொகையை மனதில் வைத்து வீணாகிப் போகும் மழை நீரை அதிகமாக தேக்கி வைக்க முயற்சி, நதி நீர் இணைப்பு இவைகள் மேற்கொள்ளப் படவில்லை. என்பது எனது கருத்து. ஆட்சியாளர்கள் இதை எப்படி மறந்தார்கள்? மக்களுக்கு மிக அடிப்படை தேவைகளைக் கூட நிறைவேற்ற தவறியதை எப்படி நம்மால் மட்டும் ஏற்றுக் கொள்ளமுடியும் ?? அடுத்து நமது நலனில் பங்கேற்கப் போவது யார் மக்களே??
நம் மக்கள் என்று தம் மனம்விட்டு சிரித்து மகிழ்ச்சியாக இருப்பார்கள்?
விடியலை காணமுடியுமா அல்லது ஒவ்வொரு விடியலிலும் புரட்சி, புரட்சி இது மட்டும்தான் அன்றாட வாழ்க்கையாகிப் போகுமா? இது போல் தினம் தினம் ஓராயிரம் முறை எனக்கு நானே யோசித்து எனக்குள்ளேயே பல முறை கோபப்பட்டுக் கொள்வேன். ஒரு சாமானியவளாக இதைத்தான் செய்ய முடியும் என்பது எனது ஆழ் மனதின் ஆதங்கமே !!
இதுபோல் பலவித எண்ணக் கலவைகள் மனதை தாக்கியதால் ஏற்பட்ட விளைவு வருத்தம்தான் மிஞ்சியது. அதன் தாக்கம்தான், என்னோட மனதில் கணன்று கொண்டிருந்த அரசியல் ஈர்ப்பு, ஜல்லிக்கட்டு என்ற வீர விளையாட்டின் போராட்டம்தான் என்னை அரசியல் பேச பிள்ளையார் சுழி போட்டது எனலாம்.
வன்மம் இல்லாத, நன்மை பயக்கும் திட்டங்களை மட்டுமே செல்படுத்த வேண்டும். தவறு செய்பவர்களின் தவறுகள் நிரூபிக்கப் பட்டால் கடுமையான தண்டனையை உறுதி செய்ய வேண்டும். தன்னலம் இல்லாத, அரசியல் ஞானியாக நல்ல மனம் படைத்த ஒருவரே ஆட்சியாளர்களுக்கு அறிவுரை செய்ய வேண்டும். அந்த அறிவுரையை அப்படியே ஏற்றுக் கொள்ளவேண்டும் என்பது அவசியம் ஆகாது. அதையும் பல மட்டத்திலும் விவாத்தித்து அனைவரும் ஏற்றுக் கொள்ளும்படியாக, நன்மை பயப்பதாக இருந்தால் மட்டுமே ஏற்றுக் கொள்ளலாம். ஆட்சியாளர்களுக்கு தன்னலம் அறவே இருக்கக் கூடாது. இன்னமும் ஒரு கோடி ஆசைகள் மனதில் இருக்கின்றது...
இது போல ஆட்சி அமைந்தால் கனவில் கண்ட நன்மைகள் அனைத்தும் நம்மக்களுக்கு போய் சேரும் என்பதில் சிறிதளவும் ஐயமில்லை. இது என்னோட கருத்து, இதே போல ஒத்தக்கருத்துள்ள எத்தனை பெண்கள் வெளியே சொல்ல முடியாமல் குமுறிக் கொண்டிருக்கிறார்கள் என்பதும் எனக்கு தெரியும்.
வாய்ப்பு கிடைத்தால் பெண்களாலும் நல்ல முறையில் அரசியலில் பரிமளிக்க முடியும் என்று என்னால் ஆணித்தரமாகக் கூற முடியும்.
******************
5. பெண்ணிடம் எடுக்கும் பேட்டியில் பெண்ணியம் பற்றி கேட்கலைனா இணைய சமூகம் நம்மை தள்ளி வச்சிரும். சமகாலத்தில் பெண்ணியம் என்பது பெண் சுதந்திரம் என்பதை தாண்டி இவ்ளோ நாள் நாங்க உங்களுக்கு அடிமையா இருந்தோம்ல, இனி நீங்க இருங்கன்னு சிலரால் பெண்ணியம் பரப்பப்படுது. இதற்கு உங்கள் கருத்தும், பெண்ணியம் பற்றிய உங்கள் பார்வையும்.
பெண்ணியம்: என்பதை தீவிரவாதம், பயங்கரவாதம் போன்ற சொற்களின் வரிசையில் சேர்ந்து விட்டதோ என்ற ஐயம் எனக்கு உண்டு. அதிக அச்சத்தை ஏற்படுத்தும் சொற்களாகவும் சமீபத்திய வாதங்கள் நிரூபிக்கின்றன. பெண்ணியம் தொடர்பான கேள்விக்கு தேவையான விளக்கமின்மைதான் இந்த அச்சத்திற்கு காரணம் என்பது எனது தாழ்மையான கருத்து.
பெண்ணியமென்றால் என்ன? சமூக, அரசியல், பொருளாதாரம் உள்ளிட்ட அனைத்திலும் ஆண்களுக்குச் சமமான உரிமைகளைப் பெண்கள் கொண்டிருக்க வேண்டும் என்பதை வலியுறுத்தும் கோட்பாடு' என்பதைக் கூறலாம். அதாவது, ஆண்களுக்கும் பெண்களுக்கும் சமமான உரிமைகளும் வாய்ப்புகளும் வழங்கப்பட வேண்டுமென்பதே, அதன் அர்த்தமாகும். பெண்ணியம் என்ற சொல்லில், அச்சப்படவோ அல்லது வெறுக்கவோ வைக்கும் எந்த அர்த்தமும் கிடையாது. ஆணுக்கும் பெண்ணுக்கும் சமவுரிமை இருக்க வேண்டும் அவ்வளவுதாங்க...ஆனாலும் எங்கே 50 / 50 ஆக உள்ளது? விடை இல்லா கேள்விக்குறியே அனைத்து மட்டத்திலும்.
பெண் என்பவள் திருமணத்திற்கு முன் பெற்றோர்களை சார்ந்திருக்கின்றாள், திருமணம் ஆனவுடன் கணவனை சார்த்திருக்கின்றாள். தனிமையில் வாழும் பெண்களை இன்னமும் இந்த சமுதாயம் சரியான கோணத்தில் பார்ப்பதில்லை. இதுதான் உண்மை. இதனால் சார்ந்திருக்க வேண்டியது என்பது கட்டாயமாகிப் போனது. அதனால்
சொந்தங்களிடம் தஞ்சம் தொடர் அவமானங்கள் எல்லாம் சாத்தியமே!
அந்த காலத்தில் ஒரு பெண் கூட்டு குடும்பத்தில் வாழ்ந்தாள். அவளுக்கு கணவனின் அரவணைப்பும், உறவுகளின் அரவணைப்பும், சேர்ந்தே கிடைத்தது. விட்டுக் கொடுத்து வாழ்ந்து, கணவனுக்கு எல்லாமாக இருந்து கணவனின் முன்னேற்றத்திற்கும் அவளின் பங்களிப்பு இருக்கும். "ஒவ்வொரு ஆணின் வெற்றிக்கு பின் ஒரு பெண் இருக்கிறாள்" என்று கூறுவார்கள். இந்த காலத்திலும் இப்படிப்பட்ட மனைவி இருக்கிறாள். அதில் எந்தவித மாற்றுக கருத்தும் இல்லை..
இன்னமும் சில நாட்டில் ஒரே விதமான வேலையாக இருந்தாலும் அதில் ஆணிற்கும் / பெண்ணிற்குமான சம்பளம் மாறுபட்டிருக்கும்.. இதற்கும் வரலாறு இருக்கின்றது. பெண்கள். சில இடங்களில் மட்டம் தட்டித்தான் வைக்கப் படுகிறார்கள்.. இதை யாராலும் மறுக்கவோ / மறக்கவோ முடியாது.
பல குடும்பங்களில் நான் நேரில் பார்த்திருக்கின்றேன், ஏதாவது காரணங்கள் கூறி அவளின் எண்ணங்களும், விருப்பங்களும் ஒடுக்கப்படுகின்றன. இதை நான் விளம்பரத்திற்காக எழுதவில்லை. சாட்சியாகி, வருந்திய நிகழ்வே. அப்பட்டமாக தெரிகிறது அந்த பெண் கூறுவதில் நியாயம் இருக்கின்றது என்று, ஆனாலும் அந்த பெண்ணாலும் சரி நம்மாலும் சரி எதுவும் செய்ய இயலவில்லை. என்பதுதான் நிதர்சனம் இது போல் ஏற்படும் அசாதாரண நிகழ்ச்சிகளால் பாதிக்கப்பட்ட பெண்ணின் மனம் தடுமாறுகிறது. நிதர்சனத்தில் சற்றே விலகினால் என்ன என்று யோசிக்க ஆரம்பித்து விடுகிறாள். அதன் விளைவு...
1. ஆண்கள் மேல் வெறுப்பு ஏற்பட்டு பெண்ணீயவாதியாக மாறி விடுகிறார்கள்.
2. சில பெண்கள் ஆணாதிக்கத்தில் இருந்து சற்றே விலகி தன்னிச்சையாக அதாவது மனம் போன வழியில் வாழ்வதைத்தான் பெண்ணீயம் என்கிறார்கள்.
சிலர் ஆண்களின் மேல் உள்ள வெறுப்பின் காரணத்திற்க்காக பெண்ணியம் பேசினால் அது தவறான கருத்தாகும். அதற்காக பெண்ணீய இயக்கத்தை முற்றிலும் தவறு என்றும் கூறிவிட முடியாது.
அவர்கள் எதிர்பார்க்கும் நியாமான கோரிக்கைகளை ( 50 / 50 ) நிறைவேற்றினால் இந்த இயக்கம் தன்னிறைவை பெற்றிடும்.
******
6. ப்ளாக் காலத்தில் ஒரு விசயத்தை ஆழ்ந்த புரிதலோடு எழுதும் பழக்கம் இருந்தது. முகநூலில் லைக் மோகம் எதையாவது எழுதினா போதும்னு ஆகிருச்சு. எந்த மாற்றத்தால் நீங்க ரொம்ப மிஸ் பண்ணும் பதிவர்கள் யார் யார்?
கண்டிப்பாக அருண்,
மற்ற நண்பர்களின் பதிவை அடிக்கடி படிக்க முடிவதில்லை என்றாலும் நேரம் கிட்டிய போதெல்லாம் பதிவை படிக்கும் பாக்கியம் இருக்கின்றது
பழமைபேசி அண்ணா -->அவரின் எழுத்து பழமையாக இருந்தாலும் ரசிக்கும்படியாக இருக்கும். இப்போது பொட்டி தட்டி சித்தராக வலம் வருகிறார்.
நான் மிஸ் பண்ணும் எனது ப்ளாக் நண்பர்கள்
ஜீவன் (தமிழ் அமுதன்), ஈரோடு கதிர், ச்சின்னபையன் அண்ணா, கார்க்கி, கேபிள் ஷங்கர், நசரேயன், குடுகுடுப்பை, உருப்புடாத அணிமா, ஸ்ரீனிவாசன் ராகவன் அண்ணா, அமு.செய்யது,
அமிர்தவர்ஷினி அம்மா, கபீஷ், சந்தனமுல்லை, விதூஷ், விக்னேஸ்வரிகண்ணா, வித்யா, தமிழரசி, ரசனைக்காரி ராஜேஸ்வரி, இயற்கை ராஜி
7. இணையத்தில் பெண்கள் தங்களையும், தங்கள் அடையாளங்களையும் முழுமையாக வெளிபடுத்திக்கொள்ளும் சுதந்திரம் அடைந்துவிட்டோமா? அதை பற்றிய உங்கள் கருத்து?
கண்டிப்பாக இல்லை!!!
இணையத்தில் பெண்கள் தங்களின் அடையாளத்தைக் காட்டிக் கொளவதில் தற்போதைய நிலைப்பாட்டை பார்க்கும் போது ஆபத்து கண்டிப்பாக இருக்கின்றது. அதனால் நட்புகளை தெரிவு செய்யும் போது கவனம் தேவை. நம்மை நன்றாக தெரிந்தவர்களிடம் நம் அடையாளம் எந்தவித பாதிப்பையும் ஏற்படுத்தாது. எல்லாவற்றிக்கும் மேலாக தன்னை முழுமையாக வெளிப்படுத்திக் கொள்ள சுதந்திரம் இருக்கின்றது என்றால் அதில் ஆபத்தும் கூடவே வருகின்றது. அதனால் பெண்கள் தனது அறிவு சார்ந்து, கொள்கைகள் பல கொண்டு, தனிமனிதக் கட்டுப்பாட்டுடன் தம்மை வெளிப்படுத்துவதில் முழு சுதந்திரத்தையும், பாதுகாப்பையும் தேடிக் கொள்ளமுடியும் என்பது எனது ஆணித்தரமான கருத்து..
இறுதியாக வால்பயன் என்ற அருணுக்கு
============================== =======
1 வாங்கிகட்டி கொண்டது:
நல்ல பகிர்வு.
எழுதிய ரம்யா அவர்களுக்கும் பகிர்ந்த தங்களுக்கும் வாழ்த்துக்கள்.
Post a Comment