வாங்க பேசலாம்!

நான் ஏன் நாத்திகனானேன்!
******************************************

கடவுள் நம்பிக்கை கொண்டவர்களை முட்டாள்கள் என்றோ, வாழ தகுதியற்றவர்கள் என்றோ நான் எங்கேயும் எப்போதும் சொன்னதில்லை, நான் ஏற்கனவே பொதுபுத்தி பதிவில் சொன்னது போல் “உங்களை சுயமைதுனம் செய்யக்கூடாது” என சொல்ல எனக்கு எப்படி உரிமை இல்லையோ, அதே போல் கடவுள் நம்பிக்கை கொள்ளக்கூடாது என சொல்லவும் உரிமை இல்லை!

ஒரு செயலின் விளைவை பொறுத்தே அது சமூகத்திற்கு நன்மை அளிப்பதா அல்லது தீமை அளிப்பதா என தீர்மானிக்கப்படுகிறது, அந்தளவில் கடவுளை மறுப்பதோ அல்லது ஏற்றுக்கொள்ளுதலோ குற்றம் அல்ல, பொருள் சார்ந்த சமூகத்திலிருந்து அறிவு சார்ந்த சமூகத்திற்கு மாறிய நாகரீக காலம் முதல்.. நம்பிக்கை, அதன் செயல் மற்றும் விளைவு அனைத்தும் விவாதத்துக்குள்ளாக்கப்படுகிறது, அவையனைத்தும் எண்களின் முடிவைப்போல முடிவிலியாக தான் இழுத்து கொண்டிருக்கிறது என்பது உண்மை!

சிறிய உதாரணத்துடம் சொல்ல முயல்கிறேன் -

ஒரு அறை, முழுவதும் இருள் சூழ்ந்து இருக்கிறது, நம்பிக்கையாளன் அதன் உள்ளே உயரிய எதோ ஒன்று இருக்கிறது என்கிறான், அதனை கடவுளாகவும் உருவகப்படுத்திக் கொள்ளலாம், மறுப்பாளான்(இல்லை என்ற நம்பிக்கை, நம்பிக்கையே இல்லை என்று பொருள் தராது, ஆகையால் அவநம்பிக்கையாளன் என்ற சொல்லாடலை தவிர்க்கிறேன்), அவை வெறும் இருள் மட்டுமே அல்லது நீ நினைப்பது போல் அது ஒன்றும் உயரிய பொருள் அல்ல அதை தெளிவுறாமல் குருட்டு(இருட்டு) நம்பிக்கை கொள்ளாதே என்கிறான்! இவையே கடவுள் நம்பிக்கையாளனுக்கும், கடவுள் மறுப்பாளனுக்கும் உள்ள ஆரம்ப விவாதப்புள்ளி.

நம்பிக்கையாளர்களின் மிக சொற்பமே அதை ஆராய்ந்து தெளிவுற விரும்புகிறார்கள், அவ்வாறு ஆராய்ந்தவர்களும் கடவுளும் இல்லை, கண்றாவியும் இல்லை என புதியதோர் ஆன்மீகபாதையை காட்டி சென்று விடுகிறார்கள், பின்னால் வருபவர்கள் அதை வைத்து கல்லா கட்டுவது வேறு விசயம்! கடவுள் இல்லை என்று நம்பிக்கையாளனே தெளிவுற்றாலும் அவனால் தீர்க்கமாக வெளியே சொல்ல முடிவதில்லை, சமூகம் என்னும் விளக்கமாறு அதன் பயன்பாட்டை பூர்த்தியடைய செய்ய மேல் முனையில் குஞ்சத்தால் கட்டப்பட்டிருக்க வேண்டும். குழுமமாக செயல்படுத்தல், தனிமனித ஒழுக்கம், பிறப்பின் பயனை மெய்பித்துவிட்டு செல்லுதல் போன்ற சமூக காரணிகளை கட்டுக்குள் வைத்திருக்க கடவுள்/மதம் என்ற குஞ்சம் தேவைப்படுகிறது அல்லது பட்டது!

ஆனால் இங்கே நடப்பது என்ன? விளக்கமாறு முழுவதும் குஞ்சம் கட்டப்பட்டிருக்கிறது, கடவுளின்/மதத்தை தேவை மறந்து என் கடவுள் பெருசு, என் மதம் சிறந்தது என்ற ஈகோ ஆரம்பித்து விட்டது, எல்லா முனைகளிம் குஞ்சம் கட்டபட்ட விளக்கமாறு இன்று தடித்த ஆயுதமாக காட்சியளிக்கிறது, என் மதம் அமைதியே உருவானது, அது அன்பை மட்டுமே போதிக்கிறது என்பவனை, இவன் அந்த மதத்தின் சிறப்பான பகுதிகளை மட்டும் பார்த்து பேசுகிறான் என நேர்மறையாக சிந்தித்தாலும் அவன் சொன்ன மதத்தின் செயல்பாடுகள் ஒருவேளை முதுகுபுறம் ஆயுதம் வைத்திருப்பானோ என எதிர்மறையாக சிந்திக்க் வைக்கிறது.



மதம், சடங்குகள் அதன் பயன்கள் இப்படியான இத்யாதிகளை ஒதுக்கி வைத்து ஏன் கடவுள், எப்படி கடவுள் என சிந்திக்க தொடங்கினாலே போதுமானது, நான் ஏற்கனவே சொன்னது போல் இருட்டறைக்குள் ஆராய்ந்து தெளிவுற நம்பிக்கையாளர்களுக்கு தைரியமோ அல்லது ஆர்வமோ இல்லை. முதலில் தோல்வி பயம் இரண்டாவது இத்தனை பேர் சொல்றாங்க, அது எப்படி இல்லாம இருக்கும் என்ற பொதுபுத்தி!

கொஞ்சம் சிந்தித்து பாருங்கள், இருட்டறைக்குள் எதோ உள்ளது என்ற நம்பிக்கையை, அதன் மறுப்பாளன் விஞ்ஞானம், தத்துவ ஆராய்ச்சி, உளவியல் பகுப்பு என பல வழிகளில் வெளிச்சத்தை உருவாக்கி அறையில் இருளை போக்கி கொண்டிருக்கிறான், இதெல்லாம் எல்லாம் வல்ல இறைவனால் மட்டுமே முடியும் என சொல்லப்பட்ட பல செயல்கள் மனிதனால் உருவாக்கப்பட்டு விட்டது, கடந்த 500 வருடங்கள் அறிவு சார்ந்த சமூகம் அதன் வீச்சை முழுவதுமாக செயல்படுத்த தொடங்கிவிட்டது, ஆனாலும் பிற்போக்கு பழமைவாதிகளால் உண்மையை ஏற்று கொள்ள முடியவில்லை.

இந்த விவாதம் சண்டைக்காக அல்ல, நீங்கள் எனது எதிரியோ விரோதியோ அல்ல. கடவுளை நீங்களும் பார்த்ததில்லை, நானும் பார்த்ததில்லை. ஆனால் உங்களை விட ஆர்வமாக இருட்டறைக்குள் வெளிச்சம் கொடுக்கும் வேலையை கடவுள் மறுப்பாளனே செய்து கொண்டிருக்கிறான் என்பதை நீங்களே அறிவீர்கள், நான் கேட்பதெல்லாம் ஒன்றே ஒன்று தான், வாருங்கள் இருவரும் தேடுவோம், விவாததின் தெளிவில் அறிவு சுடர் ஏற்றி இருளை போக்குவோம்!
அங்கே நீங்கள் சொன்னது போல் உயரிய பொருள் இருந்தால் அப்போதிலிருந்து நானும் கடவுள் நம்பிக்கையாளன், அது வரை நான் கடவுள் மறுப்பாளனாகவே இருக்க விரும்புகிறேன்!

இருட்டுக்கு டார்ச் அடிக்கும் முயற்சியில்!............

#வால்பையன்

2 வாங்கிகட்டி கொண்டது:

sharfudeen said...

கடவுள் சார்ந்த சிந்தனைகளில் பெருவாரியான / வெகுஜன சிந்தனைகளில் இருந்து மாறுவது என்பது ஒன்றும் தப்பில்லை...ஆனால் ஒருவனது ( ஆத்திக /நாத்திக ) தனிமனித வாழ்க்கை நடைமுறை கொள்கையை பார்த்த ஒருவர் " அட...இவரது கொள்கையும் /வாழ்க்கை நெறிமுறையும் நாமும் ஏற்றுக்கொள்ளும் அளவுக்கு நன்றாக இருக்கே " ( குறைந்த பட்சம் வெறுக்காத அளவுக்கு) என்று விரும்பும் அளவுக்கு இருக்கா என்று பார்த்தால் ...... புஸ் ....ஸ் ....ஸ் !!

-Sharfudeen
kodaikanal

Atheist said...

கடவுள் இல்லை என்று தெரிந்து கொண்டு அதை அவ்வாறே வெளியில் சொல்பவர்கள்களால் எந்தத் தீமையும் இல்லை. கடவுள் இருக்கிறார் என்று நிஜமாகவே ஆள் மனதில் நம்புவர்களாலும் எந்தத் தீமையும் இல்லை. கடவுள் இருந்தால் பரவாயில்லையே என நினைப்பவர்களாலும் எந்தத் தீமையும் இல்லை. ஆனால், கடவுள் இல்லைதான் எனத் தெரிந்து கொண்டு அவர் இருப்பதாக வெளியே சொல்லிக் கொண்டு அலையும் பெரும்பான்மையான நபர்கள் தாம் மனிதகுல விரோதிகள். தான் வாழப் பிறரைக் கெடுத்தாலும் பரவாயில்லை என நினைக்கும் ஒட்டுண்ணிகளால் தான் எல்லா மக்களுக்கும் பிரச்சனை. அறிவியல் ரீதியான தீர்வுகளுக்கு இவர்கள் ஒருபோதும் இடங்கொடுக்க மாட்டார்கள்.

மனிதகுலம் குரங்கில் இருந்து பரிமாணித்தபோதெ இத்தகைய மக்கள் வந்து விட்டனர். இவர்களால் மாற்றிச் சிந்திக்க முடியாது. எப்படி நம்மால் நாம் நம்புவதை மாற்ற முடிவதில்லையோ அதைப் போலவே அவர்களாலும் சுயனலம் சார்ந்த நம்பிக்கைகளை மாற்ற முடிவதில்லை.

என்னதான் கடவுளை நம்பாவிட்டாலும், தினந்தோறும் நடக்கும் நம்மைச் சுற்றிய நிகழ்வுகளை நம்மால் 100% கட்டுப் படுத்த முடியுமா? முடியாது. அப்படிக் கட்டுப் படுத்த முடியாத நிக்ழவுகளால் நமக்கு மரணம் கூட நேரலாம். அதிலிருந்து விடுபட வேண்டுமானால் மனதில் ஒரு அசட்டு தைரியம் வேண்டும். அதைக் கொடுப்பது கடவுள் நம்பிக்கை. அதனால் கடவுள் இருப்பது உண்மை என நாம் நினைக்க வேண்டியதில்லை. ஒரு நம்பிக்கைதான் மனிதனை முன்னோக்கிச் செலுத்துகிறது! அதற்கு கடவுள் இன்னும் தேவைப் படுகிறார்! இன்னும் ஒரு 30 அல்லது 40 வருடங்களில் கடவுளின் தேவை இருக்காது! மனிதனே கடவுள் ஆகி விடுவான்!

இந்த நூலைப் படிக்க வேண்டும் :
https://en.wikipedia.org/wiki/Sapiens:_A_Brief_History_of_Humankind

!

Blog Widget by LinkWithin