பொது புத்தி!

உளவியல் பொதுபுத்தியை எப்படி எளிமையாக விளக்குகின்றது என்றால்..

நீங்கள் ஒரு கடற்கரையில் நின்று அண்ணாந்து பார்த்துக்கொண்டு இருக்கிறீர்கள். கவனிக்க கடலை அல்ல. அண்ணாந்து பார்த்து கொண்டிருக்கிறீர்கள்.
உங்களை பார்க்கும் நபர் ஆர்வமுகுதியில் அவரும் அண்ணாந்து பார்ப்பார். இருவரை பார்த்து நால்வர் வருவர். அப்படியே எண்ணிக்கை கூடிக்கொண்டே போகும்.

இதை கூட்டு மனப்பான்மை அல்லது பெரும்பான்மையுடன் தன்னை இணைத்துக்கொள்ளும் குணம் என உளவியல் சொல்கிறது.

இந்த உளவியலை தான் தற்சமயம் ஊடக புரோக்கர்கள் பயன்படுத்திக்கொண்டிருக்கிறார்கள். செயற்கையாக கருத்து கணிப்பு என்ற பெயரில் அவர்களே யார் வெற்றி பெற வேண்டும் என தீர்மானிக்கிறார்கள். மக்களிடன் இருக்கும் குறைபாடு ஜெயிக்கும் பக்கம் நிற்க வேண்டும் என்ற மனப்பான்மை. அதனால் அவர்களுக்கு ஒரு பயனும் கிடைக்கபோவதில்லை. ஆனாலும், என்னால் ஜெயித்தார்கள் என்ற ஒன்றுக்கும் உதவாத திருப்தி பட்டு போவான் பொதுபுத்தி மனிதன்.

தேர்தல் என்பது 5 ஆண்டுகளுக்கு ஒரு முறை வருவது, வரும் ஐந்து ஆண்டுகளும் உங்களுக்கு அடிப்படை வசதிகளும். வாழ்வாதார உயர்வும் ஏற்படுத்த வேண்டியவர்கள் தான் உங்கள் பிரதிநிதியாக வரவேண்டும். உங்கள் சாதிகாரனோ, சரக்கு வாங்கி கொடுத்தவனோ அல்ல.

கடந்த 5 வருடத்தில் உங்கள் வாழ்வாதரத்தில் என்ன முன்னேற்றம் கண்டீர்கள்? இலவசமாய் பெற்ற மின் விசிறியும், மிக்ஸியும் இன்னும் ஓடிக்கொண்டிருக்கிறதா? அதனால் ஏறிப்போன உங்களின் மின் கட்டணத்தை கந்து வட்டிக்கு வாங்கி கொடுப்பது தான் நீங்கள் பெற்ற முன்னேற்றமா?

நல்லாட்சி என்பது நாடும், நாட்டு மக்களும் மகிழ்வாகவும் ஒற்றுமையாகவும் இருக்கவேண்டும். ஆட்சிக்கு வந்தவுடன் பரமகுடியில் நடந்த துப்பாக்கி சூடு ஞாபகம் இருக்கின்றதா? ஒரே பள்ளியில் படித்து, ஒன்றாய் விளையாடிய உன் நண்பன் உனக்கு சாதியால் எதிரியானான், சாதி எப்படி வந்தது, ஏன் வந்தது, யார் கொண்டு வந்தது கூட தெரியாமல் சாதிய பிரிவினைக்கு முன் நிற்கிறாய். இதை தடுக்காமல் வேடிக்கை பார்த்தோடு மட்டுமல்லாமல் தூண்டி விடுவதும் இந்த அரசு தான்.

நியாயமான முறையில் அரசு அனுமதி பெற்று மதுகடையை மூட போராடிய சசிபெருமாளை கடையை மூடுகிறோம் என வாக்குறுதி கொடுத்து கீழே இருக்காமல், இப்ப கீழ இருக்குறியா இல்ல ஃப்யர்சர்வீஸ் கொண்டு வந்து தண்ணீர் பீச்சி அடிக்கவா என மிரட்டியே அவர் தவறி விழுந்து செத்துபோனார். விளம்பரத்துக்கு செத்தார் என அவரை இழிவு படுத்தியது இந்த அரசு

கோவன் இருக்கும் வினவு இயக்கத்தை எனக்கு எட்டு வருடங்களாக தெரியும். அவர்களது பத்திரிக்கை பெயரே புதிய ஜனநாயகம் தான். அவர்கள் போராட்டம் என்றும் ஜனநாயக முறை தாண்டி வன்முறைக்கு போனதில்லை. அம்மா, அம்மா என சொல்லி கொண்டு ஊருக்கு ஊத்தி கொடுக்கும் மவராசியேன்னு பாட்டு பாடியதற்கு தேசதுரோக வழக்கு.

கோவன் கூட பெரிய மனுசன், வழக்கை சந்தித்து வெளியே வருவார். நாலு வயசு குழந்தை மதுவிலக்கு பிரச்சாரம் செய்ததற்கு தேசதுரோக வழக்கு. சட்டகல்லூரி மாணவி நந்தினி மதுவிலக்கு பிரச்சாரம் செய்ததற்கு கொலை மிரட்டல். அவர் தந்தையை கொல்லவே முயற்சி செய்தார்கள்.

ஊனமுற்றோர் தங்களுக்கு உதவி தொகையும், வேலை வாய்ப்பும் கேட்டதற்கு கண் தெரியாதவர், கால் இல்லாதவர் என பார்க்காமல் லத்தி சார்ஜ். விதவை உதவி தொகை ரத்து. முதியோர் உதவி தொகை குறைப்பு. தொழிலாளிகளின் ஃப்ராவிடண்ட் ஃபண்ட் பணம் 10 ஆயிரம் கோடிக்கும் மேல் எங்கே இருக்குன்னே தெரியல.

நிதி அமைச்சர் கஜானாவில் இருக்கின்றது என்கிறார். ஆனால் கல்வி துறைக்கு வழக்கபட்ட நிதியோ, ஆதி திராவிடர் நலனுக்கு வழக்கப்பட்ட நிதியோ, நீர்நிலை ஆதாரங்கள் பாதுகாப்புக்கு வழக்கப்பட்ட நிதியோ எதுவும் முழுமையாக பயன்படுத்தபடவில்லை. கடந்த 2011 ஆண்டு வரை 1.10 கோடியாக இருந்த தமிழகத்தின் கடன் ஐந்தே வருடங்களில் இரு மடங்குக்கு மேல் உயர்ந்தது

பேருந்து கட்டணம் உயர்வு, மின்சார கட்டணம் உயர்வு, பால் கட்டணம் உயர்வு. பருப்பு விலையில் இருந்து அனைத்து அத்தியாவசய பொருட்களும் விலை உயர்வு. இருந்தும் தமிழகத்தின் ஒவ்வொரு மனிதனுக்கும் கடன் அழுத்தப்பட்டிருக்கிறது. அதுவா வாழ்கை தரத்தை உயர்த்தியாக எண்ணுகிறிர்கள்.

சாதிக்காகவோ, பணத்துக்காவோ உங்கள் ஓட்டை விற்பீர்களேயானல் அது உங்கள் வீட்டு பெண்களை விற்பதற்கு சமம். ஐந்து வருடம் உங்களாக உழைக்கப்போகும் வேட்பாளருக்கு ஓட்டு போடுங்கள். சாதியவாதம்/மதவாதம் பேசும் கட்சி நம்முள் பிரிவினையை தான் தூண்டும்.

பேசுங்கள், ஐந்து வருடம் என்ன அனுபவித்தோம் என்று பேசுங்கள். வீட்டில் பேசுங்கள், நண்பர்களிடம் பேசுங்கள். டீ கடையில் பேசுங்கள். வாட்ஸ் அப்பில் பேசுங்கள். ஃபேஸ்புக்கில் பேசுங்கள். நீங்கள் விழிப்புணர்வு பெற்றால் மட்டும் போதாது. சகமனிதன் அக கண்ணை திறக்க வேண்டியதும் உங்கள் பொறுப்பு தான்

மனிதத்தை கொல்லும் கர்வம்!

சண்டையிட்டு சென்ற மனைவி அவளாக வருவாள் என காத்திருந்தான் நாகராஜ்.
வரவில்லை, போனில் அழைத்தும் தவிர்க்கப்பட்டான். வேற எண்ணில் இருந்து அழைத்தால் குரல் கேட்டதும் அணைக்கப்பட்டான். இறுதியாக நேரில் சென்றான்.
இப்பல்லாம் நான் குடிப்பதில்லை. இனியும் குடிக்கமாட்டேன். நீயும் சண்டையிடாதே. வா சேர்ந்து வாழலாம்.என்றான்.
நீயும் சண்டையிடாதே என்பதில் ஆரம்பித்தது சண்டை. நான் சண்டைகாரியா, நீ என்ன சொன்னாலும் பொத்திட்டு போகனுமா என பெரிதான சண்டை இறுதியில் வெளியே போடாவில் முடிந்தது.
வெளியே வந்தவன் நேராக போனது ஒயின்ஷாப். காலை வீட்டில் தூக்கில் இருந்து இறக்கப்பட்டான். அவன் மனைவி கத்தினாலும் கதறினாலும் இனி வருவானா?
அப்ப தானே மக்கா பார்த்துட்டு போனன்னு நாகராஜ் அம்மா அழும்பொழுது நம் ஈரக்கொலை அறுக்குது. சரியாக 2014 இதே நாள் அவனை பார்த்தேன்.
என்னை எப்போ பார்த்தாலும் பயங்கர மகிழ்வடைவான். சுறுசுறுப்பானவன். கடினமான வேலையா அது எப்படி இருக்கும் என்பான்.
என் ஒரே மகவும் போயிருச்சே மக்கான்னு அம்மா அழும் பொழுது நானும் மகன் தான்மான்னு ஆறுதல் சொல்ல முடியுமே தவிர உடன் பயணிக்க முடியாதுன்னு எனக்கு தெரியும். இம்மாதிரி வரும்பொழுது எதாவது மானிட்டரி ஹெல்ப் பண்ணலாம். அவ்ளோ தான்
என்னை குடைவதெல்லாம் அவனை கொன்றது எது?
அவன் குடிப்பழக்கமா அல்லது
அந்த பெண்ணின் ஈகோவா?
மாற்றிக்கொள்ளக்கூடியது எது?
யாரும் பிறக்கையில் குடிகாரன் இல்லை. அதே போல் கோவமும் எல்லாரிடமும் வராது. நமக்கு யார் உரிமை கொடுத்துள்ளாரோ அவர்கள் மீது கோவப்படலாம்.
என்னுடள் பயணிப்பவள். என்னில் பாதி, என் சுகதுக்கங்களில் பங்கெடுப்பவள், உடன் மகிழ்வது போலே சகிப்பதும் உறவில் ஒரு கடமை தானே, உரிமை கொடுப்பது உயிரை பறிக்கவா?
நட்பின் கதாபாத்திரங்கள் ஆயிரம் நம்மை கடந்துபோகும். நம்முடன் அவர்கள் ஒன்றும் ஒன்றும் ரெண்டு. நட்பிடன் காட்டும் அன்பை போல் ஆயிரம் மடங்கு பரிமாறிக்கொள்ளும் காதல் இணைவது ஒன்றும் ஒன்றும் பதினொன்று.
பரவாயில்ல நீ எடுத்துக்கோ என விட்டு கொடுத்து மகிழ்வது. நீ சந்தோசமா இருந்தியா என துணையின் மகிழ்வு கண்டு இன்பம் காண்பது வாழ்வை அர்த்தப்படுத்தும்.

கோவம் என்பது பிறர் செய்யும் தவறுக்கு உனக்கு நீயே கொடுத்துகொள்ளும் தண்டனை என புத்தர் கூறினார்.
நாகராஜின் அன்பு கோட்டையை கோபகல் எறிந்து தகர்த்த நாகராஜ் மனைவி ரெண்டு கைகுழந்தைகளுடன் இருக்கிறார். அது அவருக்கு தண்டனையா வரமா என்பதை காலம் அவருக்கு புரியவைக்கட்டும்.
இன்று அவள் அன்புக்காக ஏங்கலாம். அது போல் எத்தனையோ ஜீவன் பூமியில் வாழ்கிறது.
அதீத அன்பினால் வெறுத்து போகிறேன் என்பவர்களுக்கு, நீங்கள் அவர்கள் மனதில் நஞ்சை விதைத்து செல்கிறீர்கள். ஒன்று அது அவரை கொல்லும் அல்லது என்றேனும் ஒரு நாள் யாரோ ஒருவர் அந்த நஞ்சுக்கு பழியாவார்
உங்கள் ஈகோவினால் எதை வென்றீர்க்ள், யாரை வென்றீர்கள் என யோசித்துப்பாருங்கள். ஊரில் இன்னும் பல நாகராஜுக்கள் நடைபிணமாக திரிந்துகொண்டிருக்கிறார்கள்.
அன்பால் எதையும் வெல்லலாம் என்ற உலக கூற்றை மகாபொய்யாக்கிக் கொண்டுயிருக்கிறது உங்கள் ஈகோ.
வாழ்க்கையை அர்த்தமுள்ளதாக்குங்கள்.

காரணம்!

இன்று என்னை வாழ்த்தி பதிவிட்ட ஒருவர். எல்லாவற்றிற்கும் ஒரு காரணம் உண்டு. காரணம் இல்லாமல் எந்த செயலும் இல்லை என பதிவிட்டிருந்தார்.
நேற்று நான் விடிய விடிய யோசித்ததும் அதை தான்.
நான் கோவபட்டதின் காரணம் எனக்கு முக்கியத்துவம் தருவதில்லை, சரியாக பேசுவதில்லை என்று. அதே போல் எனக்கு முக்கியத்துவம் தராமல் இருக்க எதேனும் காரணம் இருந்திருக்கலாம். அதை நேரடியாக சொல்ல அவரால் முடியாமல் இருந்திருக்கலாம்.
அவருக்கு சினிமா பிடிக்கும்
அதனால் சினிமா விரும்பிக்களை பிடிக்கலாம்.
அவருக்கு கதை பிடிக்கும்
அதனால் கதை சொல்லிகளை பிடிக்கலாம்
அவருக்கு கவிதை பிடிக்கும்
அதனால் கவிஞர்களை பிடிக்கலாம்
அவருக்கு இசை பிடிக்கும்
அதனால் இசை விரும்பிகளை பிடிக்கலாம்
நான் கடைசியா பார்த்த பொழுது அவரது நெருங்கிய நட்பு வட்டத்தில் அவர்கள் தான் இருந்தார்கள்.
எனக்கு அரசியல் பிடிக்கும்
அரசியல் விரும்பிகளை தான் எனக்கு பிடித்திருக்கவேண்டும்
எனக்கு அறிவியல் பிடிக்கும்
அறிவியல் விரும்பிகளை தான் எனக்கு பிடித்திருக்கவேண்டும்
எனக்கு மனிதம் பிடிக்கும்.
மனிதம் விரும்பிகளை தான் எனக்கு பிடித்திருக்கவேண்டும்
யோசிக்கையில் என் மகிழ்வுக்காகவே சண்டை போட்டுள்ளேன். என்னுடனும் பேசு என்றாலும் என்னிடம் பேச என்ன இருக்கு என அவருக்கு தோன்றியிருக்கலாம்.
மூன்று நாள் ஒருவரை பற்றிய நினைவே உங்களுக்கு வரவில்லையென்றால் அவர் உங்கள் மனதில் இல்லை என்று உளவியல் கூறுகிறது.
இவ்ளோ நாள் எந்த தொடர்பற்று இருந்தும், எனக்கு வேலையே இல்லாத ஒரு இடத்தில் நான் இல்லையேன்னு என்று வருத்திக்கொண்டிருக்கிறேன்.
என்னை விட வேறுயார் மகிழ்வாய் வைத்துக்கொள்ள முடியும் என முட்டாள்தனமாக யோசித்து வந்திருக்கேன்.
ஒரு நண்பரை மிஸ் பண்றோம் என்றால் அவர் நம் மனதில் வந்து விட்டார் என்று அர்த்தம். அவரை மிஸ் பண்ணக்கூடாது என்பதற்காக எதையும் செய்ய துணித்தால் மனதில் ஆழ அமர்ந்து விட்டார் என்று அர்த்தம்.
அந்த ஆழத்துக்கு விடுந்து வெளியே எடுக்கத்தான் பல நாள் போராட்டமாக இருக்கின்றது. நான்கு வருடம் குழந்தைதனமாக புரிந்துவைத்துள்ளேன் என்னும் போது சிரிப்பு வருகிறது. நானே எனக்கு அமைத்துக்கொண்ட மாய உலகை உடைக்க சுத்தியல் செய்துக்கொண்டிருக்கிறேன்!....

தோல்வியும் கொஞ்சம் வேணுமடி!

5 வயசுல என்னை பெத்தவங்க பிரிஞ்சிட்டாங்க. அப்பா ரெண்டாவது கல்யாணம் பண்ணதும் சுயமா வாழ ஆரம்பிச்சிட்டேன்.
என் அப்பத்தா என்னை வழந்தாங்கன்னு சொல்லலாம்.
அவங்க மரகடை வச்சிருந்தாங்க.
சிலேட்டில் கூட்டல், பெருக்கல் கணக்கு போட சொல்லிட்டே இருப்பாங்க. என் நுண்ணறிவை வளர்த்தது அது
ரெண்டாவது படிக்கும் போது ஸ்கூலுக்கு கட் அடிச்சேன்னு என் கண்ணை கட்டி ரோட்டில் விட்டப்ப நான் பயப்படாம நடந்திருக்கேன்.
நாலாவது பசுமலை சி எஸ் ஐ ஹாஸ்டலில் படிக்கும் போது அங்க காணிக்கையா வரும் பணத்துட்டு அல்லது திருடிட்டு அப்ப இருந்த ஜெகதா தியேட்டரில் பில்லா பார்த்திருக்கேன். அப்ப தான் முதன் முதலா தம் அடிச்சிருக்கேன்.
எதையும் கற்றுக்கொள்ள வேண்டும் என்ற ஆர்வம் அப்பாவிடம் இருந்து வந்துருக்கலாம். அஞ்சாவது படிக்கும் போது டீச்சரால் முடியாத புதிரை விடிவிச்சு கொடுத்தேன்.
ஆறிலிருந்து ஈரோடு. எனக்கு புது உலகமாகவே தெரியல. மனிதர்களுடன் முதல் சந்திப்பிலேயே சகஜமாக பழகும் இயல்பு இருந்தது. என் செட் பசங்க எல்லாமே என்னை விட நாலு வயசு மூத்தவர்களாக இருந்தார்கள்.
ஆறாவது படிக்கும் போதே பார்ட் டைம் வேலைக்கு போனேன். தீபாவளிக்கு பட்டாசு கடை போடுவேன். ஏழாவது படிக்கும் போது லெண்டிங் லைப்ரேரி நடத்தினேன்.
நான் சாம்பாரிச்சதை காமிக்ஸில் இருந்து சரோஜா தேவி வரை படித்தேன். ஒன்பாதவதுக்கு மேல் படிக்க பிடிக்காமல் விட்டிட்டேன். இத்தனைக்கும் நான் படிக்கும் வரை ரெண்டாவது ரேங்க் கீழ் வாங்கியதில்லை. கணக்கில் 95 வாங்கினாலே வாத்தியார் என்னடா பிரச்சனைன்னு கேட்பார்.
14 வயசிலயே செக்ஸ்னா என்னான்னு தெரிஞ்சு போச்சு. அதிக தன்னம்பிக்கை காரணமா தெரியல. அப்ப இருந்தே நான் இப்படி தான். நீ என்ன சொல்றது நான் என்ன கேக்குறது ரகம்.
தோல்வியா அப்படின்னா எப்படி இருக்கும்னு கேட்கும் மனநிலை தான் அப்பெல்லாம். ஹோட்டல் வச்சு லாஸ் ஆகியும் சென்னையில் 28000 சம்பளத்தில் வேலை பார்த்தேன்.
குடும்பம் பிரிந்த போது கூட அவள் உரிமை, அவள் காதல்ன்னு வெளிய வந்துட்டேன். ஆனா முதல் முறையா தோல்வியை உணர்ந்த சமயம் மறக்க முடியாதது. என் தன்னம்பிக்கையை உடைத்து நொறுக்கியது அந்த ஈகோ
அப்பொழுது முதன் முறையா தோல்வியை பார்த்ததால் கிட்டதட்ட பைத்திய மனநிலைக்கே போயிட்டேன்.
அவ்ளோ பலவீனமா நான் உணர்ந்ததில்லை. திரும்ப உணரவும் விரும்பல
உளவியல் சிறு வயதிலேயே தோல்வியை கற்றுக்கொடுக்க சொல்லுது. என் குழந்தை பெஸ்ட் என நீங்கள் வளர்ப்பது எதேனும் தோல்வியில் பெரும் தாழ்வு மனப்பான்மையை உருவாக்கலாம்.
சிறு வயதில் நான் என் சூழலையோ, இழுப்புகளையோ தோல்வியா நினைக்கவில்லை அல்லது யாரும் சொல்லி தராமல் போயிருக்கலாம். ஈரோடு வந்ததில் இருந்தே அப்பத்தா நெருக்கமும் இல்லை.
தோல்வியின் வலி மோசமானது. முதன் முறை அனுபவிக்கும் போது கொல்லும். பின் வரும் தோல்விகள் மனதை மரத்து போக செய்யும். என் அனுபவத்தில் பார்த்தேன் அப்படி ஒருத்தியை.
சிலரால் தோல்விகளை கடக்க முடிவது மரத்து போனதால் மட்டுமல்ல. கன்ணிர் வற்றி போனதாலும் இருக்கலாம்.
இன்னும் எத்தனை தூக்கம் தொலைக்கும் நினைவுகளோ!

என் இனிய இயந்திரா!

நலமா என விசாரிப்பது உனக்கு பிடிக்காது, நல்லாயில்லைன்னா சாப்பிடமாட்டியா என எதிர் கேள்வி கேட்பாய். சம்ருதாயங்கள் தவிர்த்து நேரடியாகவே விசயத்திற்கு வருகிறேன்.

சென்ற கடிதத்தில் தற்கொலை என்பது தைரியமா, கோழைதனமா என்று கேட்ருந்தாய். இரண்டுமே பொருந்தும் தற்கொலைக்கு.. மரணத்தை மெய் உலகின் விடுதலை என்கிறார்கள் சில அறிஞர்கள். ஒரு சிலர் யாரோ ஒருவரை பழிவாங்கவும் கூட தற்கொலை செய்யக்கூடும். அதை விடு. நமக்கு அடுத்தவர்களை கொன்று தானே பழக்கம். தற்கொலை குறித்து நமக்கேன் ஆராய்ச்சி.

பேருந்து நிறுத்தத்தில் தலை கோதிகொண்டே உன்னை சைட் அடிக்கும் நீலசட்டைகாரனை பற்றி எழுதியிருந்தாய். இப்பொழுதும் வருகிறானா? பேச எதும் முயற்சி எடுத்துள்ளானா? நீயாக எதும் சமிஞ்சை கொடுத்தாதே. காதலிப்பதை விட காதலிக்கபடுவதே மயக்க அனுபவம். அந்த மயக்கம் பெண்களுக்கு மட்டுமே இயற்கை கொடுத்த வரம்.



கோடை வந்துவிட்டது. அதிகமாக ஊர் சுற்றாதே. எப்போதும் சிறிய குடை ஒன்று பையில் இருக்கட்டும். நிறைய தண்ணிர் குடி. அவன் பேசல, இவன் பார்க்கல என வருத்தப்பட்டுக்கொண்டிருக்காதே. நீ யாரிடமும் இறங்கி போக தேவையில்லை. உலகம் உன் காலடியில் கிடக்கட்டும். பொய்யாகவாவது எப்போதும் புன்னகையுடன் பிறரை எதிர்கொள்.

நீ எழுதும் கவிதையை விட உன் சினிமா விமர்சனம் தான் அழகிய கவிதை போல் இருக்கும். அதிலும் அந்த முதல் பேராவின் ரசிகன் நான். சமீபமாக நீ அதில் கவனம் செலுத்துவதில்லை. மொத்த சினிமாவின் உன் பார்வையை அந்த ஒன்றை பேராவில் கொடுத்துவிடுவாய். அதை ரொம்ப மிஸ் பண்றேன்.

சினிமா டவுன்லோடு செய்ய புதிய தளத்தின் முகவரி ஒன்றை உனக்கு குறுங்செய்தியாக அனுப்பியிருந்தேன். பார்த்தாயா? நான் குறுங்செய்தி அனுப்புவது குறித்து நீ எதுவும் எதிர்வினை செய்யவில்லை.

உன்னை அடைய முடியாமல், மொட்டைமாடி ஓர மரத்தில் குடியிருக்கும் குயில் பாடும் ஒலி கேக்கிறது. ஆசையாய் வளர்த்த நாயை பருவம் அடைந்ததும் தூக்கி கொடுத்துவிட்டாய், உன்னை அடைய முடியவில்லை என்ற அதன் ஓலம் இங்கு கேக்கின்றது. நான் அனுப்பிய குறுங்செய்தி உன்னை அடைந்ததா இல்லையா என்பது தான் தெரியவில்லை.

இரண்டு நாள் விடுமுறையை மகிழ்வாய் கழிக்க வாழ்த்துங்கள்

ஏன் முட்டாள்கள் தினம்!?

ஒரு விசயத்தை செய்யுறதுக்கு முன்னாடி நம்ம மக்கள் அதை ஏன் செய்யுறோம் என்று யோசிப்பதேயில்லை, அவன் செஞ்சான், நானும் செஞ்சேன், எங்க தாத்தா செஞ்சார், நானும் செஞ்சேன் என்பதே அனைவரின் பதிலும், சரி அவர் ஏனப்பா செஞ்சார் என்றால் அதுக்கு எதாவது அறிவியல் காரணம் இருக்கும் என்பார்கள், காதலனர் தினத்திற்கு ஒவ்வொரு வருடமும் வேலெண்டின் பெயர் ஞாபக படுத்தப்படுவதால் இன்னும் வரலாறு திரிக்கப்படாமல் இருக்கு, இன்னும் சில வருடங்களில் அம்பிகாபதி, அமராவதி மாதிரி அமரக்காதல் கொண்ட பாதிரியார் சட்டத்தால் தண்டிக்கபட்ட தினம் தான் காதலர் தினம் என்பார்கள்!, நம் மக்களுக்கு புரளியை கிளப்பி விடுவதென்றால் அல்வா சாப்பிடுவது மாதிரி!

பெரும்பாலான தினங்கள்(days) இங்கிலாந்திலேயே ஆரம்பிக்கப்பட்டதாக வரலாறு சொல்கிறது!, கொண்டாட்டத்திற்கும், ஐரோப்பிய கண்டத்துக்கும் எதோ சம்பந்தம் இருக்கும் போல பெரும்பாலான விழாக்கள் கூட அங்கே தான் ஆரம்பித்திருக்கின்றன!, முற்காலத்தில் ராஜாவுக்கு மலச்சிக்கல் இல்லாமல் கக்கா போனால் கூட விழாவாக கொண்டாடுவார்களாம், நல்ல வேளை தமிழ்நாட்டில் ”பாராட்டு விழா” என்ற பெயரில் நடப்பதால் உண்மையான காரணம் யாருக்கும் தெரிந்திருக்கவில்லை!, கள்ளன் பெருசா, காப்பான் பெருசான்னா, கள்ளன் தான் பெருசுன்னு ஒரு பழமொழி உண்டு, அங்கே அடிமட்டத்தில் இருப்பவன் பெருசு, ஜனநாயகத்தில் மட்டும் என்றுமே மக்கள் தான் முட்டாள்கள்!, ஐந்து வருடத்திற்கொரு முறை பெரிய முட்டாளாக ஆக வருடா வருடம் நாம் எடுக்கும் ட்ரைனிங்க் தான் ஏப்ரல் ஒன்னு என்று சென்னையில் வசிக்கும் ஒரு அதிர்ஷ்டகார ஞானி சிரித்து கொண்டே சொல்லுவார்!




முட்டாள்கள் தினம் கதையை சொல்ல வந்து நாம் முட்டாளான கதையை சொல்லி கொண்டிருக்கிறேன் பாருங்கள், வாங்க நாம முதல்ல அந்த கதையை பார்த்துட்டு வரலாம்!.

1550 வாக்கில் இங்கிலாந்தில் இருந்த பல செல்வந்தர்களில் முக்கியமான ஒரு செல்வந்தர் எட்வர்ட் மார்ஷல், அப்போதைய கெஜட்டில் மட்டும் அவர் 158 தொழில்கள் செய்து கொண்டிருந்ததாக பதிவாகியிருக்கிறதாம்!, வெகு சிறப்பாக தொழில் செய்து கொண்டிருந்த அவருக்கு 1579 ஆம் வருடம் ஏப்ரல் முதல் தேதி ஒரு மகன் பிறந்தார் அவரது பெயர் ஸ்டீவ் மார்ஷல், அது அவரது செல்ல மகனும் கூட, மூத்த மகன் ஒருவர் இருந்தாலும் அவர் ஒரு விபத்தில் இறந்த விட்டதாக மட்டும் தகவல் இருக்கிறது.

பெரும் செல்வமும், செல்லமும் கொண்ட ஸ்டீவ் படிக்க வீட்டிலேயே ஆசிரியர்கள் அமர்த்தப்பட்டார்கள், அவர்களுக்கு சொல்லி கொடுப்பதை விட, ஸ்டீவ் எதையும் உடைக்காமல் பார்த்து கொள்வதே முக்கிய பணீயாக இருந்தது! சன்னல் ஏன் பெருசா இருக்கு, இந்த ரொட்டி ஏன் சிறுசா இருக்கு என்ற அறிவு பூர்வமான கேள்விகளும் அவ்வபோது கேட்பதுண்டு!, ஆசிரியர்களும் வாங்கும் சம்பளத்துக்கு வஞ்சகம் செய்யாமல் வேலை பார்த்தார்கள், மேற்படிப்பு படிக்க விருப்பமில்லை என்றும், தனக்கு தொழிலை கவனித்து கொள்ள எல்லா தகுதியும் வந்துவிட்டது என சொல்லும் பொழுது அவரது தந்தைக்கு மிகவும் பெருமையாக இருந்தது, காரணம் ஸ்டீவ் அதை சொல்லும் பொழுது அவனுக்கு வயது எட்டு!


அந்த சமயம் சிரித்து கொண்டே மறுத்த தந்தை ஸ்டீவின் 21 ஆம் வயதில் மறுக்க முடியாத இக்கட்டில் சிக்கினார்! ஸ்டீவுக்கு 21 வயது ஆகும் பொழுது அவனிடம் கம்பெனியின் முழு பொறுப்பை ஒப்படைத்து விட்டு, தனது ஏழு மனைவியருடன் உலகை சுற்றி வர வாக்களித்திருந்தார், அவரது ஏழாவது மனைவி வாக்கு தவறினால் குதிரை வண்டிகாரனுடன் ஓடி போய்விடுவதாக ஏற்கனவே மிரட்டியிருந்ததால், வேறு வழியில்லாமல் அரைமனதுடன் கெம்பேனி பொறுப்பு ஸ்டீவுக்கு மாற்றப்பட்டது!, அடுத்த இரண்டு வருடத்தில் 158 கம்பெனிகளும் திவாலாகி ஸ்டீவ் வீட்டில் வந்து அமர்ந்தான், அதன் பிறகு அவனது வேலை யார் என்ன கதை விட்டாலும் உங்களை போலவே சீரியஸாக கேட்டு கொண்டிருப்பது! உங்களுக்கும் ஸ்டீவுக்கும் ஒரே ஒற்றுமை தான், இன்னைக்கு ஏப்ரல் ஒன்னு!


டிஸ்கி:சும்மா லுலுலாயி
😂😂😂😂😂😂😂😂😂

!

Blog Widget by LinkWithin