பெண்கள் தினம்!

இருபதாம் நூற்றாண்டின் துவக்கத்திலேயே பெண் தனக்கான பேச்சை பேசத் துவங்கிவிட்டாள். அதற்குமுன் அவ்வாறு பேசி இருந்தால் அது ஒரு பெரும் குற்றமாக கருதப்பட்டது.

அந்த நிலையில் இருந்து மாறி ஆணுக்கு சரி நிகர் பெண்கள் என்ற நிலை வந்துவிட்டது. பெண்கள் இன்று ஒரு பெரிய இமயம் போல் வளர்ந்து நிற்கின்றார்கள் என்றால் அது மிகையாகா.

பொதுவாக பெண்களை பற்றி நினைக்கும் போதே முதலில் ஒவ்வொருவர் நினைவிலும் வருவது, பெண்கள் என்றால் மென்மையானவர்கள், வலிமையற்றவர்கள் என்பதுதான்.

அந்த எண்ணத்தை புரட்டிப் போடவே நம் பெண்கள் செய்த பல வேலைகள் அனைவரின் கவனத்தையும் திசை திருப்புவதாக அமைந்தது.

பாரதி கண்டப் புதுமைப் பெண்களாம் இவர்கள்....

தலையில் கலவையை தூக்கி அதில் கிடைத்த வருமானத்தின் உதவியுடன் குடும்பத்தை ஆளாக்குபவளும் பெண்ணே!

தலைக்கு மேலே ஓடும் விமானத்தை ஒட்டி சகாப்தம் படைத்தவுளும் பெண்ணே!

இப்படி எல்லா துறைகளிலும் பல சாதனைகளை பெண்கள் செய்து முத்திரைகள் பதித்திருக்கின்றனர்.

முதலில் நமக்கு முன்னே நிற்கும் கேள்விகள்: பெண் சுதந்திரம் என்றால் என்ன?

கண்டிப்பாகப் பெண் சுதந்திரம் என்பது ஆண்/பெண் இருவரிடமும் உள்ளது...

கல்வி செல்வத்தை கொடுத்து சமுதாய அந்தஸ்த்தை உயர்த்திக் கொள்ள தந்தை முதல் விதை விதைக்கிறார். அதில் ஆரம்பிக்கிறது ஒரு பெண்ணின் போராட்டம்.

கிடைத்த கல்விச் செல்வத்தை பயன் படுத்த கையில் எடுக்கும் ஆயுதம்தான் வேலைக்கு செல்லுதல். இன்றைய கால கட்டத்தில் இது ஒரு நிர்ப்பந்தமாகிப் போனது என்பது உணமையான உண்மை.

திருமண வாழ்க்கையானாலும் சரி, தனிமையில் வாழ்வதானாலும் சரி, ஒரு பெண்ணிற்கு மிகவும் சவாலாக அமைவது அவளின் எதிர் கொள்ளும் திறனே!

வெற்றியானாலும் சரி, தோல்வியானாலும் சரி, அதை எடுத்துக் கொள்ளும் முறைதான் அவளை செம்மைப் படுத்துகிறது.

பண்பாடு, கலாச்சாரம், நாகரீகம் போன்றவற்றை மீறுவதுதான் பெண் சுதந்திரம் என்று எண்ணாமல், இவற்றுள் தானும் அடக்கம் என்று தனது மனதை பக்குவப் படுத்திக் கொள்ளுதலும் ஒரு பெண்ணின் மேன்மையான எண்ணத்தை வெளிச்சம் காட்டும் திறன் உள்ளது.

ஆணின் கையிலா பெண் சுதந்திரம்? பெண் எடுத்துக் கொள்வதிலா பெண் சுதந்திரம்? பெண்ணே பெண்ணின் சுதந்திரத்தை தடுப்பதிலா பெண் சுதந்திரம்? இல்லை சுதந்திரம் என்பது நம்மிடம்தான் (பெண்களிடம்தான்) உள்ளது என்பது எனது தாழ்மையான கருத்து.


எத்தனை கஷ்டங்கள் வந்தாலும் நமக்கென்று ஒரு எல்லைக் கோட்டை விதித்துக் கொண்டு வாழ்க்கையை நடத்துபவளே சுதந்திரமான பெண் எனபது என் தரப்பு வாதம். தன்னைச் சுற்றி ஒரு சக்கர வளையத்தை ஏற்ப்படுத்திக் கொண்டு தனக்கு தேவை இல்லாதவைகளை வளையத்திற்குள் இருந்து வேடிக்கை பார்க்க வேண்டும்.

சுதந்திரம் வெளியே இல்லை. பெண்ணாகிய உனக்குள்ளேதான் ஒளிந்து கொண்டிருக்கிறது. அதை தேடித் பிடித்து சாதகமாக மட்டுமின்றி, சமுதாய கண்ணோட்டத்திற்கும் ஏதுவாகப் பயன் படுத்தினால் ஒரு பெண்ணின் சுதந்திரம் - அது அவளுக்குக் கொடுக்கும் மதிப்பும் மரியாதையும் - இமயத்துக்கு உயராதோ?

பெண் ஒரு உண்மையான பெண்ணாக இருக்க சுதந்திரம் இல்லையென்றால் ஆணுக்கும் அதே நிலைதான். இதை உணர புரிதல் மிகவும் அவசியம். ஆமாம் நம் நிலையை முதலில் நாம் புரிந்து கொள்ளவேண்டும் என்ற எண்ணங்கள் ஒவ்வொரு பெண்ணிற்கும் மிகவும் அவசியம். பெண்களுக்கு விரோதி வெளியே இருந்து வருவதில்லை. ஒரு இக்கட்டான கால கட்டத்தில் அவளே அவளுக்கு விரோதியாகிறாள். அவசரம், விரக்தி தரும் வேதனை இவைகள் அவளின் யோசித்து முடிவெடுத்தல் என்ற ஆற்றலை விழுங்கி விடுகிறது.

அதே போல் சில சமூகத்தில் பெண்கள் பற்றிய, அவர்கள் மீது செலுத்தப்படும் வன்முறை பற்றிய, உரிமை மறுப்புப் பற்றிய விடயங்கள் கணக்கிலடங்கா. இது அங்கொன்றும் இங்கொன்றுமாக இன்றுவரை அரங்கேறியும் வருகின்றது. இவற்றில் இருந்து மீண்டு வந்து தனெக்கென ஒரு வாழ்வை - மகிழ்ச்சி மிக்க வாழ்வை - அமைத்துக் கொள்பவளே பாரதி கண்ட கனவுலக நாயகியாவாள்!

வேண்டாத மருமகள், அப்பாவிப் பெண்களுக்கு நடக்கும் கொடுமைகள், இவை அனைத்தும் இன்றும் நடந்து கொண்டிருக்கிறது என்பது அனைவரும் அறிந்த உண்மை. இது போன்ற அப்பாவி பெண்களுக்கு "பெண்கள் பாதுகாப்பு சட்டங்கள்" பற்றிய விழிப்புணர்ச்சி கண்டிப்பாக ஏற்படுத்த எல்லோரும் முன் வரவேண்டும் என்பது எனது தாழ்மையான வேண்டுகோள்.

பாதிக்கப் பட்ட பெண்கள் எல்லாம் முடிந்து விட்டது என்ற முடிவிற்கு வந்துவிட்டால்? அந்த எண்ணங்கள் மட்டுமே போதும் அவளை ஒரு மூலையில் உட்கார வைத்துவிடும். நெருங்கிய சொந்தங்களுக்கு மட்டுமில்லாமல் அவளுக்கே அவள் பாரமாகிப் போய் விடுவாள். எத்தனை முறை வீழ்ந்தாலும் அது தனக்கு ஏற்பட்ட வீழ்ச்சி என்று கருதாமல் அடுத்து எந்த செயல் நமக்கு மன அமைதி கிடைக்கும் என்ற முதல் யோசனையை முன் வைத்து, மெதுவாக முன்னேறி, அதில் ஒரு இலக்கு நிர்ணயம் செய்து கொள்ள வேண்டும்.

ஒவ்வொரு நிகழ்வுகள் கொடுக்கும் எரிச்சல், வேதனை, கோபம் இவைகளை மூலதனமாக வைத்து எடுக்கும் முடிவை திடமாகப் பிடித்துக் கொண்டு மெதுவாக, மிக மெதுவாக முன்னேற்றம் அடைய எண்ணங்களை செலவாக்கினால்; வெற்றி என்ற இலக்கை அடைந்து, வேடிக்கை பார்த்தவர்களை வேண்டிப் பார்க்க வைக்க கண்டிப்பாக முடியும் என்பதில் சிறிதளவும் ஐயமில்லை.

வாழ்வை வெறுத்தாலோ, வெறுக்கப்பட்டாலோ அதில் அமிழ்ந்து விடாமல் மீண்டும் மீண்டும் பிறவி எடுத்து புதுப் புது வேள்விகளை செய்ய தயாராக இருப்பவளே பாரதி கண்ட புதுமைபெண்! சோகம் என்ற சூறாவளியால் சுருண்டு போகாமல் எதையும் என்னால் சாதிக்க முடியும் என்ற திறன் ஒன்றே போதும் உன்னை இமயம் வரை உயர்த்துமே!

சோர்வை போர்வையாக்கிக் கொள்ளாமல் வேதனை என்ற அரக்கனை விரட்டும் மதுரம் தடவிய எண்ணங்கள் புதுப் பொலிவினைத் தரும் என்பதில் எள்ளளவும் சந்தேகமில்லை.

தொடர் துன்பங்கள் தீண்டிய போதும் நீ ஒரு தூரிகை தீண்டிய ஓவியம் போலல்லாமல் துன்பங்களை வெல்லும் ஆற்றல் படைத்த பெண்ணாக உயரும் மனம் உன்னிடம் தான் உள்ளது. அந்த திறன் மிக்க ஆற்றலை கையில் எடுத்தால் வெற்றிக்கனி மிக அருகில் பெண்ணே!

இரண்டு கைகளிலும் மிகச் சிறந்த கை தன்னம்பிக்கை. தன்னம்பிக்கையை முதல் மூலதனமாக் கொண்டால் போராட்டத்தின் வீரியம் சற்றே குறைய வாய்ப்பு உள்ளது. உனக்குள் இருக்கும் நம்பிக்கை என்ற ஆசானைக் கொண்டு, நீ நடந்து செல்லும் பாதைகளை மலர்ப் பாதைகளாக்கி, ஒவ்வொரு கசப்பான நிகழ்வுகளும் உனக்குள் மைல் கற்களாக உருவெடுக்க, உனக்கு நீயே வெற்றிக் கனிகளை பெற்று வாழ்வாங்கு வாழ வழி வகுத்துக்கொள் பெண்ணே!!

பூமித்தாயை உனது கால்கள் முத்தமிட்டு நடக்கும் நடையில் நீ ஒரு ஜான்சி ராணி! நிமிர்ந்தால் நீதான் இமயம்! ஓடினால் நீதான் காட்டாறு! வீசினால் நீதான் தென்றல்! எழுந்தால் நீதான் ஆர்பரிக்கும் கடலலை!

இத்தனை மகிமைகளைப் பெற்ற நீ, வானத்தில் ஒளிரும் வால் நட்சத்திரமாக திகழ உன்னால் முடியும் என்ற உறுதியினை உன் மனதில் சிம்மாசனமிட்டு அமரச் செய்தால் உன்னை வெல்ல இப்பூவுலகில் யாரோ!!


உங்கள் ரம்யா!!


********************
எழுதி, நமது வலைப்பூவில் வெளியிட சம்மதமும் அனுப்பி நமக்கு இந்த வாய்ப்பளித்த ரம்யாவுக்கு நன்றி

45 வாங்கிகட்டி கொண்டது:

உமர் | Umar said...

நல்லதொரு எண்ணத்தை வெளிப்படுத்திய ரம்யாவிற்கு வாழ்த்துகள்.

நசரேயன் said...

வாழ்த்துக்கள் ரம்யா

ஸ்ரீதர்ரங்கராஜ் said...

என்னடா நல்லாயிருக்கேன்னு பாத்தேன் .நீ எழுதலையா?

Rajeswari said...

வாழ்த்துக்கள் ரம்யா + வால்.

இராகவன் நைஜிரியா said...

வாழ்த்துகள் ரம்யா + வால்.

// சுதந்திரம் என்பது நம்மிடம்தான் (பெண்களிடம்தான்) உள்ளது //

சரியான வரிகள்.

Unknown said...

வாழ்த்துகள் ரம்யா...நன்றி வால்

Chitra said...

பண்பாடு, கலாச்சாரம், நாகரீகம் போன்றவற்றை மீறுவதுதான் பெண் சுதந்திரம் என்று எண்ணாமல், இவற்றுள் தானும் அடக்கம் என்று தனது மனதை பக்குவப் படுத்திக்கொள்ளுதலும் ஒரு பெண்ணின் மேன்மையான எண்ணத்தை வெளிச்சம் காட்டும் திறன் உள்ளது.

......... மதில் மேல் பூனை நடை. very nice.

ரம்யாவுக்கு பாராட்டுக்கள். பகிர்வுக்கு நன்றி.

பழமைபேசி said...

Optimism is the key! job, well done!! Hope, you two won't mind if I share this with my groups...

அன்புடன் அருணா said...

படிச்சுட்டு வரும் போதே இது வால் எழுதினது மாதிரி இல்லையேன்னு நினைச்சுட்டே.....அட! ஆமா ரம்யா எழுதியது....பூங்கொத்து ரம்யாவுக்கும் பகிர்ந்த உங்களுக்கும்.

அது சரி(18185106603874041862) said...

பெண் சுதந்திரமோ ஆண் சுதந்திரமோ, சுதந்திரத்திற்கு மிக முக்கியமான விஷயம் பொருளாதாரம்...

பெண்களுக்கு பொருளாதார சுதந்திரம் இருக்கும் பட்சத்தில் வளர்ச்சி மிக விரைவாக இருக்கும் என்பது என் எண்ணம்...

(அதே சமயம் கலாச்சாரம், பண்பாடு, மதம், ஜாதி என்ற போர்வையில் வரும் அடிமைப்படுத்தும் விலங்குகளையும் உடைக்க வேண்டும்)

சைவகொத்துப்பரோட்டா said...

மிக தெளிவாக எழுதி உள்ளீர்கள் ரம்யா.

pradeep said...

நன்பர் வால்,

சூப்பர் கட்டுரை.பாராட்டுக்கள்.மிக சிறப்பு.

Uma said...

தெளிவான பதிவு. பாராட்டுக்கள்.

பிரேமா மகள் said...

நீங்க பெண்ணியம் பேசறீங்களா? இல்லை பெண்களுக்கான உரிமை பத்தி பேசறீங்களா?

அகல்விளக்கு said...

நல்ல கருத்து.....

வாழ்த்துக்கள் ரம்யா...

கண்ணகி said...

ஏமாந்துட்டேன்... வாலுன்னா இதுதான்.. இருந்தாலும் இருவருக்கும் வாழ்த்துக்கள்..

எத்தனை கஷ்டங்கள் வந்தாலும் நமக்கென்று ஒரு எல்லைக் கோட்டை விதித்துக் கொண்டு வாழ்க்கையை நடத்துபவளே சுதந்திரமான பெண் எனபது என் தரப்பு வாதம். தன்னைச் சுற்றி ஒரு சக்கர வளையத்தை ஏற்ப்படுத்திக் கொண்டு தனக்கு தேவை இல்லாதவைகளை வளையத்திற்குள் இருந்து வேடிக்கை பார்க்க வேண்டும்.

பிடித்த வரிகள்..ரம்யா..
.

தமிழ் அமுதன் said...

///திருமண வாழ்க்கையானாலும் சரி, தனிமையில் வாழ்வதானாலும் சரி, ஒரு பெண்ணிற்கு மிகவும் சவாலாக அமைவது அவளின் எதிர் கொள்ளும் திறனே!///

உண்மை...!
நல்லா சொல்லி இருக்கீங்க ரம்யா...!
''உன் அனுமதியின்றி உன்னை யாரும் அடிமைபடுத்திவிட முடியாது'' -ஒரு பழமொழி

பெரிய பதவியில் இருந்து வெற்றி அடையாதவர்களும் உண்டு சிறிய பதவியில் இருந்து கலக்கியவர்களும் உண்டு..! சவாலை சவாலை எதிர்கொள்ளும் திறனே ஒருவரை தீர்மானிக்கிறது...!

பெண்கள் அமைதியாக ,மென்மையாக,அன்பாக எப்படி வேண்டுமானாலும் இருக்கட்டும்
ஆனால்..! சவாலை எதிர்கொள்ளும் விசயத்தில் மட்டும் ஒரு ராணுவ தன்மையுடன் இருக்கவேண்டும்..!

''பெருமைக்கும் ஏனைய சிறுமைக்கும் தத்தம்
கருமமே கட்டளைகல் ''

மங்குனி அமைச்சர் said...

நல்லா இருக்குங்க

க.பாலாசி said...

நான்கூட நீங்கதான் சொல்றீங்களோன்னு நெனச்சேன்....

க.பாலாசி said...

பகிர்வுக்கு நன்றி தலைவரே....

Anonymous said...

நான்கூட நீங்கதான் சொல்றீங்களோன்னு நெனச்சேன்....//
;-))

Anonymous said...

துவக்கத்திலேயே பெண்களுக்கு சவாலாக அமைவது அவளின் நிமிர்ந்தால் நீதான் இமயம்!என்ற சக்கர வளையத்தை ஏற்ப்படுத்திக் அதை மீறுவதுதான் இன்றைய கால கட்டத்தில் விரக்தி தரும் முடிவெடுப்பதில் கண்டிப்பாக முடியும் என்பதில் சிறிதளவும் ஐயமில்லை.

இரண்டு கைகளிலும் பெண் எடுக்கும் ஆயுதம்தான் வன்முறை ஒரு உண்மையான பெண்ணாக காட்டாறு!
ஓடினால் நீதான் ஒவ்வொருவர் நினைவிலும் காட்டாறு!விதை விதைக்கிறாரயா ?

பாதிக்கப் பட்ட ஆணுக்கும் உரிமை மறுப்பு பல செய்து புரட்டிப் போடவே கிடைத்த கல்வி அவளை செம்மைப் படுத்துகிறது.

உணர ஆணின் புரிதல், தனக்கு ஏற்பட்ட வீழ்ச்சி என்று கருதாமல் வலிமையற்றவர்கள் என்ற நிலையை இருந்து வேடிக்கை பார்க்க வேண்டும் என்பதுதான் இன்றுவரை அரங்கேறியும் உள்ளது.
நிலை
ஆணுக்கு மன அமைதி இல்லாத நிலை ஆளாக்குபவளும் பெண்ணே

பெண் ஒரு உண்மையான பெண்ணாக இருக்க எரிச்சல், வேதனை, கோபம் இவைகளை மூலதனமாக வைத்து எடுக்கும் அவளின் கணக்கிலடங்கா திறன் ஒன்றே போதும் பெண்களை இமயம் வரை உயர்த்துமே!

பாராட்டுக்கள். பகிர்வுக்கு நன்றி.

வெள்ளிநிலா said...

படிச்சுட்டு வரும் போதே இது வால் எழுதினது மாதிரி இல்லையேன்னு .....- :)

Anonymous said...

சரளமா சத்தமேயில்லாமல் மழை பெய்த மாதிரி வர்ணம் பூசாத வார்த்தைகள் தாங்கிய பதிவு...வாழ்த்துக்கள் அருண் ரம்யா...

T.V.ராதாகிருஷ்ணன் said...

வாழ்த்துக்கள் ரம்யா +வாழ்த்துக்கள் ரம்யா

நன்றி arun

butterfly Surya said...

வாழ்த்துகள் ரம்யா.

நன்றி வாலு..

ராமலக்ஷ்மி said...

மிக அருமை ரம்யா. வாழ்த்துக்கள்! நன்றி வால் பையன்!

கிருஷ்ண மூர்த்தி S said...

Ms.ரம்யா!

பெண் எப்போதுமே பேசிக் கொண்டு தான் இருக்கிறாள்.அதுவும் தனக்காக, தன்னைச் சார்ந்ததாக மட்டுமே!

அப்புறம் வால்ஸ்!

மகளிர் ஒதுக்கீடு மசோதா நிறைவேறினால் தான், வால்பையனுடைய பதிவிலும் ஒதுக்கீடு வரும் போல!

ரம்யமான ஒதுக்கீடு!

அடுத்த பதிவு உங்கள் குட்டிப் பெண்ணிடமிருந்து, எப்போ வரும்?

வால்பையன் said...

//மகளிர் ஒதுக்கீடு மசோதா நிறைவேறினால் தான், வால்பையனுடைய பதிவிலும் ஒதுக்கீடு வரும் போல!//

ரம்யாவில் பேட்டி ஒன்று ஏற்கனவே என் பதிவில் வந்துள்ளது!

ஈரோடுவாசி said...

வாழ்த்துக்கள் ரம்யா....
நன்றி தல....

Dr.Rudhran said...

வாழ்த்துகள்

ரோஸ்விக் said...

//பண்பாடு, கலாச்சாரம், நாகரீகம் போன்றவற்றை மீறுவதுதான் பெண் சுதந்திரம் என்று எண்ணாமல், இவற்றுள் தானும் அடக்கம் என்று தனது மனதை பக்குவப் படுத்திக் கொள்ளுதலும் ஒரு பெண்ணின் மேன்மையான எண்ணத்தை வெளிச்சம் காட்டும் திறன் உள்ளது. //

அருமையான கட்டுரை ரம்யா. வாழ்த்துகள்.

பகிர்ந்தமைக்கு நன்றி வால்...

Eswari said...

அனைத்து வரிகளும் வைரம் பதிந்த வரிகள்
அருமையான கட்டுரை ரம்யா.
வாழ்த்துகள்.

ரோகிணிசிவா said...

well said !,

its u who owns u !

cheena (சீனா) said...

அன்பின் ரம்யா - இனிய மகளீர் தின நல்வாழ்த்துகள் ( லேட்டாச் சொன்னாலும் லேட்டஸ்டாச் சொல்வேன் ) - நல்லதொரு உரையினை எழுதி - அதனைப் பகிர அனுமதித்த நல்ல உள்ளம் வாழ்க ! - வாலு - நன்றி - நல்வாழ்த்துகள்

பித்தனின் வாக்கு said...

நல்ல கட்டுரை. அருமையான கருத்துக்கள். நன்றி இரம்யா. வெளியிட்ட வால்ஸ்க்கும் எனது நன்றிகள்.

சாமக்கோடங்கி said...

பொறி தெறிக்கும் எழுத்து நடை... உங்களிடமே இருக்கிறது உங்கள் உரிமை...

வாழ்க..

நன்றி வால்பையன் அவர்களே,...

Thamira said...

வம்படியாக திணிக்கப்பட்ட இறுதி வரி வால் நட்சத்திரம் தவிர்த்து சிறப்பானதொரு பகிர்வு.!

வாழ்த்துகள் ரம்யாதேவிக்கும், வால்பையனுக்கும்.!

COMMON MAN said...

சர்வம் சக்திமயம்..:))

Jawahar said...

பெண்களுக்கு கல்விச் சுதந்திரம் தந்த போதே அவர்களுக்கு எல்லாச் சுதந்திரமும் வந்தாகி விட்டது. பெண்ணடிமைத்தனம் என்பதே டிப்பெண்டன்ஸ்தானே? கல்வியும் வேலையும் கிடைத்தாகி விட்டால் டிப்பெண்டன்ஸ் இல்லை. இண்டிபெண்டென்ஸ்தான். ஒரு படி மேலே போய் இன்றைக்கு ஆணும், பெண்ணும் இண்டெர்டெபெண்டன்ஸ் நிலைக்கு வந்தாயிற்று.

தினம் பெண்கள் என்று இருப்பவர்களுக்கு பெண்கள் தினம் புரியாது.

அவர்களுக்கு இந்த இடுகை ரொம்பப் பயன்படும்!

http://kgjawarlal.wordpress.com

Thenammai Lakshmanan said...

மிக அருமை ரம்யா..

பகிர்வுக்கு நன்றி வால்பையன்..

நீங்க எழுதியதுன்னு நினைத்து படித்து வந்தேன்..:))

வால்பையன் said...

பெண்களுக்கு நம்பிக்கை எப்படி இருக்க வேண்டும் என்ற உதாரண பெண்மணி ரம்யா தான் இதை எழுத வேண்டும் என்று நினைத்தேன் தேனம்மை!

ராமலக்ஷ்மி said...

இன்றைய வலைச்சரத்தில் ரம்யாவின் இந்தப் பதிவு. நன்றி.

Arul Miku Kollang Kondan Ayyanar kovilL.- said...

மகளிர் ஆதி காலத்தில் பெண்கள் அடிமைப்படவில்லை.பெண்களைவைத்துதான் குடும்ப்பமே இருந்தது இருக்கிறது.பிர்கலத்தில்தான் இந்த பாகுபாடு போன வார புதியதலைமுறைஇதழில் திரு மாலன் அவர்கள் கட்டுரையில்,இதை பற்றி மிக விரிவாக ஆராய்ச்சி கட்டுரை போல் எழுதிஉள்ளார்.உங்கருத்துக்கள் நன்று வாழ்க வளமுடன் l

Arul Miku Kollang Kondan Ayyanar kovilL.- said...

ஆணும் பெண்ணும் நிகரெனக் கொள்வதால்; அறிவில் ஓங்கி இவ் வைய்ந் தழைக்குமாம்

!

Blog Widget by LinkWithin