நண்பர் ஜீவ்ஸ் விட்ட பஸ் இது.
முதலில் ரவியண்ணன் பற்றி சில தகவல்கள்.
அவுங்கப்பா ஒரு ரிட்டயர்டு புரபஸர், ரவியண்ணன் ஈரோட்டில் கேபிள் நடத்தி கொண்டிருந்த போது எனக்கு பழக்கம், ஆதியிலேயே டெக் வைத்து கேபிள் போட்ட காலத்திலிருந்து கேபிள் நடத்தியவர் பின் அதை விற்று விட்டு கிளம்பிவிட்டார், அவர் ஒரு இயற்கை விரும்பி, வனப்பிரியர். கோவையில் இருக்கும் மேல்முடி என்ற மலையை எங்களுக்கு அறிமுகப்படுத்தி வைத்தவர்.
நீள்வட்ட பாதையில் சுற்றி கொண்டிருக்கும் சூரியனில் இரண்டு முறை குளிர்காலமும், இரண்டுமுறை வெப்பகாலமும் வரவேண்டுமே என எனது நீண்ட நாள் சந்தேகத்தை தீர்த்து வைத்தவர், இரண்டு அங்குல பி.வி.சி பைப் துண்டுகளை வைத்து டெலஸ்கோப் செய்து சிறுவயதில் எங்களை அசத்தியவர். இன்று அவர் நம்பும் ஒன்றை புரியவைக்க மிகவும் கடினப்படுகிறார்!
பலமுறை என்னிடம் சொல்லியிருக்கிறார் அவரது புரிதல்கள் பற்றி பதிவாய் எழுத, அவரது கருத்துகளில் எனக்கு உடன்பாடில்லாவிட்டாலும் அது எனக்கு புரிந்திருந்ததே அதற்கு காரணம்!
அவரது கருத்தை எனது புரிதலில் சொல்ல வேண்டுமானால் “ஒரு மரம் சாய அதிலிருந்த குருவி கூடு தான் காரணம் என்கிறார்” . கேயாஸ் தியரி மாதிரி என்றேனும் ஒருநாள் என்னுடய புரிதல் தவறு என்றோ, அல்லது அதற்கு வேறு விளக்கமோ அவர் சொல்லக்கூடும், மேலும் அவரது புரிதல்களை விளக்குவது பதினான்கு ரீல் படத்தில் இடையில் ஒரு ரீல் மட்டும் காட்டுவது, அதை புரிந்து கொள்வதற்கு என்னை போல் வேலை வெட்டி இல்லாமல் இருந்திருக்க வேண்டும்!
என்னுடய புரிதல்களை சுருக்கமாக சொல்ல முயற்சிக்கிறேன்!
அதற்கு முன் சில முன்கதை சுருக்கங்கள்!
சூரிய குடும்பத்தில் மூன்றாவதாக இருக்கும் பூமியில் மட்டுமே நீர் ஆதாரம் மிகமிக அதிகபடியாக உள்ளது, அதற்கு காரணம் பூமியின் தட்பவெப்பநிலை, நமக்கு பின் இருக்கும் செவ்வாய் கிரகம் பூமியை விட அதிக வெப்பத்தை உள்வாங்கும் தன்மையுடயது என்பதை இவ்விடத்தில் நியாபகபடுத்துகிறேன்!
பலகோடி ஆண்டுகளுக்கு முன் பூமியில் ஏற்பட்ட மோதலின் காரணமாக பூமியை சுற்றி பரந்த தூசி படலம் சூழ்ந்தது, சூரியனின் வெப்பம் நேரடியாக தாக்க முடியாமல் பூமி குளிர்ந்தது, இறுக்குநிறை கொள்கையின் படி குளிர்ந்த பூமியின் எடை கூடியவுடன் அதன் ஈர்ப்பு விசையும் அதிகமானது, பூமியை சுற்றிய ஹைட்ரஜன், ஆக்சிஜன் மூலக்கூறுகள் ஒன்றினைது நீராக உருவெடுத்தது, தொடர்ச்சியான மழை பூமியை மேலும் குளிர்வித்தது.
அணுவின் உட்கருவாக நியூட்ரான், தன்னை தானே பெருக்கிக்கொள்ளும் நியூக்கிளியஸாக மாறிய தற்செயல் நிகழ்வு பிரபஞ்ச வரலாற்றில் மிகமிக முக்கியத்துவம் வாய்ந்தது(அதை பற்றி யாரும் ஆராய்ச்சி பண்றாங்களா தெரியாது). ஊடுருவிய சூரியஒளியை பயன்படுத்தி பச்சையம் மூலம் ஒளிச்சேர்கை செய்து ஆக்சிஜனை வெளிவிடும் தாவரங்கள் முதலில் தோன்றின, ஹைட்ரஜனும், ஆக்சிஜனும் சேர்ந்து தொடர்ச்சியான மழையை பூமியில் உருவாக்கின!
ஒருகாலத்தில் முற்றிலும் சூழப்பட்ட பூமியின் உள்ளிருக்கும் அவுட்டர்கோரில் ஏற்பட்ட அழுத்தவிசையின் காரணமாக எரிமலைகள் தோன்றி புது புது தீவுகளை உருவாக்கின, தற்போதிருக்கும் நிலப்பரப்பு தோன்றியது, தொடர்ந்து நடைபெற்று கொண்டிருக்கும் ஆவியாதல் வினை நிலப்பரப்பில் மழையாக பெய்தது, ஆறுகளாக அடித்து செல்லப்படும் நீரில் மண்ணில் இருக்கும் உப்புகள் பல கோடி ஆண்டுகளாக கடலில் போய் சேர்ந்தது(கவனிக்க - எந்த வேதத்திலும் கடல் உப்பு நீராகவே படைக்கட்டதற்கான ஆதாரங்கள் இல்லை, அப்படியே படைத்திருந்தாலும் அது ஏன் என்ற காரணமும் இல்லை).
இதிலிருந்து ரவியண்ணன் என்னிடம் சொன்னதின் என் புரிதல்
வெப்பம் குறைவாக இருக்கும் பகுதிகளில் நீர் உறைநிலையை அடைந்தது, இது எல்லாருக்கும் தெரிந்த அறிவியல் விதி, ஐஸ்கட்டியின் மீதி உப்பை தூவினால் அதன் உருகுநிலை மாறுபடும், அதாவது உருகுவதற்கு அதிக காலத்தை எடுத்துக்கொள்ளும். வட தென் துருவங்களில் சேர்ந்திருக்கும் தொடர்ச்சியான பனிபடலங்கள் பூமியின் மீது தொடர்ச்சியான அழுத்தத்தை கொடுத்து கொண்டிருக்கிறது என்பது அவரது வாதம், நிலப்பரப்பில்லாத வடதுருவ ஆர்டிக் பிரதேசத்திலும் அதே நிலை அழுத்தம் கொடுக்கிறது என்கிறார்(இங்கே தான் நான் முதன்முதல் முரண்பட்டேன்).
அதிக உப்பின் காரணமாக பனிபடலங்கள் உருகாமல் தொடர்ந்து சேர்ந்து கொண்டே இருக்கிறது, அதாவது குளோபல் வார்மிங் காரணமக பூமி வெப்பமடையவில்லை, குளிர்ந்து கொண்டு இருக்கிறது என்கிறார். பல கோடி ஆண்டுகளாக சிறுக சிறுக சேர்ந்த உப்பின் அளவே அனைத்திற்கும் காரணம் என்றும், அதை குறைத்தால் மட்டுமே பூமியை காப்பாற்ற முடியும் என்றும் சொல்கிறார்.
உதாரணமாக அழுத்தம் காரணமாக அதாவது ஒரு கால்பந்தின் மீது காலை வைத்து அழுத்தினால் அதன் விரிவு விசை நடுப்பகுதில் செயல்படும் என்பது போல் பூமி தட்டுகள் நகர்ந்து பூகம்பத்தையும்(சுனாமி) எரிமலையையும் உருவாக்குகிறது என்கிறார்!
இது உண்மையாகவே இருந்தாலும் இதை எப்படி தடுக்கப்போகிறார் என்று என்னிடம் சொன்னதில்லை, இவர் முனிசிபால்டி வாட்ச்மேனிலிருந்து நாசா விஞ்ஞானி வரைக்கும் அனுப்பிய மடல்களுக்கும் இதுவரை எந்த பதிலும் இல்லை, ஆனால் பாவம் மனுசன் தனியா கத்திகிட்டே இருக்கார்.
அவர் சொன்னதிலிருந்து எனது புரிதல்களை எழுதியிருக்கேன், இதில் அவருக்கு மாற்று கருத்தும் இருக்கலாம், அதை அவரே வந்து விளக்கி சொன்னால் தான் ஆயிற்று!, இது தான் பிரச்சனை என்றால் இதற்கான தீர்வையும் அவர் தான் சொல்ல வேண்டும்!
***************
ரவியண்ணன் உலக விஞ்ஞானிகளுக்கு விடுத்துள்ள அறைக்கூவல்
அண்ணா, ரொம்ப நாள் சொல்லிகிட்டே இருந்திங்க, இன்னைக்கு எழுதிட்டேன் சந்தோசமா!