எனது அலுவலகம் இருக்கும் இருக்கும் இடத்திற்கு அருகில் இருக்கும்
டாஸ்மாக் கடையில் எனக்கு குடிக்க பிடிக்காது, அன்பு தொல்லைகளே அதற்கு காரணம். கொஞ்சம் தண்ணி, கொஞ்சம் சிப்ஸ் என்று நம் டேபிளில் இருக்கும் அனைத்தையும் காலி செய்து விடுவார்கள்.
ஒரு சாயங்கால வேளையில் இதமான குளிரில் கொஞ்சம் குடிக்கலாம் என்று தோன்றியது, நண்பர்களை அழைக்க என்னிடம் தொலைபேசி இல்லை. அந்த தொல்லை தொலைந்து விட்டது, வேறு வழியின்றி அந்த கடைக்கு சென்றேன், இம்மாதிரியான கடைகளில் இன்னொரு பிரச்சனை நாம் கேட்பது கிடைக்காது, அவர்கள் கொடுப்பதை நாம் வாங்கி கொள்ளவேண்டும்.
இவ்வளவு தூரம் வந்துவிட்டோம், இங்கேயே செல்வோம் என்று கிடைத்ததை வாங்கி உள்ளே சென்றேன், ஆச்சரியமான காட்சியாக உள்ளே ஒருவரும் இல்லை.
சந்தோசமாக அமர்ந்தேன், பார்மேனிடம் ஆர்டர் செய்தால் மேலும் மனஉளைச்சல். பழவகைகள் கிடையாது. ஜில்லென்று தண்ணீர் பாட்டில் கிடையாது. வேறு வழியின்றி தண்ணீர் பாக்கெட்டுகள் இரண்டு ஆர்டர் செய்து உட்கார்த்தேன்.
நான் எப்போதும் மிகவும் ரசித்து, ருசித்து குடிக்கும் பழக்கம் உடையவன். மிகவும் மெதுவாக குடித்து கொண்டிருந்தேன், ஒரு பெக் அடித்து விட்டு அடுத்து என்ன பதிவு போடலாம் என்று யோசித்து கொண்டிருக்கும் வேளையில், "தம்பி" என்று ஒரு குரல், சுமார் ஐம்பது வயது மதிக்கத்தக்க ஒரு முதியவர் என்னருகில் நின்றார். கொஞ்சம் தண்ணி தற்ரிங்களா என்று பவ்யமாக கேட்டார்.
முதியவரின் தோற்றம் அவர் அன்றாடம் கூலி வேலைக்கு செல்பவர் என்று அப்பட்டமாக காட்டியது, பாதி தண்ணீர் பாக்கெட்டும் காலியாக இருந்ததால் அவரிடம் கொடுத்தேன், பாட்டிலை திறந்த அவர் அதில் பாதியை ஒரு டம்ளரில் ஊற்றினார், அதில் கொஞ்சம் தண்ணீர். பாட்டிலில் இருந்த மீதி சரக்கில் கொஞ்சம் தண்ணீர், டம்ளரில் இருந்ததை மிக சாதரணமாக குடித்து கீழே வைத்தார். அதை பார்க்கும் பொது என்னையறியாமல் எனக்கு முகச்சுளிப்பு ஏற்பட்டது.
ஏன் பெரியவரே தண்ணீர் கொஞ்சம் சேர்த்து தான் குடிக்கலாமே என்றேன். என்னை தீர்க்கமாக பார்த்து கொண்டே பீடியை ஆழமாக உறிஞ்சினார். எனக்கு அப்போதே தெரிந்து விட்டது இங்கே ஒரு சொற்பொழிவு நடக்கப்போகிறது என்று.
"தம்பி உன்னையை மாறி தான் நானும் குடிச்சிக்கிட்டு இருந்தேன்.
ஆனா இந்த தண்ணியை ஊத்தி குடிக்கிறதுக்கு ராவாவே குடிச்சிரலாம்ன்னு தோனுச்சு, ஆனா குடிக்கவே முடியாதுன்னு இந்த தண்ணியை ஊத்திகிட்டேன்"
"என்னங்க கேட்டவுடனே கொடுத்ததுக்கு நக்கலா"
"அட உங்களை சொல்லல தம்பி. இந்த தண்ணியோட தரத்தை சொல்றேன்"
"ஒ, அத சொல்றிங்களா, என்னங்க பண்றது நாற்பது பைசா தண்ணீக்கு ரெண்டு ரூபா வாங்குறாங்க"
"அட காசு போனா பரவாயில்ல தம்பி, இந்த சக்கையை குடிச்சு எங்க சொரணை இருக்க போதுன்னு சொன்னேன்"
"சக்கையா"
"ஆமா, மழை தண்ணீ எவ்வளவு ருசியா இருக்கு, அது தானே ஆத்துல வருது, அதுக்கு நடுவுல மிசின போட்டு இருக்குற சத்தையெல்லாம் கரண்டா உறிஞ்சிட்டு வெறும் சக்கையை தானே அனுப்புறாங்க."
"கரண்ட உறிஞ்சுராங்க்களா."
"ஆமா தம்பி உங்களுக்கு தெரியாது.
இந்த அணுகுண்டு மின்சாரம்ன்னு பேப்பர்ல போடுறாங்கல்ல அது வந்தா தான் இந்த தண்ணிக்கு விடிவு காலம் பொறக்கும்."
"அது உண்மையிலேயே அணுகுண்டு மின்சாரம் தான், அது வந்தா நமக்கு சாவு மணி தான் அடிக்கும்."
"நீங்க படிச்சு என்னத்த கண்டிங்க, டெல்லில இருக்குற பெரியவங்கல்லாம் அது தெரியாமலா அதை செய்ய சொல்றாங்க."
"ஆனா விஞ்ஞானிகளே அது வேண்டாம்னு சொல்றாங்களே."
"அவனுங்க காசு வாங்கிருப்பாங்க தம்பி."
"ஏன், அரசியல்வாதிகள் காசு வாங்கிருக்க மாட்டாங்களா, அமெரிக்காகிட்டருந்து"
"தம்பி, நீங்க ஏட்டிக்கு போட்டியா பேசுறிங்க, உங்க அரை பாக்கெட் தண்ணிக்கு வேணா ஒரு ரூபா கொடுத்துறேன், இப்படியெல்லாம் பேசுனா ஊருக்குள்ள உங்கள பைத்தியம்ன்னு சொல்வாங்க, வரட்டுமா."
என்ன கொடும சார் இது...........