என் கட்டுரைக்கு வந்த கேள்விகளுக்கு என்னால் முடிந்த விளக்கத்தை கொடுக்க முயற்சிகிறேன்
ஆசிரியர்கள் மட்டுமே போராடவில்லை, அரசு பணியாளர்கள் அனைத்து துறையில் இருந்து இந்த போராட்டத்தில் கலந்து கொண்டுள்ளனர். அவர்களது கோரிக்கை, மத்திய அரசு 7வது ஊதிய கமிசன் சொன்ன படி சம்பளம் கொடுக்கப்பட்டிருக்க வேண்டும், ஆனால் 21 மாதங்களாக அரசு அந்த ஊதிய கமிசன் பரிந்துரையை மதிக்கவேயில்லை, சரி யாருக்குமே தான் தரவில்லை, ஏன் போராட்டம் என்ற கேள்வி எழுகிறதா? அது தான் இல்லை, ஏழாவது ஊதிய கமிசன் பரிந்துரையின் படி ஐ,ஏ,எஸ்/ ஐ.பி,எஸ் மற்றும் நீதிதுறையில் அனைவர்களுக்கும் சம்பளம் உயர்த்தி நிலுவை தொகையும் கொடுக்கப்பட்டு விட்டது. ஏமாற்றப்படுவது இடை மற்றும் கடை நிலை ஊழியர்கள் மட்டுமே. அந்த நிலுவை தொகையை தான் கேட்கிறார்கள், யாரும் பிச்சை கேட்க வில்லை,
மத்திய அரசின் புதிய பென்சன் திட்டம் நாடு முழுவதும் உள்ளதே, ஏன் தமிழகம் மட்டும் எதிர்க்க வேண்டும் என்பது அடுத்த வாதம்.
நாடு முழுவதும் உள்ளது என்பது ஏற்புடையதல்ல. பல மாநிலங்கள் அதை எதிர்த்துக்கொண்டு தான் இருக்கிறன., காரணம் என்ன?
பங்கு வணிக ஆலோகரகான நான் பரிந்துரைப்பது உங்கள் வயதுக்கு தகுந்தாற்போல் ரிஸ்க் எடுங்கள் என்று, ஆனால் அரசோ இவர்களிடம் பணத்தை வாங்கி அதை பங்கு வணிகத்தில் முதலீடு செய்து அதில் வரும் லாபத்தில் இவர்களுக்கு பென்சன் தருவார்களாம். தற்போது இருக்கும் அரசின் பொருளாதார கொள்கை என்பது நீண்டகால பலனளிக்கும் திட்டமாக தெரியவில்லை, இவர்கள் திட்டமிடதலும் மக்களுக்கு சிக்கலை உருவாக்குவதாகவே இருக்கிறது. மேலும் ஊழியர்களின் பிடித்தம் செய்யப்பட்ட பணத்தின் தற்போதைய நிலை என்ன என்பதும் தெரியவில்லை. அதன் வெள்ளை அறிக்கை கேட்கிறார்கள். அவர்கள் பணம் என்னானது என கேட்பதில் என்ன தவறு கண்டீர்கள்?
நீட் தேர்வை ஏன் அரசு பள்ளி ஆசிரியர்கள் எதிர்க்கவில்லை?
சில வருடங்களுக்கு முன்பு வரை தமிழகம் மட்டுமல்லாது இந்தியா முழுவதும் நுழைவு தேர்வு இருந்தது. ஆனால் அது சமூக நீதிக்கு எதிரானது. தாழ்த்தப்பட்ட/பிற்படுத்தப்பட்ட மக்கள் கடைசி வரை சமநிலைக்கு வர வாய்ப்பை நுழைவு தேர்வு தரபோவதில்லை என்பதை அறிந்து சமூகநீதியின் மேல் அக்கறை கொண்ட அன்றைய ஆட்சியாளர்கள் நுழைவுதேர்வை ரத்து செய்து இடஒதுக்கீட்டிற்கு மதிப்பளித்து கட்-ஆஃப் மார்க் முறையில் மருத்துவபடிப்பிற்கு வாய்ப்பளித்தனர், ஆனால் இட ஒதுக்கீடு என்றாலே ஒவ்வாமை அடையும் உயர்சாதி மற்றும் உயர்சாதியின் பால் பற்று கொண்ட ஆட்சியாளர்கள் நீட் தேர்வை கொண்டு வரும் பொழுது இது தனியார் கல்லூரியில் மருத்துவம் பயில ஆகும் செலவை குறைக்கும் என்றார்கள்., ஆனால் சமூக நீதியை மறந்தார்கள். அனிதாவை யாரும் மறக்க முடியாது
நுழைவு தேர்வை ரத்து செய்தது அரசின் கொள்கை முடிவு என்பதால், அதில் தலையிட முடியாது என நீதிமன்றம் அறிவித்துவிட்டது, அப்போதும் ஆசிரியர்கள் எதுவும் கருத்து சொல்ல வில்லை. நீட் தேர்வுக்கும் அவர்கள் கருத்து கூற முடியாது, இது தானா உங்கள் கல்வியின் தரம், போட்டி தேர்வுக்கு கூட உங்களால் தயார் செய்யமுடியாதா என்ற கேள்வி தான் திருப்பி வரும், நியாயமாக இதை ஒட்டுமொத்தமாக எதிர்க்க வேண்டியது தமிழக மக்களும் சமூகநீதியை காக்க வேண்டிய தமிழக அரசும் தான், ஆனால் தற்போது தமிழக அரசின் நிலை உங்களுக்கே தெரியும், ஜெயலலிதா இருந்தபொழுது கூட நீட்டில் இருந்து விலக்கு வாங்கி வைத்திருந்தார், இவர்கள் மத்திய அரசு வீட்டிற்கு ஒருவரை கொன்று விடுங்கள் என்றாலும் சரின்னு தலையாட்டுவார்கள் போல...
பள்ளிகளில் அடிப்படை வசதிக்காக ஏன் போராடவில்லை?
மத்திய அரசும், மாநில அரசும் தனது பட்ஜெட்டில் கல்வி மற்றும் சுகாதாரத்திற்கு குறிப்பிட்ட தொகையை ஒதுக்குகிறது, ஆனால் அது முழுமையாக தேவைப்படும் பள்ளிகளுக்கு போய் சேருகிறதா என்பதே இங்கே கவனத்தில் கொள்ளவேண்டும், அடிப்படை தேவைகளுக்கு நிதி கேட்டால், அரசிடம் பணம் இல்லை, பள்ளியை மூடிவிடலாம் என சொல்லும் அரசிடம் என்ன கேட்க முடியும், பெற்றோர்-ஆசிரியர் சங்கம், முன்னாள் மாணவர்கள் சங்கம் மூலம் நிதி திரட்டி அரசு பள்ளிகள் அடிப்படை வசதியை செய்து கொண்டிருக்கிறார்கள். சமீபத்தில் ஒரு ஆசிரியர் தனது நகைகளை விற்று பள்ளி கட்டுமானத்திற்கு உதவினார், சிறந்த ஆசிரியர் விருது பெற்ற ஒரு ஆசிரியர் தனக்கு வந்த பணத்தை அந்த பள்ளிக்கே செலவு செய்தார், கொடுமை என்ன தெரியுமா? அந்த ஆசிரியர் நேற்று கைது செய்யப்பட்டுள்ளார்
குறைந்த மாணவர்கள், ஒரு ஆசிரியர் பள்ளி தேவையா? மூடுவதில் என்ன தப்பு?
நீங்கள் ஒரு பேருந்தில் வெளீயூர் சென்று கொண்டிருக்கிறீர்கள், பாதி வழியில் அனைவரும் இறங்கி நீங்கள் மட்டுமே பேருந்தில் இருக்கிறீர்கள், ஒரு ஆளுக்காக ஓட்ட முடியாது, இறங்கி போயான்னு சொன்னா உங்கள் மனநிலை எப்படி இருக்கும், அவர் சொல்வதும் நியாயம் தானேன்னு இறங்கி நடந்து போவிங்களா?
கல்வி என்பது அடிப்படை உரிமை. மேல்தட்டு வர்க்க சிந்தனையால் அடிதட்டு மக்களின் வாழ்வியலை புரிந்துகொள்ளவே முடியாது என்பது இதிலிருந்து தெரிகிறது.
மக்கள் தொகை உயர்ந்து கொண்டே இருக்கிறது. கிராமபுறங்களில் இருக்கும் பள்ளிகள் சும்மா வரவில்லை, இங்கே வசிக்கும் அடிதட்டு மக்கள் கல்வி அறிவு பெறவேண்டும் என்ற நோக்கத்தில் கொண்டு வரப்பட்டவை, அதை மூடிவிட்டால் அவர்கள் அரசு பள்ளிக்கு நீண்ட தூரம் செல்ல வேண்டும் அல்லது கடன் வாங்கி தனியார் பள்ளியில் சேர்க்க வேண்டும், ஆனால் ஒரு பொழுதும் மூடிய பள்ளிகளை அரசு திரும்ப திறக்காது, ஏனெனில் அவர்களுக்கு அடிதட்டு என்றல்ல, மக்களை பற்றியே எந்த கவலையும் இல்லை
நாம் வாங்கும் ஒவ்வொரு பொருளுக்கும் எஜுகேசனல் செஸ் என்ற பெயரில் வரி கட்டி வந்தோம், அடிதட்டு மக்களும் தான். கல்வி நமது உரிமை, அதை தரமாக தர வேண்டும் என நாம் தான் கேட்க வேண்டுமே ஒழிய எவன் எப்படி போனா எனகென்ன என்ற மனநிலை, நாளை உங்களை நிச்சயமாக பாதிக்கும், உங்களால் தப்பிக்க முடிந்தாலும் உங்கள் தலைமுறையை பாதிக்கும், நம் உரிமையை கேட்டு பெறுவதில் என்ன தவறு இருக்கிறது. மூடி விடலாம் என சுலமாக சொல்லி விடலாம், இன்று அரசுக்கு நாம் தரும் உரிமை நாளைக்கு அனைத்து பொது துறைகளும் நட்டத்தில் இயங்குகின்றன என சொல்லி மூடிவிடுவார்கள், நாடே தனியார்மயாகி நிற்கும், இது தான் உங்கள் ஆசை என்றால். அதை தான் மேல்தட்டு வர்க்க சிந்தனை எங்கிறேன்
அரசு பள்ளிகளில் கிண்டர் கார்டன் வகுப்பு வரும் பொழுது அங்கன்வாடிகள் எதற்கு?
கிண்டர் கார்டன் வகுப்புகளை குழந்தைகளுக்கான வதைக்கூடம் என்பேன் நான், கல்வியில் சிறந்து விளங்கும் பின்லாந்து நாட்டில் ஏழு வயதில் தான் பள்ளியில் சேர்கிறார்கள், நாம் தான் ஓட்டபந்தயம் போல் நம் குழந்தை முதலாவதாக வர வேண்டும் என்று அவர்களின் சிறு வயதிலேயே மன அழுத்ததை கொடுக்கிறோம், ஆனால் அங்கன்வாடிகள் அப்படி அல்ல. வெளிநாட்டில் வேலைக்கு செல்லும் தம்பதியினர் குழந்தைகள் காப்பகத்தில் விடுவது போல் தான் செயல்படும்
பல குழந்தைகளுக்கு மத்தியில் விளையாட்டாகவே அவர்களின் சமூக பிணைப்பு வளரும், அங்கன்வாடியில் பரிட்சை இல்லை, அதனால் அங்கே ஓட்டபந்தயமும் இல்லை, சிறந்த ஊட்டசத்து மிகுந்த உணவு கொடுக்கப்படுகிறது. படித்த ஒரு ஆசிரியருக்கும், படிக்காத ஒரு சமையல் அம்மாவிற்கும் வேலை கிடைக்கிறது, அதை கொடுக்க வேண்டியது அரசின் கடமை, வருவாய் இல்லையென்றால் மதுபானத்தின் விலையை பத்து மடங்கு உயர்ந்துங்கள். ஆடம்பர பொருள்களுக்கு வரியை கூட்டுங்கள். குழந்தைகள் வாழ்வில் ஏன் விளையாடுகிறீர்கள். மேலும் ஆரம்ப மற்றும் நடுநிலை பள்ளியில் மாணவர்களுக்கு பாடம் எடுக்கும் ஆசிரியரை பச்சிளம் குழந்தைகளுக்கு பாடம் எடுக்கச்சொல்வது வேடிக்கையாக இல்லையா?
குறைந்த சம்பளத்தில் வேலை செய்ய தனியார் பள்ளி ஆசிரியர்கள் தயாராய் இருக்கும் பொழுது இவர்களை ஏன் தொங்க வேண்டும்?
உலகில் உங்கள் வளர்ச்சியை உங்களை தவிர யாராலும் தடுக்கமுடியாது, உங்களை தடுப்பது உங்கள் பொறாமை தான். உங்கள் குறிக்கோளை நோக்கி ஓடாமல் அடுத்தவன் எப்படி ஓடுறான்னு பார்த்துகிட்டு ஒரே இடத்தில் நிற்கிறீர்கள். தனியார் பள்ளி ஆசிரியர்களுக்கு சம்பளம் குறைவு என்பது யார் தவறு
அரசு தனியார் பள்ளிகளுக்கு கட்டணம் நிர்ணயம் செய்ய ஒவ்வொரு பள்ளியின் செலவு கணக்குகளை கேட்டது, அவர்கள் கொடுத்த கணக்கு படி கிண்டர் கார்டன் வகுப்பு ஆசிரியருக்கே 20000 சம்பளம் கொடுக்க வேண்டும், அதை கேட்டு சண்டை போட அந்த ஆசிரியர்கள் தயாராய் இல்லை, வேலை இல்லாமல் இருப்பதற்கு இதுவாவது கிடைக்குதே என்று இருக்கிறார்கள்., ஆக உங்கள் கோவம் தனியார் துறையின் மீதோ, அதை கண்டுகொள்ளாத அரசின் மீதோ வராது, அரசு பள்ளி ஆசிரியர்கள் மீது தான் வரும், தமிழகத்தில் ஆசிரியர்கள் தவிர பல அரசு துறைகள் இருக்கின்றது, அவர்களெல்லாம் எதுக்கு இவ்வளவு என்று கூட சொல்வதில்லை நீங்கள், ஆசிரியர் பணி என்பது உங்களுக்கு அவ்வளவு எளிமையானதாக தெரியிகிறது போல....
ஆசிரியர்கள் ஏன் அரசு பள்ளிகளில் தங்கள் குழந்தைகளை சேர்ப்பதில்லை?
இந்த விசயத்தில் எனக்கும் வருத்தம் உண்டு, ஆனால் அதனால் மட்டுமே தனியார் கொடுக்கும் லேப் வசதி, ப்ராக்டிகல் வசதி, தொழில் சார்ந்த சுற்றுலா வசதி வந்து விடுமா என்றால் நிச்சயம் வராது, நியாயமாக முதலில் அரசியல்வாதிகள் அவர்கள் குழந்தைகள், பேரக்குழந்தைகளை அரசு பள்ளியில் சேர்க்க வேண்டும், கல்வி துறை அமைச்சர், செயலர் என முக்கிய பொறுப்பில் இருப்பவர்கள் குழந்தைகள் கண்டிப்பாக அரசு பள்ளியில் படிக்க வேண்டும், அப்பொழுது தான் அவர்கள் அரசு பள்ளிக்கு தேவையான நிதியை ஒதுக்குவார்கள், தேவையான வசதியை செய்து கொடுப்பார்கள்.
இந்த போராட்டத்தின் ஆணிவேரும், முக்கிய பிரச்சனையும் அரசின் மெத்தனமும், ஆவண போக்கும் தான், ஆனால் ஊதிய உயர்வு என்ற பொய்யை சொல்லி, ஆசிரியர்கள் அனைவரையும் சோம்பேறிகள், சும்மா உட்காந்து சம்பளம் வாங்குபவர்கள் போல் சித்தரித்து, அரசு தனது நோக்கத்ததை நிறைவேற்றிக்கொண்டது, தமிழகம் முழுக்க 50000 ஆசிரியர் பணியிடங்கள் காலியாக உள்ளது, 40 பேர் படிக்க வேண்டிய வகுப்பில் 70க்கும் மேற்பட்ட குழந்தைகள் படிக்கிறார்கள், ஆனால் அரசோ காலி பணியிடங்களை நிரப்பவோ, பள்ளிகளுக்கு வசதி செய்து தரவோ தயாராய் இல்லை, மாறாக பள்ளிகளை மூடவே எத்தனிக்கிறது,
திரும்பவும் சொல்றேன், இது முழுக்க முழுக்க உங்கள் தலைமுறையை பாதிக்கும், உங்கள் குழந்தை தனியார் பள்ளியில் படிக்கலாம், ஆனால் அரசு வேலை வாய்ப்பிற்கு போட்டி போடும் பொழுது அங்கே வேலையே இருக்காது, எல்லாம் தனியார்மயம் ஆகிவிடும், இன்று தனியார் பள்ளி ஆசிரியர்களுக்கு என்ன கதியோ அதுவே உங்கள் குழந்தையின் நிலையாகலாம்,
அரசின் மிரட்டலுக்கு பயந்து ஆசிரியர்கள் பணிக்கு திரும்ப வில்லை, ஜாக்டோ ஜியோ போராட்டம் பல அரசு துறை ஊழியர்கள் முன் நின்று நடத்திக்கொண்டு தான் இருக்கிறார்கள்., ஜோக்கர் படத்தில் ஒரு வசனம் வரும், நாம யாருக்காக போராடுறமோ அவர்களே நம்மை பைத்தியம்னு சொல்றாங்கன்னு, அவர்கள் பணிக்கு திரும்ப காரணம் நீங்கள் தான், உங்கள் புரிதலின்மை தான். உங்கள் மேல்தட்டு வர்க்க சிந்தனை மாறாமல் உங்களால் மனிதம் குறித்து சிந்திக்கவே முடியாது, பொதுநலன் குறித்து ஒரு செங்கல்லை கூட எடுத்து வைக்க மாட்டீர்கள், ஒரு நாள் இந்த சமூகத்தில் தனித்து நிற்பீர்கள், அன்றாவது உணர்வீர்கள் என நம்புகிறேன்
#வால்பையன்
#ஜாக்டோஜியோ