குழந்தைகள்

எவ்வித அடையாளங்களும் இல்லாமல்
ஒரு குழந்தை பிறந்தது
முதல் அடையாளமாக அதற்கொரு பெயரிட்டீர்கள்
அதில் முடிந்தவரை வலிந்து
உங்கள் மதத்தை திணித்தீர்கள்
குழந்தையின் ஒவ்வொரு அசைவிலும்
மகிழ்ச்சி கொண்டீர்கள்
உங்களை உய்விக்க வந்த
தேவதையை போல் கொஞ்சினீர்கள்
வெற்று தாளாய் இருந்த குழந்தையின் மனதில்
உங்கள் கிறுக்கல்களால் மூச்சு திணற வைத்தீர்கள்
உங்கள் பயண சவாரிக்கு
குழந்தைகளை குதிரை ஆக்கினீர்கள்
நேர்மையாக வாழ் என்றீர்கள்
நீங்கள் நேர்மையற்று வாழ்ந்தீர்கள்
முரண்பாட்டால் விழி பிதுங்க வைத்தீர்கள்
உங்களுடன் முரண்படும் போதெல்லாம்
எனக்கு தான் பிறந்தாயா என சந்தேகித்தீர்கள்
என் பெயரை காப்பாற்று என்றீர்கள்
உங்கள் பெற்றோர் பெயரை மறந்தீர்கள்
கடமை என்ற பெயரில்
உங்கள் குழந்தைகளை கைதியாக்கினீர்கள்
முன்பின் அறியாதவருடன்
படுக்கையை பகிர சொன்னீர்கள்
உங்கள் கெளரவம் காப்பாற்றபட்டதாக நம்பினீர்கள்
நீங்கள் போகும் போது அந்த கத்தியை
உங்கள் குழந்தைகளிடம் கொடுத்து சென்றீர்கள்

!

Blog Widget by LinkWithin